You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழ்நாடு காவல்துறை உளவுப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் இடமாற்றம்

தமிழ்நாடு காவல்துறையில் உளவுப்பிரிவு ஐஜி ஆக பணியாற்றி வரும் ஆசியம்மாள் சென்னை காவல்துறை அமலாக்கப்பிரிவு ஐஜி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடத்துக்கு மத்திய அரசு பணியில் இருந்து மாநில பணிக்குத் திரும்பியுள்ள செந்தில்வேலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

பிரசாந்த் முத்துராமன்

  1. ரணிலை எதிர்த்து இலங்கையில் போராட்டம்

    இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று தேர்வு செய்யப்பட்டார். ஆனால், ரணில் ஜனாதிபதியாக வந்தால் போராட்டம் தொடரும் என்று இலங்கையின் போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர்.

    இந்த நிலையில், ஜனாதிபதியாக தேர்வு செய்யபட்டதைத் தொடர்ந்து அதிபரின் செயலகத்துக்கு அருகில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

  2. இலங்கை ஜனாதிபதி தேர்தல்: ரணில் - 134; டளஸ் - 82; அநுர குமார - 3;

    புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு இலங்கையின் 8வது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற பொதுச் செயலாளரும், தெரிவத்தாட்சி அதிகாரியுமான தம்மிக்க தஸநாயக்க சபையில் அறிவித்தார்.

    ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளும், டளஸ் அழகபெருமவிற்கு 82 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் கிடைத்துள்ளன.

    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 14ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பியிருந்தார். இந்த நிலையில், அரசியலமைப்பின் பிரகாரம், பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, கடந்த 15ம் தேதி, பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

    இதையடுத்து, நாடாளுமன்றத்தினால் ஜனாதிபதியை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளுக்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் இடம்பெற்றது.

    இதில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகபெரும மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். இந்த நிலையில், புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சில உறுப்பினர்கள் என முக்கிய கட்சிகள் டளஸ் அழகபெருமவிற்கு ஆதரவை வழங்கியிருந்தனர்.

    அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட சில தமிழ் கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர், நாடாளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

  3. இலங்கை ஜனாதிபதி தேர்தல்: ரணில் விக்ரமசிங்க வெற்றி

    இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    மொத்தம் பதிவான 219 வாக்குகளில் அதிகமான வாக்குகளைப் பெற்று ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  4. 219 வாக்குகள் செல்லுபடியாகும்

    இலங்கையின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் நடாளுமன்ற வாக்களிப்பில் செல்லுபடியாகும் வாக்குகள் மற்றும் செல்லுபடியாகாத வாக்குகள் தொடர்பிலான அறிவிப்பை, தெரிவத்தாட்சி அதிகாரி தம்மிக்க தஸநாயக்க சபையில் அறிவித்தார்.

    செல்லுபடியாகும் வாக்குகள் :- 219

    செல்லுபடியாகாத வாக்குகள் :- 04

    இன்றைய வாக்களிப்பு நடவடிக்கைகளில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளவில்லை. இதன்படி, 223 பேர் வாக்களித்திருந்தார்கள்.

    எனினும், 223 வாக்குகளில் 04 வாக்குகள் செலுப்படியற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, செலுப்படியாகும் வாக்குகளை, பிரித்து, வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

  5. இலங்கை அதிபர் தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

    இலங்கையின் புதிய ஜனாதிபதியை நாடாளுமன்ற தீர்மானம் மூலம் தேர்வு செய்வதற்கு நடத்தப்பட்ட வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. அதனைத் தொடர்ந்து, வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவத்தாட்சி அதிகாரி தம்மிக்க தஸநாயக்க அறிவித்தார்.

    வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கெண்ணும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு மூன்று வேட்பாளர்களையும் வாக்கெண்ணும் இடத்திற்கு வருகைத் தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதையடுத்து, ரணில் விக்ரமசிங்க, ஹரின் பெர்ணான்டோவையும், டளஸ் அழகபெரும, டிலான் பெரேராவையும், அநுர குமார திஸாநாயக்க, விஜித்த ஹேரத்தையும் தமது பிரதிநிதிகளாக நியமித்து, வாக்கெண்ணும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரை தவிர, ஏனைய 223 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துக்கொண்டனர்.

    வாக்களிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு, தெரிவத்தாட்சி அதிகாரி, இறுதியாக சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தார். எனினும், அவர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரியினால் சபைக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், செல்லுபடியாகும் வாக்குகள் மற்றும் செல்லுபடியாகாத வாக்குகளை பிரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

  6. நாடாளுமன்றம் இயங்க வேண்டும் - சபாநாயகர் ஓம்.பிர்லா

    இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளியைத் தொடர்ந்து, மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    அப்போது பேசிய சபாநாயகர் ஓம்.பிர்லா, " முழக்கம் எழுப்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் விவாதத்தில் பங்கெடுக்க வேண்டும் என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாடாளுமன்றம் இயங்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

  7. ராஜபக்ஷ குடும்பம் வாக்களிப்பு

    முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் வாக்களித்ததன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்களித்தார்.

    அதனைத் தொடர்ந்து ஷஷிந்திர ராஜபக்ஷவும் வாக்களித்தார். ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தற்போது, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர்.

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்ற நிலையிலேயே, ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் நாடாளுமன்றத்தில் இன்று பிரவேசித்து வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

  8. வாக்கெடுப்பை புறக்கணித்த தமிழ் எம்.பிக்கள்

    அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர், இன்று நடந்த வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

    சபையில் அமர்ந்தவாறே, வாக்களிக்காமல், இருவரும் வெளிநடப்பை அறிவித்திருந்தனர். இன்றைய தினம் போட்டியிடும் மூவரிடமும், தமிழ் பிரச்சினை தீர்வு இல்லை என தெரிவித்தே தாம் வாக்களிப்பதை தவிர்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

  9. குளுக்கோஸ் பாட்டிலுடன் வாக்களித்த இலங்கை எம்.பி

    நாடாளுமன்ற உறுப்பினர் சமன் பிரியஹேரத், உடல்நிலை சரியில்லாத நிலையிலும், செலைன் ஏற்றப்பட்ட நிலையில், இன்று சபைக்கு சமூகமளித்திருந்தார். நாடாளுமன்ற மருத்துவ அறையில் தங்கியிருந்த அவருக்கு, நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடவடிக்கைகளில் பங்கேற்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. நாடாளுமன்ற ஊழியர்களின் உதவியுடன், அவர் சபைக்கு அழைத்து வரப்பட்டார்.

    உடல்நிலை காரணமாக, அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வாக்களிப்பதற்கு, நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க, சபையில் அனுமதி கோரினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு அனுமதி வழங்கியதை அடுத்து, சமன் பிரியஹேரத் தனது வாக்கை அளித்தார்.

  10. விரும்பியோ, விரும்பாமலோ ரணிலை ஆதரிக்கும் கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டது ஏன்?

  11. ரணிலுக்கு மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு

    இலங்கையின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று காலை 10.35மணி முதல் இலங்கை நாடாளுமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதுவரை எதிர் தரப்பிலிருந்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் ஷஷீந்திர ராஜபக்ஷ ஆகியோர், இன்று ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

  12. இலங்கை அதிபர் தேர்தல்: ரகசிய வாக்கெடுப்பு ஆரம்பம்

    புதிய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு வாக்கெடுப்புக்கான சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

    இதன்படி, புதிய ஜனாதிபதி தேர்வுக்கான போட்டியில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகபெரும மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் களமிறங்கியுள்ளனர். புதிய ஜனாதிபதி தேர்வுக்கான ரகசிய வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வாக்களிக்கும் சந்தர்ப்பத்தில் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சபாநாயகர் சபை உறுப்பினர்களுக்கு அறிவித்தார்.

    வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்தால் அரசியலமைப்பின் படி, அது தவறானது எனவும் அவர் கூறியுள்ளார்.

    நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க, இன்றைய தினம் தெரிவத்தாட்சி அதிகாரியாக இன்றைய தினம் தமது கடமைகளை முன்னெடுப்பார் எனவும் சபாநாயகர் அறிவித்தார்.

  13. சொந்த வாகனத்தில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டாதீர் - டிஜிபி எச்சரிக்கை

  14. இலங்கை அதிபர் தேர்தல் - நேரலை

    இலங்கையின் அடுத்த அதிபர் யார்? எம்.பி.க்களின் ஆதரவு யாருக்கு? இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவிருக்கும் அதிபருக்கான வாக்கெடுப்பு குறித்து கூடுதல் விவரங்களை இலங்கையிலிருந்து வழங்குகிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் மணிகண்டன்.

    காணொளியை பார்க்க:

  15. உடலை பெற்றுக்கொள்ளுங்கள் - பெற்றோருக்கு கோரிக்கை

    கள்ளக்குறிச்சி மாணவியின் மறு உடற்கூராய்வு தொடர்பான தகவலை உயிரிழந்த மாணவி வீட்டில் குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நேற்று (19.07.2022) மறு உடற்கூராய்வு பரிசோதனை நடைபெறுவதால் பெற்றோர் தரப்பில் ஆஜராக வேண்டும் என்று வட்டாட்சியர் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.

    குறிப்பாக வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக தாய் செல்விக்கும், அவர்கள் தரப்பு வழக்கறிஞருக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் யாரும் ஆஜராகவில்லை.

    இந்த நிலையில் மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை‌யில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் உடலை நல்லடக்கம் செய்ய பெற்றுக் கொள்ளும் படி குற்ற பிரிவு குற்றப்புலனாய்வு துறை அதிகாரி சார்பில் நோட்டீஸாக ஒட்டப்பட்டுள்ளது.

  16. "அன்று பொறியாளர், இன்று உள்ளாடை வாங்கவும் காசில்லை" - போராட்டக்காரர்கள்

  17. சரி... ஆரம்பிக்கலாமா!

    நேயர்களே

    இன்றைய நேரலை பக்கத்தை தொடங்கும் முன், நேற்றைய நாளின் நிறைவில் நடந்த நிகழ்வுகளின் முக்கிய செய்தித் துளிகள் இதோ...

    • கள்ளக்குறிச்சியில் மாணவியின்‌ உடல் மறு உடற்கூராய்வு பரிசோதனை நிறைவடைந்த நிலையில் அதன் அறிக்கை நீதிமன்றத்தில் ஜூலை 21ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    • தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றத்தை கண்டித்துதமிழகம் முழுவதும் வரும் ஜூலை 25ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
    • கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாற்றம்.
    • நபிகள் நாயகம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி நூபுர் ஷர்மா தாக்க்ல செய்த மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
    • இலங்கை ஜனாதிபதியின் பதவி விலகலை அடுத்து, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று நடைபெற்றது. இதில் ரணில் விக்ரமசிங்க, டளஸ் அழகபெரும மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.
    • இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 7 இலங்கை தமிழர்கள் இன்று காலை தனுஷ்கோடி வந்தடைந்தனர்.
    • அதிமுகவின் சட்டமன்ற புதிய எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்துள்ளதாகவும் அதிமுகவின் கழக துணை செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
  18. வணக்கம் நேயர்களே!

    நான் பிரசாந்த் முத்துராமன். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய தினம் அதிமுகவின் பொதுக்குழு குறித்த விவரங்கள் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் ட்விட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.