"மாணவர்கள் எனும் போர்வையில் சில விஷமிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்"- எ.வ. வேலு

கள்ளக்குறிச்சியில் கலவரம் தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஏ.வ.வேலு, மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலவரம் நடந்த தனியார் பள்ளியில் ஆய்வில் ஈடுபட்டனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

பிரசாந்த் முத்துராமன்

  1. நன்றி நேயர்களே

    இன்றைய நேரலை பக்கத்தை இத்துடன் நிறைவு செய்கிறோம். இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய செய்தித் துளிகள் இதோ...

    • கேரளாவில் இரண்டாவதாக ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது
    • மத்திய அரசு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறிவதற்கு 15 ஆய்வகங்கள் இந்தியா முழுவதும் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்ம சாவு தொடர்பாக அவரது பெற்றோர் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.
    • கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை பகுதியில் ஆய்வு செய்த தமிழக அமைச்சர் எ.வ. வேலு, மாணவர்கள் எனும் போர்வையில் சில விஷமிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
    • தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். புதிய கட்டண உயர்வு தொடர்பான தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
    • கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் பிடிபட்ட 128 பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 108 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது அலி உத்தரவிட்டுள்ளார்.
    • கோட்டா வீட்டுக்கு போ' போராட்டத்தின் விளைவாக, இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ள நிலையில், 'ரணில் வீட்டுக்குப் போ' (Ranil Go Home) எனக் கூறி, போராட்டக்காரர்கள் தமது கோஷத்தை மாற்றியிருக்கின்றனர்..
  2. கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்புக்கு ஆளான 2ஆவது நபர் - தமிழ்நாட்டில் தீவிர கண்காணிப்பு

    குரங்கு அம்மை
    படக்குறிப்பு, மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

    கேரளாவில் இரண்டாவதாக ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது என்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மேலும் விரிவாகப் பேசிய அவர், 'கோவை விமான நிலையத்தில் காலை, மாலை என இரண்டு வெளிநாட்டு விமானங்கள் வருகின்றன. அந்த விமானங்களில் 150 முதல் 170 பயணிகள் வரை பயணிக்கின்றனர். ஜூலை மாதம் முழுவதும் ஏற்கெனவே இருக்கின்ற விதிமுறைகளின்படி வருகின்ற பயணிகளில் 2% ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்று கூறினார்.

    கடந்த 15 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கூட குரங்கு அம்மை தொற்று கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    வசதிகள் என்ன?

    கோவை விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மையம் தயார் நிலையில் இருக்கிறது. அதேபோல் யாராவது தொற்று பாதிப்புகளோடு வந்தால் அவர்களை தனிமைப்படுத்துவதற்கு ஒற்றை படுக்கை வகையுடன் கூடிய ஒரு அறை தயாராக உள்ளது.

    பன்னாட்டு விமான நிலையங்கள் இருக்கின்ற நகரங்களான கோவை, மதுரை, சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அல்லது மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் பிரத்தியேகமாக பத்து படுக்கைகளுடன் கூடிய ஒரு வார்டு தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாளை கோவையில் அந்த படுக்கைகள் தயாராக இருக்கும். தொற்று பாதிப்பு அல்லது அறிகுறிகளுடன் வருவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பிதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    குரங்கு அம்மை ஆய்வகம்

    மத்திய அரசுகுரங்கு அம்மை பாதிப்பு கண்டறிவதற்கு 15 ஆய்வகங்கள் இந்தியா முழுவதும் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒன்றை தமிழ்நாட்டிற்கு கேட்டுள்ளோம். விரைவில் அனுமதி அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். அப்படி கிடைக்கும்பட்சத்தில் கிங் ஆராய்ச்சி மையத்தை அந்த ஆய்வகமாக பயன்படுத்த உள்ளோம்.

    கோவையில் இருந்து தமிழ்நாடு கேரளா எல்லையான 13 இடங்களில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறிப்பாக பொள்ளாச்சி, வாளையார் போன்ற இடங்களில் நடைபெற்று வரும் கண்காணிப்பு பணிகளை நேரில் பார்வையிட்டுள்ளேன்.

    குரங்கு அம்மையை பொருத்தவரை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுகின்ற நிலையில் குழந்தைகளுக்கு கூடுதலான பாதிப்பு ஏற்படுகிறது.

    குறிப்பாக குழந்தைகளுக்கு கீழே அல்லது முகத்தில் கொப்புளங்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக பரிசோதிப்பதற்கான நடைமுறைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம்.

    குரங்கு அம்மை பற்றிய விழிப்புணர்வு 15 நாட்களுக்கு முன்பு வரை பெரிய அளவில் இல்லை. தற்பொழுது பாதிப்புகள் வரத் தொடங்கியுள்ளதால் குரங்கு அம்மை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.' என்று மா. சுப்பிரமணியன் கூறினார்.

  3. சென்னையில் இளம் பெண்ணிடம் கருமுட்டையை கேட்டு மிரட்டியதாக கணவன், மனைவி கைது

    இளம் பெண்ணை

    சென்னை எர்ணாவூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ருதி (22). திருமணம் ஆகி இரண்டு வயதில் குழந்தை உள்ள நிலையில் இவருக்கும் இவரது கணவர் விஜய்க்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கணவனிடம் கோபித்துக் கொண்டு கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினார் ஸ்ருதி.

    பிறகு திருவெற்றியூர் நல்ல தண்ணி ஓடைப்பகுதியில் வசித்து வரும் தனது தோழியான ஐஸ்வர்யாவின் வீட்டில் ஸ்ருதி தஞ்சம் அடைந்துள்ளார்.

    இந்த நிலையில் ஐஸ்வர்யாவும் அவரது கணவர் சூரஜ் என்கின்ற ஜென்னிஸ் கண்ணாவும் ஸ்ருதியை தனி அறையில் அடைத்து வைத்து அவரது கரு முட்டையை விற்று பணம் தருமாறு கத்தி முனையில் அடித்து கொடுமைப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து, கணவன், மனைவி இருவரும் வெளியில் சென்ற நேரம் பார்த்து ஸ்ருதி அங்கிருந்து தப்பி வந்து நடந்தவற்றை தமது கணவரிடம் கூறியுள்ளார்.

    இந்த நிலையில், ஸ்ருதி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருவெற்றியூர் காவல் துறையினர் ஐஸ்வர்யா, அவரது கணவர் ஜெனிஸ் கண்ணா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    கரு முட்டை விற்பனை விவகாரத்தில் இருவருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  4. கல்வீச்சு, தடியடி, துப்பாக்கிச்சூடு: கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன?

  5. கள்ளக்குறிச்சி மாணவி உடலுக்கு மறு பிரேத பரிசோதனை - உயர் நீதிமன்றம்

  6. குடியரசு தலைவர் தேர்தல்: பிபிஇ ஆடையில் ஓபிஎஸ், தனி விமானத்தில் வந்த உதயநிதி - முக்கிய ஹைலைட்ஸ்

  7. தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள்- அமைச்சர் செந்தில் பாலாஜி

    தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர், "மின் வாரியத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தியதையடுத்து இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

    மின் கட்டணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கீழே பட்டியலிட்டுள்ளோம்

    • இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.27.50 கூடுதலாக மின் கட்டணம்
    • இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 கூடுதலாக மின் கட்டணம்
    • இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 கூடுதலாக மின் கட்டணம்
    • இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 கூடுதலாக மின் கட்டணம்
    செந்தில் பாலாஜி
  8. இலங்கையில் அவசர நிலை அறிவிக்கும் அதிகாரம் யாருக்கு? அவசர நிலை எவ்வளவு நாள் நீடிக்கும்?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  9. கள்ளக்குறிச்சி கலவரம்: திமுக அரசின் அலட்சியமே காரணம் என சீமான் அறிக்கை

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவியின் மர்ம மரணமும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்து ஐந்து நாட்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது காலங்கடத்திய திமுக அரசின் அலட்சியப்போக்கே இத்தனை வன்முறைகளுக்கும் முக்கிய காரணமாகும் என்றும் மாணவி மரணித்து 5 நாட்களாகத் தொடர்ப்போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் சூழலில் மாவட்ட ஆட்சியர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மாவட்ட பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்டோர் நிகழ்விடத்திற்கு வராதது ஏன்? மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பான சூழல் உருவாகியுள்ளது என்பதை அரசு முன்கூட்டியே உணரத்தவறியதேன்? பெருங்கலவரத்திற்குப் பிறகு, தற்போது பள்ளி நிர்வாகிகளையும், தொடர்புடைய ஆசிரியர்களையும் கைது செய்துள்ள காவல்துறைக்குத் தொடக்கத்திலேயே அவர்கள் குற்றவாளிகள் என்று தெரியாமல் போனதா? அல்லது தெரிந்திருந்தும் கைது செய்யவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்

    கள்ளக்குறிச்சி
  10. "கர்லாக்கட்டையை பெண்களாலும் சுற்ற முடியும்" - தன்னம்பிக்கையூட்டும் ஸ்வாதி கிருஷ்ணன்

  11. குடியரசுத் தலைவர் தேர்தலில் பிபிஇ கிட் அணிந்துச் சென்று வாக்களித்த தமிழ்நாடு எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம்.

    தமிழ்நாடு எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம்.

    பட மூலாதாரம், ANI

  12. “மாணவர்கள் எனும் போர்வையில் சில விஷமிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்"- அமைச்சர் எ.வ. வேலு

    அமைச்சர் ஏ.வ. வேலு

    பட மூலாதாரம், ANI

    கள்ளக்குறிச்சியில் கலவரம் தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எ.வ.வேலு, மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலவரம் நடந்த தனியார் பள்ளியில் ஆய்வில் ஈடுபட்டனர்.

    இந்த ஆய்வுக்கு பிறகு பத்திரிகையாளர் மத்தியில் பேசிய அமைச்சர் ஏ.வ. வேலு " கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் தனியார் பள்ளியின் வாகனங்கள் மற்றும் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தீயிட்டுக் கொளுத்தினார்கள் என்றும் பாதுகாப்புக்காக வந்த காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்று குறிப்பிட்டார்.

    தொடர்ந்து பேசுகையில் உரிமைக்காக போராடுவோரை வரவேற்கும் இயக்கம் திமுக ஆனால், நியாயம் கேட்கச் சென்றவர்கள் பிற மாணவர்களின் சான்றிதழ்களையும் பள்ளிப் பேருந்துகளையும் தீயிட்டு கொளுத்துவது எந்த விதத்தில் சரி? அரசுக்கு கெட்ட பெயரை உண்டாக்கும் வகையில் மாணவர்கள் எனும் போர்வையில் சில விஷமிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்," என்றார்

  13. கள்ளக்குறிச்சி வன்முறை: கைதான 108 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்: நீதிமன்றம் உத்தரவு

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் பிடிபட்ட 128 பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 108 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    முன்னதாக, கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சின்னசேலம் காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

    அதில் சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகள் பதிவுகளின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்ட போலீஸார் 128 பேர் மீது 147(சட்ட விரோதமாக கூடுதல்),148(ஆயுதங்களுடன் கூடுதல்), 294(b)(ஆபாசமாக பேசுதல்), மற்றும் 323,324, 352, 332, 336, 435, 436,379,IPC.r/w.3,4,5. பொதுச் சொத்தை சேதப்படுத்துதல், உள்ளிட்ட 14 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 128 பேரில் 20 சிறுவர்கள் என்பதால் அவர்களை கடலூர் கூர்நோக்கு சிறார் இல்லத்தில் வைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

  14. இலங்கையில் இனி என்ன நடக்கும்?

  15. இலங்கை புதிய ஜனாதிபதி தேர்தல் பற்றி தொலைதூர மக்கள் நினைப்பது என்ன?

  16. "கட்சி எல்லைகளைத் தாண்டி சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்" புகைப்படம் வெளியிட்ட திமுக எம்.பி. கனிமொழி

    திமுக எம்.பி. கனிமொழி

    பட மூலாதாரம், KanimozhiDMK

  17. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய குழு ஆய்வு

    ஸ்டெர்லைட்

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு மூடி சீல் வைத்தது.

    இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு மூடி கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையில் எந்தவித அசம்பாவிதமும் நடந்து விட கூடாது என்பதற்காக சென்னையில் இருந்து வந்துள்ள தமிழக மாசு கட்டுபாட்டு வாரிய செயலர் விஜயபாஸ்கர் தலைமையில் வந்த உயர்நிலை குழுவினர் 20 பேர் இன்று காலை ஒன்பது மணிக்கு ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஸ்டெர்லைட் ஆலையில் வைக்கப்பட்டுள்ள சிப்சத்தை வெளியேற்றுவதற்காகவும், அங்குள்ள இயந்திரங்களின் நிலை குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வை முடித்துக்கொண்டு அதிகாரிகள் புறப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து, உயர்நிலைக்குழுவினர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

  18. கள்ளக்குறிச்சி பள்ளிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார், எங்கிருந்து வந்தனர்?

  19. கள்ளக்குறிச்சி வன்முறை: கைதான 108 பேரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டதாக காவல் துறையினர் கைது செய்துள்ள 128 பேரில் 108 பேர், அம்மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் (ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம்) ஆஜர்படுத்தினர்.

    கள்ளக்குறிச்சி இரண்டாம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது அலி முன்பு அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

    கைது செய்யப்பட்ட 128 பேரில் 20 பேர் இளம் சிறார்கள் என்பதால் அவர்கள் விழுப்புரம் செஞ்சியில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.