You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்பு
மகாராஷ்டிரா மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுள்ளார். அம்மாநில துணை முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றுள்ளதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
எம்.ஆர். ஷோபனா
கீழடியில் இருவண்ண சுடுமண் கிண்ணங்கள் கண்டெடுப்பு
கீழடியில் நடந்து வரும் 8ம் கட்ட அகழாய்வில் இருவண்ண சுடுமண் கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி முதல் தொல்லியல் துறை ஆணையர் (பொறுப்பு) சிவானந்தம் தலைமையில் நடந்து வருகிறது.
கீழடியில் 8 குழிகளும், அகரம், கொந்தகையில் தலா நான்கு குழிகளும் தோண்டப்பட்டு நீள் வடிவ தாயகட்டை, பானைகள் , உலைகலன்கள், பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கீழடியில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் மேற்புறம் பத்து செ.மீ உயரத்திற்கு கருப்பு நிறமும் கீழ்புறம் சிவப்பு நிறமும் கொண்ட சுடுமண் கிண்ணம் கண்டறியப்பட்டுள்ளது. புனல் போன்ற அமைப்பை கொண்ட இந்த கிண்ணம் சாயம் காய்ச்சுவதற்கு பயன்பட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.
ஏற்கனவே கீழடியில் சாயப்பட்டறைகள் இருந்த அடையாளம் கண்டறியப்பட்டது. ஆனால் சிவப்பு வண்ண சாய கிண்ணம் மட்டுமே கண்டறியப்பட்ட நிலையில் கீழடியில் தற்போது கருப்பு சிவப்பு வண்ண சுடுமண்ணால் செய்யப்பட்ட கிண்ணமும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கிண்ணம் மற்றும் உருண்டை வடிவிலான பானையும் அகழாய்வு குழிக்குள் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை வெளியே எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஓ. பன்னீர் செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் இல்லை - எடப்பாடி பழனிசாமி கடிதம்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக உட்கட்சி பூசல் நிலவிவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி ஓ. பன்னீர் செல்வத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஓ. பன்னீர் செல்வம் நேற்று எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், அவருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், கடந்த 2021ம் ஆண்டு நடந்த கழக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே, கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
மகராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பதவி விலகியதன் பின்னணி என்ன
மகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள். முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய உத்தவ் தாக்கரே. பதவி விலகுவதற்கு முன்பு உத்தவ் தாக்கரே செய்தது என்ன?
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜிநாமா - அடுத்தது என்ன நடக்கும்?
"முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது"
முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் "2013ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஏராளமானவர்கள், அப்போதிருந்த 'வெயிட்டேஜ்' முறையால் ஆசிரியர் பணியில் சேர முடியவில்லை. அவர்களுக்குத் தற்போதுவரை பணி வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதனால், அவர்கள் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் 23ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
"தற்காலிக ஆசிரியர்களைத் தேர்வு செய்வது தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட அறிவிப்பு ஏதுமில்லை. இதனால், அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களுக்குத் தேவையானவர்களை பணியில் நியமித்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தகுதியற்றவர்கள் பணிக்குச் சேரும் வாய்ப்புள்ளது.
இதன் மூலம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் பணிவாய்ப்பைப் பெற இயலாத சூழல் ஏற்படும். ஆகவே தமிழ்நாடு அரசு 23ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பை ரத்துசெய்ய உத்தரவிட வேண்டுமென" கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "முறையான வழிகாட்டுதல்கள் இன்றி ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது. இது ஏற்கத்தக்கதல்ல. இது ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களைப் பணியில் அமர்த்த வாய்ப்பாக அமைந்துவிடும்" என்று குறிப்பிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க தமிழ்நாடு அரசின் சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை நடத்தும் பள்ளிக்கூடங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு 13,300 ஆசிரியர்களைத் தற்காலிகமாக நியமிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.
திருப்பூரில் பள்ளி வாசலை மூட எதிர்ப்பு: இஸ்லாமியர்கள் போராட்டம்
திருப்பூர் வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பகுதியில் பத்தாண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பள்ளிவாசல் அனுமதி இன்றி செயல்படுவதாகவும் அதை மூட வேண்டியும் திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2016ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை அடுத்து, பள்ளிவாசல் மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவின் பேரில் இன்று காலை போலீசார் மற்றும் அலுவலர்கள் பள்ளிவாசலுக்கு சீல் வைப்பதற்காக சென்றார்கள். ஆனால் அங்கு பள்ளிவாசலில் இருந்த இஸ்லாமியர்கள் பள்ளிவாசலை சீல் வைக்க அனுமதிக்கவில்லை. பள்ளிவாசலுக்குள் இருந்துகொண்டு போராட்டம் நடத்தினார்கள். போலீசார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி சீல் வைக்க முயன்றார்கள். இதற்குள்ளாக இந்த தகவல் பரவி திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள உஷா தியேட்டர் பஸ் ஸ்டாப் பகுதியில் ஏராளமான இஸ்லாமியர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும், திருப்பூர் தாராபுரம் ரோட்டில் பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக மாநகராட்சி நோக்கி பேரணியாக பலர் வந்தனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பிராணிகள் பலவிதம்... மனிதர்களுடன் இணக்கம் ஏற்படுத்தும் சென்னையின் 'பெட்டிங் சோன்'
சென்னையில் உள்ள இந்த 'பெட்டிங் சோனில்' பாம்புகளை கைகளில் பிடித்து மகிழலாம், இன்னும் எண்ணற்ற விலங்குகள், பறவைகளை கண்டு ரசிக்கலாம்.
வணக்கம் நேயர்களே!
நான் எம். ஆர். ஷோபனா. இதுவரை பிரசாந்த் முத்துராமன் வழங்கிய நேரலையை இனி நான் தொகுத்து வழங்கவுள்ளேன். உலகம், இந்தியா மற்றும் தமிழக அளவிலான முக்கிய செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.
150+ போலீசார், 144 தடை உத்தரவு; பாதுகாப்புடன் நடக்கும் நேரடி நெல்விதைப்பு
மயிலாடுதுறை மாவட்டம் பருத்திக்குடி கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறை பாதுகாப்புடன் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்தால் வேலைவாய்ப்பு இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த திங்கள்கிழமை வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் மயிலாடுதுறை டி.எஸ்.பி வசந்தராஜை ஒரு சிலர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.
இதில் 39 பேர் கைது செய்யப்பட்டு அத்துமீறி விவசாய நிலத்திற்குள் நுழைதல் மற்றும் காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அன்றைய தினமே இந்தச் சம்பவத்தை கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே பருத்திகுடி கிராமத்தில் மூன்று விவசாயிகள் 18 ஏக்கர் நிலத்தில் இன்று நேரடி நெல் விதைப்பு செய்ய உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தால் , மேலப் பருத்திக்குடி மற்றும் கீழப் பருத்திக்குடி , காலனி தெரு உள்ளிட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மூன்று விவசாயிகள் 18 ஏக்கர் நிலத்தில் தற்போது நேரடி நெல் விதைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஏ.டி.எஸ்.பி தங்கவேலு தலைமையில் மூன்று டிஎஸ்பிக்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கலைத்துறையினர் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 144 தடை உத்தரவால் அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகின்றது.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட தடை கோரும் மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு
ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜூன் 23ஆம் தேதி நடந்த அ.இ.அ.தி.மு.கவின் பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்களைத் தவிர வேறு தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு கூறியிருந்த நிலையில், அங்கு அ.தி.மு.கவின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் அடுத்த பொதுக் குழுக் கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டது. இது தவிர, ஒற்றைத் தலைமை வேண்டுமென்பவர்களிடம் ஒரு நோட்டில் கையெழுத்தும் பெறப்பட்டது.
இதனை எதிர்த்து எடப்பாடி கே. பழனிசாமி, சி.வி. சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் மீது பொதுக்குழு உறுப்பினரான சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
மேலும் வரும் 11ஆம் தேதி நடக்கவுள்ள பொதுக் குழுவிற்குத் தடை விதிக்க வேண்டுமென்றும் கோரியிருந்தார்.
நேற்று முன்தினம் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதிலும் தற்போதுவரை விசாரணைக்கு எடுக்கப்படவில்லை. ஆகவே இந்த வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க வேண்டுமென நீதிபதி துரைசாமி மற்றும் சுந்தரமோகன் அமர்வில் முறையிடப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் வரும் திங்கட்கிழமை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. வரும் 11ஆம் தேதி நடக்கவுள்ள பொதுக் குழுவுக்குத் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை அப்போது விசாரிக்கப்பட மாட்டாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
கடிதம் எழுதிய ஓபிஎஸ் - நிராகரித்த ஈபிஎஸ்
உள்ளாட்சித் தேர்தலில் விடுபட்ட இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான படிவத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திடாததால் வேட்பாளர்களுக்கு அதிமுக சின்னம் கிடைக்காத சூழல் உள்ளது.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அதிமுக வேட்பாளர்களுக்கான படிவங்களில் வியாழக்கிழமை மாலை 3 மணிக்குள் இருவரும் கையெழுத்திட்டு தேர்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்தக் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாங்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
மகாராஷ்டிரா - ''நம்பிக்கை வாக்கெடுப்பு தேவையில்லை''
மகாராஷ்டிராவில், "ஆளுநரின் உத்தரவின்படி, நம்பிக்கை வாக்கெடுப்பு இப்போது தேவையில்லை, எனவே இன்றைய சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படாது" என அனைத்து எம்எல்ஏக்களுக்கும் மகாராஷ்டிர சட்டப்பேரவை செயலாளர் ராஜேந்திர பகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியையும், எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார்
இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அவசியமில்லை என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சட்டபேரவை செயலாளராக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜேந்திர பாகவத் அனுப்பியுள்ளார்.
வணக்கம் நேயர்களே
நேயர்/வாசக நண்பர்களுக்கு வணக்கம்!
நான் பிரசாந்த் முத்துராமன். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் பிற உலக நாடுகளில் நிகழும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
செய்திகள் குறித்த உங்கள் கருத்துகளை எங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் நீங்கள் தெரிவிக்கலாம். நேற்றைய நேரலைப் பக்கத்தை இந்த இணைப்பில் காணலாம்.
தொடர்ந்து இணைந்திருங்கள்.