You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் கவலைக்கிடம்

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக அவரது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில், அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. நூபுர் ஷர்மா விவகாரம் - “இந்தியா இந்துக்களுக்கே சொந்தம்”

    முகமது நபி குறித்து நூபுர் ஷர்மா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவைச் சேர்ந்த சாத்வி பிரக்யா சிங் தாகூர், "இந்தியா இந்துக்களுக்கே சொந்தம் என்றும், சனாதன தர்மம்தான் இங்கு நிலைக்கும் எனவும் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ முகிமை செய்தி வெளியிட்டுள்ளது.

    மேலும் அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “உண்மையை கூறுவது புரட்சி எனில், நாங்களும் புரட்சியாளர்களே,” என்று தெரிவித்துள்ளார்.

  2. அண்டார்டிகா பனியிலும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் - ஏன் இது கவலையானது?, நவீன் சிங் கட்கா

    அண்டார்டிகாவின் 19 பகுதிகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை நியூசிலாந்தின் கேன்டெர்பெரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் ஒவ்வொரு மாதிரியிலும் மிகச்சிறிய பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் அரிப்பின் மூலம் இந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள் உருவானவை எனவும், அவை அரிசியை விட மிகச் சிறியவை என்றும், வெறும் கண்களால் இதனை பார்க்க முடியாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

  3. ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்து ஆராய சிறப்பு குழு - ஸ்டாலின் உத்தரவு

    ஆன்லைன் ரம்மி ஆட்டத்தினால் ஏற்படும் விளைவுகளைக் கண்டறியவும், அதன் பாதிப்புகளை ஆராயவும் ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த குழு இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. திருச்சியில் பார்வையற்றோருக்கான தொழிற்சாலை: பயிற்சி அளித்து பணி வழங்கும் சேவை

    திருச்சியில் பார்வையற்றோருக்காக செயல்படும் கனரகத் தொழிற்சாலை, சுமார் 50 ஆண்டுகளாக முன்பு சோப்பு தயாரிக்க தொடங்கி, கனரக தொழிற்சாலை வரை, படிப்படியாக பயிற்சி அளித்து பணி சேவை வழங்கி வருகிறது. அதுகுறித்த காணொளி:

  5. வணக்கம் நேயர்களே!

    நான் எம். ஆர். ஷோபனா. இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிய நேரலையை இனி நான் தொகுத்து வழங்கவுள்ளேன். உலகம், இந்தியா மற்றும் தமிழக அளவிலான முக்கிய செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.

  6. சிதம்பரம் கோவில் விவகாரத்தில் மதச்சார்பற்ற அரசுக்கு என்ன வேலை? - வானதி சீனிவாசன்

    தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள மதச்சார்பின்மை அரசுக்கு இந்து கோவில்கள் மீது மட்டும் எப்போதும் வெறுப்புணர்வு உண்டு என, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் தேவையில்லாத ஒரு பிரச்னையை ஏற்படுத்தி, ஸ்ரீநடராஜர் ஆலயத்தை, மதச்சார்பற்ற அரசு எடுத்துக் கொண்டது. உச்ச நீதிமன்றம் வரை போராடி, தீட்சிதர்கள் தங்களது உரிமையை மீட்டெடுத்தனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், ஸ்ரீநடராஜர் கோவிலை கைப்பற்ற, இறை நம்பிக்கையற்ற திமுக அரசு, அறத்திற்கு புறம்பான வழிகளில் முயற்சிகளை செய்து வருகிறது.

    சிதம்பரம் கோவில் இந்து சமய அறநிலையத்துறையிடம் இல்லை. தங்கள் நிர்வாகத்தில் இல்லாத கோவிலில் ஆய்வு நடத்த குழுவை அனுப்புவது எந்த விதத்தில் நியாயம்?

    ஸ்ரீநடராஜர் கோவில் நிர்வாகத்தில் தவறுகள் இருந்தால், சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தடையில்லை. ஆனால், தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் நேரடி நடவடிக்கைகளில் இறங்குவது சிவ பக்தர்களின் மனதை, இந்துக்களின் மனதை, புண்படுத்தும் செயல்" என தெரிவித்தார்.

  7. முதுநிலை மருத்துவப் படிப்பு: சிறப்பு கலந்தாய்வு கிடையாது - உச்ச நீதிமன்றம்

    1,456 மருத்துவ மேற்படிப்பு இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரி மருத்துவர்கள் தொடர்ந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    முன்னதாக, 1,456 மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

  8. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,584 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,584 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,791 பேர் குணமடைந்துள்ளனர். 24 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை: 36,267

    தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி (ஜூன் 9), 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  9. புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அரசு அனுமதி வழங்காததால் திரும்பி சென்றது

    புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அரசு அனுமதி வழங்காததால் திரும்பி சென்றது.

    சென்னையிலிருந்து சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டத்தத்தை தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை வடிவமைத்தது.

    அதன்படி, சென்னை துறைமுகத்திலிருந்து 'எம்பிரஸ்' எனும் சொகுசு கப்பலை அறிமுகம் செய்து, அதை மக்களின் சொகுசு சுற்றுலா பயணத்துக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 4ஆம் தேதி சென்னை துறைமுகத்தில் தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 4ஆம் தேதி தொடங்கி வைத்த சொகுசு கப்பல் விசாகப்பட்டினம் சென்றுவிட்டு தற்போது புதுச்சேரிக்கு வந்தடைந்தது. சொகுசு கப்பல் புதுச்சேரி வருவது தொடர்பாக எந்த அனுமதியும் பெறவில்லை என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் சென்றுவிட்டு, விசாகப்பட்டினத்தில் இருந்து இன்று காலை புதுச்சேரிக்கு வந்தடைந்தது. புதுச்சேரி வந்துள்ள சொகுசு கப்பலுக்கு அரசு அனுமதி பெறாத காரணத்தினால் புதுச்சேரி கடலோர எல்லைக்குள் கப்பல் நிலைய அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் சொகுசு கப்பல் திரும்பி சென்றது.

  10. நான்கு மாநிலங்களில் இன்று மாநிலங்களவை தேர்தல்

    நான்கு மாநிலங்களில் 16 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 41 இடங்களுக்கான எம்.பிக்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள 15 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.

  11. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • எல்லை பகுதிகளில் நடந்து வரும் உள்கட்டமைப்பு உட்பட சீனாவின் அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு கவனித்து வருகிறது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • இந்திய குடியரசு தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது.
    • முன்னாள் அமைச்சரும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.
    • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,240 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
    • நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்றது.
    • நடிகர் ரஜினியுடன் நடிக்க தான் எப்போதும் தயார் என்று 'விக்ரம்' திரைப்படத்தின் வெற்றி விழாவுக்கு பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
    • ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் என்று யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.