You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எல்லை பகுதிகளில் சீன நடவடிக்கைகளை கவனித்து வருகிறோம் - இந்திய வெளியுறவுத்துறை
லடாக் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
எம்.ஆர். ஷோபனா
மண் பாதுகாப்பு, சர்ச்சைக்குரிய பிரச்னைகள் பற்றி ஜக்கி வாசுதேவ் சிறப்பு பேட்டி
நேயர்களுக்கு வணக்கம்!
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:
- எல்லை பகுதிகளில் நடந்து வரும் உள்கட்டமைப்பு உட்பட சீனாவின் அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு கவனித்து வருகிறது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இந்திய குடியரசு தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது.
- முன்னாள் அமைச்சரும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.
- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,240 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
- நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்றது.
- நடிகர் ரஜினியுடன் நடிக்க தான் எப்போதும் தயார் என்று 'விக்ரம்' திரைப்படத்தின் வெற்றி விழாவுக்கு பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
- ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் என்று யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணைய தளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பங்கங்களில் இணைந்திருங்கள்.
ஸ்ரீபெரும்புதூரில் பிற மாநில மாணவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று - சுகாதாரத்துறை செயலாளர்
ஸ்ரீபெரும்புதூர் இளைஞர் மேம்பாட்டு மையத்தில், பிற மாநில மாணவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் பயிலும், மாணவர்கள் சிலருக்கு ஓமிக்ரான் தொற்று, அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து அங்கு பயிலும் 235 மாணவர்களுக்கும் பரிசோதனை செய்தனர்.
இதில், 2 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 16 மாணவர்கள், தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். இந்த மாணவர்களை, தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சந்தித்து, மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தற்போது பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் பிற மாநில மற்றும் பிற மாவட்ட மாணவர்கள். குறிப்பாக கேரளா பகுதிகளில் இருந்து வந்த மாணவர்களுக்கு, தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,' என்றார் ராதாகிருஷ்ணன்.
எம்பி பதவியில் இருந்து விலகிய பசில் ராஜபக்ஷ - அடுத்த திட்டம் என்ன?
டெல்லியில் பிரதமர் மோதியுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோதியை டெல்லியில் சந்தித்துப் பேசியுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
இந்த சந்திப்பின்போது கோதாவரி - காவிரி இணைப்பு, நீட் விலக்கு, காலநிலை மாற்றம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்ததாக அன்புமணி ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை நபர் அகதியாக பதிவு செய்ய முயற்சி - காவல்துறை விசாரணை
இலங்கை திருகோணமலை பகுதியைச் சேர்ந்த தினேஷ்காந்தன் என்ற நபர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தான் படகு மூலமாக தமிழகத்திற்கு அகதியாக வந்ததாக கூறி தனுஷ்கோடி கடற்கரையில் நின்றுள்ளார்.
தனுஷ்கோடி பகுதி மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அவரை மீட்ட கடல்சார் காவல்துறை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
காவல்துறை நடத்திய விசாரணையில், நேற்று காலை கொழும்பிலிருந்து விமானம் மூலமாக சென்னை வந்து பின்னர் அங்கிருந்து பேருந்து மூலமாக ராமேஸ்வரம் வந்து தனுஷ்கோடி கடற்கரைக்கு சென்றுள்ளார்.
படகில் வந்ததாக தெரிவித்தால் தன்னை அகதியாக மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைப்பார்கள் என அவர் முயற்சி செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தினேஷ்காந்தனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ஆதீனம் பாஜக பாதையை நோக்கி செல்கிறார் - கே. எஸ். அழகிரி
மதுரை ஆதீனம் பாஜகவின் பாதையை நோக்கி செல்வதாக தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் சட்டமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
அதில், திமுகவின் ஆட்சி, சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம், மதுரை ஆதீனம் கூறிய கருத்துகள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், திமுக ஓராண்டு ஆட்சியில் குறைகளே இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் குறைவான குறைகளோடு நடைபெறும் அரசாங்கமாக இது இருக்கிறது,” என்றார்.
மதுரை ஆதீனம் குறித்து பேசிய அவர், “அன்றைக்கு தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே நுழையக்கூடாது என்று சொன்னீர்கள் இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி உள்ளே நுழையக்கூடாது என்று சொல்கிறீர்கள். நான் மதுரை ஆதீனத்துக்கு சொல்கிறேன். நீங்கள் ஆதீனமாக பேசுங்கள் அரசியல்வாதியாக பேசாதீர்கள். இதில் ஆர்எஸ்எஸ், பாஜக ஊடுருவல் இருக்கின்றது. மதுரை ஆதீனம் அரசியல் பாதையை நோக்கி செல்கிறார். அவர் பாரதிய ஜனதா பாதையை நோக்கி செல்கிறார். அது தவறு என்று கூறுகிறேன்," என்றார்.
எல்லை பகுதிகளில் சீன நடவடிக்கைகளை கவனித்து வருகிறோம் - இந்திய வெளியுறவுத்துறை
லடாக் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
புதன்கிழமையன்று , லடாக் பகுதியில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டு கோட்டிற்கு (LAC) மறுபக்கத்தில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது என்று அமெரிக்க ஜெனரல் ஒருவர் தெரிவித்தார். அப்பகுதியில் சீன ராணுவம் அமைத்து வரும் உள்கட்டமைப்பு கவலையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிதம் பக்சி, “எல்லை பகுதிகளில் நடந்து வரும் உள்கட்டமைப்பு உட்பட சீனாவின் அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு கவனித்து வருகிறது.
எல்லை பகுதிகளில் பொருளாதார வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் இந்தியா போதிய முயற்சிகளை எடுத்து வருகிறது,” என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இனி முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை
இலங்கையில் முகக் கவசம் அணிவது வெள்ளிக்கிழமை (ஜூன் 10) முதல் கட்டாயம் கிடையாது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டாக்டர் அசேல குணவர்தன அறிக்கையொன்றின் ஊடாக இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, உள்ளக அரங்குகள் மற்றும் வெளியக பகுதிகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில், சுகாதார வழிகாட்டல்கள்படி நாளை (ஜூன் 10) முதல் அந்த விதிகளை ரத்து செய்வதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், கோவிட் - 19 தொற்றை கண்டறிவதற்காக நடத்தப்படும் பி.சி.ஆர் மற்றும் ரெபிட் அன்டீஜன் பரிசோதனைகள் நாளை (10) முதல் நடத்தப்படுவது அவசியமற்றது என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மண் பாதுகாப்பு, சர்ச்சைக்குரிய பிரச்னைகள் பற்றி சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளிப்படையான பேட்டி
'சேவ் சாயில்' இயக்கத்துக்காக 100 நாள்கள் 27 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட ஈஷா ஃபவுன்டேஷன் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பிபிசி தமிழுக்கு அளித்த ஒரு பிரத்யேக பேட்டியில், மண் வளப் பாதுகாப்புக்கான அவரது இயக்கம் பற்றியும், சர்ச்சைக்குரிய பிரச்சனைகள் பற்றியும் பேசியுள்ளார்.
ஒரு கேள்வி கேட்டபோது, பிபிசியின் கேமிராக்களை சுவிட்ச் ஆஃப் செய்யும்படி தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தினார். பிபிசியின் 3 கேமராக்களையும் அவர்களே கட்டாயமாக ஆஃப் செய்துவிட்டார்கள்.
நூபுர் ஷர்மா கருத்து- ட்விட்டரில் மம்தா பானர்ஜி கண்டனம்
சமீபத்தில், முகமது நபி குறித்து பாஜகவினர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த விவகாரத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டில் வன்முறையை தூண்டுவது மட்டுமல்லாமல், அமைதியை குலைக்கும் வகையில் பாஜகவினர் தெரிவித்த கருத்துகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். சம்பந்தப்பட்ட பாஜகவினர் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்,” என்று மம்தா தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் விவசாய அமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற யுக்ரேன் அதிபர் கோரிக்கை
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் என்று யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஏ.எஃப்.பி செய்தி முகமை வெளியிட்ட செய்தியில், “ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பில் ரஷ்யா உறுப்பினராக இருப்பது குறித்து இனியும் விவாதம் நடத்த முடியாது. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களுக்கு உணவு இல்லாமல் ரஷ்யா செய்யும் நிலையில், அவர்களுக்கு அங்கு என்ன வேலை?,” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடன் செயலிகளிடம் சிக்கி உயிர் பயத்தில் வாழும் இந்தியர்கள்
பாஜகவை திமுகதான் பிரதான எதிர்க்கட்சியாக உருவாக்கி வருகிறது - அண்ணாமலை
தமிழகத்தில் திமுக தான் பாஜகவை பிரதான எதிர்கட்சியாக உருவாக்கி வருகிறது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் கிராமத்தில் மலைவாழ் மக்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில், அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் ஊழல் குறித்து கூறினால் ஆளும் கட்சியினர் வழக்கு தொடர்வது வழக்கமான விஷயமாக மாறி வருகிறது. வழக்குத் தொடர்ந்து வாயை அடைத்துவிட முடியும் என்று அவர்கள் நினைப்பது தவறான கருத்து. நான் எந்த வழக்கையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்,” என்றார்.
மேலும் அவர், "தமிழகத்தில் பாஜகவை திமுக தான் பிரதான எதிர்க்கட்சியாக உருவாக்கி வருகிறது. ஆனால் பிரதான எதிர்க்கட்சி என்பது பாஜகவின் நோக்கமல்ல. தமிழகத்தில் ஆளும்கட்சியாக மாற வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவில்: அறநிலையத் துறை - தீட்சிதர்கள் மோதல் - வரலாற்று காரணம் என்ன?
வந்துகொண்டிருக்கும் செய்தி, ஜூலை 18இல் குடியரசு தலைவர் தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இந்திய குடியரசு தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதி நடைபெறும்.
இந்திய குடியரசு தலைவராக தற்போதுள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்த நிலையில், அப்பதவிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
முகமது நபியின் படம் வரைய இஸ்லாம் மதத்தில் தடை ஏன்?
முகமது நபி பற்றிய விவாதத்தின் போது நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்திருப்பீர்கள். முகமது நபியின் படம் எங்கும் காட்டப்படவில்லை. இதற்குக் காரணம், இஸ்லாத்தில் அல்லாவையோ அல்லது வேறு எந்த நபியையோ ஓவியம், படம் அல்லது வேறு வழிகளில் காட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண புகைப்படம்
ரஜினியுடன் நடிக்க நான் தயார் - நடிகர் கமல்ஹாசன்
நடிகர் ரஜினியுடன் நடிக்க தான் எப்போதும் தயார் என்று 'விக்ரம்' திரைப்படத்தின் வெற்றி விழாவுக்கு பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “அவ்வை சண்முகி, அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட திரைப்படங்களை போன்று விக்ரமிற்கும் நாடு தழுவிய பாராட்டு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.
பின்னர் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விக்ரம் திரைப்படத்தின் வெற்றி சந்தோசத்தையும் தாண்டி பயத்தையும் தருகிறது. இந்த வெற்றி கூடுதல் பொறுப்பையும் தந்திருக்கிறது என்று தெரிவித்தார்.
முதல் பாதியில் குறைவான வசனங்கள் மட்டுமே அவருக்கு இருப்பதாக கூறிய போது, நடிகர் கமல்ஹாசன் அதனை வரவேற்றதாக கூறியுள்ளார்.