தமிழ்நாட்டுக்கு ரூ. 9,602 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை விடுவித்த மத்திய அரசு
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு மொத்தம் 86, 912 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. 2021-2022ஆம் நிதியாண்டில் இந்திய அரசின் நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.71 சதவிகிதமாக இருந்தது என்று இந்திய அரசு இன்று வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
உலக செஸ் சாம்பியனை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த்
உலகின் முதல் நிலை வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்.
நார்வேயின் ஒஸ்லோவில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் இந்த வெற்றியைப் பெற்றார்.
திண்டுக்கல் காவலர் பணியிடை நீக்கம் - கட்சி சார்ந்த முகநூல் பதிவுகளால்
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பான கருத்துகளை முகநூலில் பகிர்ந்து வந்த காவலரை பணியிடை நீக்கம் செய்து, காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய காவலர் சுரேஷ்குமார். இவர் சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா கட்சி, இந்துத்துவா பற்றிய செய்திகளை, தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து வந்துள்ளார்.
தொடர்ந்து பல்வேறு பதிவுகளை செய்து வந்துள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, சுரேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று உத்தரவிட்டுள்ளார்
இந்தியாவில் வறுமை குறைந்து வருகிறது - நரேந்திர மோதி
சர்வதேச முகமைகளின் தகவல்களின்படி இந்தியாவில் வறுமை குறைந்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார் என்கிறது பிடிஐ செய்தி முகமை.
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுவரை இந்தியாவில் 200 கோடி டோஸ்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அவர் பேசினார்.
பல்வேறு திட்டங்களின் பயனாளிகளின் பெயர்களாக சேர்க்கப்பட்டிருந்த ஒன்பது கோடி பேரின் போலி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்று நரேந்திர மோதி கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
நெல்லையில் உயிரிழந்த மயில்: வனத்துறையினர் விசாரணை
நெல்லை சந்திப்பு
பகுதியில் இன்று மயில் ஒன்று உயிரிழந்த நிலையில் சாலையில் கிடந்துள்ளது. தகவல்
அறிந்து வனத்துறையினர் அங்கு சென்றனர். பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில், அருகிலிருந்த மின் கம்பியில் மின்சாரம் தாக்கிமயில் உயிரிழந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அந்த மயில் அங்குள்ள கட்டடத்தின் மீது இருந்து கீழே விழுந்து இறந்ததாகவும்
ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மயிலின் உடலை
வனத்துறையினர் கைப் பற்றினர். இதற்கிடையில் கொக்கிரக்குளம் பேருந்து நிறுத்தம்
அருகில் மற்றொரு மயில் ஓன்று மர்ம முறையில் அடிபட்டு மயக்க நிலையில் உயிருக்குப்
போராடிக் கொண்டிருந்தது. அந்த மயிலையும் வனத்துறையினர் மீட்டுச் சென்று சிகிச்சை
அளித்து வருகின்றனர்.
ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு மயில்கள் அடிபட்டதும்
அதில் ஒரு மயில் பரிதாபமாக உயிரிழந்திருப்பதும் பறவை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் யாரேனும் இந்த இரண்டு மயில்களுக்கும் விஷம்
வைத்தார்களா என்ற கோணத்திலும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் தூய்மைப் பணியாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தம்
மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் 4,500 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களின் அனைத்து சங்கத்தினரும் மேலவாசல் குடியிருப்பு பகுதியில் ஒன்றிணைந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு காரணமான, அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். நிரந்தர பணியாளர்களுக்கு 7வது ஊதியக் குழு பரிந்துரைப்படி பணப் பலன்களை வழங்க வேண்டும்.
கொரோனா கால நிவாரண தொகை ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், மாநகர் பகுதிகளில் இரண்டு நாட்களாக சுமார் 800 டன் குப்பைகள் தேக்கமடைந்துள்ளன.
கடந்த 10 தினங்களுக்கு முன்பாக, வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தனர்.
இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை, மாநகராட்சி சிறப்பு குழு, மேயர் என 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் போராட்டம் தொடர்கிறது.
இலங்கையில் மேலும் ஒரு சிறுமி சடலமாக கண்டெடுப்பு
இலங்கையில் 9 வயதான சிறுமியொருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தேறி ஓரிரு தினங்களில், மற்றுமொரு சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வவுனியா - கணேசபுரம் பகுதியிலிருந்து 16 வயதான சிறுமியின் சடலம் நேற்றிரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தனியார் கல்வி நிறுவனமொன்றிற்கு சென்று மீண்டும் வீடு திரும்பாத நிலையில், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்.
இந்திய கப்பல் படை அதிகாரியாகும் நீலகிரி பெண்
படக்குறிப்பு, கப்பல் படை அதிகாரி மீரா
உதகை அருகே அச்சனக்கல் கிராமத்தை சேர்ந்த படுகர் இன பெண் கப்பல் படைக்கு தலைமையேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அச்சனக்கல் கிராமத்தை சோ்ந்தவா் ரவீந்திரநாத். இவரது மனைவி மாலதி. ரவீந்திரநாத் ராணுவ மருத்துவமனையில் தொழில்நுட்ப நிபுணராக, வெலிங்டன் ராணுவ மருத்துவமனை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு ராணுவ மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார்.
இவரது மகள் மீரா (23) கோயம்புத்தூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்தார். அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த ராணுவப் பணிகளுக்கான தோ்வினை எழுதி, கப்பல் படைக்கான பிரிவில் தோ்ச்சி பெற்றாா்.
இதைத் தொடா்ந்து மீராவுக்கு கேரள மாநிலம் கண்ணூா் அருகே உள்ள எஜிமாலா கப்பல் படைத் தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிகள் நிறைவு பெற்று, மீரா விரைவில் கப்பல் படைக்கு அதிகாரியாக பணியைத் தொடங்க உள்ளார்.
பயிற்சியை முடித்த அவர் தனது பெற்றோருடன், தனது சொந்த ஊரான நீலகிரியில் உள்ள அச்சனக்கல்லுக்கு வந்தாா். அங்கு அவருக்கு அந்த ஊர் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேட்டூர் அணை முன் கூட்டியே திறப்பு - தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் 2வது நாளாக ஆய்வு
பட மூலாதாரம், CMOTamilnadu
படக்குறிப்பு, மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் கிராமத்தில் முதலமைச்சர் ஆய்வு
டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்று ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், கடலூா், புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 80 கோடியில் 683 தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காவிரி நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மேட்டூா் அணை நிரம்பியது. இதனால், குறுவை நெல் சாகுபடிக்காக, சுதந்திரத்திற்கு பின்னர் முதல் முறையாக மே 24 ஆம் தேதியே (ஜூன் 12ம் தேதி திறப்பது வழக்கம்) மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது.
இதையடுத்து, ஆறுகள், பாசன வாய்க்கால்களில் நடைபெறும் தூா்வாரும் பணிகள் அனைத்தும் மே 31 ஆம் தேதிக்குள் நிறைவடைய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் டெல்டா மாவட்டங்களில் ஆய்வுப் பணியைத் தொடங்கினார்.
இரண்டாம் நாளான இன்று, நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் மாவட்டங்களில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தார்.
விவசாயிகள், பொது மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
நாகையை அடுத்த கருவேலங்கடையில், 'தங்களது படகுகளை இலங்கையில் இருந்து மீட்டு தர வேண்டும்.' என்று மீனவப் பெண்கள் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் முதலமைச்சர் உறுதியளித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
தொடர்ந்து இணைந்திருங்கள்
வணக்கம்.
நான் ஜோ மகேஸ்வரன்.
இதுவரை க.சுபகுணம் வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் தொகுத்து வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.
குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
நேபாளத்தில் விழுந்து நொருங்கிய விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தது
பட மூலாதாரம், Getty Images
நேபாளின் மஸ்டாங் மாவட்டத்தில், விமான விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து தற்போது கருப்புப் பெட்டி
கிடைத்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, நேபாள் ராணுவ செய்தித் தொடர்பாளர், “உடல்கள் மீட்கப்படுகின்றன. இதுவரை 10 உடல்கள்
கபாங்-மஸ்டாங் தளத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இரண்டு உடல்கள் கொண்டு வரப்படுகின்றன.
விபத்து நடந்த இடத்திலிருந்து கருப்புப் பெட்டியும் கிடைத்துள்ளது. பருவநிலையைப் பொறுத்து, பொகாரா வழியாக விமானம்
மூலம் காத்மண்டுவுக்கு உடல்கள் கொண்டு செல்லப்படும்.
பருவநிலை ஏற்புடைய வகையில் இருந்தால், தேடுதல் மற்றும் மீட்புப் பணி இன்றுடன் முடிவுக்கு
வரலாம்,” என்று கூறியுள்ளார்.
மேலும், “இதுவரை 21 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.பருவநிலை மோசமாக இருந்த காரணத்தால் 50 முதல் 60
பேர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,” என்று திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர்
கூறியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி கூறுகிறது.
பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா உடலுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்ட ரசிகர்கள்
பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின்
உடல் மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, இன்று காலை மான்சாவில்
உள்ள அவருடைய வீட்டில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
ஏஎன்ஐ செய்தி முகமையின்படி, சித்து மூஸ்வாலாவின்
உடல் இன்று காலையில் மான்சா சிவில் மருத்துவமனையில் இருந்து அவருடைய உறவினர்களால்
வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு அவருடைய இறுதிச் சடங்களில் கலந்து கொள்ள ஏராளமான
மக்கள் கூடினர்.
சித்து மூஸ்வாலாவின் இறுதிச்
சடங்குகள், இன்று மதியம் 12 மணியளவில் அவரது சொந்த கிராமமான மூசாவில் நடைபெறும். அவர் ஞாயிற்றுக்
கிழமையன்று மான்சாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
திங்கள் கிழமை, குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக அவரது உடலை காவல்துறையினர்
பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், மூஸ்வாலாவின் உடலில் 25 தோட்டாக் காயங்கள் இருப்பதாகவும்
அவருடைய கையில் எலும்பு காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவகங்கை அருகே ஒட்டகம் மூலம் மணல் கடத்தல்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே பல்லாக்கோட்டையைச் சேர்ந்தவர் 52 வயதான சரவணன். இவர் சௌதி அரேபியாவில் பணிபுரிந்தார். கடந்த 2 மாதத்திற்கு முன் சொந்த ஊருக்கு வந்தவர் ராஜஸ்தானில் இருந்து ஆண் ஒட்டகம் ஒன்றை வாங்கி வந்து வளர்த்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன் இரவு காளையார் கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் மறவமங்கலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாட்டு வண்டியில் ஒட்டகத்தைக் கட்டி நாட்டாறு ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததைப் பார்த்தனர்.
மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஒட்டகத்தைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் மறவமங்கலம் புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஆனால் போலீசார் ஒட்டகத்தைப் பராமரிக்க முடியாததால் உரிமையாளரிடமே கொடுத்துவிட்டு, தாங்கள் அழைக்கும் போது ஒட்டகத்தைக் கொண்டு வரவேண்டும் எனக் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
தேனியில் சீட் கவர் கடை, மர ஃபர்னிச்சர் கடையில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்
தேனி பழனி செட்டிப்பட்டியிலுள்ள வெற்றி
தியேட்டர் அருகே ஆட்டோ மெக்கானிக் ஓர்க் ஷாப்பில் பற்றிய தீ காரணமாக, அருகிலுள்ள சீட்
கவர் கடை, மர பர்னிச்சர் கடையில் பயங்கர தீ
விபத்து ஏற்பட்டது.
தேனி உள்ளிட்ட நான்கு ஊர்களில் இருந்து வந்த தீயணைப்புத்
துறையினர் நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் பல லட்சம் ரூபாய்
மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.
தேனி பழனி செட்டிப்பட்டி
வெற்றி தியேட்டர் போகும் வழியில் வசந்த் தியேட்டர் எதிர்புறம் பழனிசெட்டிபட்டியைச்
சேர்ந்த நாச்சிமுத்து என்பவருக்குச் சொந்தமான 76 சென்ட் நிலம் வாடகைக்கு
விடப்பட்டுள்ளது.
அதில் வேப்பம்பட்டியைச்
சேர்ந்த தேவா 40 சென்ட் நிலத்தை வாங்கி சீட் கவர் செய்யும்
தொழில் செய்து வருகிறார். சீட் கவர் செய்யும் குடோனுக்கு அருகே பிசி பட்டியைச்
சேர்ந்த சங்கர் என்பவர் ஆட்டோ பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். இதை ஒட்டியே ஒரு
மரச்சாமான்கள் விற்கும் ஃபர்னிச்சர் கடையும் உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு, ஆட்டோ பழுது நீக்கும் கடையில் தீப்பற்றி உள்ளது.
தீயை அணைப்பதற்கு தேனி அல்லிநகரம் நகராட்சி தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. நான்கு மணி நேரம் போராடி தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.
திருக்கடையூர் கோயிலில் இளையராஜாவுக்கு சதாபிஷேக விழா
திருக்கடையூர் கோயில்
பிரபல திரைப்பட இசை அமைப்பாளர்
இளையராஜாவுக்கு சதாபிஷேக விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம்
தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த
கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
தருமபுரம் ஆதீனத்திற்குச்
சொந்தமான இந்தக் கோயிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி
மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த தலமாதலால் இந்தத் தலம் அட்டவீரட்டத்
தலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.
இந்தக் கோயிலில் 60, 70, 75, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் முறையே மணிவிழா, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணா அபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்களைச்
செய்து சுவாமி, அம்பாளை தரிசித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்
என்பது வழக்கம்.
இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு நேற்று மாலை 80 வயதை அடைந்த பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா வருகை தந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளித்தைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியம் இசைக்க கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
கோயில் கொடிமரத்தின் அருகே இளையராஜா கோ பூஜை மற்றும் கஜ பூஜை செய்தார். அதைத் தொடர்ந்து நூற்றுக்கால் மண்டபத்தில் 84 கலசங்கள் மற்றும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, இளையராஜாவுக்கு சதாபிஷேக முதல் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன.
இன்று காலை 6 மணி முதல் 8 மணிக்குள் இரண்டாம் கால பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, நடிகர் பிரேம்ஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர்: துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
தெற்கு காஷ்மீர் பகுதியிலுள்ள அவந்திபுரா
பகுதியில், இன்று இரண்டு பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையின் துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏஎன்ஐ செய்தியின்படி, பாதுகாப்புப் படைக்கும் பயங்கரவாதிகளுக்கும்
இடையே அவந்திபுராவில் இருக்கும் ராஜ்புரா பகுதியில் திங்கள் கிழமை மாலை துப்பாக்கிச்
சூடு தொடங்கியது. அந்தத் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் டிரால் பகுதியில் வசித்த ஷாஹித் ராத்தெர்
என்றும் மற்றொருவர் ஷோபியானில் வசித்த உமர் யூசுஃப் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அரிபால் பகுதியைச் சேர்ந்த ஷகீலா என்ற பெண்ணின் கொலையிலும் ஜாவித் அகமத் என்ற
அரசு ஊழியரின் கொலையிலும் ஷாஹித் சம்பந்தப்பட்டிருந்ததாக காஷ்மீர் ஐ.ஜி விஜய் குமார்
தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
அதோடு, இரண்டு ஏகே47 ரக துப்பாக்கிகளை சம்பவ இடத்திலிருந்து காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
வணக்கம் நேயர்களே!
நான் க.சுபகுணம்.
பிபிசி தமிழின் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய
நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை
அறிய தொடர்ந்து இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள். உங்கள் பகுதியின் சுவாரசியமான
செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல்
அளியுங்கள்.