You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

இலங்கைக்கு எங்களின் ஆதரவு தொடரும்: கொழும்பில் உள்ள இந்திய தூதர்

இலங்கையில் தொடரும் போராட்டம், வன்முறையையடுத்து இந்திய உள்துறை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேர் வெளிநாடு செல்ல கொழும்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இலங்கையில் 7 மணிநேரத்திற்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு

    இலங்கையில் கடந்த 9ம் தேதி ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்தும் அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு இன்று காலை 7 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

    பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16வது சரத்திற்கு அமைய நாடு தழுவிய ரீதியில் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

    இவ்வாறு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்படும் ஊரடங்கு, நாளை (13) காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளினால் வழங்கப்பட்ட எழுத்துமூல அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளிலுள்ள பொதுச்சாலை, ரயில் தண்டவாளம், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது கடற்கரை பகுதிகளில் யாரும் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படாது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

  2. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • ஒரு வார காலத்திற்குள் புதிய அரசாங்கத்தை அமைத்து, அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமல்படுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
    • இலங்கை கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறையில் எம்.பி. போலீசார் உள்ளிட்ட 9 பேர் இறந்துள்ளனர் என்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
    • ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு சமூக விரோதிகள் பயன்படுத்தப்படலாம் என்று இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புவதாக வரும் செய்திகளுக்கு இலங்கையில் உள்ள இந்திய உயர் ஆணையரகம் (தூதரகம்) மறுப்பு தெரிவித்துள்ளது.
    • இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்து பேசினார்.
    • இந்திய உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கு விசாரணை முடிந்து, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • ரஷ்யா ராணுவ வீரர்கள் இதுவரை 26, 350 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று யுக்ரேன் தெரிவித்துள்ளது.