இலங்கை நெருக்கடி: கோட்டாபய ராஜபக்ஷ - ரணில் விக்ரமசிங்க திடீர் சந்திப்பு
இலங்கை கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறையில் எம்.பி. போலீசார் உள்ளிட்ட 9 பேர் இறந்துள்ளனர் என்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்புவிற்கு ராணுவ கவச வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
அசானி புயல் - சென்னையில் இன்றும் விமான சேவை பாதிப்பு

பட மூலாதாரம், GETTY IMAGES
படக்குறிப்பு, பிரதிநிதித்துவப் படம் அசானி புயல் காரணமாக இன்றும் விமான சேவைகள் தடைபட்டுள்ளன. சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அனைத்து இண்டிகோ விமானங்களும் இன்று காலை ரத்து செய்யப்பட்டன.
மேலும், பெங்களூரு மற்றும் டெல்லி விமான நிலையங்களிலிருந்து புறப்படும் தலா ஒரு ஏர் ஏசியா விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 17 உள்நாட்டு விமான சேவை இன்று இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனினும், இன்று மாலையில் விமானங்களை இயக்குவது குறித்த முடிவு இன்னும் வெளியாகவில்லை.
இதனிடையே, தீவிர புயலாக இருந்த 'அசானி', புயலாக வலுவிழந்துள்ளதாகவும், இது வியாழக்கிழமை காலை காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறும் என்றும், இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,897 பேருக்கு கொரோனா

பட மூலாதாரம், GETTY IMAGES
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 54 பேர் இத்தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். 2,986 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதுவரை 19,494 பேர் இத்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று விகிதம் 0.61 சதவீதமாக உள்ளது.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இலங்கையில் ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறைக்கு தூண்டல்: முன்னாள் ஜனாதிபதி

பட மூலாதாரம், GETTY IMAGES
ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு சமூக விரோதிகள் பயன்படுத்தப்படலாம் என்று இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளதாக, 'தினக்குரல்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நீர்கொழும்பு பகுதியில் வன்முறை - பல சொத்துக்களுக்கு சேதம்

இலங்கையின் நீர்கொழும்பு பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற வன்முறை சம்பவம் காரணமாக பல சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
நீர்கொழும்பில் இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்றிரவு மோதல் ஏற்பட்டிருந்தது. இந்த மோதலினால் ஐந்து வர்த்தக நிலையங்கள், 2 முச்சக்கர வாகனங்கள், 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6 சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மையை வழமைக்குக் கொண்டு வருவதற்கு ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், பாதுகாப்புப் பிரிவின் தலையீட்டில் அமைதியின்மை நேற்றிரவு வழமைக்குக் கொண்டு வரப்பட்டதாக போலீஸ் ஊடகப் பிரிவு கூறுகின்றது.
அத்துடன், நீர்கொழும்பிலுள்ள மேலும் பல ஹோட்டல்கள் மற்றும் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பெறுமதிமிக்க வாகனங்கள் பல சேதமாக்கப்பட்டுள்ளதுடன், சிலர் காயமடைந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினமும் அமைதியின்மை சம்பவங்கள் பல பதிவாகியிருந்தன.
வணக்கம் நேயர்களே!
நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.
நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:
- இலங்கையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு அனுமதி அளித்துள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
- இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
- இலங்கை மக்கள் வன்முறையை கைவிட்டு, அமைதி காக்க வேண்டும் என்று அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
- இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகிய மஹிந்த ராஜபக்ஷ தஞ்சமடைந்திருப்பதாக கருதி, திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.
- இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் அளித்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்தார்.
- கோட்டாபய ராஜபக்ஷவின் பூர்வீக இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டது.
- இலங்கை கொழும்புவில் சீனியர் டிஐஜி மக்கள் கூட்டத்தால் தாக்கப்பட்டார்.
- இலங்கை காலி ரத்கம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூவர் காயமடைந்தனர்.
