You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் ஆளும் கட்சி தலைவர்களின் வீடுகளை இலக்கு வைக்கும் போராட்டக்காரர்கள்
இலங்கை பிரதமர் ராஜபக்ஷ பதவி விலக கூடாது என்று வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் கொழும்புவில் திடீர் போராட்டம் நடத்தினர். காலி முகத்திடலில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களின் கூடாரங்கள் எரிக்கப்பட்டன. வன்முறையைக் கட்டுப்படுத்த கண்ணீர்புகை குண்டு பிரயோகிக்கப்பட்டது. இதை அரசுடன் தொடர்புடைய தீவிரவாதிகளின் தாக்குதல் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
ஜிப்மரில் இந்தி இல்லை, இதில் அரசியல் செய்ய வேண்டாம் - எல்.முருகன் பேட்டி
புதுச்சேரி சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சட்டமன்றத்தில் சந்தித்தார்.
எல். முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜிப்மர் நிர்வாகம் 4 சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது, அதில் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தமிழ்தான் முதன்மை மொழி என கூறப்பட்டுள்ளது.
நிர்வாக பயன்பாட்டிற்காக இந்தி பயன்படுத்தலாம் என்று ஜிப்மர் சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். மேலும் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை மீட்க தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது," என்று எல்.முருகன் தெரிவித்தார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயானிடம் மீண்டும் விசாரணை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிஉன் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கை காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த ஒரு மாதமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அனுபவ் ரவி, சஜீவன் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் மற்றும் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் உட்பட பலரிடமும் பலகட்ட விசாரணை நடைபெற்றது. அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவி்டமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சயானிடம் தனிப்படை காவல்துறையினர் கோவை காவலர் தேர்வு பள்ளியில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு கோடநாடு வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பிணையில் இருந்து வருகின்றார். கோடநாடு வழக்கின் மறு விசாரணை தொடங்கிய பிறகு சயானிடம் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா – யுக்ரேன் போர்: பள்ளியில் ரஷ்யா தாக்குதல் – 60க்கும் மேற்பட்டோர் பலி
கிழக்கு யுக்ரேன் பகுதியில் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பிலோஹோரிவ்கா என்ற கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ரஷ்யப் படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தப் பள்ளியில் யுக்ரேன் கிராமவாசிகள் 90 பேர் வரை தஞ்சமடைந்திருந்தனர்.
யுக்ரேன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியன்று தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் இன்றளவும் குறையவில்லை என்பதற்கு கிராமவாசிகள் தஞ்சம் அடைந்த பள்ளி மீது நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலே சான்று.இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, மஹிந்த ராஜபக்ஷ இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார் - பிரதமரின் ஊடக செயலாளர்
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார்.
இந்த தகவலை பிரதமர் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிய மஹிந்த
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ.
அந்த கடிதத்தில், மே 6ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நடந்த இணக்கப்பாடுக்கு அமைய இடைக்கால அரசை அமைக்கவும் அரசியலமைப்பு விதிகளின்படி மேற்கொள்ளப்படும் ஏற்பாடுக்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதாக மஹிந்த கூறியுள்ளார்.
இலங்கையில் தீவிரமாகி வரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளும் அரசு தீர்வு வழங்கத் தவறியதாகக் கூறி பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது.
இதைத்தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவையில் உள்ள அவர்களின் குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டங்களின் போது வலியுறுத்தப்பட்டது.
ஆனால், கோட்டாபயவும் மஹிந்தவும் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்யப்போவதில்லை என்று முதலில் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் செய்து முக்கிய துறைகளுக்கு புதியவர்களையும் பழைய அமைச்சர்களுக்கு வேறு துறைகளையும் ஒதுக்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில், இலங்கையில் நடந்த மக்கள் போராட்டம் ஒரு மாதத்தை நிறைவு செய்த வேளையில், மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் அறிவிப்பு வந்திருக்கிறது. இந்த ராஜிநாமா கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே அவரது பதவி விலகல் அதிகாரபூர்வமானதாக கருதப்படும்.
வன்முறை பிரச்னைகளுக்கு தீர்வு தராது: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் நெருக்கடிக்கு வன்முறை தீர்வாகாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், "வன்முறைச் செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். வன்முறை தற்போதைய பிரச்னைகளைத் தீர்க்காது. அனைத்து குடிமக்களும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடியை தீர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.
இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல் - வீதிகளில் போலீஸ், ராணுவம் குவிப்பு
இலங்கையில் மறு அறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, பொதுமக்கள் அமைதி காக்க மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள்
இலங்கையில் இல் உணர்ச்சிமயமான நிலைமை அதிகமாக இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில், நமது பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், வன்முறை செயல்பாடுகள் அந்த வன்முறையை மேலும் தூண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தேவை ஒரு பொருளாதார தீர்வு மட்டுமே. அதற்கு இந்த நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பிற மாநிலங்கள், நாடுகளில் அகழாய்வு - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு
தமிழர்கள் தடம் பதித்த இந்தியாவின் பிற பகுதிகளிலும் கடல் கடந்து வெற்றி கொண்ட பிற நாடுகளிலும் தொல்லியல்துறையின் அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அறிவியல்வழி ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள் தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
''தமிழ்நாட்டில் 4, 200 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் பயன்பாடு நிலவியதை, கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் சேகரிக்கப்பட்ட, கரிம மாதிரிகளின் காலக் கணக்கீட்டு முடிவுகள் நிறுவியுள்ளன.
இதன் மூலம் தமிழ்நாட்டில் வேளாண் சமூகத்தின் காலம் குறித்த கேள்விகளுக்கு தெளிவான விடை கிடைத்துள்ளது.
தமிழர்கள் தடம் பதித்த இந்தியாவின் பிற பகுதிகளிலும் கடல் கடந்து வெற்றி கொண்ட பிற நாடுகளிலும் தொல்லியல்துறையின் அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கேரளா பத்தனம், கர்நாடகா தலைக்காடு, ஆந்திரா வேங்கி, ஒடிஷா பாலூர் ஆகிய பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.
இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கப்படும்.'' என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை காலி முகத்திடலில் சஜித் பிரேமதாசவை நோக்கி கட்டை, பாட்டில்களை வீசிய கும்பல் - பதற்றம்
இலங்கை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எஸ்ஜேபி எம்.பி.க்கள் குழுவுடன் காலி முகத்திடலுக்குள் நுழைந்தபோது அவரை நோக்கி போராட்டக்குழுவில் இருந்த சிலர் கட்டை, தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வீசினார்கள்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து பொது மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் பதவி விலக அவர்கள் கோரியுள்ளனர். இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகக் கூடாது என்று வலியுறுத்தி, பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்பாக ஆயிரக் கணக்கானவர்கள் ஒன்று கூடினர்.
அவர்கள், மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் அங்கிருந்து அரசுக்கு எதிராக தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெற்று வரும் காலிமுகத் திடலுக்கு சென்றனர்.
அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்கள், செஞ்சிலுவை சங்க மருத்துவமனை, ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது ராஜபக்ஷ ஆதரவுக்கும்பல் தாக்குதல் நடத்தியது. கூடாரங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. அந்த வழியாக இருந்த பேருந்துகளின் மீதும் கல்வீச்சு நடத்தப்பட்டது.
இதையடுத்து காலி முகத் திடல் பகுதிக்கு எதிர்கட்சி எம்.பிக்கள், பொது மக்கள் மீண்டும் திரண்டனர். இதன்படி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அங்கு வந்தார். அவரை நோக்கி வன்முறையில் ஈடுபட்டவர்களில் சிலர் உருட்டுக் கட்டைகள், கற்கள், பாட்டில்களை வீசினர். இதையடுத்து அவரை பாதுகாப்பு படையினர் அங்கிருந்து, அவரது காருக்கு அழைத்துச் சென்றனர். அந்த காரின் மீதும் கட்டைகள் வீசப்பட்டன.
இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
திக தலைவர் வீரமணிக்கு நன்றி சொன்ன மதுரை ஆதீனம் - ஏன் ?
தருமபுர ஆதீனம் மடத்தின் பட்டின பிரவேச நிகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதையடுத்து, மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மதுரை ஆதீனம் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஆதீன மடங்களின் சமய, சம்பிரதாயங்களை பாதுகாக்க வேண்டும். எல்லோரையும் அனுசரித்து போக வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறேன்.
பட்டின பிரவேசம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தது. அதை சர்ச்சையாக்கி, இப்போது உலகறியச் செய்த திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.' என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், 'அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது என மன்னார்குடி ஜீயர் தெரியாமல் சொல்லி விட்டார். இனிமேல் சொல்ல மாட்டார்.
ஆதீன மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகளே முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளனர். அது குறித்து அரசுக்கு புகார் அனுப்பப்பட்டு உள்ளது.
ஏழை, எளியோர் உள்ளிட்ட அனைத்து மக்களும் முழுமையாக சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்.' என்றார்.
பிரதமர் மோடியை சந்தித்து பாதுகாப்பு கேட்கும் முடிவு குறித்த கேள்விக்கு, 'மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கும்' என்றார்.
இலங்கை போராட்டத் திடலில் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் வன்முறை, தீ வைப்பு: கண்ணீர்ப் புகை வீச்சு
இலங்கையில் விறகாகும் இந்திய படகுகள் - மீட்க கோரும் ராமேஸ்வரம் மீனவர்கள்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய கோரியும், பறிமுதல் செய்த படகுகளை விற்பனை செய்வதை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
விடுதலை செய்யப்பட்டு, தாயகம் அனுப்பப்படாத மண்டபம் மீனவர்கள் 4 பேரையும் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை இலங்கை மீன்பிடித் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, விசைப் படகுகளை உடனடியாக திரும்பத் தர வேண்டும்.என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தங்கச்சிமடத்தில் மீனவர்கள் இன்று ஆர்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை கடற்படையால் அரசுடமையாக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான மீன்பிடி விசைப் படகுகளை, இலங்கையில் ஏற்பட்டள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றத்தால், அந்தப் படகுகளில் இருந்து எடுக்கப்பட்ட மரப்பலகைகளை விறகுக்காக விற்பனை செய்வது வேதனை அளிக்கிறது.
எனவே, கடந்த 4 ஆண்டுகளாக இலங்கை அரசால் தடுத்து வைக்கபட்டுள்ள, படகுகளை உடனடியாக தமிழ்நாட்டு மீனவர்களிடம் ஒப்படைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்பாட்டத்தில் பங்கேற்ற மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தீக்குளித்து கண்ணையா மரணம்: "சாகும்போதுகூட இடிப்பதை நிறுத்தியாச்சான்னு கேட்டார்"
வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்: ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டாம் என வலியுறுத்தி அவரது ஆதரவாளர்களால் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடந்தப்பட்டு வருகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பிரதமரின் அதிகாரபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்கு முன்பாக, பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் கூடினர். அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்தவர்களில் பலர், அலரிமாளிகைக்குள் செல்வதை காணக்கூடியதாக உள்ளது.
அத்துடன், மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
காலிமுகத் திடலில் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தியவர்கள் அமைத்திருந்த கூடாரங்களுக்கு தீ வைக்கப்பட்டன. வனமுறையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், ராஜபக்ஷ ஆதரவாளர்கள் இருதரப்பிற்கும் இடையில் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
இதேவேளை, இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தி, பதவி விலக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தம்மிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
'ஜிப்மரில் இந்தி திணிப்பு இல்லை' - ஆளுநர் தமிழிசை பேட்டி
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி பயன்பாடு குறித்த சுற்றறிக்கையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து திமுக உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஜிப்மரில் ஆய்வு செய்தார். மருத்துவமனை இயக்குநருடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஜிப்மர் மருத்துவமனையில் இந்தித் திணிப்பு இல்லை. உள் நிர்வாக ரீதியாக 4 சுற்றறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் 2 சுற்றறிக்கை மட்டும் தவறாக முன்நிறுத்தப்பட்டுள்ளன. இந்தி திணிக்கப்படுகிறது என்று சொல்கிறார்கள்.
இந்தி பேசுவோரும் பணியாற்றுவதால் , பணிப் பதிவேட்டிற்காக இந்தி பயன்படுத்தப்படும் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிப்மரில் முதன்மை மொழியாக தமிழ் இருக்க வேண்டும். மக்களுக்கான தொடர்பு மொழியாக தமிழ்தான் இருக்க வேண்டும். பெயர் பலகைகளில் தமிழ் தான் முதலில் இருக்க வேண்டும் என்றும் ஒரு சுற்றறிக்கை உள்ளது, நான் இதைத்தான் பிரதானமாக பார்க்கிறேன்.''என்றார்.
தொடர்ந்து இணைந்திருங்கள்
வணக்கம். நான் ஜோ மகேஸ்வரன். இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி தொகுத்து வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் வழங்குகிறேன், தொடர்ந்து இணைந்திருங்கள்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
'இந்தி மட்டுமே' அலுவல் மொழி' - ஜிப்மர் அறிவிப்புக்கு எதிராக திமுக போராட்டம்
ஜிப்மரில் அலுவல் மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக இந்தி மட்டுமே இனி வரும் காலங்களில் இருக்கும் என்று ஜிப்மர் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது புதுச்சேரி, தமிழகம் முழுவதிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக 'இந்தி மட்டுமே' பயன்படுத்த வேண்டும் என்ற வகையில் ஜிப்மர் நிர்வாக இயக்குநர் ராகேஷ் அகர்வால் உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கண்டனத்தை பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து, விசிக, பாமக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சமூக வலைதளங்களில் பலரும் இந்தி திணிப்புக்கு எதிராக தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துவருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, 'இந்தி மட்டுமே' அலுவல் மொழியாக இருக்கும் என்ற ஜிப்மர் இயக்குநர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பி திமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான இரா.சிவா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோரை புதுச்சேரி டி.நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானா விபத்து: இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - பிரதமர்
தெலங்கானா மாநிலம் கமரெட்டி மாவட்டத்தை சேர்ந்த சிலர், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு விட்டு பின்னர், மினி லாரியில் திரும்பிகொண்டிருந்தனர். அப்போது, நிஜாம் சாகர் பகுதியில், எதிரே வந்த லாரி ஒன்று, மினி லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோதி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதி மூலம் ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.