இலங்கைக்கு உதவி: 'தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி' - இலங்கை பிரதமர் ராஜபக்ஷ
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்து ராஜபக்ஷ கடிதம் எழுதியுள்ளார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதப் போராட்டம் - சிறை விடுப்பு கேட்டு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, முருகன்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் முருகன் உள்ள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்திய முன்னால் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 30 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் முருகன் தண்டனை அனுபவித்து வருகிறார்.
தனக்கு 30 நாள் சிறை விடுப்பு (பரோல்) வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து, தண்ணீர் கூட அருந்தாமல் கடந்த 5 நாட்களாக சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாகவும், இன்று காலை மயக்கமாடைத்ததால் மருத்துவர்கள் அவரை சோதனை செய்துள்ளனர்.
மேலும் உண்ணாவிரதம் இருப்பது தொடர்பாக முருகன் சிறை துறைக்கு எந்தவித கடிதமும் வழங்கப்படவில்லை என சிறை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறந்தாங்கி அருகே பிரியாணி சாப்பிட்ட 15 தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ்நகர் பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவரது வீட்டிற்கு, மேல்தளம் அமைப்பதற்காக கட்டிட தொழிலாளர்கள் வேலை செய்தனர். சித்திரைவேல் அறந்தாங்கியில் உள்ள பிரியாணி கடையில் இருந்து. 30 பிரியாணி பொட்டலங்களை வாங்கி தொழிலாளர்களுக்கு கொடுத்துள்ளார்.
இதில், 15 பொட்டலங்களை அங்கேயே சாப்பிட்டு்ள்ளனர். மீதி 15 பொட்டலங்களை அவரவர் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இரவு மீதி இருந்த பிரியாணியை குடும்பத்தினரோடு சேர்ந்து சாப்பிட்டுவிட்டுள்ளனர்.
இன்று காலை எழுந்த அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அறந்தாங்கி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜேம்ஸ், நேரில் விசாரணை நடத்த, சம்மந்தப்பட்ட பிரியாணி கடைக்கு சீல் வைத்துள்ளார்.
குஜராத்தை உலுக்கிய கிரிஷ்மா கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
'இந்தியாவின் ஆன்மீக தலைநகர் தமிழ்நாடு' - ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்தியாவின் ஆன்மிக தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது. ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்பதன் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோதி செயல்படுகிறார்" என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
மேலும், 'இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் முதல் நாடாக்க பிரதமர் உழைக்கிறார். 150 நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி இருக்கிறோம். இதுவே புதிய இந்தியா.' என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் 5 வயது வரை பேருந்து கட்டணம் இல்லை - சட்டப்பேரவையில் அறிவிப்பு
பட மூலாதாரம், CMOTamilnadu/twitter
படக்குறிப்பு, முதலமைச்சருடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பேருந்துகளில் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று போக்குவரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர் பேசுகையில், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் 5 வயதுள்ள குழந்தைகள் வரை கட்டணம் இல்லை என்று அறிவித்தார்.
தொடர்ந்து மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வதைத் தடுக்கும் வகையில், தானியங்கி கதவுகள் அமைக்கப்படும். பள்ளி வாகனங்களில் கேமராகள் பொருத்தப்படும். வரும் 12ம் தேதி, போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
தற்போது வரை, பேருந்துகளில் 3 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. மூன்று முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பாதிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் 5 வயது வரை கட்டணம் இல்லை என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ஆக ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தேர்வு
பள்ளி மாணவர்கள் சாதி கயிறு விவகாரம்: பின்னணி என்ன? திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கூகுள் ஒப்பந்தம்: எளிதாக ஆங்கிலம் கற்பிக்க
பட மூலாதாரம், CMOTamilnadu
தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் தொழில்நுட்ப உதவியுடன் எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்து கொள்ளும் வகையில் “Google Read Along” என்ற செயலியை பயன்படுத்துவதற்கெனபள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் கூகுள் நிறுவன பிரதிநிதிகளுடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, பள்ளிக் கல்வித் துறை சார்பில்,‘திசைதோறும் திராவிடம்’ திட்டத்தின் கீழ் 5 நூல்கள் மற்றும் இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் 23 சிறார் நூல்கள் என மொத்தம் 28 நூல்களையும் முதலமைச்சர் இன்று வெளியிட்டார்.
ஆவடி அருகே கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி தொழிலாளி இறப்பு
பட மூலாதாரம், TN Police
ஆவடி அருகே அசோக் நிரஞ்சன் நகரில் தனியார் அடுக்கு மாடியில் குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது, விஷ வாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.
கழிவு நீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு தொழிலாளி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ததால், தொழிலாளி முத்து உயிரிழந்துள்ளதாக கூறப்படு்கிறது.
குணசேகரன் என்கிற மற்றொரு தொழிலாளி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை வீரர்களால் மீட்கப்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை: மதுரை - தருமபுரம் ஆதீனங்கள் சந்திப்பு
தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் நிகழ்வில் பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை, தருமபுரம் ஆதீனங்கள் நேரில் சந்தித்து பேசினர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உக்தவேதீஸ்வரர் ஆலய, கும்பாபிஷேகம் வரும் 8ம் தேதி நடைபெறுகிறது.
இதையடுத்து, யாகசாலை முதல் கால பூஜை நேற்று தொடங்கியது.
இதில் பங்கேற்பதற்காக மதுரை ஆதீனம் ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆலயத்திற்கு வருகை புரிந்தார். அவருக்கு தருமபுர ஆதீனம் சார்பில் கட்டளைத் தம்பிரான் முன்னிலையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆலயத்திற்கு அருகே உள்ள கட்டளை மடத்தில் தங்கியிருந்த தருமபுர ஆதீனம் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் சந்தித்து, ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து யாகசாலை பூர்ணாகுதி நிகழ்ச்சியில் இரண்டு மடாதிபதிகளும் பங்கேற்றனர். பூர்ணாகுதி நடைபெற்று மகா தீபாராதனை செய்யப்பட்டது.
தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பல்லக்கில் தூக்கிச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. .
இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் என சர்ச்சை எழுந்துள்ளது.
நானே பல்லக்கை தூக்கிச் செல்வேன் என்று மதுரை ஆதீனம் பேசியுள்ளார். இந்நிலையில் இரண்டு ஆதீன மடாதிபதிகள் சந்தித்து பேசியுள்ளனர்.
படக்குறிப்பு, தருமபுரம், மதுரை ஆதீனங்கள்
திருச்சி சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர் மரத்தில் ஏறி போராட்டம்
படக்குறிப்பு, திருச்சி சிறப்பு முகாம்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர் பாண்டியன் என்பவர் மரத்தில் ஏறி போராட்டம் செய்தார்.
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது உள்ளிட்ட குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் மற்றும் வெளிநாட்டினர் திருச்சி சிறப்பு முகாமில் உள்ளனர். இவர்களில் இலங்கைகைச் சேர்ந்த கெட்ட யான் பாண்டியன் என்பவரும் உள்ளார்.
இவரது குடும்பத்தினர் நாமக்கல்லில் உள்ளனர். இந்நிலையில், நாமக்கலில் இருந்து பாண்டியனை சந்திக்க சிறப்பு முகாமிற்கு பாண்டியனின் மனைவி அனு இன்று சென்றுள்ளார். சிறை வளாகத்தின் நுழைவாயிலில் பாண்டியன் மனைவியை போலீசார் தகாத வார்த்தைகளில் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து அனு, தனது கணவர் அனுவிற்கு தகவல் சொல்லியுள்ளார். இதைக் கண்டித்து, சிறப்பு முகாமில் உள்ள 50க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, பாண்டியன் திடீரென சிறை வளாகக்த்தில் உள்ள மரத்தி்ல் ஏறி, உச்சிக்கு சென்று அமர்ந்து கொண்டார். போலீசாருக்கு எதிராக முழக்கமிட்டு, போராட்டம் நடத்தினார்.
'எங்கள் மீதான நம்பிக்கை உத்வேகம் தருகிறது' - மீண்டும் டீனாக நியமனம் பெற்ற ரத்தினவேலு பேட்டி
படக்குறிப்பு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேலு
தமிழ்நாடு அரசு எங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கை இன்னும் சிறப்பாக பணியாற்றுவதற்கான உத்வேகத்தை அளிப்பதாக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக மீண்டும் பொறுப்பேற்ற ரத்தினவேலு தெரிவித்தார்.
மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சையால், கல்லூர் முதல்வர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்க பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், மதுரை அரசு மருத்துவ கல்லூரி முதல்வராக ரத்தினவேல் இன்று மீண்டும் பொறுப்பேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"மூத்த மருத்துவ மாணவர்கள், யாருடைய ஒப்புதலையும் பெறாமல், அவர்களாக உறுதிமொழியை படித்தார்கள். அதனால் சில சர்ச்சைகள் எழுந்தன. அது குறித்து,
மருத்துவத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, விளக்கமளித்து வருத்தம் தெரிவித்தேன்.
உடனடியாக முதலமைச்சர் கருணை உள்ளத்தோடு, கொரோனா காலத்தில் நாங்கள் ஆற்றிய சேவையை நினைவில் கொண்டு, என்னை மீண்டும் முதல்வராக நியமித்து உத்தரவு பிறப்பித்தது உள்ளார்.
உடனடியாக முடிவெடுத்த முதலமைச்சருக்கும், மருத்துவத்துறை அமைச்சருக்கும் நன்றி.
அரசு எங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கை, இன்னும் சிறப்பாக பணிபுரிவதற்கு உத்வேகம் அளிக்கிறது.
பொறுப்புடன் சரியான செய்தியை வெளியிட்டு அறம் சார்ந்த ஒத்துழைப்பை கொடுத்த ஊடகத்தினருக்கு நன்றி," என தெரிவித்தார்.
தொடர்ந்து இணைந்திருங்கள்
வணக்கம். நான் ஜோ மகேஸ்வரன்.
இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி தொகுத்து வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகளை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.
குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
அரசியல் கட்சி தொடங்குகிறாரா? என்ன சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இன்று பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தன் வருங்கால திட்டங்கள் குறித்து பலவற்றை அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் பணியாற்றியுள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " பீகாரை சிறந்த மாநிலமாக மாற்ற புதிய சிந்தனையும் முயற்சியும் தேவை" என தெரிவித்தார்.
"இதை ஒருவரால் மட்டுமே செயல்படுத்த முடியும் என்று யாரும் கூற முடியாது என்று நம்புகிறேன். பீகாரின் பிரச்னைகளை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் அதனை தீர்க்கக்கூடிய திறன் அவர்களிடமே உள்ளது என்றும் நான் நம்புகிறேன். மக்கள் அனைவரும் இதற்காக ஒன்றிணைய வேண்டும்" என தெரிவித்தார்.
புதிய அரசியல் கட்சியை தொடங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எந்த அரசியல் கட்சியையும் தான் இன்று அறிவிக்கப் போவதில்லை என தெரிவித்தார்.
"நான் புதிய கட்சியை தொடங்குவதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன, அப்படி எதையும் நான் செய்யப்போவதில்லை. அடுத்த 3-4 மாதங்கள் நான் மக்களை சந்திக்க உள்ளேன். சுமார் 17,000 முதல் 18,000 வரை மக்களை நான் சந்திக்க உள்ளேன்" என தெரிவித்தார்.
மேலும், மக்களை சந்தித்துவிட்டு தான் கட்சி தொடங்கினாலும் அது பிரசாந்த் கிஷோர் கட்சியாக மட்டும் இருக்காது என அவர் கூறினார்.
தான் மேற்கு சம்பரனிலிருந்து 3,000 கி.மீ. தொலைவுக்கு நடைபயணத்தைத் தொடங்க உள்ளதாகவும் கூறினார்.
கோடநாடு வழக்கில் தொடரும் விசாரணை
படக்குறிப்பு, பிஜின் குட்டி
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு இல்லத்தில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கை நீலகிரி காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
கடந்த ஒரு மாதமாக இந்த வழக்கில் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் வைத்து சசிகலா உறவினர் விவேக், அதிமுக பிரமுகர்கள் அனுபவ் ரவி, சஜீவன், சஜீவனின் சகோதரர் சிபி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி மற்றும் அவரின் மகன் உள்ளிட்ட பலரிடமும் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியிருந்தனர்.
அதன் ஒரு பகுதியாக அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவிடம் சென்னையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை காவல்துறையினர் மூன்று நாட்கள் விசாரணை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக, இன்று இவ்வழக்கில் ஆறாவது குற்றவாளியான பிஜின் குட்டியின் சகோதரர் மோசஸிடம் கோவை காவலர் தேர்வு பள்ளியில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு
பட மூலாதாரம், KANCHANA WIJESEKARA'S FACEBOOK
படக்குறிப்பு, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர
இலங்கையில் மீண்டும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு முதல் நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு வரிசைகள் காணப்படுவதை பார்க்க முடிகின்றது.
நாடு முழுவதும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது.
இலங்கைக்கு தேவையான பெட்ரோல் போதுமான அளவு தம்வசம் காணப்படுகின்ற போதிலும், சிலரது திட்டமிட்ட சதிகளினால் பெட்ரோல் வரிசை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் பெட்ரோல் தட்டுப்பாட்டை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், டீசலுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவும் அவதானம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
நுரைச்சோலை மின்உற்பத்தி நிலையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செயலிழந்துள்ளதை அடுத்து, ஏனைய மின்உற்பத்தி நிலையங்களின் ஊடாக மின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்கு தேவையான டீசலை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வாகனங்களுக்கு டீசலை வழங்குவதை விடவும், மின்சார உற்பத்தியை மேற்கொள்வது அவசியம் என கொள்கை அளவில் தீர்மானமொன்று எடுக்கப்பட்டு, பெருமளவிலான டீசல் மின் உற்பத்திக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கடனுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் டீசல் ஏற்றிய கப்பல் எதிர்வரும் 11ம் தேதியே நாட்டை வந்தடையும் என அவர் கூறுகின்றார்.
இதனால், நாளொன்றுக்கு 4000 மெட்ரிக் டன் டீசல் தேவைப்படுகின்ற நிலையில், தற்போது சந்தைக்கு 1000 முதல் 1500 மெட்ரிக் டன் டீசல் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
ஆளும் கட்சியினர் மிரட்டுகிறார்கள் - மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு
"உங்களால் திருப்பணி செய்துவிட முடியுமா? நீங்கள் நுழைந்துவிடுவீர்களா? என்று ஆளும் கட்சியினர் மிரட்டுகிறார்கள்" - மதுரை ஆதீனத்தின் இந்த குற்றச்சாட்டு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை பிபிசி தமிழின் இந்த ட்விட்டர் பதிவுக்கு சென்று தெரிவியுங்கள்:
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
புதுச்சேரியிலும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது
புதுச்சேரியில் இன்று தொடங்கிய 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 41 மையங்களில், 14,627 மாணவர்கள் எழுதுகின்றனர்.
புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் படிப்படியாக தொடங்கி நடைபெற்றன.
இந்த நிலையில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என கல்வித்துறை அறிவித்தது. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
புதுச்சேரி யூனியன் பிரதேசமும் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றி வருவதால், புதுச்சேரியிலும் இன்று 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த 6,972 மாணவர்களும், 7,655 மாணவிகள் என மொத்தம் 14,627 மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 41 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தேர்வு எழுதுவதை கண்காணிக்க 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக தேர்வு எழுத வந்திருந்த மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, கிருமி நாசினிகள் கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது
பட மூலாதாரம், ANBIL MAHESH POYYAMOZHI
தமிழகத்தில் இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.
தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு மே 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வை 26.5 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
இதனை முன்னிட்டு சென்னை, சாந்தோம் பகுதியில் உள்ள பள்ளியொன்றில் தேர்வு மையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்காக வந்தோம், 'தைரியமாக மகிழ்ச்சியாக எழுதுங்கள், பதற்றப்படாதீர்கள், நல்ல முறையில் தேர்வு எழுதுங்கள்' என கூறினேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொதுத்தேர்வு நடைபெறவில்லை. இந்நிலையில், இரு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேர்வு இது.
தேர்வு முடிவுகள் ஜூன் இறுதிக்குள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,275 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,275 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,010 பேர் குணமடைந்துள்ளனர். 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை 19,719 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது