இலங்கைக்கு உதவி: 'தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி' - இலங்கை பிரதமர் ராஜபக்ஷ
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்து ராஜபக்ஷ கடிதம் எழுதியுள்ளார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
தமிழக ரேஷன் கடைகளில் பொருட்களின் தரத்தை கண்காணிக்க குழு - முழு விவரம்

இந்த கண்காணிப்புக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட வழங்கல் அலுவலர் செயல்படுவார். உறுப்பினர்களாக நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்,கூட்டுறவுத் துறை மண்டல இணை பதிவாளர், குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் செயல்படுவார்கள்.
ஹைதராபாத் ஆணவ கொலை: முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்த இந்து இளைஞர் வெட்டிக்கொலை

பட மூலாதாரம், UGC
ஹைதராபாதில் கலப்புத் திருமணம் காரணமாக நாகராஜ் என்ற இளைஞன் முஸ்லிம் மனைவி குடும்பத்தாரால் படுகொலை செய்யப்பட்டார்.
இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது
வணக்கம். இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.
தொடர்ந்து இந்த நேரலைப் பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணைய தளம், ட்விட்டர், இண்ஸ்டாகிராம், முகநூல் பக்கங்களி்ல் இணைந்திருங்கள்.
இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்
- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,275 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பேருந்துகளில் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார்.
- தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
- இலங்கையில் எரிபொருளுக்கு மீண்டும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
- தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் நிகழ்வில் பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை, தருமபுரம் ஆதீனங்கள் இன்று நேரில் சந்தித்து பேசினர்.
- ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- அழுத்தங்களுக்கு அடிபணிந்து பதவி விலகப் போவதில்லை என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
- ஆவடி அருகே அசோக் நிரஞ்சன் நகரில் தனியார் அடுக்கு மாடியில் குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது, விஷ வாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.
- திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர் பாண்டியன் என்பவர் மரத்தில் ஏறி போராட்டம் செய்தார். மனைவியை போலீசார் திட்டியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
- தமிழ்நாடு அரசு எங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கை இன்னும் சிறப்பாக பணியாற்றுவதற்கான உத்வேகத்தை அளிப்பதாக,மதுரை அரசு மருத்துவகல்லூரி முதல்வராக மீண்டும் பொறுப்பேற்ற ரத்தினவேலு தெரிவித்துள்ளார்.
- மேற்கு சம்பரனிலிருந்து 3,000 கி.மீ. தொலைவுக்கு நடைபயணத்தைத் தொடங்க உள்ளதாக தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
- கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 6வது நபராக குற்றம்சாட்ட்ப்பட்டுள்ள பிஜின் குட்டியின் சகோதரர் மோசஸிடம் கோவை காவலர் தேர்வு பள்ளியில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மே 31-ம் தேதி வரை நடைபெறும் தேர்வை 26.5 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
- இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்து ராஜபக்ஷ கடிதம் எழுதியுள்ளார்.
மாமல்லபுரத்தில் ரூ. 2.50 கோடி மதிப்புள்ள சிலைகள் - போலீசார் சோதனையில் கைப்பற்றினர்

பட மூலாதாரம், TN Police
சட்டவிரோதமாக வெளிநாடு கடத்தவிருந்த ரூ. 2.50 கோடி மதிப்புள்ள உலோகச் சிலைகளை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மாமல்லபுரத்தில் பறிமுதல் செய்தனர்.
சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு, மகாபலிபுரத்தில் உள்ள கலைப்பொருள் விற்பனை கூடத்திலிருந்து, சில பழங்கால உலோக தெய்வ சிலைகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்த இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை ஏஎஸ்பி அசோக் நடராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மகாபலிபுரத்தில் உள்ள THE BOUFIQE என்ற நிறுவனத்தில் சோதனையிட்டனர்.
அப்போது, வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த உலோகத்திலான நின்ற நிலையில் உள்ள பார்வதி அம்மன் சிலை, உட்கார்ந்த நிலையில் உள்ள பார்வதி அம்மன் உலோக சிலை, நடமாடும் சிவன் உலக சிலை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மூன்று சிலைகளும் புராதனமான சிலைகள் என்பதும் இவற்றை வைத்திருப்பதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதாலும், இவை ஏதேனும் ஒரு கோவிலில் இருந்து களவாடப்பட்ட இருக்கலாம் என்கிற சந்தேகத்தின அடிப்படையில் அவற்றை போலீசார் கைப்பற்றினர். சிலைகளின் மதிப்பு ரூ. 2.50 கோடி இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
கொரோனா அலை முடிந்ததும் சிஏஏ நடைமுறை - உள்துறை அமைச்சர் அமீத் ஷா பேச்சு

கொரோனா அலை முடிந்ததும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,
'குடியுரிமைத் திருத்தச் சட்டம்(சி.ஏ.ஏ) அமல்படுத்தப்படாது என்று திரிணாமுல் காங்கிரஸ் வதந்தி பரப்பி வருகிறது. ஆனால், கொரோனா அலை முடிந்ததும் சிஏஏ அமல்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசுக்கு உதவி: முதல்வர் உறுதி கொடுப்பாரா? சீமான் கேள்வி

பட மூலாதாரம், ㅤ
படக்குறிப்பு, சீமான் 'மனிதனை மனிதன் தோளில் சுமப்பது ஏற்புடையதல்ல. அது மதிப்புக்குரியவர்கள் செய்யும் செயல் அல்ல' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
அயோத்திதாச பண்டிதரின் 108 ஆவது நினைவு தினத்தையொட்டி தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியினர் மரியாதை செலுத்தினர். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், தருமபுர ஆதீன விவகாரம் தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதில்அளித்தவர், 'பல்லக்கு தூக்கும் விவகாரத்தைப் பொறுத்தவரையில் மனிதனை மனிதன் சுமப்பது இழிவு என்கிறோம். அன்றைக்கு வாகனங்கள் இல்லை. அதனால் பல்லக்கில் தூக்கிச் சென்றது சரியானது. இன்றைக்கு நவீன வாகனங்கள் வந்துவிட்டன.
தவிர, பட்டினப் பிரவேசம் என்பதையே நான் ஏற்கவில்லை. சமஸ்கிருத சொற்களைப் பிடித்துக் கொண்டு எதற்காக நாம் தொங்க வேண்டும்? சமஸ்கிருதத்தைப் படி என்கிறார்கள், ஆனால், எந்தக் கோவிலில் நம்மை மணியடிக்க விடுவார்கள் என்பதுதான் கேள்வி. மனிதனை மனிதன் தோளில் சுமப்பது என்பதுமதிப்புக்குரியவர்கள் செய்யும் செயல் அல்ல' என்றார். மேலும், 'மதுரை ஆதீனமோ குன்றக்குடி அடிகளாரோ பல்லக்கில் போகிறார்களா? இனி அதனை மாற்றிவிட்டு வேறு மாதிரி செல்ல வேண்டும்' என்றார்.
அடுத்ததாக, திராவிடர் கழகத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக கேட்டபோது, ' திராவிடர் கழகத்தைத் தொடக்கத்திலேயே தடை செய்திருக்க வேண்டும்' என்றார்.
இதையடுத்து, இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு சரியான உணவு கொடுக்கப்படாதது குறித்துக் கேட்டபோது, 'நமது மீனவர்களை பிடித்து அவர்கள் விளையாடுகின்றனர். இது பல ஆண்டுகளாக நடக்கிறது. அவர்களுக்கு எதற்காக 7 ஆயிரம் கோடி கடன் கொடுக்க வேண்டும்? இந்தி, சமஸ்கிருதத்தை எதிர்த்தால்மத்திய அரசின் நிதி கிடைக்காது என்றால், இந்தியாவின் நிதி ஆதாரத்தில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. வரிகொடா இயக்கத்தை காந்தியால்தான் செய்ய முடியுமா?' எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து இலங்கைக்கு தமிழக அரசு நிதி திரட்டுவது குறித்துப் பேசிய சீமான், ' நாம் தமிழர் தனியாக நிதி திரட்டுகிறது. போர்ச் சூழலில் (2009 ஆம் ஆண்டு) சேகரித்த உணவுப் பொருள்களை எல்லாம் வணங்காமுடி என்ற கப்பலில் அனுப்புவதாக இருந்தது. ஆனால், அதனை காங்கிரஸ் அரசுஅனுமதிக்கவில்லை. இதையடுத்து, சாகும் வரையில் உண்ணாவிரதத்தை அய்யா நெடுமாறன் தொடங்கினார். பின்னர், உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
தமிழக முதல்வரிடம் கேட்பது நாங்கள் ஒன்றுதான், இலங்கை அரசு என் மக்களுக்கு அரிசி கொடுக்குமா, ஒரு ரூபாயாவது கொடுக்குமா, அந்த உறுதியை முதல்வர் கொடுப்பாரா? ஒரு கிலோ அரிசிகூட தர மாட்டார்கள். இலங்கையில் உள்ள சிங்களர்களுக்குக் கொடுப்பதாகச் சொல்லுங்கள். வரும் நாள்களில்அரிசி, எண்ணெய், உலர் உணவுகள், பால் மாவு ஆகியவற்றை சேகரித்து அனுப்ப உள்ளோம். இதுதொடர்பாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசியுள்ளோம். தவிர, சிங்கள மக்களுக்கு கொடுக்க வேண்டாம் என நினைக்கவில்லை' என்றவர், 'இலங்கையைவிட மோசமான நெருக்கடி தமிழ்நாட்டில் உள்ளது.வரக்கூடிய ஆறு மாதங்களில் தெரியும்' என்றார்.
இலங்கையில் இன்று முதல் எரிபொருள் நிரப்ப கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்
இலங்கையில் இன்று முதல் மீண்டும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு ஒரு தடவையில் 2000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3000 ரூபாவிற்கும் எரிபொருள் நிரப்ப முடியும் என கூட்டுமாபனம் குறிப்பிடுகின்றது.கார்கள், வேன்கள் மற்றும் ஜீப்களுக்கு 8000 ரூபாவிற்கு எரிபொருளை நிரப்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், லொறிகள், பஸ் மற்றும் வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் செல்லுப்படியாகாது என இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் குறிப்பிடுகின்றது
தமிழக ரேஷன் கடைகளில் பொருட்களின் தரத்தை கண்காணிக்க குழு - முழு விவரம்

இந்த கண்காணிப்புக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட வழங்கல் அலுவலர் செயல்படுவார். உறுப்பினர்களாக நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்,கூட்டுறவுத் துறை மண்டல இணை பதிவாளர், குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் செயல்படுவார்கள்.
கொரோனா உயிரிழப்புகளை அதிகம் சந்தித்த இந்தியா - உலக சுகாதார அமைப்பு
மதுரையில் வெறுங்காலுடன் வெயிலில் நடந்த மாணவர்கள்
மதுரை மகாத்மா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் +2 தேர்வு எழுதி விட்டு, சாலையில் காலணி அணியாமல் மாணவ, மாணவியர் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில், 'தகிக்கும் தார் சாலையில் மாணவ, மாணவியர் துடித்துக் கொண்டு வந்த காட்சி காண்போர் அனைவரையும் கவலைகொள்ளச் செய்தது. பள்ளி நிர்வாகத்தின் புரிதலின்மையே இதற்குக் காரணம்.
'மதுரையில் இன்று 40* செல்சியஸ் வெயில். கொதிக்கும் வெயிலில் நடந்தால் கால் பாதங்களில் கொப்பளங்கள் ஏற்படும். ஆணியோ, முள்ளோ குத்தி பாதிப்பு ஏற்பட்டால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படலாம்.
பள்ளி நிர்வாகங்கள் விதிகளை சரியாக புரிந்து செயல்படுத்த வேண்டும். தேர்வு அறையின் வாசல் வரை காலணி அணிந்து வர தடை கிடையாது. இதை தெளிவாக விளக்கி மாணவர்களை காலணி அணிந்து சாலைகளில் செல்வதை உறுதி செய்யும்படி பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்த வேண்டும்.' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இணையத்தை முடக்குவதில் 'டிஜிட்டல்' இந்தியா முதலிடம்: 'அரசிடம் தரவுகள் இல்லை' - விபரம் என்ன ?

பட மூலாதாரம், Getty Images
உலக அளவில் இந்தியாவில் அதிகளவு இணைய முடக்கம் (Internet Blackout) நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த 2012 - 2022 ஆண்டு வரை சுமார் 639 இணைய முடக்கங்கள் நடைபெற்றுள்ளதாக, மென்பொருள் சுதந்திர சட்ட மையம்(Software Freedom Law Centre - SFLC )கூறுகிறது.
மேலும் அந்த தரவுகளில், அதிகபட்சமாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில் 399 முறை இணைய முடக்கம் நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கLinkவும்.
திருப்பூர்: அறுவை சிகிச்சை செய்த + 2 மாணவி - ஆம்புலன்ஸில் சென்று தேர்வு எழுதினார்
திருப்பூரில் அறுவை சிகிச்சை செய்ததால், மருத்துவமனையில் இருந்த 12ம் வகுப்பு மாணவி ஆம்புலன்ஸில் சென்று பொதுத் தேர்வை எழுதியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் குப்பாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரிதன்யா. இவர் திருப்பூர் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவி. கடந்த ஞாயிறன்று ரிதன்யாவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
இதையடுத்து திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நுண்துளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சையானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, மாணவி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மருத்துவமனையில் இருந்த ரிதன்யா தானும் தேர்வு எழுத வேண்டும் என பெற்றோரிடமும் மருத்துவர்களிடமும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவிலுள்ள கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செவிலியர்கள் உதவியுடன் சென்று, தேர்வு எழுதியுள்ளார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியாவில் கொரோனாவினால் 4.70 மில்லியன் இறப்புகள் - உலக சுகாதார நிறுவனம் தகவல்

பட மூலாதாரம், AFP
உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரப்படி இந்தியாவில் 4.70 மில்லியன் பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வ பதிவுகளை விட இது 10 மடங்கு அதிகமாக உள்ளது.
இந்த புள்ளி விபரத்தை இந்திய அரசு ஏற்கவில்லை. இந்த கணக்கெடுப்பு தவறானது என்றும் தெரிவித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில், உலகளாவிய உயிரிழப்புகள் தரவு தொகுப்பு குறித்த ஆய்வாளர்கள், அனைத்து காரணங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த தரவை இந்தியா அதிகாரிகளிடம் கேட்டனர்.
"இவை கிடைக்கவில்லை," என்று இந்தியாவின் முக்கிய புள்ளியியல் அலுவலகம் ஆராய்ச்சியாளர்களிடம் தெரிவித்தது. என்று உலகளாவிய தரவுத் தொகுப்பு உருவாக்க இணை விஞ்ஞானி ஏரியல் கார்லின்ஸ்கி தெரிவிக்கிறார்.
கொரோனாவினால் தற்போது வரை அரை மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளை இந்தியா அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது. கடந்த 2020 ஜனவரி 1 முதல் 2021 டிசம்பர் 31ம் தேதி வரை 481,000 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன.
ஆனால் உலக சுகாதார அமைப்பின் கணக்கீட்டின் படி, இந்த எண்ணிக்கையை சற்றேறக்குறைய 10 மடங்கு அதிகமாக உள்ளது. உலகளவில் கொரோனா இறப்புகளில் சற்றேறக்குறைய மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
ராஜபக்ஷவை ஆதரித்தது ஏன்? இப்போது எதிர்ப்பது ஏன்? மலையகத் தமிழர் தலைவர் பேட்டி
வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கைக்கு உதவி: தமிழ்நாடு முதலமைச்சருக்கு ராஜபக்ஷ நன்றி

பட மூலாதாரம், Mahinda Rajapaksa/fb
படக்குறிப்பு, இலங்கை பிரதமர் ராஜபக்ஷ இலங்கை மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்டவற்றை அனுப்பி வைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதல்கட்டமாக 40 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'தமிழக சட்டப்பேரவையில் தாங்கள் கொண்டுவந்த தனித் தீர்மானத்தின்படி, இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு, தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தாங்கள் அறிவித்துள்ளமை, தங்களது நல்லெண்ணத்தைக் குறித்து நிற்கின்றது.
இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்னையாகப் பார்க்காது, மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களிற்கும் தமிழ்நாடு மாநில அரசிற்கும் இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Mahinda Rajapaksa
பழைய சிக்கன் பயன்பாடு சர்ச்சை - மதுரையில் 5 ஷவர்மா கடைகளுக்கு நோட்டீஸ்

மதுரையில் உள்ள ஷவர்மா கடைகளில் பழைய கோழிக்கறி இறைச்சி பயன்படுத்தப்படுவதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, ஐந்து கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு துறையினர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
முன்னதாக, அந்த கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கேரளாவில் சவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்த நிலையில் மதுரையில் உள்ள 52 ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில், உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
இதில், 10 கிலோ பழைய கோழிக்கறி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 5 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது.
பழைய சிக்கன், தடை செய்யப்பட்ட நிறமிகளைப் பயன்படுத்த கூடாது என உணவு பாதுகாப்பு துறையினர் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜம்மு- காஷ்மீர் தொகுதிகள் மறுவரையறை இறுதி செய்யப்பட்டன

பட மூலாதாரம், ANI
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான சட்டபேரவை, மக்களவை தொகுதிகளுக்கான மறுவரையறை இறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதையடுத்து சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதி மறுவரையறை செய்ய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் அமைக்கப்பட்டது.
இந்த குழுவில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, துணைத் தேர்தல் ஆணையர் சந்திர பூஷன் குமார், மாநில தேர்தல் ஆணையர் கே.கே.சர்மா மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி ஹிருதயேஷ் குமார் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றனர்.
இந்நிலையில் தொகுதிகள் மறுவரையறை இறுதி செய்யப்பட்டுள்ளது. மறுவரையறை செய்யப்பட்ட தொகுதிகளின் இறுதிப் பட்டியலில் குழுவினர் தங்களது ஒப்புதலை அளிக்கும் வகையில் இன்று கையெழுத்திட்டுள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று பிரதமர் மோதி பேசுகையில், 'ஜம்மு- காஷ்மீரில் தொகுதிகள் மறுவரையறை இறுதி செய்த பிறகே தேர்தல் நடத்தப்படும்.' என்று தெரிவித்திருந்தார்.
மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு வேண்டும் - காவல் ஆணையரிடம் மனு

மதுரை ஆதீனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி வழக்குரைஞர்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
தருமபுர ஆதீனம் பட்டின பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கில் தூக்கிச் செல்லும் நிகழ்வு தொடர்பாக மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள கருத்துக்கள் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தன.
இந்நிலையில், 'மதுரை ஆதீனத்தின் கருத்தால் இந்து விரோத சக்திகளால் ஆதினத்துக்கு ஆபத்து நிகழும் சூழல் உருவாகி உள்ளது. குத்தகைதாரர்கள் ஆதீனத்துக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். மதுரை ஆதீன மடம் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது. எனவே மதுரை ஆதினத்துக்கும், மடத்திற்கும் தகுந்த காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்," என்று இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆட்டோவில் மரம் விழுந்து இருவர் உயிரிழப்பு - முதலமைச்சர் இரங்கல்
திருநெல்வேலி பத்தமடையில் சாலை விரிவாக்க பணியில் மரம் ஆட்டோ மீது விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.
திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் செல்லும் நெடுஞ்சாலையில் பத்தமடை பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, மரங்களையும் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
பத்தமடை அருகே மரத்தை அகற்றும் போதும் ஆட்டோவின் மீது விழுந்தது. இதில, இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், சாலை விரிவாக்கப் பணிக்காக மரத்தை அகற்றும்போது, மரம் விழுந்ததில் உயிரிழந்த இருவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்

