"பஞ்சாப் ஒன்றும் சோதனைக் களம் அல்ல" - ராகுல் காந்தி

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இன்று காளி மாதா கோயில் அருகே காலிஸ்தான் ஆதரவு குழு மற்றும் சிவசேனை ஆகிய இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி - 8 பேர் மீது வழக்குப்பதிவு

    பாலியல் தொந்தரவு

    பட மூலாதாரம், Getty Images

    விருதுநகர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் தன்னை தாக்கி மானபங்க படுத்தியதாகக் கூறி பெண் ஒருவர் சமீபத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தை பாரதிய ஜனதா கட்சி கையில் எடுத்துள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவியும் சுலைமான் என்கிற குணசேகரன் என்பவரும் இருவரும் காதலித்து வந்துள்ளதாகவும் அந்த மாணவிக்கு குணசேகரன் செல்போன் வாங்கி கொடுத்து, இருவரும் பேசிக் கொண்டிருந்ததாகவும் அவரது தாயார் கூறுகிறார்.

    இந்த நிலையில், மகளிடம் இருந்த செல்போனை கொடுப்பதற்காக கடந்த 9ஆம் தேதி குணசேகரன் வீட்டுக்கு தாம் சென்றபோது, குணசேகரனின் உறவினர்கள் தாக்கி, மானபங்கபடுத்தியதாக புகார் அளிக்க மாணவியின் தாயார் சென்றார்.

    ஆனால் அவரது புகார் மீது 15 நாட்களாகியும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மாணவியின் தாய் ஏப்ரல் 25ஆம் தேதி காலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகவும் அவரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த காவலர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவயின் தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இது குறித்து இருக்கன்குடி காவல் நிலைய ஆய்வாளர் மயில் பிபிசி தமிழிடம் கூறும்போது, பெண்ணின் புகாரின்போரில் எட்டு பேர் தலைமறைவாக இருப்பதால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளோம் என்றார்.

    அதில் ஆறு பேர் ஏப்ரல் 22ஆம் தேதி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். அதை விசாரித்த நீதிபதி குணசேகரன் உள்ளிட்ட 5 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து 5 பேரும் திருநெல்வேலி மாவட்டம் ஜங்ஷன் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த மூவரில் இருவரை கைது செய்து செய்துள்ளோம். மேலும் ஒருவரை தேடி வருகிறோம் என்று ஆய்வாளர் மயில் கூறினார்.

    குற்றம்சாட்டப்பட்டுள்ள் எட்டு பேர் மீதும் பிரி்வு 354, பெண்களை துன்புறுத்துதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தை அறிந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற வீடியோவை பதிவு செய்துள்ளார்.

    ''காவல்துறையினர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை வாங்கி தர வேண்டும். இல்லையெனில் விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும்'' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. காஞ்சிபுரத்தில் தரமற்ற அரிசி புகார்: ரேஷன் கடை விற்பனையாளர்கள் 10 பேர் பணி இடைநீக்கம்

    கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தரமற்ற அரிசி வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் 10 பேர் பணி இடைநீக்கம் செய்யபட்டுள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் கடந்த ஞாயிறு கிழமை அன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது, நியாய விலைக் கடைகளில் தரமற்ற அரிசி வழங்குவதாக முதலமைச்சரிடம் பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்திக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் லட்சுமி, மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் கடந்த இரு தினங்களாக ஆய்வு மேற்கொண்டார்.

    இதில், வாலாஜபாத் மற்றும் முத்தியால்பேட்டை கூட்டுறவு சங்களின் கீழ் இயங்கும் 10 நியாய விலை கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்தது.

    தரமற்ற அரிசி வழங்கிய நியாய விலை கடை விற்பனையாளர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்து கூட்டுறவு சங்க இணை பதிவாளர் உத்தரவிட்டார். மேலும் சிறுகாவேரிப்பாக்கம் கிடங்கில் இருந்து தரமற்ற அரிசியை 10 நியாய விலைகடைகளுக்கு அனுப்பிய சங்க செயலாளர்கள், இணைப்பதிவாளர் ஆகியோரும் தற்காலிக பணி இடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.

    காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமையில் கூட்டுறவு நியாய விலை கடை செயலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெறக் கோரி கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பணி நீக்கம் தொடர்பாக இன்றைக்குள் முடிவு அறிவிக்காவிட்டால் நாளை முதல் நியாய விலைக்கடை காலரையின்றி திறக்க மாட்டோம் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

  3. கோவையில் காதலர்களை மிரட்டி பணம் பறித்த காவலர்கள் கைது

    கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே காதலர்களிடம் மிரட்டி பணம் பறித்த இரண்டு ஆயுதப் படை காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி சூலூர் அருகே இருவர் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆயுதப்படை காவலர்களான ராஜராஜன், ம் ஜெகதீசன் ஆகிய இருவரும் அவர்களை விசாரித்துள்ளனர்.

    அப்போது ஒரு லட்சம் ரூபாய் பணம் தரவில்லையென்றால் இருவர் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்துவிடுவதாக மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடம் ரூ.10,000 பெற்றுக் கொண்டு இரண்டு காவலர்களும் சென்றுள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆயுதப்படை காவலர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் கடந்த மூன்று வருடங்களாக இருவரும் இதே போல் மிரட்டி பணம் வசூல் செய்து வந்தது தெரியவந்துள்ளது.

  4. இலங்கைக்கு புதிய பிரதமரா? சிறிசேன வெளியிட்ட தகவலுடன் முரண்படும் எம்.பிக்கள்

  5. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் உதவியாளரிடம் விசாரணை

    ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றன்.

    பட மூலாதாரம், Poonkundran

    படக்குறிப்பு, ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றன்.

    கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு குழு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று விசாரணை நடத்தினர்.

    கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை நீலகிரி காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கோவையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி மற்றும் அதிமுக பிரமுகர் சஜீவன் மற்றும் அவருடைய சகோதரர் சிபி உள்ளிட்ட பலரிடம் சிறப்பு புலனாய்வு குழு பல கட்டங்களாக விசாரணை நடத்தியது.

    இதனைத் தொடர்ந்து முன்னாள் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிடம் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இரண்டு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றனிடம் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு கோவை காவலர் தேர்வு பள்ளியில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  6. இலங்கைத் தமிழர்களுக்கு உதவ தனித் தீர்மானம் - தமிழ்நாடு சட்டபேரவையில் நிறைவேறியது

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், M.K.Stalin/Twitter

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவிட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழர்கள் பலர் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர்.

    இந்நிலையில், இலங்கைத் தமிழர்களுக்கு மருந்து, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவிட மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்கிடக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவளி்த்தன.

  7. நடிகர் சலீம் கெளஸ்: மணிரத்தினம் படம் முதல் ஷேக்‌ஸ்பியர் நாடகம் வரை

  8. 'இந்தியை ஒருபோதும் ஏற்க மாட்டோம்' - இயக்குநர் பா ரஞ்சித் பேட்டி

    பா ரஞ்சித்
    படக்குறிப்பு, திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித்

    இந்தியை ஒருபோதும் ஏற்க மாட்டோம் இந்தியாவில் தமிழ் தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

    மதுரையில் "தலித் இலக்கிய கூடுகை" நிகழ்வு துவங்கியது. உலக தமிழ்ச்சங்க அரங்கில் ஏப்ரல் 29, 30 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில் 30-க்கும் மேற்பட்ட இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், விமர்சகர்கள், கவிஞர்கள் பங்கேற்று பல்வேறு தலைப்புகளின் கீழ் உரை, விவாதம் நிகழ்த்த உள்ளனர்.

    இதன் துவக்க விழாவில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    ''தமிழ் இலக்கிய சூழலுக்கும் பொது மக்களுக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. பொது சமூகம் இலக்கியத்தை கொண்டாடுவது மிக குறைவு. ஆனால், இன்று எழுத்தை வாசிக்கிற இளைஞர்கள் அதிகரித்து உள்ளார்கள்.

    அமெரிக்க, ஆப்ரிக்க கறுப்பினத்தவர் மற்றும் அரபி இலக்கியங்கள் கொண்டாடப்படும் அதே அளவுக்கு தமிழ், இந்திய சூழலில் தலித் இலக்கியமும் கொண்டாடப்பட வேண்டும்.

    இந்தியாவில் இந்தி ஆதிக்க மொழியாக இருக்கிறது. இந்தியாவை வட இந்தியா, தென் இந்தியா என பிரித்துப் பார்க்கிறார்கள். தென் இந்தியர்களை விட, வட இந்தியர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு உள்ளது.

    எனவே, இந்தியை எப்போதும் ஏற்க மாட்டோம். இந்தியாவில் தமிழ் தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்க வேண்டும்.

    திராவிடர்களாக நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டியது மிக முக்கியம் என நினைக்கிறேன். இளையராஜாவின் செயலுக்கு எதிர்வினை ஆற்றிய நபர்களின் மன நிலையை தான் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் அதை எதிர்க்கிறோம்'' என்றார்.

  9. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம். நான் ஜோ மகேஸ்வரன்.

    இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் தொகுத்து வழங்குகிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

  10. ரஷ்ய அதிபர் புதினின் 'காதலி' அலினா கபய்வா - யார் இவர்?

  11. இந்தியாவில் வாட்டி வதைக்கும் வெயில்

    summer

    பட மூலாதாரம், Getty images

    “இந்தியாவில் வழக்கத்தை காட்டிலும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது” என முதலமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.

    இந்திய வானிலை மையம், இந்தியாவின் வட மேற்கு மற்றும் மத்திய பகுதியில் இந்த வாரம் வெப்பம் 2-4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் மே மற்றும் ஜூன் மாதங்களில் கோடைக்கால வெப்பம் சுட்டெரிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த வருடம் வழக்கத்தைவிட முன்னதாகவே வெப்பம் சுட்டெரிக்க தொடங்கியது.

    கடந்த 122 வருடங்களில் இல்லாத அளவு மார்ச் மாதம் பதிவான வெப்பத்தின் சராசரி உள்ளது.

    சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரான்மெண்ட் என்ற ஆய்வுக் கழகம் முன்னதாகவே அதிகரித்த வெப்பத்தால் இந்தியாவின் 15 மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

    அதில் குளிர்ச்சியான வானிலை கொண்ட ஹிமாச்சலும் அடங்கும்.

  12. மஹாராஷ்டிரா: சரியான நேரத்திற்கு மாப்பிள்ளை வராததால் மகளுக்கு உறவுக்காரரை திருமணம் செய்துவைத்த தந்தை

    திருமணம்

    பட மூலாதாரம், ASHISH KUMAR/GETTY IMAGES

    திருமணத்திற்கு மாப்பிள்ளை சரியான நேரத்திற்கு வராததால், தனது பெண்ணை வேறு ஒரு உறவுக்காரருக்கு மணப்பெண்ணின் தந்தை திருமணம் செய்து வைத்துள்ளது குறித்து, 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

  13. தூக்கமும் உணவும்: ஆழ்ந்த தூக்கத்துக்கு என்ன சாப்பிட வேண்டும்? - நிபுணரின் விளக்கம்

    தூக்கம் / உணவு

    பட மூலாதாரம், GETTY IMAGES

    ஆழ்ந்த தூக்கத்துக்கு என்ன சாப்பிட வேண்டும்?

    நாம் சாப்பிட்ட உணவு செரித்த பிறகு அடுத்தவேளை சாப்பாடு சாப்பிட்டால் நமக்கு மருந்தே தேவையில்லை என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். உணவுப் பழக்கத்துக்கு இதுவே அடிப்படை. அறிவியலும் இதை உறுதி செய்கிறது.

    பால், பாதாம் பருப்பு, வாழைப்பழம் ஆகியவை தூக்கத்துக்கு நல்லது. ஏனென்றால் இவற்றில் கிரிப்டோஃபென் என்ற ஒருவிதமான அமினோ அமிலம் இருக்கிறது. ஆழ்ந்த தூக்கத்துக்கு மெலெட்டினின் என்ற ஹார்மோன், கிரிப்டோஃபென், மெக்னீசியம் ஆகியவை முக்கியம். மேற்சொன்ன உணவுகளில் இவை இருக்கின்றன.

  14. ஜஹாங்கிர்புரி வன்முறை: குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர் கைது

    ஜஹாங்கிர்புரி வன்முறை

    பட மூலாதாரம், Getty Images

    டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர் மேற்கு வங்கம் மாநிலத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    மேற்கு வங்க மாநிலத்தின் தல்ஹாரா கிராமத்தில், எஸ்.கே.ஃபரீத் என்பவரை அவருடைய உறவினர் வீட்டில் வைத்து டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். இன்று அவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

    ஏற்கெனவே, 3 சிறார்கள் உட்பட 30 பேர் இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த 16ஆம் தேதி ஜஹாங்கிர்புரியில் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், காவல்துறையை சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.

  15. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

    குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள்டிவிட்டர் கணக்கின் மூலம்தகவல் அளியுங்கள். நேற்றைய நேரலை பக்கத்தைக் காண இங்கே செல்லுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • இலங்கையில் நடைபெறும் போராட்டங்கள் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.
    • பெட்ரோல், டீசல் விலை குறித்த பிரதமர் நரேந்திர மோதியின் பேச்சுக்கு, தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில் தெரிவித்துள்ளார்.
    • யுக்ரேன் அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி நேற்றிரவு ஆற்றிய உரையில் ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்த எரிசக்தியை ஒரு ஆயுதமாக ரஷ்யா பயன்படுத்துவதாக தெரிவித்தார்.
    • பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் பிரதமர் மோதி பேசியிருப்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    • திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளோம். ஒருபோதும் வாட் வரியை உயர்த்தியதில்லை என்று நிதியமைச்சர் பழநிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
    • சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
    • ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டில் இனி வரும் காலங்களில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் இணைப்புகள் புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படும் என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
    • இந்தி ஒருபோதும் நமது தேசிய மொழியாக இருந்ததும் இல்லை; இருக்கப்போவதும் இல்லை என்று கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
    • இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் இருவர் அகதிகள் போல் வந்ததாக தமிழ்நாடு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
    • ஆளுநர்களுக்கு மாநில அரசிடம் வேறுபட்ட கருத்து இருக்கலாம். கருத்து வேறுபாடு இருப்பதற்காக ஆளுநர்களை அவமரியாதையாக நடத்தக்கூடாது என்கிறார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.
    • பன்முகத்தன்மை மிக்க இந்தியாவில் ஒற்றை தேசிய மொழியை கடைப்பிடிப்பது இயலாத ஒன்று என்று காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டின் இந்த மனிதநேயம், இன்றைக்கு நாடு முழுவதும் ஒரு மாடலாக உருவாகி இருக்கிறது. இதுவும் ஒரு வகை திராவிட மாடல்தான் என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
    • மத்தியப் பிரதேச சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவராக ஸ்ரீ கோவிந்த் சிங் தேர்வாகியுள்ளார். முன்னாள் முதலமைச்சரும் மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் முன்னதாக பதவி விலகியுள்ளார்.
    • ரஷ்யாவிற்கு எதிராக, ராணுவ கூட்டணி யுக்ரேனுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.
    • கொரோனா தொற்றின் காரணமாக சீனாவில் இருந்து இந்தியா வருவோருக்கு சுற்றுலா விசா வழங்கும் பணியை மீண்டும் தொடங்க உரிய நேரம் இன்னும் வரவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • மலேசியாவிற்கு கடத்த, பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 12 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தூத்துக்குடியில் பறிமுதல் செய்தனர்.