தஞ்சாவூர் களிமேடு திருவிழா விபத்து: ''துயரத்திலும் அரசியல் செய்ய நினைக்கிறார்கள்.''தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராம திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். அந்த கிராமத்திற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இன்றைய நேரலை நிறைவு

    வணக்கம்.

    இன்றைய நேரலைப் பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. நேரலைப் பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இது வரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.

    • தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு.
    • அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
    • யாரோ இருவரால் மொத்த நாடும் பாதிக்கப்பட்டுள்ளது என, இலங்கையின் முன்னாள் அமைச்சரும், கிரிக்கெட் முன்னாள் கேப்டனுமான அர்ஜூன ரணதுங்க பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    • சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் திருவிழா விபத்து குறித்தும் ஆராயவும் விபத்துகளை தடுக்கும் வழிகாட்டுதலை வழங்கவும் ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • பேரறிவாளன் விடுதலை: ''அமைச்சரவை முடிவிற்கு எதிராக ஆளுநர் செயல்பட்டால் கூட்டாட்சியைப் பாதிக்கும்' - உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
    • தமிழ்நாட்டின் 17வது பறவைகள் சரணாலயமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சராயன் குளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். அந்த கிராமத்திற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
    • இந்தியா முழுவதும் நீட் பயிற்சி என்ற பெயரில் , ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடித்து வருகின்றனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    • தேசவிரோதம் தொடர்பான பிரிவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு ஒரு வாரத்தில் பதில் தர உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
    • தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமோ, சூழ்ச்சியோ இல்லை. இயற்கையாகத் தான் இறந்திருப்பார் என்று சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
    • ரஷ்யா - யுக்ரேன் அதிபர்கள் ராஜீய ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு துருக்கி முயற்சி எடுத்தது. ஆனால், யுக்ரேன் போர் குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்று யுக்ரேன் அதிபரின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
    • டெல்லியில் இன்று மொத்தம் 1367 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    • பெட்ரோலியப் பொருட்கள் மீது "தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மதிப்புக்கூட்டு வரியை குறைத்து மக்களுக்கு உதவ வேண்டும்" - பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
    • ரஷ்யாவின் கேஸ் விநியோகம் ரத்து என்பது மிரட்டல் நடவடிக்கை என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர் தெரிவித்துள்ளார்.
    • தஞ்சாவூர் களிமேடு கிராமத்தை பார்வையிட்ட பின்னர் முதலமைச்சர் கூறுகையில், ' துயரத்திலும் அரசியல் செய்ய நினைக்கிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை, குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழின் இணைய தளம், ட்விட்டர், முகநூல், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி.

  2. ரஷ்யாவின் கேஸ் விநியோகம் ரத்து: மிரட்டல் நடவடிக்கை - ஐரோப்பிய ஒன்றிய தலைவர்

    ஜெர்மனிக்கு எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று ஜெர்மன் நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    ரஷ்ய அரசு எரிவாயு நிறுவனமான கேஸ்ப்ரோம் போலந்து மற்றும் பல்கேரியாவிற்கு கேஸ் விநியோகத்தை நிறுத்திய பின்னர் லிண்ட்னரின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    ஜெர்மனி தனது எரிவாயு விநியோகத்தில் சுமார் 40% ரஷ்யாவை நம்பியுள்ளது. "நட்பற்ற" நாடுகள் எரிவாயுவை ரூபிள்களில் செலுத்த வேண்டும் என்று ரஷ்யா கூறியுள்ளது. மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் நடைமுறைக்கு வருவதால், அதன் நாணயத்தை உயர்த்துவதற்கான முயற்சியாக இது கருதப்படுகிறது.

    போலந்து மற்றும் பல்கேரியாவிற்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதற்கான ரஷ்யாவின் முடிவு ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும், இது ஒரு வகையான மிரட்டலாக கருதுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் வூர்சுலா வோண்டேர் லேயன் தெரிவித்துள்ளார்.

    "கேஸ்ப்ரோமின் முடிவு ஐரோப்பிய நுகர்வோர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்வதாக.'' அவர் இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

    ரஷ்யா கேஸ் விநியோகம்

    பட மூலாதாரம், Reu

  3. ‘இந்தி எப்போதும் நமது தேசிய மொழிதான்’ – நடிகரின் ட்விட்டர் பதிவால் இணையத்தில் எழுந்த விவாதம்

  4. பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை மாநிலங்கள் குறைக்க வேண்டும் - இந்திய பிரதமர் மோதி

    பிரதமர் மோதி

    பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்கள் மீது "தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மதிப்புக்கூட்டு வரியை குறைத்து மக்களுக்கு உதவ வேண்டும்" - பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

  5. டெல்லியில் இன்று 1367 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மெல்ல கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் இன்றைய தினம் 1,367 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    ஒருவர் உயிரிழந்துள்ளார். மொத்தம் 1042 பேர் சிகிச்சை முடிந்து, நலம் பெற்றுள்ளனர். தற்போது வரை மொத்தம் 4, 832 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று டெல்லி மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. ''நானும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். நெஞ்சு பொறுக்குதில்லையே.'' - தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு

    தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆசியர்கள் இரண்டாம் தாய் போல் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள வீடியோவில், மாணவர்களின் ஒழுங்கீன செயல்கள் குறித்து பேசியுள்ளார். அதில், நானும் அரசுப் பள்ளியில் படித்தவந்தான். பள்ளியில் ஆசிரியரைத் தாக்க முயற்சிப்பதையும் டேபிள் பெஞ்சுகளை உடைக்கும் காட்சிகளைப் பார்த்து, பாரதி சொன்னது போல், நெஞ்சு பொறுக்குதில்லையே என்றுதான் பேசுகிறேன்.

    ஆசிரியர்கள், பள்ளி, மைதானம், அமர்ந்து படிக்கும் பெஞ்ச்தான் மாணவர்களுக்கு சொத்து. கற்றுக் கொள்ளும் நிலையில் வன்முறை ஏன் ? இது நம் வீட்டையே நாம் கொளுத்துவது போல். தயவு செய்து இது போல் செய்யாதீர்கள். ஆசியர்களை உயர்வாக எண்ணி, பள்ளியில் மரியாதையுடன் நடக்க வேண்டும்.'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  7. ரஷ்யா - யுக்ரேன் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை - யுக்ரேன் தகவல்

    ரஷ்யா - யுக்ரேன் அதிபர்கள்

    பட மூலாதாரம், Getty Images

    ரஷ்யா - யுக்ரேன் அதிபர்கள் ராஜீயரீதியிலான பேச்சுவார்த்தைக்கு துருக்கி முயற்சி எடுத்தது. ஆனால், இரு நாட்டு அதிபர்களும் யுக்ரேன் போர் குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்று யுக்ரேன் அதிபரின் உதவியாளர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார்.

    மேலும், கிழக்கு யுக்ரேனில் அதிகரித்த பகைமை மற்றும் தெற்கு துறைமுக நகரமான மேரியுபோலை "முற்றிலும் அழிக்க" ரஷ்ய முயற்சிகள் குறித்து போடோலியாக் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக, யுக்ரேன் எல்லையில் உள்ள ரஷ்ய மாகாணங்கள் 3ல் கேட்ட வெடிகுண்டுகள் "கர்மா" மற்றும் ரஷ்யாவின் படையெடுப்பை திசை திருப்புதல் என்று அவர் கூறினார். அவரது டெலிகிராம் பதிவில், இதற்கு பொறுப்பு என்பதை ஏற்கவில்லை. ஒரு நாடு மற்றொரு நாட்டை தாக்க முடிவு செய்யும் போது "விரைவில் அல்லது பின்னர் திருப்பிச் செலுத்த வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.

    முன்னதாக இன்று, ரஷ்யாவின் பெல்கரோட் ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ், 'யுக்ரேன் எல்லையில் இருந்து 20 கி.மீ தூரத்தில் ஸ்டாராயா நெலிடோவ்கா கிராமத்திற்கு அருகே ஆயுதக் கிடங்கு தீப்பிடித்ததாக தெரிவித்தார். ஆனால், தற்போது தீ அணைக்கப்பட்டு விட்டது. பொதுமக்களுக்கு காயம், கட்டிடங்களுக்கு சேதம் எதுவும் இல்லை.'என்றார்.

  8. ''தஞ்சாவூர் துயரத்திலும் அரசியல் செய்ய நினைக்கிறார்கள்'' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    தஞ்சாவூர் திருவிழா விபத்து

    பட மூலாதாரம், TN DIPR

    தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராம திருவிழாவில் சப்பரத்தில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் இழப்பீடு அறிவித்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களிமேடு கிராமத்திற்கு சென்று, விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டார். பின்னர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    விபத்தில் காயமடைந்து, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து, ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன். இந்த துயரத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை.

    காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களையும் நேரில் சந்தித்து, ஆறுதல் கூறியுள்ளேன்.

    இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி, சரியான காரணத்தைக் கண்டறியவும், இது போல் நடக்காமல் தடுக்கவும், வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

  9. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம், சதி இல்லை - காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்

    சிவகங்கை எம்.பி கார்தி சிதம்பரம்

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமோ, சூழ்ச்சியோ இல்லை. இயற்கையாகத் தான் இறந்திருப்பார் என்று சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். .

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் டி.சி.எஸ் பவுண்டேசன் நிதி மூலம் ஒரு கோடி 27 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் பிளாண்ட் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி , எம்.எல்.ஏ மாங்குடி ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆமுகசாமி ஆனையம் குறித்த கேள்விக்கு, ''ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமோ, சதியோ, சூழ்ச்சியோ இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஜெயலலிதா ஒரு சர்க்கரை நோயாளி. உடல் ரீதியாக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர். எனவே இயற்கையாக இறந்திருப்பார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

    எந்த அறிக்கை வந்தாலும் இப்படி தான் வரும். சிறந்த மருத்துவர்கள் மூலம் ஜெயலலிதாவுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர். சசிகலா அரசியலுக்கு வரலாம், வராமலும் போகலாம். அதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.

    என்னைப் பொருத்தவரையில் அதிமுக ஒற்றை தலைமையில் செயல்படக்கூடிய பெரிய அரசியல் கட்சி. இன்றைக்கும் தொண்டர்கள் வாக்கு வங்கி அப்படியே உள்ளது. இரட்டை தலைமை தான் அதிமுகவிற்கு குழப்பம். எம்ஜிஆர் ,ஜெயலலிதா என ஒற்றை தலைமையில் செயல்பட்ட கட்சி. அதை நோக்கித்தான் அதிமுக செல்லும் என்பது என்னுடைய ஆருடம்.'' என்று கூறினார்.

  10. தஞ்சாவூர் அருகே தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்து - 11 பேர் பலி

  11. தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

    களிமேடு கிராமத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராம திருவிழாவில் சப்பரத்தில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் இழப்பீடு அறிவித்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களிமேடு கிராமத்திற்கு சென்றார். விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டார். பின்னர் உயிரிழ்ந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது பலரும் கதறி அழுதனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    விபத்தில் காயமடைந்து, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து, ஆறுதல் கூறினார்.

  12. நீட் பயிற்சி என ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை - அன்புமணி

    டாக்டர் அன்புமணி ராமதாஸ்

    இந்தியா முழுவதும் நீட் பயிற்சி என்ற பெயரில் , ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடித்து வருகின்றனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங்குப்பத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருப்பத்தூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்க, மதுக்கடைகளே காரணம். மதுக் கடைகளை மூடினாலே 70% பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

    தொடர் மின்வெட்டிற்கு திட்டமிடல் இல்லாததே காரணம். இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று கூறினார். கொள்கை அடைப்படையில் திமுக தற்போதைய சட்டமன்ற கூட்டத்தொடரில் 4 ஆண்டுகளில் படிப்படியாக எவ்வளவு மதுக் கடைகள் மூடப்படும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    பாலாற்றில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு தடுப்பணை கட்ட சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும். நீட் தேர்வால், இந்தியா முழுவதும் நீட் பயிற்சி என்ற பெயரில் வருடம் ஒரு லட்சம் கோடி கொள்ளை அடித்து வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு இடத்தை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தி வருகிறது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருவதால் மாவட்ட ஆட்சியர் கருணை உள்ளத்தோடு கையகப்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

  13. தேசவிரோதச் சட்டம் அரசமைப்புச் சட்டப்படி சரியா ? இந்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

    இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள தேசவிரோதம் தொடர்பான பிரிவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ளதாக கூறி தொடரப்பட்ட பலதரப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு எடுத்த இந்திய உச்ச நீதிமன்றம், ஒருவாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யும்படி இந்திய அரசைக் கேட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான இந்த அமர்வு, வழக்கு விசாரணையை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அன்றைய தினம் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது நீதிமன்றம்.

    உச்சநீதிமன்றம்

    பட மூலாதாரம், Getty Images

  14. தஞ்சாவூர் களிமேடு விபத்து: ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஒரு நபர் குழு விசாரணை

    தஞ்சாவூர் களிமேடு விபத்து
    படக்குறிப்பு, விபத்து நடந்த பகுதியை பார்வையிடும் அமைச்சர் அன்பில் மகேஷ்

    தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் தேர்த்திருவிழா விபத்து குறித்தும் ஆராயவும் விபத்துகளை தடுக்கும் வழிகாட்டுதலை வழங்கவும் ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் கூறுகையில், ''களிமேடு கிராமத்தில் பாதுகாப்பான உயரத்தில் 33 கிலோ வாட் மின் கம்பி அமைக்கப்பட்டிருந்தாலும் சப்பரத்தில் இருந்த ஜெனரேட்டர் இயங்கிக் கொண்டிருந்துள்ளது. இதன் மூலம் சப்பரத்தில் மின் அலங்கார விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

    சப்பரத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து ஆராயவும் இது போன்ற விபத்துகளை தவிர்க்கும் வழிகாட்டுதலை அளிக்கவும் தமிழ்நாடு வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

  15. வந்துகொண்டிருக்கும் செய்தி, பேரறிவாளன் விடுதலை - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

    பேரறிவாளன்

    பட மூலாதாரம், Twitter

    படக்குறிப்பு, பேரறிவாளன்

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் தன்னை விடுதலை செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "விடுதலை குறித்த அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆளுநர் சொந்த கண்ணோட்டத்தில் செல்ல அதிகாரம் இல்லை. ஆளுநர் தனிப்பட்ட முடிவு எடுக்க முடியாது. அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டால், கூட்டாட்சி அமைப்புக்கு பாதகமானதாக அமையும்'' என்றும் கேள்வி எழுப்பினர்.

    மேலும், "யார் விடுதலை செய்ய வேண்டும் என்ற குழப்பத்திற்கிடையில் ஏன் அவர் (பேரறிவாளன்) சிக்கிக்கொள்ள வேண்டும்? நாமே (உச்ச நீதிமன்றம்) ஏன் விடுதலை செய்யக்கூடாது?" என தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் ராகேஷ் த்விவேதிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    நீட் விலக்கு மசோதா, துணைவேந்தர் நியமனங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாடு அரசு - ஆளுநர் இடையில் இணக்கமற்ற சூழலில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர்.

  16. தஞ்சை தேர் விபத்தில் இறந்தோருக்கு மத்திய அரசு ரூ. 20 லட்சம் வழங்கவேண்டும்: ரவிக்குமார் எம்.பி.

    கடந்த 2014ம் ஆண்டு முதல் 2022 வரை பிரதமர் தேசிய நிவாரண நிதியில் வசூலிக்கப்பட்ட 3 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது. எனவே, தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விழுப்புரம் எம்.பி து.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

    இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''பாஜக ஆட்சியில் 2014 முதல் 2020 வரை பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கென வசூலிக்கப்பட்ட தொகை சரியாக செலவிடப்படவில்லை.

    அந்த 7 ஆண்டுகளில் மட்டும் சுமார் 3000 கோடி ரூபாய் செலவிடப்படாமல் உள்ளது.எனவே களிமேட்டில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அந்த நிதியிலிருந்து தலா 20 லட்சம் வழங்கவேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் கீழ் வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோதி அறிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. திருப்பூர் நஞ்சராயன்குளம் 17வது பறவைகள் சரணாலயம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

    நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம்

    பட மூலாதாரம், Supriya Sahu IAS/Twitter

    தமிழ்நாட்டின் 17வது பறவைகள் சரணாலயமாக நஞ்சராயன் குளம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசு நஞ்சராயன் குளத்தை தமிழ்நாட்டின் 17வது பறவைகள் சரணாலயமாக அறிவித்துள்ளது.

    சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் வனத்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சட்டமன்றத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு ரூ.7.5 கோடி செலவில் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சியில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது நஞ்சராயன் குளம். இங்கு ஆண்டுதோறும் 181 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இதில் 45 வகை வலசை பறவைகளும் அடக்கம். மேலும் இங்கு 76 வகையான தாவரங்களும் 11 வகையான பாலூட்டிகளும் கண்டறியப்பட்டுள்ளன.

  18. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம்.

    நான் ஜோ மகேஸ்வரன். இது வரை லட்சுமி காந்த் பாரதி வழங்கிய பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்தை தொடர்ந்து தொகுத்து வழங்குகிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

    குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

  19. "நோயாளிகளை மீட்டுவிட்டதாக சொல்கிறார்கள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    பட மூலாதாரம், MA. SUBRAMANIAN/ TWITTER

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உள்ளே இருந்த அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக அலுவலர்கள் சொல்வதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    அம்மருத்துவமனையின் இரண்டாவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள சர்ஜிக்கல் பிரிவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதையடுத்து, சம்பவ இடத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தகவல் அறிந்த உடனேயே அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர் அதனை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டுள்ள வார்டின் உள்ளே இருந்தவர்களும் மீட்கப்பட்டுவிட்டதாக சொல்கின்றனர்.

    முழுமையாக தீ கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் தான் உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரியும். அனைத்து நோயாளிகளும் மீட்கப்பட்டுவிட்டதாக, அலுவலர்கள் சொல்கின்றனர்" என தெரிவித்தார்.

  20. வந்துகொண்டிருக்கும் செய்தி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிபத்து

    ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிபத்து

    பட மூலாதாரம், ANI

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    அம்மருத்துவமனையின் இரண்டாவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள சர்ஜிக்கல் பிரிவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ள மருத்துவம் மற்றும் மக்கள் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "நிகழ்விடத்தில் 4க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. உள்ளே உள்ளவர்களை மீட்கும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது. இதுவரை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை" என தெரிவித்தார்.

    இதனிடையே, சம்பவ இடத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்றுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு