காங்கிரசில் சேர்ந்து தேர்தலுக்கு பொறுப்பேற்கும் வேண்டுகோளை மறுத்துவிட்டேன்: பிரசாந்த் கிஷோர்

காங்கிரசில் சேர்ந்து தேர்தலுக்குப் பொறுப்பேற்கும்படி விடுக்கப்பட்ட பெருந்தன்மையான வேண்டுகோளை தாம் மறுத்துவிட்டதாக பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கும் ஐ.நா தலைமைச் செயலாளர்

    புதினை சந்திக்கும் ஐ.நா  தலைமைச் செயலாளர்

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் ரஷ்யாவின் அதிபர் விளாதிமிர் புதினை மாஸ்கோவில் இன்று மாலை சந்திக்க உள்ளார்.

    போரை நிறுத்துவதற்கு தற்போது வரை எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், இந்த சந்திப்பு குறித்த எதிர்பார்ப்பு குறைந்துள்ளது. இருவருக்கும் இடையிலான இந்த் பேச்சுவார்த்தையின் போது, யுக்ரேனின் மேரியோபோல் நகரின் மீதான முற்றுகை குறித்து கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அங்கு ரஷ்யா வெற்றியை அறிவித்த போதிலும், ரஷ்யப் படைகள் அசோவ்ஸ்டல் உலோகத் தொழிற்சாலையை கைப்பற்றமுடியவில்லை. அசோவ்ஸ்டலில் தஞ்சமடைந்துள்ள பொதுமக்களை வெளியேற்றுவதற்கு ஒரு மனிதாபிமான வழித்தடத்தை உருவாக்க உத்தரவாதம் தர குட்டரஸிடம் யுக்ரேன் வலியுறுத்தியுள்ளது.

    மேலும், ஐ.நா தலைமைச் செயலாளர் வரும் வியாழன் யுக்ரேன் தலைநகர் கீயவ் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு அந்நாட்டு அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கியை சந்திக்கிறார்.

    இதற்கிடையே, அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் யுக்ரேன் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்க உள்ளது. அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாய்ட் ஆஸ்டின் ஜெர்மனியில் பேச்சு நடத்துகிறார்.

    யுக்ரேன் அமைதி முயற்சிகளை கெடுத்து வருவதாகவும், இதனால், மூன்றாம் உலகப் போர் அபாயம் "தீவிரமாக" உள்ளது என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் எச்சரித்துள்ள நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

    இது குறித்து கருத்துத் தெரிவித்த யுக்ரேனிய வெளியுறவு அமைச்சர் டிமித்ரோ குலேபா லாவ்ரோவ் ''உலகை அச்சுறுத்த முயற்சிக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

  2. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம்.

    நான் ஜோ மகேஸ்வரன்

    இது வரை நந்தினி வெள்ளைச்சாமி தொகுத்து வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் வழங்குகிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

    குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

  3. சாலை விபத்தில் 6 மாத குழந்தையுடன் தந்தை உயிரிழப்பு

    கார் விபத்து

    பட மூலாதாரம், police

    மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் 6 மாத குழந்தையுடன் தந்தை உயிரிழந்தார்.

    செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், புக்கதுறை கூட்டு சாலை அருகே, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த, டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில், மதுரையை சேர்ந்த அஸ்வின்குமார் (28) மற்றும் அவரது 6 மாத ஆண் குழத்தை திவானா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும் அவரது மனைவி மற்றும் மகள் படுகாயம் அடைந்தனர்.

    படாளம் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  4. ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர் விலைக்கு வாங்குகிறார் ஈலோன் மஸ்க்

    ஈலோன் மஸ்க்

    பட மூலாதாரம், REUTERS

    ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு உலகின் மிகப்பெரிய பணக்காரரான ஈலோன் மஸ்க் வாங்குகிறார். முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தை வாங்க ஈலோன் மஸ்க் முன்வந்தார். அதனை தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

    ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு ஈலோன் மஸ்க் இரு வாரங்களுக்கு முன்னதாக விருப்பம் தெரிவித்திருந்தார். அப்போது, ட்விட்டர் “மிகச்சிறந்த திறன்களை” கொண்டிருப்பதாகவும் அதனை தான் வெளிக்கொண்டு வரவிரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

    மேலும், ட்விட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவருவது குறித்தும் அவர் கடந்த சில தினங்களாக கருத்து வெளியிட்டு வந்தார். அதில், ட்விட்டர் பதிவுகள் சிலவற்றுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துதல் மற்றும் போலி ட்விட்டர் கணக்குகளை நீக்குதல் உள்ளிட்டவை அடங்கும்.

    ட்விட்டர் நிறுவனத்தை அதன் விருப்பத்துக்கு மாறாக கையகப்படுத்தும் ஈலோன் மஸ்க்கின் முயற்சியை முன்னதாக அந்நிறுவனம் எதிர்த்தது. அவர் கையகப்படுத்துவதை தடுக்கும் வகையில் 'விஷ மாத்திரை நடவடிக்கை' என்று அறியப்படும் நடவடிக்கையை எடுப்பதாகவும் அது அறிவித்தது.

    அதே நேரம் அவர் நல்லவிதமாக பேரம் பேச முன்வந்தால் அதை எதிர்க்கப் போவதில்லை என்றும் அது கூறியிருந்தது. இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு அவர் அளிக்க முன் வந்த பேரத்தை ஏற்றுக்கொள்ள அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு சம்மதம் தெரிவித்துள்ளது.

    ட்விட்டரில் 9.2% பங்குகளை வைத்துள்ள ஈலோன் மஸ்க் அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக தற்போது உள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை ஈலோன் மஸ்க் வாங்கிய பிறகு அது ஒரு கூட்டுப் பங்கு நிறுவனமாக இல்லாமல் தனியார் நிறுவனமாக ஆகிவிடும் என்றும் கூறப்படுகிறது.

  5. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

    குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள்டிவிட்டர் கணக்கின் மூலம்தகவல் அளியுங்கள்.நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காணஇங்கே சொடுக்கவும்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • பிரான்ஸ் அதிபராக எமானுவல் மக்ரோங் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். தனக்கு எதிராக போட்டியிட்ட லீ பென்னை அவர் தோற்கடித்தார்.
    • பிரான்ஸ் அதிபராக வெற்றி பெற்றுள்ள எமானுவேல் மக்ரோங்குக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • இலங்கையில் போராட்டக்காரர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரபூர்வ இல்லத்தின் சுற்றுச் சுவர் மீது ஏறியதால் சுமார் ஒருமணி நேரம் வரை அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.
    • தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை ஆளுநர்களுக்குப் பதிலாக தமிழ்நாடு அரசே நியமிப்பதற்கு வழி செய்யும் மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
    • அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆன்டனி பிளிங்கன், பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் ஆகிய இருவரும் யுக்ரேன் தலைநகர் கீயவ் சென்று அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியை சந்தித்ததாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
    • யுக்ரேனின் மேரியுபோல் இரும்பு தொழிற்சாலை பகுதியில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தஞ்சல் அடைந்துள்ளவர்கள் வெளியேறும் வகையில் விலகி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
    • யுக்ரேனுக்கு கூடுதலாக 700 மில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
    • யுக்ரேன் எல்லை அருகே ரஷ்ய எண்ணெய் கிடங்கு உள்ளிட்ட 2 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது .
    • மதுரையில் சரக்கு ரயில் தடம் புரண்டது. இதனால் பல்வேறு ரயில்களின் புறப்பாடு தாமதமாகியது.
    • இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து மேலும் 15 தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.
    • இந்திய பிரதமர் மோதிக்கு எதிராக ட்விட்டரில் அவதூறு கருத்து வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட, ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டு சாதனை மாணவர்கள் சினேகன், சஹானா பானு இருவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
    • காங்கிரஸ் கட்சித் தலைவர்களைக் கொண்டு வேளாண்மை, பொருளாதாரம் உள்ளிட்ட 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க ஜனாதிபதி கோட்டா பய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் ஆவண காப்பாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
    • உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையில் துணை வேந்தர்களின் 2 நாள் மாநாடு தொடங்கியுள்ளது.
    • இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைவர் வூர்சுலா பிரதமர் மோதியைச் சந்தித்தார்.