ஆளுநருக்கு எதிரான கருப்பு கொடி போராட்டம் குறித்து, சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனத்தை சந்தித்துவிட்டு திரும்பும்போது, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று ஆளுநருக்கு எதிரான போராட்டத்தைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, ஆளுநர் காரின் மீது கருப்புக் கொடிகள் வீசப்பட்டதாகக் கூறி, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், ஆளுநருக்கு எதிரான போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நேரமில்லா நேரத்தில் கேள்வி எழுப்பிவிட்டு, அதற்கான பதிலை பொறுமையாக இருந்து கேட்காமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். பதிலை கேட்டுவிட்டு வெளிநடப்பு செய்யட்டும், நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதுதான் மரபு.
ஆளுநர் தருமபுரம் ஆதீனத்தை சந்திக்க திருக்கடையூர் கோயிலுக்கு சென்றுவிட்டு, அவர் வருகையின்போது நடைபெற்ற போராட்டம் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, கூடுதல் டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) தெளிவான அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். ஆளுநர் காரும் அவருடைய பாதுகாப்பு வாகனங்களும் பாதிக்கப்படவில்லை என டிஜிபி விளக்கமளித்துள்ளார்.
ஆனால், 'இதுதான் நமக்கு சான்ஸ், இதை அரசியலுக்குப் பயன்படுத்த வேண்டும்' என்பது அரசியல் கட்சிகளுக்கு இருப்பது இயல்புதான். எப்போதும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் சேர்ந்துதான் அறிக்கை வெளியிடுவார்கள். ஆனால், இந்த சம்பவத்திற்கான அறிக்கை தனித்தனியே வெளியாகின.
அதிலே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'ஆளுநர் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு காவல்துறையை கையில் வைத்திருக்கக்கூடிய விடியா அரசின் முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்' என கேட்டுள்ளார்.
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 'சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார். இது நியாயமானது.
போராட்டம் நடத்தியவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சட்டப்பூர்வ நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றது. மத்திய மண்டல காவல்துறை ஐஜியின் தலைமையில் ஆளுநரின் பாதுகாப்புக்காக 6 எஸ்.பிக்கள் 6 கூடுதல் எஸ்.பிக்கள் 21 டிஎஸ்பிக்கள், 54 ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள் 1,120 காவலர்கள் பயன்படுத்தப்பட்டு, அவருடைய பயணம் பாதுகாப்பாக இருந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆளுநருக்கு பாதுகாப்பு அளிப்பதில் இந்த அரசு எந்த சமரசமும் செய்யாது என உறுதியோடு கூறுகிறேன்" என தெரிவித்தார்.