You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக போராட்டம் - 89 பேர் மீது வழக்குப்பதிவு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக, 89 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நன்றி நேயர்களே

    இன்றைய நேரலை இத்துடன் முடிவடைகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

    இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • இலங்கை தங்காலை கால்டன் பகுதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட்டு, மக்கள் போராட்டம் நடத்தினர்.
    • இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்கள் அனுமதி வழங்குவார்களாயின், ஜனாதிபதி பதவி விலக தயார் என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கட்சித் தலைவர் கூட்டத்தில் கூறியதாக, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
    • இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் குழந்தைகளுடன் தனியாக பெண் ஒருவர் படகில் தனுஷ்கோடிக்கு வந்துள்ளார்.
    • ஆளுநருக்கு எதிரான கருப்பு கொடி போராட்டத்தைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    • ஆளுநருக்கு எதிரான கருப்பு கொடி போராட்டம் குறித்து, சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
    • தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக, 89 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • டெல்லியில் சமீபத்தில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை வெடித்த ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை இடிக்க தற்காலிக தடை விதித்து இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • பிரதமரை விமர்சிப்பவர்களை குறை பிரசவத்தில் பிறந்தவர்களுடன் ஒப்பிட்டு பேசியதற்கு இயக்குநர் பாக்யராஜ் மன்னிப்பு கோரியுள்ளார்.
    • உத்தரபிரதேசம், ஹரியானா, மகாராஷ்ட்டிரா, மிஸோராம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
    • ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற 2 குண்டு வெடிப்புகளில் தற்போது வரை 6 பேர் உயிரிழந்தனர். இருபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
  2. பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை உலகத்துக்கு ஏன் முக்கியம்? 5 கேள்விகளில் விளக்கம்

  3. "கைகள் இல்லாத நான் எப்படி வன்முறையில் ஈடுபட முடியும்?"- ம.பி.யில் ஒரு மாற்றுத் திறனாளியின் குரல்

  4. மரத்தை வெட்டிய நபர்: முன்ஜாமீன் வழங்க 10 மரங்கள் நட வேண்டும் - நீதிபதி உத்தரவு

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தில் மரத்தை வெட்டிய நபருக்கு முன்ஜாமீன் வழங்க 10 மரங்கள் நட வேண்டும் என, மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடத்தை சேர்ந்த சண்முகநாதன், இசக்கிமுத்து, பொன்சிங் ஆகியோர், தட்டார்மடம் வியாபாரிகளிடம் மது அருந்திவிட்டு தகராறு செய்ததாகவும், அவர்கள் தட்டார்மடம் மெயின் சாலையில் இருந்த 20 வருட பழமையான மரத்தை வெட்டியதாகவும் புகார் எழுந்தது. இதை தட்டி கேட்ட வியாபாரி சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதனால் சண்முகநாதன், இசக்கிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டு சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்த நிலையில், பொன்சிங் என்பவரின் முன்ஜாமீன் மனு மாவட்ட அமர்வு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் மரத்தை வெட்டி சேதப்படுத்திய நபருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனைதெரிவித்தார்.

    மேலும், முன்ஜாமீன் வழங்கும்பட்சத்தில் மரம் நட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட நீதிபதி சுமதி பொன்சிங் ஒரு மாதத்திற்குள் தட்டார்மடம் பகுதியில் 10 மரங்களை நடவேண்டும் என்று உத்தரவிட்டார்.

  5. குறைபிரசவம் கருத்து - இயக்குநர் பாக்யராஜ் மன்னிப்பு

    பிரதமரை விமர்சிப்பவர்களை குறை பிரசவத்தில் பிறந்தவர்களுடன் ஒப்பிட்டு பேசியதற்கு இயக்குநர் பாக்யராஜ் மன்னிப்பு கோரியுள்ளார்.

    நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், "பிரதமரை விமர்சிப்பவர்களை குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். பிரதமர் நரேந்திர மோதியின் பெயர் மக்களின் மனதில் எழுதப்பட்டுள்ளது. மோதியின் எனர்ஜி பிடித்திருக்கிறது. தன் மீதான விமர்சனங்களுக்கு அவர் செவி சாய்க்காமல் இருக்கிறார்" என கூறியிருந்தார்.

    இந்நிலையில், குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளுடன் அவர் ஒப்பிட்டு பேசியதை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தன்னுடைய பேச்சுக்கு பாக்யராஜ் மன்னிப்பு கோரியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், "இன்று காலையில் ஒரு நிகழ்ச்சியில் நான் பேசியதில் 'குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்' என்ற வார்த்தை, மிகவும் தவறான அர்த்தத்தை ஏற்படுத்திவிட்டது என அறிந்தபோது, எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

    மாற்றுத்திறனாளிகளுக்கும் குறைபிரசவத்திற்கும் சம்பந்தமில்லை. ஒருமாதம், இரு மாதங்களுக்கு முன்பு பிறந்தவர்களையே குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் எனக்கூறுவர். மற்றபடி, மாற்றுத்திறனாளிகளை நான் எப்போதும் அக்கறையுடன் தான் பார்க்கிறேன். இன்றைக்கு இல்லை என்றைக்கும் அப்படித்தான் பார்க்கிறேன். இது யாருக்கு வலித்திருந்தாலும், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    நான் பாஜக கிடையாது. தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் சினிமாவில் இருந்து, தமிழ்தான் இன்றைக்கு சோறு போட்டுக்கொண்டிருக்கிறது. பெரியார், அண்ணா, ஜீவா உள்ளிட்ட தமிழ், திராவிட தலைவர்களைத்தான் நான் பார்த்து வளர்ந்திருக்கிறேன். சினிமாவிலும் அத்தகைய கருத்துக்களையே வலியுறுத்தியிருக்கிறேன், வேறு எதுவும் மனதில் இல்லை. இதுதான் உண்மை" என தெரிவித்துள்ளார்.

  6. ஆளுநர் பாதுகாப்பு குளறுபடி சர்ச்சை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன பேசினார்?

  7. தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக போராட்டம் - 89 பேர் மீது வழக்குப்பதிவு

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக, 89 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனத்தை சந்தித்துவிட்டு திரும்பும்போது, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது.

    இப்போராட்டத்திற்கு எதிராக பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என, கூடுதல் டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) அறிக்கை வெளியிட்டார்.

    மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பும் செய்தனர்.

    இது தொடர்பாக, சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூடுதல் டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) அறிக்கையை சுட்டிக்காட்டி பேசினார். மேலும், ஆளுநருக்கு பாதுகாப்பு அளிப்பதில் இந்த அரசு எந்த சமரசமும் செய்யாது என உறுதியோடு கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்த போராட்டம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், செம்பை ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், திராவிடர் விடுதலை கழக மாவட்ட தலைவர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் மகேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல பொறுப்பாளர் வேலு குபேந்திரன், ஒன்றிய செயலாளர் மோகன்குமார், தமிழ்மண் தன்னுரிமை இயக்க நெறியாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 89 பேர் மீது சட்டவிரோதமாக கூட்டம் சேருதல், அதிகாரிகளின் உத்தரவை மீறி போராட்டம் நடத்தியது, முறையற்ற தடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் (143, 188, 341, 427, 511 ஆகிய பிரிவுகள்) மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  8. அரசியலமைப்பின் விழுமியங்களை தகர்ப்பது போன்றதாகும் - ராகுல் காந்தி

    ஜஹாங்கிர்புரியில் கட்டுமானங்களை இடித்தது, அரசியலமைப்பின் விழுமியங்களை தகர்ப்பது போன்றதாகும் என, ராகுல் காந்தி எம்.பி தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் சமீபத்தில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை வெடித்த ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை இடிக்க தற்காலிக தடை விதித்து இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஆனால், முன்னதாக, ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை புல்டோசர் மூலம் இடிக்கும் பணி நடைபெற்றது.

    இதனை விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், "இது இந்திய அரசியலமைப்பின் விழுமியங்களை தகர்ப்பது போன்றதாகும்.

    இது ஏழைகள் மற்றும் சிறுபான்மையினர் மீது அரசே நடத்தும் தாக்குதலாகும். தங்களின் இதயத்தில் உள்ள வெறுப்புணர்வை பாஜக தகர்க்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக, ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை இடிக்கும் பணியை புதுடெல்லி மாநகராட்சி இன்று தொடங்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கட்டுமானங்களை இடிக்கும் பணிக்கு தற்காலிக தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அதுவரை தற்போதையை நிலையே தொடர வேண்டும் என தெரிவித்துள்ளது.

  9. யுக்ரேனில் ரஷ்யா இன்னும் வெற்றி பெற முடியாதது ஏன்? எளிய விளக்கம்

  10. தயாரிப்பாளர் அளித்த புகாருக்கு நடிகர் விமல் விளக்கம்

    'மன்னர் வகையறா' படத்திற்காக தன்னிடம் வாங்கிய ஐந்து கோடி ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என, பெரவள்ளூரை சேர்ந்த தயாரிப்பாளர் கோபி நடிகர் விமல் மீது புகார் கொடுத்துள்ளார். இந்த புகாருக்கு நடிகர் விமல் தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

    புகார் மனுவில் கோபி, நடிகர் விமல் கடந்த 2016ம் ஆண்டு 'மன்னர் வகையறா' படத்திற்காக 5 கோடி ரூபாய் கேட்டதாகவும் படம் வெளியான பிறகு வரும் லாபத்திலும் பங்கு தருவதாகவும் கூறியிருந்தார்.

    மேலும் 'களவாணி 2' படத்தை தங்களுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் விமல் தயாரிக்க உறுதி கொடுத்ததாகவும் அந்த மனுவில் கோபி கூறி இருக்கிறார். ஆனால், பேசியபடி விமல் முழு பணத்தையும் கொடுக்காமல் ஒரு கோடி ரூபாய் மட்டும் கொடுத்ததாகவும் இன்னும் பேசியபடி மீதி பணத்தை விமல் கொடுக்காததால் சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக அவர் மனுவில் கூறி இருக்கார்.

    இது குறித்து நடிகர் விமல் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்து பேசியுள்ளார். அதில், போலி ஆவணங்கள் வைத்து கொண்டு தன் மீது போலியான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக விமல் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை அடுத்தடுத்து படங்கள் நடிக்க விடாமல் கடந்த வருடங்களில் மிரட்டல் அளித்து வந்ததாகவும் விமல் தெரிவித்துள்ளார்.

  11. டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை: ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி நிறுத்தம் - காவல்துறை

    டெல்லியில் சமீபத்தில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை வெடித்த ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை இடிக்க தற்காலிக தடை விதித்து இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையடுத்து, அங்கு ஆக்கிரமிப்புகள் கட்டுமானங்களை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக, பிபிசி இந்தியிடம் பேசிய டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) தீபேந்தர் பதக், உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியான உடனேயே அப்பணி உடனடியாக நிறுத்தப்பட்டது என தெரிவித்தார்.

    ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணிக்கு எதிரான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தபோது, கட்டுமானங்களை இடிக்கும் பணி நடைபெற்றது குறித்து தீபேந்திர பதக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    உச்ச நீதிமன்ற உத்தரவு வந்தவுடனேயே அப்பணிகள் நிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    ஜஹாங்கிர்புரி வன்முறை குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், இது தொடர்பான தகவல்களை கூறுவது மிகவும் முன்கூட்டியதாக இருக்கும் என தெரிவித்தார்.

  12. பொருளாதார நெருக்கடிக்கு இயற்கை உரம் கட்டாயப்படுத்தப்பட்டதுதான் காரணமா? - பிபிசி தமிழின் கள ஆய்வு

    ''நான் தவறு செய்துவிட்டேன்'' என்று ஒப்புக்கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ; இலங்கை சந்தித்து வரும் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு இயற்கை உரம் கட்டாயப்படுத்தப்பட்டதுதான் காரணமா? - பிபிசி தமிழின் கள ஆய்வு

  13. பாலியல் புகார்: சென்னை ஐஐடி பேராசிரியர்களுக்கு முன்ஜாமீன்

    மாணவி அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர்கள் இரண்டு பேருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை ஐ.ஐ.டியில் கடந்த 2016 முதல் 2020 வரையில் ஆராய்ச்சிப் பிரிவில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி படித்து வந்தார். இவருடன் பயின்ற மாணவர்களும் ஆசிரியர்களும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். இந்த வழக்கில் பேராசிரியர்கள் இரண்டு பேர் உள்பட எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், மாணவியின் புகார் மனுவில் கூறப்பட்ட வேதியியல் துறை பேராசிரியர் எடமன பிரசாத் மற்றும் ரமேஷ் கர்தாப் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், "பேராசிரியர்களின் பொறுப்பில் உள்ள ஆய்வகத்தில்தான் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய நபராக உள்ள கிங் சுக்தேவ் சர்மாவின் முன்ஜாமீனை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என தெரிவித்துள்ளனர்.

    இதன்பிறகு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், "பேராசிரியர்கள் இருவரும் காவல்துறைக்குத் தெரிவிக்காமல் வெளிநாடு செல்லக் கூடாது" எனவும் "பணிநிமித்தமாக வெளிநாடு செல்வதாக இருந்தாலும் நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும்" என உத்தரவிட்டார்.

  14. பாலியல் புகார் - சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்

    பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில், சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா மீது அங்கு படித்த மாணவிகள் சிலர் பாலியல்ரீதியான புகார்களைத் தெரிவித்தனர்.

    இதையடுத்து, சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டார். தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 20) விசாரணைக்கு வந்தபோது, சிவசங்கர் பாபா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், "2010 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்துக்கு 2021 ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாததால் இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்" என வாதிட்டார்.

    இதற்கு பதில் அளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், "சிவசங்கர் பாபா மீதான புகார்கள் தாமதமாக அளிக்கப்பட்டது. இதனைக் காரணம் காட்டி வழக்கை ரத்து செய்யுமாறு கோர முடியாது" எனக் குறிப்பிட்டார்.

    இதையடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன், சிவசங்கர் பாபாவுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுடன், நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் கூடுதல் நிபந்தனையை விதித்தார். விசாரணை அதிகாரிக்குத் தெரியாமல் தமிழ்நாட்டைவிட்டு வெளியில் செல்லக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

  15. இளம் வயதில் இதயநோய் மரணம் அதிகரிப்பது ஏன்?

      • எழுதியவர், ஆ. விஜயானந்த்
      • பதவி, பிபிசி தமிழ்

    இளவயதினர் மத்தியில் இதயநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதற்கு பல்வேறு காரணிகளை மருத்துவ உலகினர் முன்வைக்கின்றனர். `கொரோனா நோய்த் தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளைத் தடுப்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தியதால் இதர நோய்களை கண்காணிக்கும் பணிகள் குறைந்துவிட்டன. இதயநோய் மரணங்கள் ஏற்படுவதற்கு இது ஒரு காரணம்' என்கின்றனர் சுகாதாரத்துறை வல்லுநர்கள்.

  16. இந்தியாவில் வகுப்புவாத கலவரங்கள் அதிகரிக்கின்றனவா?

    இந்தியாவில் கடந்த சில தினங்களாக வகுப்புவாத வன்முறைகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன. அதற்கான சமீபத்திய உதாரணம், டெல்லி ஜஹாங்கிர்புரியில் நடைபெற்ற வன்முறை.

    அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலம், வகுப்புவாத வன்முறையாக மாறியதில், காவல்துறையை சேர்ந்த 7 பேர் உட்பட 9 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய 130க்கும் மேற்பட்டோரை இதுவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால், இந்தியாவில் வகுப்புவாத வன்முறைகள் அதிகரிக்கின்றனவா என்ற கேள்வி இன்னும் உள்ளது.

    தரவுகள் என்ன சொல்கின்றன?

    2020 ஆம் ஆண்டு, மொத்தமாக 857 வகுப்புவாத கலவர வழக்குகள் பதிவாகின. 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 94 சதவீதம் அதிகமாகும். இத்தகைய திடீர் ஏற்றத்திற்கு காரணமாக டெல்லி விளங்குகிறது. அதாவது, 2014-2019ன் காலக்கட்டத்திற்கு இடையில் 2 வகுப்புவாத கலவரங்கள் மட்டுமே டெல்லியில் பதிவாகின. ஆனால், 2020 ஆம் ஆண்டில் டெல்லியில் 520 வகுப்புவாத கலவரங்கள் பதிவாகியுள்ளன.

    அதேபோன்று, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சிகளை ஒப்பிடுகையில், 2006 மற்றும் 2012ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் (6 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி) மொத்தமாக 5,142 வகுப்புவாத வன்முறைகள் பதிவாகியுள்ளன. ஆனால், 2014 மற்றும் 2020ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் (6 ஆண்டுகால பாஜக ஆட்சி) 5,417 வகுப்புவாத வன்முறைகள் பதிவாகியுள்ளன.

  17. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இளைஞர் கொலை

    மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

    மதுரை பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் இன்று அதிகாலை மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உள்ள கடையின் வாசலில் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    உடனே சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பாலை போலீசார் முருகானந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் நண்பர்களுடன் இரவு மது அருந்தியதில் ஒருவொருக்கொருவர் வாக்குவாதம் நடைபெற்று அது தகராறில் முடிந்துள்ளது. இதில் உடன் வந்தவர்கள் முருகானந்தத்தின் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  18. தமிழ்நாட்டில் இன்று இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் இன்று இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  19. கேகாலை - றம்புக்கணை பகுதியில் ஊரடங்கையும் மீறி போராட்டத்தில் மக்கள் - நேரலை

  20. திருச்சியில் திமுக - பாஜகவினரிடையே தள்ளுமுள்ளு

    திருச்சியில் திமுக - பாஜகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், பிரதமர் மோதியின் உருவப்படத்தை இளைஞர் ஒருவர் சாக்கடையில் வீசினார்.

    திருச்சி பொன்னகர் காமராஜபுரம் தெருவில் உள்ள அமராவதி கூட்டுறவு நியாயவிலைக் கடையில் இன்று காலை திருச்சி கண்டோன்மென்ட் பாஜக மண்டலத் தலைவர் பரமசிவம் தலைமையில் அக்கட்சியினர் பிரதமர் மோதியின் உருவப்படத்தை நியாயவிலைக் கடையில் மாட்டினர்.

    அப்போது, நியாயவிலைக் கடையில் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் மற்றும் 55-வது வார்டு கவுன்சிலர் ராமதாஸ் ஆகியோர் மோதியின் படத்தை மாட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதுகுறித்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையிலான போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

    இரு கட்சியினருக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது, பிரதமர் மோதி படம் கீழே விழுந்து நொறுங்கியது. அப்போது பத்திரிகையாளர்கள் கீழே விழுந்து கிடந்த மோதியின் படத்தை வீடியோ எடுக்க முற்பட்டபோது அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேகமாக வந்து மோதியின் படத்தை எடுத்து சாக்கடையில் வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், திமுகவினர் தாக்கியதாக கூறப்படும் திருச்சி கண்டோன்மென்ட் பாஜக மண்டல தலைவர் பரமசிவம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.