You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

யுக்ரேன் ரயில் நிலைய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் பலி - ரஷ்யா பொறுப்பேற்க மறுப்பு

யுக்ரேன் கிழக்குப் பகுதியில் ரயில் நிலையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் பலியாகினர். ஆனால், இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்கிறது ரஷ்யா.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

க. சுபகுணம்

  1. யுக்ரேன்: ரயில் நிலையம் மீதான தாக்குதலில் 39 பேர் பலி

    இரண்டு ராக்கெட்டுகள் கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தைத் தாக்கியதில் 39 பேர் கொல்லப்பட்டதாக அந்த பிராந்தியத்தின் கவர்னர் தெரிவித்துள்ளார்.

    டெலிகிராமில் இதுகுறித்த பாவ்லோ கைரிலென்கோவின் பதிவில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஷெல் குண்டு தாக்குதலின் போது 87 பேர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளார்.

    மேலும், பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    குண்டுவீச்சு இருந்தபோதிலும், இந்தப் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் முயற்சி தொடரும் என்று கைரிலென்கோ மேலும் கூறினார்.

  2. ரஷ்யா செய்ததையே இந்தியாவிற்கு சீனாவும் செய்யலாம் – ராகுல் காந்தி

    காங்கிரஸ் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, ஷரத் யாதவை வெள்ளிக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பிற்குப் பிறகு, அவர் மத்திய அரசைக் குறிவைத்து பல விவகாரங்களில் பேசினார்.

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக மத்திய அரசின் கொள்கைகளை ராகுல் காந்தி விமர்சித்தார். யுக்ரேனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை அங்கீகரிக்க ரஷ்ய மறுத்த விதத்திலேயே, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக்கை சீனா அணுகுவதாக அவர் கூறினார்.

    ஏ.என்.ஐ செய்தி முகமையின்படி, ராகுல் காந்தி, “லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் உங்களுடையது அல்ல என்று இந்தியாவிடம் சீனா கூறுகிறது. அதனால் தான் அவர்கள் தங்கள் படைகளை அங்கேயே நிறுத்தி வைத்துள்ளனர். அங்கு செயல்படுத்தப்பட்ட மாதிரியையே இங்கு சீனாவும் செய்யலாம்.

    மத்திய அரசு உண்மையை ஏற்கவில்லை என்றும் அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யவில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

    “அரசு உண்மையை ஏற்கவில்லை என்றால், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், விஷயம் மோசமாகும்போது பதில் சொல்ல முடியாது,” என்று கூறிய ராகுல் காந்தி, பொருளாதார நிலை குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.

  3. இலங்கை: நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயலும் மாணவர்கள்

    இலங்கையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்று வருகின்றனர்.

  4. இலங்கையில் மருத்துவ அவசர நிலை? அரசு மருத்துவர்கள் சங்கம் கூறுவது என்ன?

  5. தூக்கம் இல்லாமல் தவிக்கும் தென் கொரிய மக்கள் - அதிர்ச்சியளிக்கும் வரலாற்றுப் பின்னணி

  6. நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி நெசவாளர்கள் உண்ணாவிரதம்

    நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி பரமக்குடி நெசவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

    அசல் பட்டு நூல் மற்றும் ஜரிகை விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி நெசவாளர்கள் பரமக்குடியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, எமனேஸ்வரம், சோமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 30,000 நெசவாளர்கள் உள்ளனர்.

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நெசவு தொழில் நலிவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டுக் காலமாக அசல் பட்டு நூல், ஜரிகையின் விலை கடுமையான உயர்ந்துள்ளது. இதனால் நெசவாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அசல் பட்டு மற்றும் ஜரிகை விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும் ஜிஎஸ்டி வரியை முழுவதும் நீக்கக் கோரியும் அசல் பட்டை இறக்குமதி செய்யக் கோரியும் 60 வயதை அடைந்த அனைத்து நெசவாளர்களுக்கும் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பரமக்குடி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, அனைத்து கைத்தறி நெசவாளர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் பரமக்குடி வைகை ஆற்று தரைப்பாலம் அருகே நடைபெற்று வருகிறது.

    கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாலர்கள் 100-க்கும் மேற்பட்ட கடைகளை கடந்த 4-ஆம் தேதி முதல் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் இன்று சுமார் 400-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மத்திய, மாநில அரசுகள் அசல் பட்டு விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் விரைவில் நெசவாளர்கள் கஞ்சித் தொட்டி போராட்டம் நடத்த இருப்பதாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  7. இலங்கை, பாகிஸ்தான் நெருக்கடிகள் இந்தியாவை பாதிக்குமா?

    இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான் இரண்டுமே தற்போது நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இது இந்தியாவை பாதிக்குமா?

  8. ரஷ்ய அதிபர் புதின் மனைவி, மகள்கள் எங்கே? அவர்கள் என்ன செய்கிறார்கள்?

  9. ஏப்ரல் 10 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவிட் முன்னெச்சரிக்கை டோஸ்

    18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கோவிட் தடுப்பூசியின் முன்னெச்சரிக்கை டோஸ் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல், தனியார் தடுப்பூசி மையங்களிலும் போடப்படும் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    மேலும், 15 வயதுக்கு மேற்பட்டோரின் மக்கள் தொகையில் 96% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியும் 83% பேர் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர். சுகாதாரத் துறை ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக தற்போது நடைமுறையில் இருக்கும் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி மற்றும் முன்னெச்சரிக்கை டோஸ் போடப்படும் அரசு தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

  10. இலங்கை பொருளாதார நெருக்கடி: கைக்குழந்தையோடு தனுஷ்கோடி வந்த தமிழ்க் குடும்பம் சொல்வது என்ன?

  11. ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற திட்டம்

    அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

    ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார், பிபிசி தமிழுக்கு இதைத் தெரிவித்தார்.

    நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

  12. "சென்னைக்கு மின்சாரம், வடசென்னைக்கு நஞ்சா?" - கேள்வியெழுப்பும் எண்ணூர் மக்கள்

    எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் வருகிற 12-ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், எண்ணூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அந்தத் திட்டம் குறித்து என்ன நினைக்கிறார்கள்?

  13. இலங்கை: எரிபொருள் நெருக்கடியைச் சரிக்கட்ட இந்தியாவுடன் பேச்சுவார்த்தை

    அடுத்த இரண்டு வாரங்களில் 120,000 டன் டீசல் மற்றும் 40,000 டன் பெட்ரோல் விநியோகம் மூலம் இலங்கைக்கு இந்தியா வழங்கிய 500 மில்லியன் டாலர் மதிப்பிலான எரிபொருள் தீரப் போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏப்ரல் 15,18 மற்றும் 23-ஆம் தேதிகளில் மூன்று தவணையாக 40,000 டன் டீசலை இந்தியா அனுப்பவுள்ளது. அதே அளவிலான பெட்ரோல் ஏற்றுமதி ஏப்ரல் 22-ஆம் தேதி செய்யப்படும்.

    இந்தியா புதன்கிழமை 36,000 டன் பெட்ரோல் மற்றும் 40,000 டன் டீசல் என இரண்டு எரிபொருள் சரக்குகளை இலங்கைக்கு அனுப்பியது.

    இந்த மாத இறுதிக்குள் இலங்கையில் எரிபொருள் மீண்டும் தீர்ந்துவிடும் என்ற அச்சத்திற்கு நடுவே, இரு தரப்பு அதிகாரிகளும் கடன் அளவை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தைந் நடத்தி வருகின்றனர்.

    பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஏற்கெனவே செய்யப்பட்ட கொள்முதல்களுக்கான கொடுப்பனவுகளைக் கொடுத்தவுடன் மட்டுமே இலங்கை மீண்டும் எரிபொருள் பெறுவதற்கு அனுமதிக்கப்படும்.

  14. யுக்ரேன் படையெடுப்பு: டான்பாஸ் சண்டை இரண்டாம் உலகப் போரை நினைவூட்டும், ஆலிஸ் இவான்ஸ், பிபிசி செய்திகள்

    ரஷ்யா தனது கவனத்தை வடக்கிலிருந்து விலக்கி, தெற்கு மற்றும் கிழக்கே டான்பாஸ் என அழைக்கப்படும் பகுதியை நோக்கி நகர்த்தியுள்ளது.

    ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் சிந்தனைக் குழுவில் பணியாற்றும் நிலப் போர் ஆய்வாளர் நிக் ரெனால்ட்ஸ், யுக்ரேனில் அடுத்த சில வாரங்களில் போர் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி கூறியுள்ளார்.

    டான்பாஸில் நடந்த சண்டை இரண்டாம் உலகப் போரை நினைவூட்டுவதாக இருக்கும் என்று யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் கூறியது துல்லியமானதா?

    “ஆம், அது துல்லியமானது என்று தான் நினைக்கிறேன். யுக்ரேனின் வடக்கில் இருந்து அனைத்து படைகளும் பின்வாங்கிவிட்ட நிலையில், பல தலைமுறைகளாகக் காணப்படாத ஆயுத மோதலை ஐரோப்பிய மண்ணில் நாம் பார்க்கப் போகிறோம்,” என்றார் ரெனால்ட்ஸ்.

    யுக்ரேன் உண்மையில் அதன் பிரதேசத்தைத் திரும்பவும் மீட்க முடியுமா?

    “இதில், இன்னும் அறியப்படாத காரணிகள் நிறைய உள்ளன. பல யுக்ரேனியர்கள் வடக்கில் ரஷ்ய படைகள் திரும்பப் பெறப்படுவதால் உற்சாகமடைகிறார்கள். ஆனால், வடக்கிலிருந்து எந்த வலுவான படைகள் வருவதற்கும் முன்னமே தெற்கு மற்றும் கிழக்கில் வரைபடம் இன்னும் மெதுவாக சிவப்பு நிறத்திற்கு மாறி வருகிறது.

    ஆகவே, ரஷ்யா இன்னும் தெற்கு மற்றும் கிழக்கில் வேகமெடுத்துள்ளது,” என்றார்.

    மேற்கத்திய ஆயுதங்கள் இதில் எந்தளவுக்கு வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும்?

    “மேற்கத்திய நாடுகள் இதுவரை யுக்ரேனுக்கு அனுப்பிய ஆயுதங்கள் போரை மாற்றியமைத்துள்ளன. வரும் வாரங்களில் மேற்கத்திய ஆயுதங்கள் முற்றிலும் இன்றியமையாததாக இருக்கும். ஆனால், அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அவற்றை எவ்வாறு கொண்டு செல்வது என்பதை அறிவது கடினம்.

    ஜாவெலின்கள், என்.எல்.ஏ.டபுள்யூக்கள் மற்றும் ஸ்டிங்கர்கள் போன்ற அதிநவீன ஆயுதங்களின் தொழில்துறை உற்பத்தியை அதிகரிப்பது எளிதானதல்ல. இவை, சிக்கலான விநியோகச் சங்கிலியைக் கொண்டிருப்பதால், மேற்கத்திய அரசுகள் தேவையைத் தக்க வைக்கப் போராடுகின்றன,” என்றார்.

  15. தமிழ்நாடு முதல்வரை அவதூறாகப் பேசியதாக பாஜக நிர்வாகி கைது

    தமிழ்நாடு முதலமைச்சரை அவதூறாகப் பேசியதாக கன்னியாகுமரி மாவட்ட பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற பாஜக ஸ்தாபக தின நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்ட பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ் உரையாற்றினார்.

    அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவர் அவதூறாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.

    இதுகுறித்து திமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி காவல்துறையினர் ஜெயபிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து, வியாழக்கிழமை நள்ளிரவு 2:30 மணியளவில் கைது செய்தனர்.

    அவரைக் கைது செய்ய காவல்துறையினர் வந்ததைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் அந்தப் பகுதியில் முற்றுகையிட்டு கைது செய்ய விடாமல் தடுத்தனர்.

    அதைத் தொடர்ந்து காவல்துறைக்கும் பாஜகவினருக்கும் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின், ஜெயபிரகாஷை பாஜகவினரே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

  16. ம.பி.யில் பத்திரிகையாளர்கள் அரை நிர்வாணமாக்கபட்டதாக கூறப்படும் விவகாரம் - நடந்தது என்ன?

  17. "அரியணையில் உட்காருவது ஆங்கிலமா? இந்தியா?" - சு.வெங்கடேசன் கூறுவது என்ன?

    மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “அரியணையில் யார் உட்காருவது ஆங்கிலமா இந்தியா என்றால், எங்கள் பதில் எட்டாவது அட்டவணையின் 22 மொழிகளுமே. ஹிந்தியைத் தவிர மற்ற மொழிகளை அதிகாரத்திற்கு வர விடாமல் தடுப்பதும் ஆங்கிலத்தை அகற்றுவதுமே ஒன்றிய அரசின் தந்திரம். தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள்,” என்று தனதுட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  18. "இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பும் தகவல் உண்மையில்லை"

    இலங்கைக்கான இந்திய தூதர், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்புவதாக வந்த தகவலை மறுத்துள்ளார். ஏப்ரல் 1-ம் தேதி முதல் பரவிக் கொண்டிருக்கும் இந்தத் தகவல் பொய்யானது என செய்தியாளர் சந்திப்பில் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கை உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. அதுகுறித்தும் இந்தியா இலங்கைக்கு உதவுவது குறித்தும் பேசியபோது, “இலங்கைக்கு அவசியமான நேரத்தில் உதவ இந்தியா முன்வந்துள்ளது. கடல்சார் நெருக்கமான நாடாக இருக்கும் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும்,” எனவும் தெரிவித்துள்ளார்.

  19. வடமாநிலத்தவரால் சட்டம் ஒழுங்கு சீரழிவு அதிகரிப்பதாக சீமான் கருத்து

    "வட மாநிலத்தவரால் அதிகரித்து வரும் சட்டம் ஒழுங்கு சீரழிவினைத் தடுக்க, உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்." - சீமான் கருத்து

  20. இலங்கையின் மத்திய வங்கி முன்னாள் ஆளுநருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது ஏன்?