You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

புதிய கொரோனா திரிபு XE: மும்பையில் உறுதி செய்யப்பட்டதா? - மாறுபட்ட தகவல்

புதிய கொரோனா திரிபு XE, மும்பையில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதுகுறித்து மாறுபட்ட தகவல் வெளியாகியுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. இலங்கையில் இன, மத பேதமின்றி ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிராக உக்கிரமான போராட்டம்

  2. இலங்கையில் எதிர்காலத்தில் கடும் உணவு பஞ்சம் ஏற்படும் - சபாநாயகர் கருத்து

    இலங்கையில் எதிர்காலத்தில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றமை குறித்து அனுமானிக்க முடிவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிக்கின்றார்.

    நாடாளுமன்ற அமர்வில் இன்று (ஏப். 06) கலந்துகொண்டு விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறான பொருளாதார நெருக்கடி ஆரம்பமாகியுள்ள சூழ்நிலையிலேயே, இன்று நாட்டின் அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார்.

    தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது, எதிர்காலத்தில் மேலும் உக்கிரமடையும் சாத்தியம் காணப்படுவதாக பொருளியல் நிபுணர்களை மேற்கோள்காட்டி அவர் கருத்து வெளியிட்டிருந்தார். நாட்டில் இன்று எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சார தட்டுப்பாடு ஆகியவற்றுக்கு மேலாக சென்று, கடுமையான உணவு பஞ்சம் எதிர்காலத்தில் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அனுமானிக்க முடிகின்றது என அவர் கூறுகின்றார்.

    நாடாளுமன்றத்தில் தாம் செயற்படும் விதத்திலேயே இதனை கட்டுப்படுத்த முடியும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவிக்கின்றார். கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அதனால் அவர்களின் பாதுகாப்பு மற்றும் சிறப்புரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகின்றார்.

    இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தான் போலீஸ் மாஅதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்புக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

    மக்கள் எதிர்நோக்கியுள்ள நியாயமான கஷ்டங்களினாலேயே, தம்மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதை தாம் உணர்ந்துக்கொள்ள முடிவதாகவும் அவர் தெரிவிக்கின்றார். தாம் தலைமைத்துவம் வகிக்கும் மக்களுக்கு தற்போது பொருளாதார அழுத்தத்தை உணர்ந்துக்கொள்ள முடிவதாக கூறிய அவர், அதனால், இந்த விடயத்தை நன்கு புரிந்துக்கொண்டு செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றார்.

  3. எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு

    அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் சொத்து வரியை "150 சதவீதம் வரை உயர்த்திய திமுக அரசை கண்டித்து" தமிழகம் முழுவதும் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் ரயில்வே ஜங்ஷன் முன்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில், திருச்சி மாநகர மற்றும் மாவட்ட அதிமுக சார்பில் ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். இதேபோல, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில், புதுக்கோட்டையில் சொத்துவரி உயர்வை கண்டித்து நேற்று முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல, திருச்சி ஜங்ஷன் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பரஞ்ஜோதி உள்ளிட்டவர்கள்மீது சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல் உள்ளிட்ட காரணங்களைக் காட்டி, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 143, 151, 188, 283 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் வழக்கு பதிந்துள்ளனர்.

  4. ராஜபக்ஷ அரசு மீது இலங்கையில் ஆத்திரம்; தூக்கி எறிய துடிக்கும் போராட்டக்காரர்கள் - உண்மையில் இலங்கை நெருக்கடியில் சிக்கியது எப்படி? முழு விவரம்

  5. வழக்கறிஞர் தற்கொலை: இரட்டை இலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு பயந்து தற்கொலையா?

    இரட்டை இலை வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு பயந்து வழக்கறிஞர் தற்கொலை செய்துகொண்டாரா என, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர்என்பவர், கடந்த 2017-ம் ஆண்டில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர பல கோடி ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதைத்தொடர்ந்து, தினகரன் ஒரு சில கோடி ரூபாய் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில், பல வழக்குகளில் தொடர்புடைய சுகேஷ் சந்திரசேகர் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்தது தொடர்பாக நடைபெற்ற பணமோசடி வழக்கிலும் அமலாக்கத்துறையினர் கைதுசெய்தனர்.

    சுகேஷ் சந்திரசேகரின் வாக்குமூலத்தை ஆதாரமாகவும் அடிப்படையாகவும் கொண்டு வரும் 8ம்தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

    இந்தநிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் திருவேற்காட்டில்இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    இரட்டை இலை வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு பயந்து அவர் தற்கொலை செய்துகொண்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  6. அடையாளம் தெரியாத சடலத்தை தந்தை என கருதி அடக்கம் செய்த மகன்

    ஈரோடு மாவட்டம் துறையம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி, கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வந்தார்.

    இவர் கர்நாடகா மாநிலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது வழக்கம்.

    இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்ற மூர்த்தி பின்னர் வீடு திரும்பவில்லை. மூர்த்தியின் மகன்கள் கார்த்தி மற்றும் பிரபுகுமார் ஆகியோர் பல இடங்களில் மூர்த்தியை தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், தேடுவதை தொடர்ந்தனர்.

    இந்நிலையில், கடந்த 31ஆம் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலைய பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக கார்த்திக்கிற்கு வாட்சப்பில் தகவல் கிடைத்தது.

    அதைத்தொடர்ந்து, கார்த்திக் சத்தியமங்கலம் சென்று பார்த்தபோது, முகம் அழுகிய நிலையில் இருந்தாலும் அவரது தந்தையை போன்ற தோற்றத்துடன் இருந்ததாலும், இறந்து கிடந்தது தனது தந்தை தான் என முடிவு செய்தார். தொடர்ந்து போலீசார் விசாரனையில், இறந்தவர் தனது தந்தை மூர்த்திதான் என, காவல் துறையினர் முன்னிலையில் கார்த்திக் உறுதி செய்தபின், உரிய சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்தனர்.

    இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மூர்த்தி உயிருடன் வீட்டுக்கு வந்துள்ளார். அவரை கண்டதும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தாலும், மகிழ்ச்சியடைந்தனர்.

    இதுதொடர்பான போலீசார் விசாரணையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைக்கு கரும்பு வெட்டுவதற்காக மூர்த்தி சென்றதும், அங்கு வேலை முடிந்ததால் வீட்டுக்கு வந்ததும் தெரியவந்தது.

  7. யுக்ரேன் புச்சா படுகொலைகள்: குடும்பத்துடன் கொல்லப்பட்ட கிராம தலைவர்

    யுக்ரேனில் கிராம தலைவர், அவருடைய கணவர் மற்றும் அவர்களின் மகனை ரஷ்யப்படைகள் கொன்றுள்ளதாக, யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவமும், சாதாரண பொதுமக்கள் உடை அணிந்திருந்த 5 ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதும், யுக்ரேனில் நடைபெறும் கொடூரங்களின் சாட்சியங்களுள் ஒன்றாக இணைந்துள்ளன. இந்த இரண்டு சம்பவங்களின் நிகழ்விடங்களுக்கும் பிபிசியின் யோகிதா லிமாயே சென்றார்.

    யுக்ரேன் தலைநகர் கீயவின் புறநகரில் உள்ள புச்சா பகுதியில் ரஷ்ய ஆக்கிரமிப்பின்போது நிகழ்ந்த கொடுமைகள், தற்போது இறுதியாக வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

    முன்பு குழந்தைகள் சமூக மையமாக திகழ்ந்த கட்டடம் ஒன்றின் அடித்தளத்தில், ஐந்து சடலங்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. சடலமாக கண்டெடுக்கப்பட்ட 5 ஆண்களும் சாதாரண பொதுமக்கள் உடைகளில் இருந்தனர், அவர்களின் கைகள் முதுகுக்குப் பின்னே கட்டப்பட்டிருந்தன.

  8. யுக்ரேனின் புச்சா பகுதியில் மக்கள் கொலைகள் - அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்

    யுக்ரேனின் புச்சா பகுதியில் நடந்த மக்கள் கொலைகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளதாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடி குறித்து இன்று நாடாளுமன்றத்தில் பேசிய இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர், "யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடிக்கு எதிராக முதலாவதாகவும் வலுவானதாகவும் வினையாற்றிய முதல் நாடு இந்தியா. ரத்தம் சிந்துவது மற்றும் அப்பாவி மக்களின் உயிரிழப்புகள் மூலம் எந்தவித தீர்வையும் எட்ட முடியாது என, நாங்கள் நம்புகிறோம். எந்தவொரு பிரச்னைக்கும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜரீதியாக மட்டுமே தீர்வு காண முடியும்.

    இந்த விவகாரத்தில் இந்தியா ஒரு சார்பை தேர்ந்தெடுத்தால், அது அமைதியின் சார்பாகத்தான் இருக்கும். இதுதான் வன்முறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும்.

    யுக்ரேனின் புச்சா பகுதியில் நடந்தவற்றை (மக்கள் கொலைகள்) பல எம்.பிக்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். புச்சாவில் நடந்துவருபவை குறித்த தகவல்களால் உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். அங்கு நடைபெற்ற கொலைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இது மிகவும் தீவிரமான பிரச்னை. இதுதொடர்பான சுதந்திரமான விசாரணைக்கான வலியுறுத்தல்களை ஆதரிக்கிறோம்.

    போர் நிறுத்தத்தை உடனடியாக கொண்டு வர தொடர்ந்து இந்தியா வலியுறுத்தும். யுக்ரேனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்க தளர்வுகளை அளிக்க யுக்ரேன் அரசு முடிவு செய்துள்ளது. 3-ம் ஆண்டு மருத்துவ மாணவர்கள், நான்காம் ஆண்டுக்கு செல்வதற்கான KROK 1 தேர்வை ஒத்திவைத்துள்ளது. இதன்மூலம், அடிப்படை தகுதியை நிறைவு செய்ததன் அடிப்படையில் மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டுக்கு தேர்ச்சி பெற அனுமதிக்கப்படுகிறார்கள்" என அவர் பேசினார்.

  9. ஹைப்பர்சோனிக் ஏவுகணை: ரஷ்யா, சீனாவுக்கு பதிலடி தர அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா கூட்டுத் திட்டம்

    ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒருங்கிணந்து செயல்படும் என்று பிரிட்டன் அரசு கூறியுள்ளது.

    இந்த திட்டம் கடந்த ஆண்டு மூன்று நாடுகளால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தமான AUKUS கூட்டாண்மையின் ஒரு பகுதியாக இருக்கும்.

    சீனா மற்றும் ரஷ்யாவால் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்ட நிலையில், யுக்ரேனில் கடந்த மாதம் ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சூழலில் இந்த முன்னெடுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

    ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கக் கூடியவை.

    அவற்றின் வேகம் மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் திறன் ஆகியவற்றால் தரையில் இருந்து செயல்படும் ரேடார்களின் பார்வையில் அகப்படாது. மேலும் பறக்கும் போதே திசையை மாற்றிக் கொள்ள முடியும் என்பதால், அவற்றின் தாக்குதலில் இருந்து தப்புவது கடினம்.

  10. மூலப்பொருள்கள் விலை உயர்வு: தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகள் மூடல்

    தீப்பெட்டி மூலப்பொருள்கள் விலை உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும், சீன லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகள் இன்று முதல் மூடப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சாத்தூர், நெல்லை, தென்காசி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் ஆகிய பகுதிகளில் 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலைகள், 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் என செயல்பட்டு வருகின்றன.

    தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருள்களான பாஸ்பரஸ், குளோரைடு, மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்து பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த காரணத்தினால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    கடந்த 3 மாதங்களில் மீண்டும் தீப்பெட்டி உற்பத்தி மூலப்பொருள்களின் விலை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கடுமையாக உயர்ந்துள்ளதால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மேலும் நெருக்கடியை சந்திக்க தொடங்கினர்.

    இந்நிலையில், சீனாவில் இருந்து இந்தியாவிற்கு அதிகளவில் வரும் லைட்டர்களை மத்திய அரசு தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து தீப்பெட்டி ஆலைகளும் மூடப்பட்டுள்ளன.

    மேலும், தீப்பெட்டி பண்டல்களும் விற்பனைக்கு கொண்டுசெல்லப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  11. உடல்நலம்: தூக்கம் இல்லாமல் தவிக்கும் தென் கொரிய மக்கள் - அதிர்ச்சிகரமான வரலாற்றுப் பின்னணி

    உலகில் மிக அதிக தூக்கமின்மை நிலவும் நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. இதன் காரணமாக அந்த நாட்டு மக்கள் மிகப்பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர் என்று பிபிசியின் குளோயி ஹட்ஜிமெத்யூ குறிப்பிடுகிறார்.

    தனது அலுவலக நேரம் மிகவும் கடினமாகி தன்னை தளர்த்திக்கொள்ள முடியாமல் போனதால், ஜி-யூனுக்கு தூங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

    சராசரியாக அவர் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வேலை செய்தார். ஆனால் 29 வயது மக்கள் தொடர்பு அதிகாரியான அவர் பிஸியான நாட்களில் அதிகாலை மூன்று மணி வரை அலுவலகத்தில் இருப்பார்.

    அவருடைய மேலதிகாரி அடிக்கடி நள்ளிரவில் அழைத்து உடனடியாக ஏதாவது செய்யுமாறு கோருவார்.

    "எப்படி இளைப்பாறுவது என்பதை ஏறக்குறைய நான் மறந்துவிட்டேன்," என்று ஜி-யூன் கூறுகிறார்.

  12. சில கட்சிகள் வாக்கு வங்கி அரசியலில் மட்டுமே ஈடுபடுகின்றன - பிரதமர் நரேந்திர மோதி

    சில கட்சிகள் வாக்கு வங்கி அரசியலில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றன என, பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

    பாஜகவின் 42ஆவது நிறுவன நாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோதி காணொளி காட்சி வாயிலாக அக்கட்சி தொண்டர்களிடம் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசுகையில், "நம் நாட்டில் பல தசாப்தங்களாக சில கட்சிகள் வாக்கு வங்கி அரசியலை மட்டுமே மேற்கொண்டு வந்தன. சிலருக்கு மட்டுமே வாக்குறுதிகளை அளித்தன, பெரும்பாலான மக்களை பசியிலேயே வைத்திருந்தன. வாக்கு வங்கி அரசியலின் பக்க விளைவுகளாக ஏற்றத்தாழ்வும் ஊழலும் பெருகின. இதன் பின்னடைவுகளை மக்களுக்கு விளக்கியதில் பாஜக வெற்றி கண்டுள்ளது.

    75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடிவரும் வேளையில், மக்கள் நலத்திட்டங்கள் 100 சதவீத பயனாளிகளை சென்றடைய வேண்டும். பல்வேறு மாநிலங்களில் ஆளும் பாஜக அரசு, இரட்டை எஞ்சின் அரசாக உள்ளன" என பேசியதாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  13. யுக்ரேன் கொலைகளை இனப்படுகொலையுடன் ஒப்பிட்ட பிரிட்டன் சுகாதார அமைச்சர்

    யுக்ரேனில் நிகழ்ந்துவரும் அதிகப்படியான கொலைகளை நிறுத்த இந்த உலகம் எதிர்வினையாற்ற வேண்டும் என, பிரிட்டன் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். ரஷ்யப்படைகள் யுக்ரேனில் மக்களை கொல்வதாக வெளியாகும் தகவல்களை, போஸ்னியாவில் 1995ஆம் ஆண்டில் நிகழ்ந்த இனப்படுகொலையுடன் அவர் ஒப்பிட்டார்.

    யுக்ரேன் தலைநகர் கீயவை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் ரஷ்யப்படைகள் வாபஸ் பெற்றுக்கொண்ட நிலையில், ரஷ்யப்படைகளால் கொல்லப்பட்டதாக கூறப்படும் பொதுமக்களின் சடலங்கள், அழிந்த வீடுகள் மற்றும் எரிந்த கார்கள் உள்ளிட்டவற்றை யுக்ரேனிய படைகள் ஊடகவியலாளர்களுக்குக் காட்டி வருகின்றனர்.

    "ஐரோப்பாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் படுகொலைகள் இங்கு நடைபெற்றுள்ளன. 1995-ம் ஆண்டுக்குப் பிறகு இதுபோன்று நிகழ்ந்ததை நாங்கள் பார்க்கவில்லை," என பிபிசி காலை நிகழ்ச்சியில் ஜாவித் தெரிவித்தார்.

    ஜூலை 1995 இல், போஸ்னிய செர்பியப் படைகள் ஸ்ரெப்ரெனிகாவில் ஐக்கிய நாடுகளின் 'பாதுகாப்பான மண்டலத்தை' கைப்பற்றி, ஆண்களையும் சிறுவர்களையும் கொன்று குவித்தது, இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் மிக மோசமான கொடூரமான படுகொலையாக காணப்படுகிறது.

    "இன்னும் பல வருடங்கள் கழித்து ஐரோப்பாவில் நடந்த மற்றொரு இனப்படுகொலையை நான் நினைவுகூர விரும்பவில்லை. நமக்கு அதிகாரம் உள்ளது, இதனை நிறுத்த உலகத்திற்கு அதிகாரம் உள்ளது, உலகம் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டும்" என ஜாவித் தெரிவித்தார்.

  14. பாலக்காட்டில் இப்படி ஒரு திருவிழாவா? - வண்ணங்கள், கலை வடிவங்கள், பட்டாசு, அலங்கரிக்கப்பட்ட யானைகள்

  15. சேலத்தில் ஓட்டிப் பார்ப்பதாக கூறி புல்லட்டுடன் தலைமறைவான காதல் ஜோடி கைது

    சேலத்தில் ஓட்டிப் பார்ப்பதாக கூறி புல்லட்டுடன் தலைமறைவான காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.

    சேலம் டவுன் சாந்தி தியேட்டர் பகுதியில் ராம் பாலாஜி என்பவர் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி, விற்பனை செய்யும் கன்சல்டிங் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு கடந்த ஜனவரி 23 ஆம் தேதி இரண்டு இளம் ஜோடியினர் வந்துள்ளனர்.

    ஒரு புல்லட் வாங்க வந்திருப்பதாக கூறியவர்கள் அங்கிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை பார்வையிட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்த 1.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு புல்லட்டை தேர்வு செய்துள்ளனர். தொடர்ந்து வண்டியை ஓட்டிப்பார்த்து விட்டு வருவதாக கூறியுள்ளனர்.

    கடை ஊழியர்களும் இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்களே என்ற எண்ணத்தில் நம்பி வண்டியை எடுத்துப்போக அனுமதித்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் வண்டியை எடுத்துச் சென்றவர்கள் மீண்டும் திரும்பவில்லை . அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் இன்னொரு ஜோடியிடம் அவர்களை தொலைபேசியில் அழைக்குமாறு கேட்டுள்ளனர்.

    அவர்களோ தங்களுக்கு அவர்கள் எண் தெரியாது என்று கூறியிருக்கின்றனர். இதனால் கடை ஊழியர்கள், கடையில் இருந்த இன்னொரு ஜோடியை பிடித்து டவுன் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

    பின்னர் காவல்துறையினர் அவர்களை விசாரித்தபோது, வண்டியை ஓட்டிச்சென்ற இளைஞர் கிருஷ்ணகிரி அருகில் உள்ள குப்பத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்பது தெரியவந்துள்ளது.

    இது குறித்த புகாரின்பேரில் சேலம் டவுன் குற்றப் பிரிவு போலீசார், வண்டியை எடுத்துச் சென்ற காதல் ஜோடியை தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த இருவரும் பெங்களூருவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. சேலம் டவுன் காவல்துறையினர் தனிப்படை அமைத்து பெங்களூரு சென்றனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் பெங்களூருவை அடுத்த கோலார் மாவட்டத்தில் காதல் ஜோடியை கைது செய்து சேலம் அழைத்து வந்தனர்.

  16. சுதந்திர கட்சியின் கோரிக்கையை அடுத்து மீளப் பெறப்பட்ட அவசரகால சட்டம், ரஞ்சன் அருண் பிரசாத்

    ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்றிரவு விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.இலங்கையில் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு தாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறுகின்றார். அவசரகால சட்ட பிரேரணை நாடாளுமன்றத்திற்கு வாக்களிப்பிற்கு விடுக்கப்படும் பட்சத்தில், அதற்கு எதிராகவே தாம் வாக்களிப்பதாக ஜனாதிபதியிடம் தமது கட்சியினர் கூறியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். இதையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவசரகால சட்டத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்ததாக அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கின்றார்.

    இதேவேளை, இராஜினாமா கடிதத்தை கையளித்த பிரதி சபாநாயகர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டியவின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.நாடாளுமன்றத்தில் சுயாதீன பதவிகளை வகிப்போர், தமது பதவிகளை அவ்வாறே தொடருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சியாக செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் என நேற்றைய தினம் அறிவித்த பின்னணியிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும், தமது கட்சி தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகவே செயற்படும் என அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கின்றார்.

  17. கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மாட்டார் - நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

    இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மாட்டார் என்று அந்நாட்டு நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது."பொறுப்புள்ள ஓர் அரசாக, அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ எந்த சூழ்நிலையிலும் பதவி விலக மாட்டார்", என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தற்போதைய பொருளாதார நெருக்கடி சூழ்நிலையை எதிர்கொள்வார் என்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

    சில நாள்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட அவசரநிலை பிரகடனத்தை, திரும்பப் பெறுவதாக அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருக்கிறார்.

  18. வணக்கம் நேயர்களே

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழ் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இதுவரை எம்.மணிகண்டன், ஷோபனா ஆகியோர் வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    இலங்கை மற்றும் யுக்ரேனில் இருந்து பல்வேறு செய்தியாளர்கள் வழங்கும் செய்திகளையும், தமிழ்நாடு, இந்தியா, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளையும் இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

  19. இந்தாண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு - மு.க.ஸ்டாலின்

    இந்த ஆண்டு இறுதியில், தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தவுள்ளதாக, தமிழக சட்டமன்றத்தில் இன்று பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் அரசின் இந்த முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

  20. அவசரநிலை பிரகடனம் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் காரசார விவாதம், ரஞ்சன் அருண் பிரசாத்

    இலங்கையில் ஏன் திடீரென அவசரநிலை பிரகடனம் கொண்டு வரப்பட்டது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினார். இந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதா?, பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவது குறித்து ஏதேனும் தகவல் கிடைத்துள்ளதா?, என்பதை ஆளும் தரப்பு தெளிவூட்ட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பதிலளித்தார்.

    அவசரநிலை பிரகடனம் தேவையற்ற விதத்தில் எண்ணத்தில் கொண்டு வரவில்லை என அவர் தெரிவித்தார்.

    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டிற்கு முன்பாக ஏற்பட்ட பாரிய அமைதியின்மை காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டது. அத்துடன், அதனை தொடர்ந்து நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டமையினால், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டே அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

    நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் பாதுகாப்பு சபை கூடி ஆராய்ந்து, அவசரநிலை பிரகடனத்தை வாபஸ் பெற்றுக்கொண்டதாகவும் தினேஷ் குணவர்தன, சபைக்கு அறிவித்தார்.