கீயவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களுக்கு வெளியே தாக்குதலை முற்றிலும் குறைப்போம்: ரஷ்யா

யுக்ரேன் தலைநகர் கீயவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களுக்கு வெளியே ரஷ்யப்படைகளின் ராணுவ நடவடிக்கையை "முற்றிலும் குறைப்போம்" என, ரஷ்யாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸாண்டர் ஃபோமின் தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. யுக்ரேனில் சமீபத்திய செய்தி என்ன?

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Getty Images

    இந்த நேரலைப் பக்கத்தில் இப்போதுதான் இணைகிறீர்களா? யுக்ரேனில் இன்று இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதை இங்கே வழங்குகிறோம்:

    • கடந்த சில வாரங்களாக யுக்ரேன் - ரஷ்யா இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடக்காத நிலையில், இருநாட்டு பிரதிநிதிகளும் இன்று துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதற்காக இருநாட்டு பிரதிநிதிகளும் இஸ்தான்புல் வந்துள்ளனர். போர் நிறுத்தத்தையே தாங்கள் முக்கியமாக வலியுறுத்தவுள்ளதாக, யுக்ரேன் தெரிவித்துள்ளது. ஆனால், யுக்ரேன் மற்றும் ரஷ்யா இருநாடுகளும் ரஷ்யாவின் நோக்கங்கள் குறித்த சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளன.
    • எண்ணெய் வர்த்தகத்திற்கான தடை உள்ளிட்ட ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை வலுப்படுத்துமாறு உலக நாடுகளை யுக்ரேன் அதிபர் வொலாடிமிர் ஸெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.
    • இந்த மாத தொடக்கத்தில் யுக்ரேன் – பெலாரூஸ் எல்லையில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ரஷ்ய பெரும்பணக்காரர் அப்ராமோவிச்சிற்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவருடன் இரு யுக்ரேனிய பிரதிநிதிகளும் இதனால் பாதிக்கப்பட்டதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ரோமன் அப்ராமோவிச் நலமுடன் உள்ளார்.
    • ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் "ஆட்சியில் தொடர்ந்து நீடித்திருக்கக்கூடாது" என்ற தன் சர்ச்சைக்குரிய கருத்தை "திரும்பப் பெற போவதில்லை" என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். "கொள்கை அளவிலான மாற்றத்தைவிட", தன்னுடைய "தார்மீக கோபத்தையே" தான் வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
    • சுமி நகரத்தின் வடக்கு பகுதியில் உள்ள ட்ரோஸ்டியானெட்ஸ் பகுதியை மீண்டும் யுக்ரேன் கைப்பற்றியதாக, அமெரிக்க மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். கிழக்கு டான்பஸ் பிராந்தியத்தில் தங்கள் கவனத்தை திருப்பியிருப்பதால், தலைநகர் கீயவில் ரஷ்யப்படைகளின் முன்னேற்றம் தடைபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
  2. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழ் நேரலைக்கு வரவேற்கிறோம். இதுவரை லக்ஷ்மிகாந்த் பாரதி மற்றும் விஷ்ணுப்ரியா ராஜசேகர் வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் வழங்கும் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

  3. மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரி மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம்.

    மத்திய

    பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றிற்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள் சார்பில் இன்றுஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், விலைவாசி உயர்வு, மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று முதல் மத்திய தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் புதுச்சேரியில் மத்திய அரசைக் கண்டித்து, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று பொது வேலை நிறுத்தத்துடன் சேர்த்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    மத்திய

    முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படாத நிலையில், வெளியூர்களுக்குச் செல்லக்கூடிய ஒருசில அரசு பேருந்துகள் மட்டும் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே முழு அடைப்பு போராட்டம் காரணமாக, புதுச்சேரியில் இன்று ஒருசில தனியார்ப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  4. கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கோரிய வில் ஸ்மித்

    ஆஸ்கர் மேடையில் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை அறைந்தது குறித்து ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மன்னிப்பு கோரியுள்ளார்.

    தனது செயல் "எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    "நான் வெளிப்படையாக உங்களிடம் மன்னிப்பு கோர விரும்புகிறேன் கிறிஸ். நான் வரைமுறையை மீறி நடந்து கொண்டேன். நான் செய்தது தவறு" என்று தனது மன்னிப்பு கடிதத்தில் தெரிவித்துள்ளார் வில் ஸ்மித்.

    ஏற்கனவே ஆஸ்கர்ஸ் ஃபிலிம் அகாடமி வில் ஸ்மித்தின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. அதுமட்டுமல்லாமல் சம்பவம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

  5. துருக்கியில் தொடங்கும் பேச்சுவார்த்தை

    turkey talks

    பட மூலாதாரம், Getty Images

    ரஷ்ய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த யுக்ரேனிய பிரதிநிதிகள் துருக்கி வந்தடைந்துள்ளனர்.

    போரை நிறுத்துவதே இந்த பேச்சுவார்த்தையின் நோக்கம் என யுக்ரேன் பிரநிதிகள் தெரிவித்துள்ளனர்.

    இருவாரங்களுக்கு பிறகு இருநாட்டுப் பிரதிநிதிகளும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.

    இதற்கு ஏற்பாடு செய்தவர் துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவான்.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகயுக்ரேன்மீது தாக்குதலை நடத்தி வருகிறது ரஷ்யா.

  6. ஐபிஎல் தொடரின் தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி

    லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் தொடரின் தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

    டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார். 159 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ், 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து வென்றுள்ளது.

  7. அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ரஷ்யவின் பெரும் பணக்காரரை கொல்ல முயற்சியா?

    REUTERS

    பட மூலாதாரம், REUTERS

    இந்த மாத தொடக்கத்தில் யுக்ரேன் – பெலாரஸ் எல்லையில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ரஷ்ய பெரும்பணக்காரர் அப்ராமோவிச்சிற்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    செல்ஸீ எஃப் சி கால்பந்து அணியின் உரிமையாளரான அப்ரோமோவிக், கண் மற்றும் தோல் எரிச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யுக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தையை அழிக்க நினைக்கும் கடும்போக்கு ரஷ்யர்களால் இந்த விஷ தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்கலாம் என வால் ஸ்ட்ரீட் ஜெனலின் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

    மேலும் இரு யுக்ரேனிய பிரதிநிதிகள் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த மாத தொடக்கத்தில் அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக மாஸ்கோ மற்றும் கீயவிற்கு இடையே பலமுறை பயணம் செய்தார் அப்ராமோவிக். மேலும் அவர் யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கியை சந்தித்தாகவும் செய்திகள் வெளியாகின.

  8. இன்றைய நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இன்றைய உலகம், இந்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் உங்களுக்கு வழங்குகிறோம். நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து சில முக்கிய நிகழ்வுகள் இதோ.

    • மீராபாய் சானுவுக்கு 2021-ஆம் ஆண்டின் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது
    • பாகிஸ்தான்: இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்
    • யுக்ரேனில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் திட்டம் திங்கட்கிழமை செயல்படுத்தப்படாது என்று அந்நாட்டின் துணை பிரதமர் ஐரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.
    • ரஷ்யா, யுக்ரேன் ஆகிய நாடுகளிடம் இருந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதால், பாதிப்படைந்த மேரியோபோல் நகரத்திற்கு இன்னும் எந்த உதவுகளும் செய்ய முடியவில்லை என்று மனிதாபிமான உதவிகளை வழங்கும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
    • யுக்ரேனின் முக்கிய துறைமுக நகரமான மேரியோபோல் அழிவின் விளிம்பில் சிக்கியுள்ளதாகவும், அங்குள்ள அனைவரும் வெளியேற வேண்டும் எனவும், அந்நகர மேயர் வாடிம் போய்சென்கோ தெரிவித்துள்ளார்.
    • மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தாயை கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை
    • 3500 கோடி ரூபாய் முதலீடு: லுலு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்- முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
    • பங்குச்சந்தை முறைகேடு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு காவல் நீட்டிப்பு