You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கீயவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களுக்கு வெளியே தாக்குதலை முற்றிலும் குறைப்போம்: ரஷ்யா

யுக்ரேன் தலைநகர் கீயவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களுக்கு வெளியே ரஷ்யப்படைகளின் ராணுவ நடவடிக்கையை "முற்றிலும் குறைப்போம்" என, ரஷ்யாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸாண்டர் ஃபோமின் தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நன்றி நேயர்களே!

    இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...

    • யுக்ரேன் தலைநகர் கீயவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களுக்கு வெளியே ரஷ்யப்படைகளின் ராணுவ நடவடிக்கையை "முற்றிலும் குறைப்போம்" என, ரஷ்யாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸாண்டர் ஃபோமின் தெரிவித்துள்ளார்.
    • இஸ்தான்புல்லில் நடைபெற்ற இருநாட்டு பிரதிநிதிகளிடையேயான பேச்சுவார்த்தையில் ரஷ்யா சார்பாக அலெக்ஸாண்டர் ஃபோமின் இடம்பெற்றிருந்தார்.
    • அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நடுநிலையை ஏற்றுக்கொள்வதாக, யுக்ரேன் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
    • யுக்ரேன் - ரஷ்யா இருநாடுகள் இன்று எடுத்த முடிவுகள், போர் தொடங்கியதற்கு பின்னான "மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" என துருக்கி தெரிவித்துள்ளது.
    • ஆனால், ரஷ்யா சொல்வதற்கும் அதன் செயல்களுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாக, அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
    • ரஷ்ய பெரும் பணக்காரரான ரோமன் ஆப்ராமோவிச் இருநாட்டு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார்.
    • அப்ரமோவிச்சிற்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலில் உண்மையில்லை என, ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
    • தமிழ்நாடு அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன் மற்றும் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோரின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன.
    • அண்ணாமலை முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என்பதை திரும்பத் திரும்ப நிரூபித்து வருகிறார் என, திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
  2. யுக்ரேனில் சமீபத்திய செய்தி என்ன?

    இந்த நேரலைப் பக்கத்தில் இப்போதுதான் இணைந்தீர்களா? இன்று யுக்ரேன் - ரஷ்யா போர் தொடர்பாக நிகழ்ந்த சம்பவங்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்:

    இருநாட்டு பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

    • யுக்ரேன் தலைநகர் கீயவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களுக்கு வெளியே ரஷ்யப்படைகளின் ராணுவ நடவடிக்கையை "முற்றிலும் குறைப்போம்" என, ரஷ்யாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸாண்டர் ஃபோமின் தெரிவித்துள்ளார்.
    • அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நடுநிலையை ஏற்றுக்கொள்வதாக, யுக்ரேன் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நடுநிலையை ஏற்றுக்கொள்வதன் மூலம், நேட்டோ உள்ளிட்ட எந்தவொரு ராணுவ கூட்டணியிலும் யுக்ரேன் இணையாது என்பது இதன் அர்த்தமாகும்.
    • யுக்ரேன் - ரஷ்யா இருநாடுகள் இன்று எடுத்த முடிவுகள், போர் தொடங்கியதற்கு பின்னான "மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" என துருக்கி தெரிவித்துள்ளது.

    களத்தில் என்ன நிகழ்ந்தது?

    • யுக்ரேனின் தெற்கு நகரமான மிக்கோலைவில் அரசு கட்டடம் ஒன்றில் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 22 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
    • தாக்குதலுக்கு உள்ளான கட்டடத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அந்நகர மேயர் விடாலி கிம், தாக்குதல் நடைபெற்றபோது தான் அக்கட்டடத்திற்குள் இல்லை எனவும், தான் அதிக நேரம் உறங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
    • கீயவின் வடமேற்கில் பல்வேறு நிலைகளில் ரஷ்யப்படைகள், யுக்ரேனிய படைகளால் எதிர்ப்பை சந்தித்துவருவதாக, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மற்ற செய்திகள்:

    • மார்ச் மாத தொடக்கத்தில் யுக்ரேன் – பெலாரூஸ் எல்லையில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ரஷ்ய பெரும்பணக்காரர் அப்ராமோவிச்சிற்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும், அவருடன் இரு யுக்ரேனிய பிரதிநிதிகளும் இதனால் பாதிக்கப்பட்டதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அப்ரமோவிச்சிற்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலில் உண்மையில்லை என, ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
    • இஸ்தான்புல்லில் யுக்ரேன் - ரஷ்யா இருநாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், ஐரோப்பாவில் பங்குச்சந்தைகள் ஏற்றம்கண்டுள்ளன.
    • யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி இன்று டென்மார்க் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். மேரியோபோலில் நடப்பவை (ரஷ்யப்படைகளின் தாக்குதல்) "மனிதத்திற்கு எதிரான குற்றம்" என அவர் தெரிவித்துள்ளார்.
    • யுக்ரேனில் உள்ள அணுமின் நிலையங்களை பாதுகாப்பு தொடர்பாக ஆராய, சர்வதேச அணு சக்தி முகமையின் இயக்குநர் யுக்ரேனுக்கு வருகைபுரிந்துள்ளார்.
  3. தீபிகா, அனுஷ்கா: பாலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் அதிக வருமானத்தை எதில் முதலீடு செய்கின்றனர்?

      • எழுதியவர், பராக் சோப்கர்
      • பதவி, முத்த பத்திரிக்கையாளர், பிபிசி ஹிந்திக்காக

    முதலீட்டுக்கான வாயிலாக இருப்பதுடன் ஸ்டார்ட் அப்களைத் தங்கள் பிம்பத்தை மேம்படுத்தும் ஒரு கருவியாகவும் நட்சத்திரங்கள் கருதத் தொடங்கியுள்ளனர். ரசிகர்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கை உயர்த்தக்கூடிய பொருட்களின் தயாரிப்புகளில் அவர்கள் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.

    நட்சத்திரங்கள், பொழுதுபோக்கு வணிகத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பான ஒப்பந்தமாக கருதுவதில்லை, பல்வேறு வகையான ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்வதன் மூலம் உறுதியான வருமானத்தை அவர்கள் பார்க்கிறார்கள்.

    ஒவ்வொரு வருடமும் நான்கைந்து படங்களில் வேலை செய்து சம்பாதிப்பதில் முதலிடத்தில் இருக்கும் அக்ஷய் குமார், சுமார் ஒரு டஜன் நிறுவனங்களை விளம்பரப்படுத்தினாலும், ஸ்டார்ட்அப் முதலீட்டிற்கு ஒரு ஃபிட்னஸ் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

    மேலும் பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் அதிக வருமானத்தை எதில் முதலீடு செய்கின்றனர்? என்பது குறித்து அறிய இங்கே சொடுக்குங்கள்:

  4. விரைவில் அண்ணாமலை பதவி காலியாகும் என நினைக்கிறேன்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி

    அண்ணாமலை முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என்பதை திரும்பத் திரும்ப நிரூபித்து வருகிறார் என, திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

    சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் துபாய் சென்றபோது கோடிக்கணக்கில் பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறியிருந்தார். அதற்கு திமுக சார்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அண்ணாமலையிடம் ரூ. 100 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறப்பட்டது.

    இந்நிலையில், டெல்லியில் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, "இங்கு இருந்து பணம் போயிருந்தது என்றால், மத்திய அரசிடம் தானே எல்லா அதிகாரமும் உள்ளது. தவறு நடந்தது என்றால் நீங்களே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கலாம். முதல்வர் வெளிநாடு செல்லாமல் தடுக்கும் அனைத்து அதிகாரமும் மத்திய அரசிடம் உள்ளதே.

    மத்தியில் உள்ள பாஜக தலைவர்கள் அண்ணாமலை மீது அதிருப்தியில் இருப்பதாக எனக்கு தகவல் வந்துள்ளது. அவர் பொறுப்பில்லாமல் பேசுகிறார். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே உள்ள சமூக உறவை இவர் கெடுத்து விடுவாரோ என்ற எண்ணத்தை இவரது செயல் ஏற்படுத்துவதாக மத்திய அரசில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள். எனவே, விரைவில் அண்ணாமலை பதவி காலியாகும் என நினைக்கிறேன். அவரை (இடத்தை விட்டு) காலி பண்ணுவதற்காகவே அங்குள்ளவர்கள் திட்டமிட்டு அவரை இப்படியெல்லாம் பேச வைக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை.

    அண்ணாமலை முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என்பதை திரும்பத் திரும்ப நிரூபித்து வருகிறார். நான் எழுப்பிய கேள்விகளில் எதற்கும் அவர் நேரடியாக பதில் தராமல் எதை, எதையோ பேசுகிறார்.

    விமான நிலையத்தில் முதல்வரின் மருமகன் அவரை வரவேற்றார் என்று பேசுகிறார். இதுவா அரசியல்? குடும்பம் என இருந்தால் அவர்கள் வெளிநாடுபோகக் கூடாதா?

    திமுகவில் அண்ணாதுரை சொன்னது போல, ஆக்கபூர்வ விமர்சனங்களை, குற்றச்சாட்டுகளை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்" என தெரிவித்தார்.

  5. இலங்கை பொருளாதார நெருக்கடி: “வாழ்வதா, சாவதா என்றே தெரியவில்லை" – திண்டாடும் மலையகத் தொழிலாளர்கள்

      • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
      • பதவி, பிபிசி தமிழ்

    இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியும் விலைவாசி உயர்வும் ஏற்கனவே பல பிரச்னைகளில் திண்டாடி வரும் மலையக மக்களை இன்னும் விளிம்புக்குத் தள்ளியிருக்கின்றன. இலங்கையின் மலையகப் பகுதியிலிருந்து பிபிசியின் நேரடி ரிப்போர்ட்.

    இலங்கையின் தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஏற்கெனவே ஊதியக் குறைவு, பணிச் சுமை, சரியான குடியிருப்புகள் இல்லாதது எனப் பல்வேறு பிரச்னைகளில் திணறிவரும் நிலையில், மேலும் ஒரு பேரிடியாக வந்திருக்கிறது தற்போதைய பொருளாதார நெருக்கடி. இந்தத் தொழிலாளர்கள் மிகக் குறைவான கூலி, அதீதமான விலைவாசி என்ற இரு துருவங்களுக்கு இடையில் போராடி வருகிறார்கள்.

  6. அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றம் செய்துவிட்டால் புனிதராகிவிடுவாரா? - தினகரன் கேள்வி

    தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றம் செய்துவிட்டால் அவர் புனிதராகிவிடுவார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நினைக்கிறாரா என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    திமுக ஆட்சி பொறுப்பேற்ற 10 மாதங்களில் இன்று இரண்டு அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன.

    அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தன் ட்விட்டர் பக்கத்தில், "முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற 10 மாதங்களில் செய்யப்பட்டுள்ள முதல் துறை மாற்றமாக இது உள்ளது.

    தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றம் செய்துவிட்டால் அவர் புனிதராகிவிடுவார் என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? 'எந்த அமைச்சர் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்' என்று ஆட்சிக்கு வந்தபோது அவர் கூறியது இதைத்தானா?

    சாதிய வன்மத்தோடு நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் ஒருவரை, சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக்குவதுதான் ஸ்டாலின் கண்டுபிடித்துள்ள திராவிட மாடல் போலும்?!

    ஒட்டுமொத்த இந்தியாவிலும் சமூக நீதியைக் காப்பற்றப் போவதாக புறப்பட்டிருக்கும் புதிய புரட்சி வீரர்களின் லட்சணம் இதுதானா?" என தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்துவரும் ராஜேந்திரன் என்பவரை, அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

  7. நீர் மேலாண்மையில் தேசிய அளவில் 3-வது இடம்: தமிழ்நாட்டுக்கு விருது

    நீர் மேலாண்மையில் தேசிய அளவில் தமிழ்நாடு 3-வது இடம் பெற்ற நிலையில், அவ்விருதினை நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா பெற்றுக்கொண்டார்.

    இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் சார்பில் தேர்வு செய்யப்பட்டு இன்று புதுடெல்லியில் விக்யான் பவனில் நடைபெற்ற விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர்கஜேந்திர சிங் ஷெகாவத்தும் விருதுகளை வழங்கினர்.

    முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உத்தர பிரதேச மாநிலத்திற்கு முதல் இடத்திற்கான விருதும், ராஜஸ்தான் மாநிலத்திற்கு இரண்டாவது இடத்திற்கான விருதும், தமிழ்நாட்டுக்கு 3வது இடத்திற்கான விருதும் வழங்கப்பட்டது.

    தமிழ்நாட்டுக்கான விருதை நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்சந்தீப் சக்சேனா மற்றும் நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தியும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் விருதைப் பெற்றுக்கொண்டனர்.

    சிறந்த கிராம பஞ்சாயத்து (தென்மண்டல அளவில்) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வெள்ளப்புதூர் ஊராட்சி இரண்டாம் இடத்திற்கான விருதும், சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரிவில் மதுரை மாநகராட்சி 3வது இடத்திற்கான விருதும், சிறந்த பள்ளிகள் பிரிவில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்திற்கான விருதும் பெற்றன. சிறந்த தொழில் பிரிவில் ஹுன்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், தமிழ்நாடு இரண்டாம் இடத்திற்கான விருதும், சிறந்த தன்னார்வத் தொண்டு நிறுவன பிரிவில் கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திரா இரண்டாம் இடத்திற்கான விருதும் பெற்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  8. வந்துகொண்டிருக்கும் செய்தி, ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் - போக்குவரத்து துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர் நியமனம்

    தமிழ்நாடு அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன் மற்றும் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோரின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன.

    அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற 10 மாதங்களில் செய்யப்பட்டுள்ள முதல் துறை மாற்றமாக இது உள்ளது.

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, கீயவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களுக்கு வெளியே தாக்குதலை முற்றிலும் குறைப்போம்: ரஷ்யா

    யுக்ரேன் தலைநகர் கீயவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களுக்கு வெளியே ரஷ்யப்படைகளின் ராணுவ நடவடிக்கையை "முற்றிலும் குறைப்போம்" என, ரஷ்யாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸாண்டர் ஃபோமின் தெரிவித்துள்ளதாக, டஸ் (Tass) செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியாகும்.

  10. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்ட மக்கள்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பாத்திமா நகர் மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி சிப்காட் பகுதியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு கலவரத்தைத் தொடர்ந்து அரசாணை பிறப்பித்து இழுத்து மூடப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக, ஆலையை திறக்கும் நடவடிக்கைகளில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு உட்பட பல்வேறு சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சமீபகாலமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்களும் கிராம மக்களும் மனு அளித்து வருகின்றனர். இந்த விவகாரம் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதன் தொடர்ச்சியாக, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சாமிநத்தம் தெற்கு சிலுக்கன்பட்டி, பாத்திமாநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த பாத்திமாநகர் பகுதி பொதுமக்கள் நேற்று இரவு திடீரென அப்பகுதியில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதையடுத்து, மக்கள் போராட்டத்தையடுத்து பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர், இன்று காலையும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  11. அரசு மருத்துவமனையில் தரமற்ற கட்டில் உடைந்து விபத்து - பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை தலையில் காயம்

    விருதுநகர் பரங்கிநாதபுரத்தை சேர்ந்தவர் முனியசாமி, இவரது மனைவி முத்துலட்சுமி. முத்துலட்சுமியின் இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த புதன்கிழமை விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    தாய் மற்றும் குழந்தை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று எதிர்பாராதவிதமாக அரசு மருத்துவமனையில் கட்டில் உடைந்து குழந்தை கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து, குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்ததில்குழந்தையின் தலையின் உள்ளே காயம் ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். நீண்ட நேரமாகியும் குழந்தையை கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, மருத்துவ நிர்வாகத்தைக் கண்டித்தும் தரமற்ற கட்டில் உள்ளிட்டவை மருத்துவமனையில் இருப்பதாகவும், குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

    இது குறித்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சங்குமணி கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக, 3 மருத்துவர்கள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், மருத்துவமனையில் பழுதான கட்டில்களுக்கு பதிலாக விரைவில் புதிய கட்டில்கள் மாற்றப்படும்.மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என மருத்துவப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்” என தெரிவித்தார்.

  12. வில் ஸ்மித்: ''நான் வெளிப்படையாக உங்களிடம் மன்னிப்பு கோர விரும்புகிறேன் கிறிஸ்''

  13. பேச்சுவார்த்தையின்போது எதையும் உண்ணவோ, அருந்தவோ வேண்டாம் - யுக்ரேன் அமைச்சர்

    ரஷ்யா மற்றும் யுக்ரேன் பிரதிநிதிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை இன்று இஸ்தான்புல்லில் தொடங்குவதற்கு முன்னதாக, பேச்சுவார்த்தையின்போது, "எதையும் உண்ண வேண்டாம், அருந்தவும் வேண்டாம். அங்குள்ள எதையும் தொடுவதையும் தவிருங்கள்" என, யுக்ரேன் வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா அறிவுறுத்தினார்.

    யுக்ரேனிய செய்தி சேனல் Ukrayina 24 ஊடகத்திடம் பேட்டி அளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    மார்ச் மாத தொடக்கத்தில் யுக்ரேன் – பெலாரூஸ் எல்லையில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ரஷ்ய பெரும்பணக்காரர் அப்ராமோவிச்சிற்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும், அவருடன் இரு யுக்ரேனிய பிரதிநிதிகளும் இதனால் பாதிக்கப்பட்டதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ரோமன் அப்ராமோவிச் நலமுடன் உள்ளார்.

    அப்ரமோவிச்சிற்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலில் உண்மையில்லை என, ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    மேலும், அப்ரமோவிச்சிற்கு ஏற்பட்ட அறிகுறிகளுக்கு அங்கு நிலவிய "சூழல்" தான் காரணம் எனவும், அவருக்கு விஷம் கொடுக்கப்படவில்லை எனவும், பெயர் தெரிவிக்க விரும்பாத அமெரிக்க அதிகாரியை மேற்கோளிட்டு, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், பேச்சுவார்த்தையில் எதனையும் உண்ண வேண்டாம் என்ற எச்சரிக்கையை யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் விடுத்துள்ளார்.

    இதனிடையே இன்று துருக்கியில் நடைபெறும் இருநாட்டு பேச்சுவார்த்தையிலும் அப்ராமோவிச் இடம்பெற்றது துருக்கி ஊடகங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.

  14. இலங்கையில் மருந்து தட்டுப்பாடு - எவ்வாறு உதவலாம் என ஆராய அதிகாரிகளுக்கு இந்தியா அறிவுறுத்தல்

    இலங்கையில் மருந்து தட்டுப்பாடு காரணமாக பேராதனை வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைகள் அனைத்தும் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளன. இதை கேள்வியுற்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், பேராதனை வைத்தியசாலைக்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்து ஆராயுமாறு இலங்கை உயர்ஸ்தானிகருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

    இலங்கை பொருளாதார நெருக்கடியின் உச்சத்திற்கு சென்றுள்ள நிலையில், நாட்டிலுள்ள அடிமட்ட மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இலங்கையில் 2020ம் ஆண்டு கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தின் வசம் கையிருப்பிலிருந்த அந்நிய செலாவணி பாரியளவில் வீழ்ச்சி அடைந்தது.

    இதையடுத்து, இலங்கை பொருளாதார ரீதியில் படிப்படியாக பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், தற்போது நெருக்கடியின் உச்சத்தை தொட்டுள்ளது.

    உணவுப் பொருட்கள் முதல் சமையல் எரிவாயு, எரிபொருள் வரை அனைத்து பொருட்களுக்கும் மிகப்பெரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது. பெட்ரோல், டீசல் விலையும் பெருமளவில் உயர்ந்துள்ளது.

    அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்துள்ள நிலையில், இலங்கைக்குக் கூடுதலாக சுமார் ரூ.7,500 கோடி கடனுதவி வழங்க இந்தியா கடந்த 17ஆம் தேதி முடிவெடுத்து கையெழுத்தானது.

    இதனிடையே, இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேசிய பின்னர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபத் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஸ்ணன் பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில், இலங்கையிலிருந்து மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு செல்வதை இந்தியா விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

  15. ரஷ்ய பெரும் பணக்காரருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக எழுந்த தகவலில் உண்மை இல்லை: ரஷ்ய தரப்பு விளக்கம்

    மார்ச் மாத தொடக்கத்தில் யுக்ரேன் – பெலாரூஸ் எல்லையில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ரஷ்ய பெரும்பணக்காரர் அப்ராமோவிச்சிற்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும், அவருடன் இரு யுக்ரேனிய பிரதிநிதிகளும் இதனால் பாதிக்கப்பட்டதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ரோமன் அப்ராமோவிச் நலமுடன் உள்ளார்.

    இந்நிலையில், அப்ரமோவிச்சிற்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலில் உண்மையில்லை என, ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் கதை "தகவல் போரின்" ஒரு பகுதி என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அப்ராமோவிச் துருக்கியில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் அதிகாரப்பூர்வ ரஷ்ய பிரதிநிதி அல்ல என ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அவர் உள்ளார்.

  16. மக்களை வெளியேற்ற மனிதநேய வழித்தடங்கள் இன்று திறக்கப்படலாம்: யுக்ரேன் நம்பிக்கை

    ரஷ்ய படைகளால் சுற்றிவளைக்கப்பட்ட நகரங்களிலிருந்து பொதுமக்களை இன்று வெளியேற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக, யுக்ரேன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.

    இதில், சுமார் 1,60,000 பேர் சிக்கியுள்ள, ரஷ்யப்படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட மேரியோபோலில் இருந்தும் மக்களை வெளியேற்ற வழித்தடம் திறக்கப்படும் என, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    இதனிடையே, சில வழித்தடங்களில் ரஷ்யப்படைகள் தாக்குதல் நிகழ்த்தலாம் என யுக்ரேன் எச்சரித்திருந்தது.

  17. தமிழ்நாட்டுக்கு போஸ்ட் மெட்ரிக், ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு - ரவிக்குமார் கேள்விக்கு கிடைத்த பதிலில் தகவல்

    தமிழ்நாட்டுக்கு போஸ்ட் மெட்ரிக், ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு - ரவிக்குமார் கேள்விக்கு கிடைத்த பதில் மூலம் தெரிய வந்துள்ளது.

    ​​கடந்த ஐந்தாண்டுகளில், ஆண்டு வாரியாக / மாநில வாரியாக, எஸ்சி மாணவர்களுக்கான ப்ரீ-மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் மற்றும் ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் திட்டங்களுக்கு செய்யப்பட்ட மொத்த செலவு என்ன என்றும் எஸ்சி மாணவர்களின் ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் திட்டத்துக்கு அரசு விதித்துள்ள புதிய வழிகாட்டுதல்களின் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன என்றும் நாடாளுமன்றத்தில் விழுப்புரம் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் அதற்கு இன்று அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில் தமிழ்நாட்டுக்கு போஸ்ட்மெட்ரிக் தொகை குறைக்கப்பட்டிருப்பதும், ப்ரிமெட் ரிக் ஸ்காலர்ஷிப்புகளுக்கான தொகை 3 ஆண்டுகளுக்கு முற்றாக நிறுத்தப்பட்டிருந்ததும், 2021 இல் தான் அது மீண்டும் வழங்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

    போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்காக தமிழ்நாட்டுக்கு 2016 - 17ஆம் ஆண்டுக்கு ரூ.743.24 கோடியும்; 2017-18 க்கு 434.48 கோடியும்; 2018-19க்கு ரூ.1407.38 கோடியும்; 2019-20 க்கு ரூ.925.84 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் 2020-21 நிதியாண்டில் ரூ.120.23 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

    ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் 2016-17 ஆம் ஆண்டில் 73 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2017, 2018 , 2019 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு சுத்தமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    2020- 21 ஆம் ஆண்டுக்கு 50 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப்புக்கு மிக மிக குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளத என்று ரவிக்குமாருக்கு மத்திய அமைச்சர் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளது.

  18. தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை இரு வழி பாக் ஜலசந்தி கடல் பகுதியை நீந்தி கடந்து சிறுவன் சாதனை

    தேனியை சேர்ந்த 14 வயது சிறுவன் தனுஷ்கோடி முதல் இலங்கை தலைமன்னார் வரை நீந்தி பின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக் ஜலசந்தி கடல் பகுதியை 19.45 மணிநேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார்.

    தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீதிராஜன். அவரது மனைவி அனுஷா. இவர்களது மகன் சினேகன் (வயது14). சிறுவன் சினேகன் 2019 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

    மேலும், கர்நாடக மாநிலம் தொன்னூரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

    இந்நிலையில், இந்தியா-இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில், சிறுவன் சினேகன் திங்கள்கிழமை மதியம் 2 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இருந்து கடலில் நீந்த தொடங்கி இரவு 09.55 மணிக்கு இலங்கை தலைமன்னாரை 7 மணி 55 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்தார்.

    பின்னர் அங்கிருந்து இரவு 10.30க்கு புறப்பட்டு காலை 9.45க்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை வந்தடைந்தார். சிறுவன் சினேகன் 19 மணிநேரம் 45 நிமிடங்களில் பாக் ஜலசந்தி கடலை இரு வழி நீந்தி கடந்து சாதனை படைத்தார்.

    கடலில் நீந்தி வந்த சிறுவன் சினேகனை மண்டபம் கடலோர காவல் படை கமாண்டர் நாகேந்திரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற சிறுவனை வாழ்த்தினார். இவர்களுக்கு உதவியாக இலங்கை கடற்படையின் ரோந்து படகு சர்வதேச எல்லை வரையிலும், இந்திய கடற்பகுதியில் மெரைன் போலீசரர் மற்றும் இந்நிய கடலோர காவல்படையின் ஹொவர் கிராஃட் கப்பலும் பாதுகாப்பினை வழங்கினர்.

  19. மின் இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள், அதில் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?

    இ-பைக் எனப்படும் மின்சார வாகனங்கள் சமீப காலமாக தீப்பற்றி எரிந்ததாக வெளிவரும் செய்திகள், அதன் பயன்பாட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்துகின்றன. வழக்கமாக இ பைக்குகளின் ஃப்ரேமில் பெரிய லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். அதை கவனமாகக் கையாளாவிட்டால் தீ ஆபத்தை உண்டாக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். லித்தியம் பேட்டரிகள் இ-பைக்குகளுக்கு ஏற்றதாக இருக்கும் வகையில் பல நன்மைகளைக் கொண்டுள்ளன.

  20. பேச்சுவார்த்தைகள் பலனை தர வேண்டும் - துருக்கி அதிபர்

    யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இருவரும் "மதிப்புக்குரிய நண்பர்கள்" என, துருக்கி அதிபர் ரெசப் தாயிப் எர்துவான் தெரிவித்துள்ளார். யுக்ரேன் - ரஷ்ய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாக பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    இந்த பேச்சுவார்த்தையில் ஏற்படும் முன்னேற்றம், இருநாட்டு தலைவர்களும் சந்திக்க வழிவகுக்க வேண்டும் எனவும், அந்த நிகழ்வும் துருக்கியிலேயே நடைபெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

    இரு தரப்பிற்கும் "சட்டபூர்வமான பிரச்னைகள் இருப்பதாகவும்" ஆனால், பேச்சுவார்த்தைகள் "பலனை தர வேண்டும்" என்ற நிலைக்கு நாம் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.