யுக்ரேனில் சமீபத்திய செய்தி என்ன?
இந்த நேரலைப் பக்கத்தில் இப்போதுதான் இணைகிறீர்களா? யுக்ரேனில் இன்று இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதை இங்கே வழங்குகிறோம்:
- கடந்த சில வாரங்களாக யுக்ரேன் - ரஷ்யா இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடக்காத நிலையில், இருநாட்டு பிரதிநிதிகளும் இன்று துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதற்காக இருநாட்டு பிரதிநிதிகளும் இஸ்தான்புல் வந்துள்ளனர். போர் நிறுத்தத்தையே தாங்கள் முக்கியமாக வலியுறுத்தவுள்ளதாக, யுக்ரேன் தெரிவித்துள்ளது. ஆனால், யுக்ரேன் மற்றும் ரஷ்யா இருநாடுகளும் ரஷ்யாவின் நோக்கங்கள் குறித்த சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளன.
- எண்ணெய் வர்த்தகத்திற்கான தடை உள்ளிட்ட ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை வலுப்படுத்துமாறு உலக நாடுகளை யுக்ரேன் அதிபர் வொலாடிமிர் ஸெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.
- இந்த மாத தொடக்கத்தில் யுக்ரேன் – பெலாரூஸ் எல்லையில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ரஷ்ய பெரும்பணக்காரர் அப்ராமோவிச்சிற்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவருடன் இரு யுக்ரேனிய பிரதிநிதிகளும் இதனால் பாதிக்கப்பட்டதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ரோமன் அப்ராமோவிச் நலமுடன் உள்ளார்.
- ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் "ஆட்சியில் தொடர்ந்து நீடித்திருக்கக்கூடாது" என்ற தன் சர்ச்சைக்குரிய கருத்தை "திரும்பப் பெற போவதில்லை" என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். "கொள்கை அளவிலான மாற்றத்தைவிட", தன்னுடைய "தார்மீக கோபத்தையே" தான் வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
- சுமி நகரத்தின் வடக்கு பகுதியில் உள்ள ட்ரோஸ்டியானெட்ஸ் பகுதியை மீண்டும் யுக்ரேன் கைப்பற்றியதாக, அமெரிக்க மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். கிழக்கு டான்பஸ் பிராந்தியத்தில் தங்கள் கவனத்தை திருப்பியிருப்பதால், தலைநகர் கீயவில் ரஷ்யப்படைகளின் முன்னேற்றம் தடைபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.