நன்றி நேயர்களே...
இன்றைய நேரலைப் பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. மீண்டும் புதிய நேரலை பக்கம் நாளை காலை தொடங்கும்.
இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
- இத்தாலி நாடாளுமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக பேசிய யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, “இந்த போரிலிருந்து மீள்வதற்கான விளிம்பில் நாங்கள் உள்ளோம்” என தெரிவித்தார்.
- யுக்ரேன் – ரஷ்யா போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என, போப் பிரான்சிஸிடம் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
- ரஷ்ய படைகளுடனான சண்டை தீவிரமடைந்துள்ளதால், “பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்” என, கீயவ் அருகே உள்ள போரிஸ்பில் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
- இந்த போர் தொடங்கியதிலிருந்து 15,000க்கும் அதிகமான ரஷ்யப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக, யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையை பிபிசியால் சரிபார்க்க இயலவில்லை.
- யுக்ரேனில் வேதியியல் மற்றும் உயிரி ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயாராகலாம் என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
- ரஷ்யப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள மேரியோபோலில், யுக்ரேன் அப்படைகளை “தொடர்ந்து எதிர்த்துவருவதால்”, ரஷ்யப்படைகளின் இயக்கம் “நிறுத்தப்பட்டுள்ளதாக” பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- அத்தியவாசிய பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், ஆறு இலங்கை தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர்.
- ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 74 நாட்களில் ஒருமுறை கூட அவரை தான் பார்க்கவில்லை என, ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவின் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கு, பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலமே வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி உத்தரவிட்டுள்ளது.