போப் ஆண்டவர் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் - யுக்ரேன் அதிபர் கோரிக்கை

யுக்ரேன் – ரஷ்யா போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என, போப் பிரான்சிஸிடம் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நன்றி நேயர்களே...

    இன்றைய நேரலைப் பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. மீண்டும் புதிய நேரலை பக்கம் நாளை காலை தொடங்கும்.

    இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

    • இத்தாலி நாடாளுமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக பேசிய யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, “இந்த போரிலிருந்து மீள்வதற்கான விளிம்பில் நாங்கள் உள்ளோம்” என தெரிவித்தார்.
    • யுக்ரேன் – ரஷ்யா போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என, போப் பிரான்சிஸிடம் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
    • ரஷ்ய படைகளுடனான சண்டை தீவிரமடைந்துள்ளதால், “பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்” என, கீயவ் அருகே உள்ள போரிஸ்பில் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
    • இந்த போர் தொடங்கியதிலிருந்து 15,000க்கும் அதிகமான ரஷ்யப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக, யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையை பிபிசியால் சரிபார்க்க இயலவில்லை.
    • யுக்ரேனில் வேதியியல் மற்றும் உயிரி ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயாராகலாம் என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
    • ரஷ்யப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள மேரியோபோலில், யுக்ரேன் அப்படைகளை “தொடர்ந்து எதிர்த்துவருவதால்”, ரஷ்யப்படைகளின் இயக்கம் “நிறுத்தப்பட்டுள்ளதாக” பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • அத்தியவாசிய பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், ஆறு இலங்கை தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர்.
    • ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 74 நாட்களில் ஒருமுறை கூட அவரை தான் பார்க்கவில்லை என, ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
    • இந்தியாவின் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கு, பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலமே வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
  2. யுக்ரேனில் சமீபத்திய செய்தி என்ன?

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, கிழக்கு கீயவில் கிராமம் ஒன்றில் நடந்துசெல்லும் யுக்ரேன் ராணுவத்தைச் சேர்ந்தவர்.

    இந்த நேரலை பக்கத்தில் இப்போதுதான் இணைந்தீர்களா? யுக்ரேனில் இன்று இதுவரை என்ன நடந்தது என்பதை இங்கே வழங்குகிறோம்.

    • இத்தாலி நாடாளுமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக பேசிய யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, “இந்த போரிலிருந்து மீள்வதற்கான விளிம்பில் நாங்கள் உள்ளோம்” என தெரிவித்தார்.
    • யுக்ரேன் – ரஷ்யா போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என, போப் பிரான்சிஸிடம் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
    • ரஷ்ய படைகளுடனான சண்டை தீவிரமடைந்துள்ளதால், “பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்” என, கீயவ் அருகே உள்ள போரிஸ்பில் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
    • இந்த போர் தொடங்கியதிலிருந்து 15,000க்கும் அதிகமான ரஷ்யப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக, யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையை பிபிசியால் சரிபார்க்க இயலவில்லை.
    • யுக்ரேனில் வேதியியல் மற்றும் உயிரி ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயாராகலாம் என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
    • ரஷ்யப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள மேரியோபோலில், யுக்ரேன் அப்படைகளை “தொடர்ந்து எதிர்த்துவருவதால்”, ரஷ்யப்படைகளின் இயக்கம் “நிறுத்தப்பட்டுள்ளதாக” பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  3. ரூ.45 கோடி மோசடி வழக்கு: சென்னை துறைமுகத்தின் உதவி கண்காணிப்பாளர் கைது

    பணம்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, பிரதிநிதித்துவப் படம்

    சென்னை துறைமுகத்தின் ரூ.45 கோடி மோசடி வழக்கில் சென்னை துறைமுக அறக்கட்டளையின் உதவி கண்காணிப்பாளர் ரகு பெர்னாட் இன்று சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    சென்னை துறைமுகத்தின் சார்பில் கோயம்பேடு இந்தியன் வங்கிக்கிளையில் நிரந்தர வைப்புக் கணக்கில் வைத்திருந்த ரூ.45 கோடி மோசடி செய்யப்பட்டதாக, கடந்த 2020 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகிறது.

    இந்த வழக்கில் வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் உட்பட 17 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட 23 பேருக்கு எதிராக மூன்று குற்றப் பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டன.

    விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சென்னை துறைமுக அறக்கட்டளையின் உதவி கண்காணிப்பாளர் ரகு பெர்னாட் கைது செய்யப்பட்டார்.

  4. உலக தண்ணீர் தினம்: சைக்கிளில் தண்ணீரை 4 கிமீ கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவி

    உலக தண்ணீர் தினம்

    உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சைக்கிளில் தண்ணீரை 4 கிலோமீட்டர் கொண்டு சென்று மாணவி ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    செங்கல்பட்டு வேதாச்சலம் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி ஜெய் மதிபாலா. இவருடைய பெற்றோர் பாலா மற்றும் ஜெயப்பிரதா. இவர் செங்கல்பட்டு அருகே உள்ள நத்தம் பகுதியை சேர்ந்தவர். பத்து வயதே நிரம்பிய ஜெய்மதி பாலாவிற்கு சிறுவயதிலிருந்தே தண்ணீரை சேமிக்க வேண்டும் என, பெற்றோர்கள் அறிவுரை கூறி வந்துள்ளனர்.

    இன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாணவி ஜெய் மதிபாலா தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் சைக்கிளில் தண்ணீரை கொண்டு வந்து பள்ளியில் இருந்த மரத்திற்கு தண்ணீர் ஊற்றினார்.

    காலையிலேயே செங்கல்பட்டு அடுத்த உள்ள புலிப்பாக்கம் பகுதியில் இருக்கும் கொளவாய் ஏரியிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் தண்ணீரைக் கொண்டுவந்து மரத்திற்கு நீரை ஊற்றினார்.தண்ணீரை பாதுகாக்க வேண்டும், தண்ணீரை வீணடிக்கக் கூடாது என்ற வாசகம் ஏந்திய பதாகைகளை சைக்கிளில் வரும்போது ஏந்தி வந்தார்.

    செங்கல்பட்டு நகர் காவல் நிலையம் அருகே மாணவி சைக்கிளில் வந்த பொழுது காவல்துறையினர் மாணவிக்கு மலர் கொடுத்து பாராட்டுக்களை தெரிவித்தனர். மாணவியின் இந்த செயலை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டினர்.

  5. மேகேதாட்டு: தமிழக பகுதிகளை ஆணையத் தலைவர் நேரில் பார்வையிட வேண்டும் – பி.ஆர். பாண்டியன்

    பி.ஆர்.பாண்டியன்

    பட மூலாதாரம், PR Pandian

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹர்த்தாலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தபின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

    “மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளது சட்டவிரோதமானது என ஆணையம் அறிவித்திட வேண்டும். இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் முறையிட வேண்டும். தமிழக பகுதிகளை ஆணையத் தலைவர் நேரில் பார்வையிட வேண்டும். ஆணைய கூட்டத்தை மாதந்தோறும் நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம்.

    பதிலளித்த ஆணைய தலைவர்,‘வரைவு திட்ட அறிக்கையை கர்நாடக அரசு ஜல்சக்தி துறை மூலம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பி வைத்தது. அதனை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து கருத்து கேட்டுள்ளோம்.

    தொடர்ந்து ஆணையக் கூட்டத்தில் அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கர்நாடகம் வலியுறுத்தி வருகிறது. தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்கள் அனுமதிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    ஆணையக் கூட்டத்தில் விவாதித்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அனைத்துமே ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் புதிய அணை கட்டுவதற்கு காவிரி ஆணையம் மத்திய அரசுக்கு தடையில்லா சான்று கொடுக்க முடியும். ஒரு மாநிலம் எதிர்த்தாலும்கூட ஆணையம் அனுமதிக்காது.

    எனவே, ஆணையத்தின் தடையில்லா சான்று இல்லாமல் மத்திய அரசு புதிய அணை கட்ட அனுமதி கொடுக்க முடியாது. தமிழக விவசாயிகள் கர்நாடக அரசு ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அது குறித்து எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. ஊடகங்களில் வந்த செய்திகளை தான் நாங்களும் பார்த்து தெரிந்து கொண்டிருக்கிறோம். எனவே ஊடகங்களில் வரும் செய்திகளை காவிரி மேலாண்மை ஆணையம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

    நான் விரைவில் காவிரி பாசனப் பகுதிகளை நேரில் பார்வையிட உள்ளேன். மாதம் ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும் என்கிற தேவை ஏற்படும் பட்சத்தில் கூட்டம் நடத்த ஆணையம் தயங்காது. தற்போது மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆணைய கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது’ என தெரிவித்தார்” என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

  6. நளினி ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் கேள்வி

    நளினி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, நளினி: கோப்புப்படம்

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியும் என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாகஉள்ள நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக, முந்தைய அதிமுக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தது.

    ஆனால், ஆளுநர் இதுதொடர்பாக முடிவெடுக்காததால், ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கின் விசாரணை, தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, நளினி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இதையடுத்து, “எந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் ஜாமீன் கோர முடியும்?” என நளினி தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    பின்னர், இந்த மனு மீதான விசாரணையை மார்ச் 24 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

  7. இலங்கையில் உணவு பஞ்சம்: நான்கு மாத கைக்குழந்தையுடன் தனுஷ்கோடி வந்த இலங்கை தமிழர்கள்

    இலங்கை பொருளாதார நெருக்கடி

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும்மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இதனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வர தொடங்கியுள்ள நிலையில், இன்று அதிகாலை நான்கு மாத கைக்குழந்தையுடன் ஆறு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை தமிழர்கள் இறுதிகட்ட போரின்போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் வந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர்.

    இதேபோல், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகள் உள்ளதால், இலங்கை தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வரக்கூடும் என, சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நேற்று இரவு மன்னார் மாவட்டம் பேச்சாலை கடற்கரையில் இருந்து மன்னாரை சேர்ந்த கஜேந்திரன், மேரிகிளாரி, நிசாத், கியூரி, எஸ்தர், மோசஸ் உள்ளிட்ட 6 பேர் நான்கு மாத கைக்குழந்தையுடன் பைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் தனுஷ்கோடி அடுத்துள்ள நான்காம் மணல்திட்டு பகுதியில் வந்து இறங்கினர்.

    அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், இலங்கை தமிழர்களை அழைத்து வர மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சொந்தமான ஹேவர்கிராப்ட் கப்பல் சென்றது. மணல் திட்டில் காலை முதல் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வந்த ஆறு இலங்கைத் தமிழர்களை மீட்டு இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் முகாமுக்கு அழைத்து வந்தனர்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியவாசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை ஏற்றம் மற்றும் மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், இந்த ஆறு இலங்கை தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்ததாக, பாதுகப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

    பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்குப் பின் அனுமதி இன்றி தமிழகத்துக்குள் நுழைந்ததால் ஆறு இலங்கை தமிழர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள மெரைன் போலீசார் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் இலங்கை தமிழர்கள் ஆஜர்படுத்த உள்ளனர்.

  8. "எனக்கு தனிப்பட்ட முறையில் சின்னம்மா மீது மதிப்பும் மரியாதையும் உண்டு" - ஓ.பன்னீர்செல்வம்

    ஓ.பன்னீர்செல்வம்
  9. தவறான விளம்பரங்கள்: சென்சோடைன் நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்

    சென்சோடைன்

    பட மூலாதாரம், THINKSTOCK

    படக்குறிப்பு, பிரதிநிதித்துவப் படம்

    பற்பசை தயாரிப்பு நிறுவனமான சென்சோடைன் நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

    உலகம் முழுவதிலும் உள்ள பல் மருத்துவர்களால் தங்கள் நிறுவனத்தின் பற்பசை பரிந்துரைக்கப்படுவதாகவும், சென்சோடைன் சென்சிடிவிட்டி பற்பசை உலகிலேயே சிறந்தது எனவும் தவறாக விளம்பரம் செய்ததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த விளம்பரங்களை நிறுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, தொலைக்காட்சி, யுடியூப்,முகநூல், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் இந்நிறுவனத்தின் விளம்பரங்களுக்கு எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்தது.

  10. ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை எவ்வளவு ஆபத்தானது?

  11. சீன விமான விபத்து: அறிவிப்புக்காக பதைபதைப்புடன் காத்திருக்கும் பயணிகளின் உறவினர்கள்

    சீன விமான விபத்து

    பட மூலாதாரம், REUTERS

    132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MU5735 விமானம் குவாங்சி மாகாணத்தில் நேற்று விபத்துக்குள்ளான நிலையில், 24 மணிநேரத்தைக் கடந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விமானத்தில் பயணித்தோரின் உறவினர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

  12. யுக்ரேன் – ரஷ்யா போர்: போப் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் – யுக்ரேன் அதிபர்

    வொலோடிமிர் ஸெலென்ஸ்கி

    பட மூலாதாரம், EPA

    யுக்ரேன் – ரஷ்யா போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என, போப் பிரான்சிஸிடம் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

    இந்த உரையாடல் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸெலென்ஸ்கி, யுக்ரேனில் நிலவும் “கடினமான மனிதநேய சூழல்” மற்றும் பாதுகாப்பு வழித்தடங்கள் ரஷ்யப்படையினரால் தடுக்கப்படுவது குறித்து போப் பிரான்சிஸிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், “இருநாட்டு போரை நிறுத்துவது தொடர்பாக மத்தியஸ்தம் செய்ய வேண்டும்” என அவர் போப் பிரான்சிஸை வலியுறுத்தியுள்ளார்.

    வருங்காலத்தில் யுக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான உயர்மட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் இடமாக ஜெருசலேம் இருக்கும் என, ஸெலென்ஸ்கி திங்கள்கிழமை தெரிவித்திருந்தார்.

  13. கக்கூஸ் பட ஒளிப்பதிவாளர் இப்போது என்ன செய்கிறார் ?

      • எழுதியவர், ஆ. லட்சுமி காந்த் பாரதி
      • பதவி, பிபிசி தமிழ்
    பழனிக்குமார்

    பட மூலாதாரம், PALANI KUMAR/FACEBOOK

    பேசப்படாத சமூகங்களை பேசுவது வேறு. பேசப்படாத சமூகங்களையே பேச வைப்பது வேறு. சென்னையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பழனிக்குமார் இரண்டாவது வகைப் பணியை மேற்கொண்டு வருகிறார். 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் கேமரா கலைஞரான இவரது சொந்த ஆவண புகைப்படங்களும், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பிரச்னைகளை வெளிக்கொண்டு வருவதில் பங்காற்றுகின்றன. இவரது பின்னணி என்ன? இதோ அவரோடு ஒரு நேர்க்காணல்...

    ஆவண புகைப்பட கலைஞர் ஆனது எப்படி ?

    ஆரம்பத்தில் மக்கள் சார்ந்த வாழ்வியல் மற்றும் அவர்கள் சந்திக்கக்கூடிய பிரச்னைகளை புகைப்படம் எடுப்பது உண்டு. அதன் தொடர்ச்சியாக 'கக்கூஸ்' என்ற ஆவணப்படத்தில் ஒளிப்பதிவாளராக இருந்தேன். பிறகு தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய முக்கிய பிரச்னை மற்றும் போராட்டங்கள் உள்ளிட்டவைகளை ஆவண புகைப்படம் செய்தேன். தற்போது வரை அதை தொடர்கிறேன்.

  14. சீன விமான விபத்து: “என் மகன் சீக்கிரம் வந்துவிடுவான்” – காத்திருக்கும் தாய்

    சீனா ஈஸ்டர்ன் விமானம் போயிங் 737 எம்யூ5735 விபத்து

    பட மூலாதாரம், REUTERS

    படக்குறிப்பு, விமான விபத்து நிகந்த இடத்தில் மீட்புக்குழுவினர்.

    132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின்MU5735 விமானம் குவாங்சி மாகாணத்தில் நேற்று விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்து சீனாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான முழு விசாரணைக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

    இதில் உயிரிழந்தோர் குறித்த விவரம் இன்னும் தெளிவாக தெரியவரவில்லை. இந்த விபத்தில் யாரும் உயிர்பிழைத்திருக்க மாட்டார்கள் என அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், அந்த விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், குவாங்சு விமான நிலையத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர்.

    இந்த விமானத்தில் பயணித்தவர்கள் யார், விமானக்குழுவினர் யார் என அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களுள், 6 பேர் கொண்ட குழு, இறுதிச்சடங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக பயணித்ததாக தெரியவந்துள்ளது.

    அக்குழுவில் தன்னுடைய சகோதரி மற்றும் நெருங்கிய நண்பர்களும் இருந்ததாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    “நான் மிகுந்த வேதனையில் உள்ளேன்” என, அவர் Jiemian Newsஊடகத்திடம் தெரிவித்தார்.

    அந்த விமானத்தில் பயணித்த டான் என்பவரின் அலுவலக சகா ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறுகையில், டான் குடும்பத்தினரிடம் தான் இந்த செய்தியை தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

    “அவர்கள் அழுதுகொண்டிருக்கின்றனர். இதனை அவருடைய தாய் நம்பவில்லை. தன் மகன் சீக்கிரம் வந்துவிடுவார் என அவர் நம்பிக்கொண்டிருக்கிறார். டானுக்கு 29 வயதுதான் ஆகிறது” என்றார்.

    விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விமானத்தில் பயணித்தோரின் குடுபத்தினரை அழைத்துச் செல்லும் பணியில் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  15. சாலை போடாமலே சாலை போட்டதாகக் கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்ததாக புகார்

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்டதுளசாபுரம் ஊராட்சியில் இருந்து கண்டிவாக்கம் கிராமத்தில் காலனி பகுதியில் இருந்து மயானம் வரையிலான 3 கிலோமீட்டர் சாலை மிகவும் மோசமாக குண்டும்குழியுமாக உள்ளது

    தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு இந்த சாலையை செப்பனிட்டு, தார்சாலையாக மாற்ற ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தச் சாலை பணிக்கான ஒப்பந்த பணி கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்றது. அதன் அடிப்படையில் ஒப்பந்தம் எடுத்தவருக்கு பணி செய்வதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    சாலையை முழுமையாக போடாமலே போட்டதாக போலி ஆவணம் தயார் செய்து கையெழுத்திட்டு பணி செய்யாமலே பணி நிறைவடைந்தது எனக்கூறி, ரூ.13 லட்சம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

    ஆனால், கண்டிவாக்கம் கிராமத்தில் காலனி பகுதியில் இருந்து மயானம் வரையிலான 3கிலோ மீட்டர் சாலை இன்று வரை செப்பனிடப்படாமலே உள்ளது.

    மேலும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே சாலை பணி முழுவதும் நிறைவடைந்து விட்டதாக திட்ட அறிக்கை வைத்திருக்கிறார்கள் மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடித்தவர்களை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    இதுதொடர்பாக, ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பவானியை தொடர்புகொண்டு கேட்டபோது, “சாலை போடாமலே திட்ட அறிக்கை வைத்தது குறித்து சம்பந்தப்பட்ட பொறியாளரிடமும் ஒப்பந்ததாரரிடமும் உரிய விசாரணை மேற்கொண்டு அதன் அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்க உள்ளோம்” என்றார்.

  16. மக்களவை எம்.பி பதவியிலிருந்து அகிலேஷ் யாதவ் ராஜினாமா

    அகிலேஷ் யாதவ்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்துள்ளதாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், சமீபத்தில் நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கர்ஹால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இதையடுத்து, மக்களவை எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். அதற்கான ராஜினாமா கடிதத்தை அகிலேஷ் யாதவ் இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கினார்.

    மக்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருப்பதன் மூலம், அகிலேஷ் யாதவ் தேசிய அரசியலில் இருந்து விலகி, மாநில அரசியலில் தீவிரமாக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  17. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை சுற்றி குவாரிகள் உரிமத்தை ரத்து செய்ய வன உயிரின காப்பாளர் கடிதம்

      • எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
      • பதவி, பிபிசி தமிழுக்காக
    வேடந்தாங்கல்

    காஞ்சிபுரம்--செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல், கரிக்கிலி பறவைகள் சரணாலயங்களைச் சுற்றிய கல் குவாரிகள் உரிமத்தை ரத்து செய்ய வன உயிரின காப்பாளர் எழுதிய கடிதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வனவிலங்கு உயிரியலாளர்கள் கருதுகின்றனர்.

    இக்கடிதத்தை அடிப்படையாகக்கொண்டு கனிம வளத் துறையினர் சரணாலயத்தை சுற்றி 15 கிலோமீட்டர் வட்டத்திற்கு உள்ளே இருக்கக்கூடிய கல் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய ஆயத்தமாகி வருகிறார்கள்.

    அங்கு இயங்கும் கல் குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய அறிவுறுத்தி சென்னை வன உயிரின கோட்டத்தின் வன உயிரின காப்பாளர் பிரசாந்த் காஞ்சிபுரம் கனிம வளத்துறை துணை இயக்குனர் லட்சுமிபிரியாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

  18. ரஷ்ய டாங்கிகளின் உற்பத்தி நிறுத்தம் – யுக்ரேன் ராணுவம்

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேனிய படைகளால் அழிக்கப்பட்ட ரஷ்ய டாங்கு.

    ரஷ்ய பிராந்தியமான செலியாபின்ஸ்க்கில், ரஷ்யாவுக்கு ராணுவ டாங்கிகளை உற்பத்தி செய்யும், பழுதுபார்க்கும் ஆலை ஒன்று, இறக்குமதி செய்யப்படும் பாகங்களின் பற்றாக்குறை காரணமாக உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக, யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, யுக்ரேன் ராணுவம் தன் முகநூல் பதிவில், ரஷ்ய உற்பத்தி நிறுவனமான உரல்வகோன்ஸவோட், “இறக்குமதி செய்யப்படும் பாகங்களின் பற்றாக்குறை காரணமாக” உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

    ரஷ்யாவுக்கு டாங்கிகளை உற்பத்தி செய்யும் ஒரே ஆலை இது என, யுக்ரேன் ராணுவ தகவல் மற்றும் ஆலோசனை நிறுவனமான ‘டிஃபென்ஸ் எக்ஸ்பிரஸ்’ தெரிவித்துள்ளது.

    மேலும், அந்த ஆலை உற்பத்திக்காக மேற்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாகங்களையே தொடர்ந்து பயன்படுத்துவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆலை உற்பத்தியை நிறுத்தியது தொடர்பாக, ரஷ்ய ஊடகங்களில் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. மேலும், இந்த தகவலை பிபிசியால் உறுதிசெய்ய முடியவில்லை.

  19. மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு இனி பொது நுழைவுத்தேர்வு - என்ன விளைவு?

    பொது நுழைவுத்தேர்வு

    பட மூலாதாரம், GETTY IMAGES

    இந்தியாவின் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கு, பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலமே வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

  20. யுக்ரேனில் சமீபத்திய செய்தி என்ன?

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, மேரியோபோலில் ஷெல் தாக்குதலுக்கு உள்ளான தொழில் வளாகம்.

    இந்த நேரலை பக்கத்தில் இப்போதுதான் இணைந்தீர்களா? யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் 27வது நாளான இன்று யுக்ரேனில் என்ன நடக்கிறது என்பதை இங்கு வழங்குகிறோம்.

    • யுக்ரேனில் வேதியியல் மற்றும் உயிரி ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயாராகலாம் என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
    • யுக்ரேனின் எதிர்ப்பால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் “தப்பிக்க முடியாத கடுமையான சூழலில்” சிக்கியிருப்பதாகவும், இதனால் அவர் மேலும் பல கடுமையான சூழ்ச்சிகளை பிரயோகிக்க வாய்ப்பிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்தார்.
    • ரஷ்யப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள மேரியோபோலில், யுக்ரேன் அப்படைகளை “தொடர்ந்து எதிர்த்துவருவதால்”, ரஷ்யப்படைகளின் இயக்கம் “நிறுத்தப்பட்டுள்ளதாக” பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • யுக்ரேனில் சண்டை நடைபெற்று வரும் பகுதிகளிலிருந்து மேலும் 8,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக யுக்ரேன் திங்கள்கிழமை தெரிவித்தது. அவர்களுள் சுமார் 3,000 பேர் மேரியோபோல் நகரத்தைச் சேர்ந்தவர்கள் என, யுக்ரேன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்தார்.
    • நேரடியான பேச்சுவார்த்தைக்காக ரஷ்ய அதிபர் புதினை மீண்டும் ஒருமுறை யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அழைத்துள்ளார். இருநாட்டு அதிபர்களும் சந்திக்காமல் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பது சாத்தியமில்லாதது என, யுக்ரேன் அதிபர் தெரிவித்துள்ளார்.
    • கடந்த 24 மணிநேரத்தில் “யுக்ரேன் வான் தளத்தில் ரஷ்யப்படைகளின் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக” யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.