You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

போப் ஆண்டவர் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் - யுக்ரேன் அதிபர் கோரிக்கை

யுக்ரேன் – ரஷ்யா போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என, போப் பிரான்சிஸிடம் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. இலங்கை பொருளாதார நெருக்கடி: தேநீர் விலை 100 ரூபாய்; கோபமடைந்த மக்கள்

  2. ரஷ்யாவிற்கு தகுந்த பதிலளிப்பதில் இந்தியா தடுமாறுகிறது: ஜோ பைடன்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பில், 'குவாட்' உறுப்பு நாடுகளில் ரஷ்யாவிற்கு தகுந்த பதில் அளிப்பதில் இந்தியா தடுமாற்றத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ரஷ்ய நிறுவனங்களுக்கு எதிராக தடை விதித்துள்ளன. ஆனால், இந்தியா தடை விதிக்கவில்லை. மேலும், ஐ.நா சபையில் ரஷ்யாவை கண்டிக்கும் தீர்மானம் மீது மூன்றுமுறையும் வாக்களிக்கவில்லை.

    யுக்ரேனில் அதிகரிக்கும் பதற்றமான சூழல் "மிகவும் கவலையை அளிக்கிறது" என இந்தியா தெரிவித்து உள்ளது. இருநாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும் எனவும் கூறியுள்ளது.

    மேலும் மற்ற உறுப்பு நாடுகளை பாராட்டிய ஜோ பைடன், "ரஷ்யாவிற்கு பதிலளிக்கும் வகையில் நேட்டோ மற்றும் பசிபிக் முழுவதும் ஒன்றிணைந்துள்ளதாக" குறிப்பிட்டார்.

    "உறுப்பு நாடுகளில் இந்தியா மட்டுமே தடுமாற்றத்துடன் இருக்கிறது. புதினுக்கு எதிரான தங்களது முடிவில் ஜப்பான் உறுதியாக உள்ளது. அதேபோன்று, ஆஸ்திரேலியாவும் உறுதியாக உள்ளது" என அவர் தெரிவித்தார்.

    இந்தியா, ரஷ்யா மற்றும் மேற்கு நாடுகளுடன் உறவுகளை சமநிலைப்படுத்த முயற்சிப்பதால் இந்தியா கயிற்றின் மேல் நடக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இந்தியாவுக்கு அதிகளவில் ஆயுதங்களை வழங்கும் நாடாக ரஷ்யா தொடர்வது ஒரு காரணம்.

    மேலும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய்யை பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும், மேலும் ரஷ்ய நிறுவனம் ஒன்றிடம் இருந்து மூன்று மில்லியன் பீப்பாய் அளவு கச்சா எண்ணெய் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

  3. யுக்ரேனில் குண்டுவீச்சால் சேதமடைந்த கட்டடங்கள்: இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரம்

    யுக்ரேனின் பல்வேறு முக்கிய நகரங்களில் குண்டுவீச்சு தாக்குதலால் சேதமடைந்த கட்டடங்களில் தீயை அணைத்தல் மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணிகளில் மீட்புக்குழுவினர் விரைவாக ஈடுபட்டு உள்ளதாக, யுக்ரேன் அவசர சேவை பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

    தலைநகர் கீயவ் மற்றும் கிழக்கு யுக்ரேனில் உள்ள கார்கீவின் ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணிகள் மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும், கீயவ், வடகிழக்கில் அமைந்துள்ள ஸ்லோபிட்ஸ்கி, கார்கீவில் உள்ள தொழில் மாவட்டங்களில் ஷெல் தாக்குதலால் சேதமடைந்த அடுக்குமாடி கட்டடங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் மற்ற கட்டடங்களில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் அவசர சேவை பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் வெடிக்காத குண்டுகளை அகற்றும் பணியில் பைரோடெக்னிக் குழுவினரும் தொடர்ந்து ஈடுபட்டுவருவதாக, யுக்ரேன் அவசர சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

  4. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இதுவரை அ.தா. பாலசுப்ரமணியன் மற்றும் ஆ. லட்சுமி காந்த் பாரதி வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

  5. ரஷ்யப் படைகளிடம் 3 நாள்களுக்குத் தேவையான வெடி பொருள்கள், குண்டுகளே உள்ளன - யுக்ரேன்

    தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யப் படைகளிடம் 3 நாள்களுக்குத் தேவையான கணைகளே (வெடிகுண்டுகள், வெடிபொருள்கள் போன்றவை) இருப்பில் இருப்பதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக தனது தினசரி அறிக்கையில் தெரிவித்த யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம், ரஷ்யப் படைகளிடம் உள்ள கணைகள், உணவு இருப்பு மூன்று நாளைக்கு மேல் தாங்காது என்று குறிப்பிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிற விஷயங்கள்:

    • குவிக்கப்பட்டு வரும் ரஷ்யப் படைகளின் தேவையை நிறைவு செய்ய அவர்களால் முடியவில்லை. மூன்று நாள்களுக்குத் தேவையான எரிபொருள்களே அவர்களிடம் உள்ளன. மீண்டும் அவற்றை அங்கே சப்ளை செய்யும் பணியை டேங்க் டிரக்குகளே மேற்கொள்கின்றன.
    • கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவின் 9 வான் இலக்குகளை யுக்ரேன் தாக்கியுள்ளது. இதில் ஒரு விமானம், 6 ஆளில்லா விமானம், 2 ஹெலிகாப்டர்கள் அடக்கம்.
    • மத்திய யுக்ரேனில் உள்ள ஒக்டிர்க்கா என்ற சிறு நகரில், 300 ரஷ்யப் படையினர் சண்டையை நடத்த மறுத்து, சண்டைப் பகுதியில் இருந்து வெளியேறினர்.
    • 13 தாக்குதல்கள்களை முறியடித்து யுக்ரேன் படையினர் தற்காத்துக்கொண்டன. 14 டாங்கிகளையும், 8 தரைப்படை வாகனங்களையும், இரண்டு பன்முகப் பயன்பாட்டு வண்டிகளையும், மூன்று எறிகணை அமைப்புகளையும், 4 பிற வாகனங்களையும் அவை அழித்தன.

    இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

  6. விருதுநகரில் இளம்பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டியதாக 8 பேர் கைது

    விருதுநகரில் இளம்பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாக பள்ளி மாணவர்கள் 4 பேர் உள்பட 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.

    விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (27). இவரும் தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 22 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். அந்தபெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ஹரிஹரன் பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இதை தனது செல்போனில் வீடியோ எடுத்து, தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

    அதைத்தொடர்ந்து, ஹரிஹரனின் நண்பர்களான அரிசி ஆலை உரிமையாளர் மகன் ஜூனைத் அகமது (27), டிரைவர் பிரவீன் (21), மற்றும் 9ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேரும் இளம்பெண்ணிடம் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் எனக் கூறி பல முறை பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண், இதுகுறித்து தனக்கு தெரிந்த மாடசாமி (37) என்பவரிடம் கூறியபோது, அந்த வீடியோவை அவர் தனது செல்போனுக்கு பார்வர்டு செய்துகொண்டு, அவரும் மிரட்டி பாலியல் வல்லுறவு செய்துள்ளார்.

    தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், இதுகுறித்து பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து பள்ளி மாணவர்கள் 4 பேர் மற்றும் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது ஆகியோரை நேற்று இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  7. ரஷ்ய படைவீரர்களால் யுக்ரேன் பத்திரிகையாளர்கள் கைது

    ரஷ்ய படைவீரர்கள் யுக்ரேனில் உள்ள ஜபோரிஜ்ஜியா நகரின் உள்ளூர் பத்திரிகையாளர்களை கைது செய்து குறிப்பிட்ட பத்திரிக்கையின் இணையதளத்தை முடக்கியதாக ஆஸ்ட்ரோ செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

    ஆஸ்ட்ரோ வெளியிட்டுள்ள செய்தியில், மெலிடோபோல்ஸ்கி விடோமோஸ்டி செய்தித்தாளின் பல பத்திரிகையாளர்கள் ஆயுதம் ஏந்திய நபர்களால் கைது செய்யப்பட்டு தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    "மெலிடோபோல்ஸ்கி விடோமோஸ்டி செய்தித்தாள் பத்திரிக்கையாளர்களான ஓல்ஹா ஓல்கோவ்ஸ்கா மற்றும் லியுபோவ் சாய்கா, வெளியீட்டாளர் மைக்கைலோ குமோக் மற்றும் செய்தி திருத்த ஆசிரியர் யெவ்ஹெனியா போரியன் ஆகியோரின் வீடுகளுக்குள் ஆயுதம் ஏந்தியவர்கள் நுழைந்தனர்.

    ஆயுதம் ஏந்தி வந்த நபர்கள் அவர்களை கைது செய்து தெரியாத இடத்திற்கு கொண்டு சென்றனர்" என்று அந்த செய்தித்தாளின் மற்ற பத்திரிகையாளர்களை மேற்கோள் காட்டி ஆஸ்ட்ரோ இணையதளம் கூறியுள்ளது.

    இது சம்பந்தமாக, மெலிடோபோல்ஸ்கி விடோமோஸ்டிக்கு சொந்தமான எம்.வி(MV) மீடியா பிரதிநிதிகள், யுக்ரேனிய தலைமை மற்றும் சர்வதேச சமூகம் தங்கள் சக ஊழியர்களை விடுவிக்க உதவ வேண்டும் என்று கோரியுள்ளனர்.

  8. பெட்ரோல் டீசல் விலை 80 காசு உயர்வு

    இந்தியாவில் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 80 காசுகள் உயர்ந்துள்ளது. இதேபோல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என்று பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்த காரணத்தால் உலக சந்தையில் பெட்ரோலிய விலை உயர்ந்துவரும் நிலையில், சமீபத்தில் முடிவடைந்த ஐந்து மாநிலத் தேர்தல்களை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படவில்லை என்று பரவலான விமர்சனங்கள் இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

  9. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம் நேற்றைய நேரலை பக்கத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்

    யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குவது அ.தா. பாலசுப்ரமணியன் மற்றும் ஆ. லட்சுமி காந்த் பாரதி.

    உங்கள் பகுதியின் செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின்மூலம் தகவல் அளியுங்கள்

    இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் சுருக்கம் இங்கே.

    • மேரியோபோல் நகரத்தில் மோசமான சூழ்நிலை தொடர்ந்து வருகிறது. தீவிரமான குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு மத்தியில், மின்சாரம், உணவு, தண்ணீர் இன்றி 3,00,000 பேர் சிக்கியுள்ளனர். மேலும், 90 சதவீத கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
    • கடந்த வாரம் பிரிட்டன் அமைச்சர்களுக்கு வந்த வதந்தி தொலைபேசி அழைப்புகளுக்குப் பின் ரஷ்ய அதிபர் மாளிகை இருப்பதாக நம்பப்படுவதாக, பிரிட்டன் பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.
    • யுக்ரேன் தலைநகர் கீயவின் பொடில்ஸ்கி மாவட்டத்தில் ஷாப்பிங் மையம் மற்றும் சில வீடுகள் மீது ஷெல் தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்ததாக நேற்று தகவல் வெளியாகியுள்ளது.
    • கீயவ் நகரில் திங்கட்கிழமை உள்ளூர் நேரம் 20:00முதல் புதன்கிழமை 07:00 மணிவரை ஊரடங்கு உத்தரவை அந்நகர மேயர் அறிவித்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது.