You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

யுக்ரேன் அதிபர் ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு சரணடையுமாறு அழைப்பு

"ரஷ்ய படைவீரர்கள் உயிர் வாழ விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். மேலும், சரணடைபவர்கள், கண்ணியமாக நடத்தப்படுவீர்கள்,” என்று கூறியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

க. சுபகுணம்

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி, கர்நாடகா ஹிஜாப் வழக்கில் கல்வித்துறை தடை விதித்தது செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

    கர்நாடகா ஹிஜாப் வழக்கில் கல்வித்துறை தடை விதித்து வெளியிட்டுள்ள அரசாணை செல்லும் என்று அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    இது தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரீத்து ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா எஸ். தீக்ஷித், ஜே.எம். காஸி அடங்கிய அமர்வு விசாரித்து வழங்கிய தீர்ப்பில், "நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், அரசு தரப்பு பதில்கள் போன்றவற்றின் அடிப்படையில் மூன்று கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. அதற்கான விடையை இந்த தீர்ப்பின் மூலம் வழங்குகிறோம்," என்று கூறினர்.

    முதலாவது கேள்வியாக இஸ்லாத்தின் கீழ் ஹிஜாப் அணிவது அவசியமான மத நடைமுறையா?

    இரண்டாவது கேள்வியாக, கருத்துச் சுதந்திரம் தனி உரிமைக்கான உரிமையா?

    மூன்றாவது கேள்வியாக பிப்ரவரி 5ஆம் தேதியிட்ட கர்நாடகா கல்வித்துறை அரசாணை, மனபூர்வமற்ற முறையிலும் தன்னிச்சையாகவும் வெளியிடப்பட்டதா? என நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டிருந்தன.

    அதற்கான எங்களின் விடை, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் கீழ் அத்தியாவசியமான மத நடைமுறையின் ஒரு பகுதியாக இல்லை.

    பள்ளி சீருடையை பரிந்துரைப்பது என்பது ஒரு நியாயமான கட்டுப்பாடு மட்டுமே, அதை மாணவர்கள் எதிர்க்க முடியாது.

    இந்த விவகாரத்தில் அரசாணை வெளியிட மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

  2. யுக்ரேன் Vs ரஷ்யா: 20ஆம் நாளை எட்டிய போர் - இதுவரை நடந்தது என்ன?

    • யுக்ரேன் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய படையெடுப்பு இன்று 20ஆம் நாளை எட்டியிருக்கிறது.
    • இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் தொடர்பாகவும் பிரச்னையை முடிப்பது தொடர்பாகவும் விவாதிக்க இன்று ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
    • இதற்கு மத்தியில் யுக்ரேனிய தலைநகர் கீயவை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சிகள் தொடர்கின்றன. இதுவரை அங்கு என்ன நடந்தது என்பதை சுருக்கமாக தொகுத்து வழங்குகிறோம்.
    • யுக்ரேனில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற ஏதுவாக ரஷ்ய ராணுவ தாக்குதல் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
    • யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூற்றுப்படி, ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையிலான ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை துருக்கியில் செவ்வாய்க்கிழமை தொடரும்.
    • யுக்ரேனை தாக்க ரஷ்யாவுக்கு சீனா உதவினால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. சீனாவிடம் ஆயுதங்களை வழங்க ரஷ்யா கோரியதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சில அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை ரஷ்யாவும் சீனாவும் மறுத்துள்ளன.
    • ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் தொடர்புடைய மேலும் 100 பேர் மீது பிரிட்டன் பொருளாதார தடைகளை விதிக்க உள்ளது.
    • யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு, நாடு முழுவதும் பரவலாக நடந்த தாக்குதலின் பாதிப்பை காட்டும் படங்கள் வெளியாகி உள்ளன.
    • பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய தாக்குதல் தொடங்கியதில் இருந்து 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் யுக்ரேனில் இருந்து தப்பித்து அண்டை நாடுகளில் அகதியாக தஞ்சம் அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
    • போரின் தொடக்கத்தில் இருந்து 1.75 மில்லியன் மக்கள் யுக்ரேனில் இருந்து போலாந்துக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டின் எல்லைக் காவல் அமைப்பு திங்கள்கிழமை கூறியது.
    • யுக்ரேனின் சமீபத்திய தாக்குதல் நகரான மேரியோபோலில் சிக்கியிருந்த மக்களை ஏற்றிச் சென்ற வாகனத் தொடரணி ஒன்று வெளியேறிவிட்டதாக யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வாகனத் தொடரணியில் 160 க்கும் மேற்பட்ட மக்கள் செல்வதாக கூறப்பட்டுள்ளது.
    • 33 ரஷ்ய கோடீஸ்வர தொழிலதிபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது ஆஸ்திரேலியா புதிய தடைகளை விதித்துள்ளது. இவர்களில் பிரபல தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிச் பெயரும் உள்ளது.
  3. ஸெலென்ஸ்கி வெளியிட்ட புதிய காணொளி: குழப்பத்தில் ரஷ்ய துருப்புக்கள்

    ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நான்கு சுற்று நிறைவடைந்த நிலையில், இன்று ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளின் பிரதிநிதிகளும் ஆயத்தமாகி வருகின்றனர்.

    இந்த பேச்சுவார்த்தை துருக்கியில் செவ்வாய்கிழமை தொடரும் என்று யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

    ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், பேச்சுவார்த்தை "நன்றாக" நடந்து வருவதாக கூறியுள்ளார்.

    லூஹான்ஸ்க் மற்றும் கீயவ் பகுதிகளில் இருந்து 3,806 பேர் தப்பிச் செல்ல யுக்ரேனிய படைகளால் உதவ முடிந்தது. முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரான மேரியுபோலை அடைய முடியாமல் 100 டன் சரக்குகளின் வாகன தொடரணி பெர்டியன்ஸ்கில் இன்னும் சிக்கியிருப்பதாக அவர் காணொளியில் கூறியுள்ளார்.

    ரஷ்ய துருப்புக்கள் "குழப்பத்தில் உள்ளது" மற்றும் "இதுபோன்ற எதிர்ப்பை யுக்ரேனில் அவர்கள் எதிர்பார்க்கவில்லை" என்றும் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    "போர்க்களத்தை விட்டு ரஷ்ய படையினர் ஓடுகிறார்கள். ஆயுதங்களை போட்டு விட்டு அவர்கள் ஓடுகிறார்கள். அந்த வகையில், ரஷ்ய துருப்புக்கள் விட்டுச் சென்ற ஆயுதங்களைக் கொண்டு எங்கள் நகரங்களை நாங்கள் பாதுகாக்கிறோம். அவர்களே எங்களுக்கு ஆயுதங்களை வழங்கக் கூடியவர்கள்," என்று ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

  4. நீட் விலக்கு மசோதா விவாதம்: மக்களவையில் பிற அலுவல் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்த திமுக

    மருத்துவ படிப்புகளில் சேர கட்டாயமாக்கப்பட்டுள்ள நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக மக்களவையில் விவாதிக்க ஏதுவாக பிற அலுவல்களை ஒத்திவைக்கும் அவசர கவன ஈர்ப்பு நோட்டீஸை திமுக அளித்துள்ளது.

    நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பின் 200ஆவது பிரிவை மீறும் வகையில் உள்ளதாகவும் அது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.

    இதுபோன்ற நோட்டீஸ்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களாலும் மக்களவை, மாநிலங்களவை செயலகத்தில் கூட்ட அமர்வுக்கு முந்தைய நாளில் தரப்படுவது வழக்கம்.

    அவற்றை அனுமதிப்பதா வேண்டுமா என்ற தமது முடிவை மக்களவையில் சபாநாயகரும், மாநிலங்களவையில் அதன் தலைவர் அல்லது அவையை வழிநடத்தும் மூத்த உறுப்பினர் அன்றைய நாளுக்கான கூட்டத்தின் தொடக்கத்தில் அறிவிப்பார்கள்.

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, எஸ்.பி. வேலுமணியின் கோவை வீடு உள்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

    ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், ஹேமலதா அன்பரசன், உறவினர் சந்திரசேகரன் மற்றும் நண்பர்கள் 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதனடிப்படையில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

    இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  6. யுக்ரேனியர்களுக்கு ஆயுதங்கள், நிதி, உணவு வழங்கப்படும்: அமெரிக்க அதிபர் பைடன்

    யுக்ரேனியர்களை 'திறந்த கரங்களுடன்' வரவேற்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    அந்நாட்டுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள், உணவு மற்றும் பணத்தை தொடர்ந்து வழங்குவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

    இது தொடர்பாக பைடன் தமது ட்விட்டர் பக்கத்தில், "யுக்ரேனிய அகதிகளை அமெரிக்காவும் திறந்த கரங்களுடன் வரவேற்கும். ரஷ்ய ஆக்கிரமிப்பு படைகளை எதிர்க்க தேவையான ஆயுதங்களை யுக்ரேனுக்கு வழங்குவோம்" என்று கூறியுள்ளார்.

    முன்னதாக திங்களன்று, "யுக்ரேனுக்கு அமெரிக்கா தினமும் பல்லாயிரக்கணக்கான டன் அளவில் மனிதாபிமான பொருட்களை வழங்குகிறது" என்று கூறினார்.

    இதற்கு ஏதுவாக ஓர் அவசர ஆணையில் அதிபர் பைடன் கடந்த வார இறுதியில் கையெழுத்திட்டார். அதன்படி யுக்ரேனுக்கு $13.6 பில்லியன் அளவுக்கு உதவிகள் வழங்கப்படும். இதில் பாதி ராணுவ பயன்பாட்டுக்கானவை.

  7. யுக்ரேனிய பாதுகாப்பு நிறுவனங்களை இலக்கு வைப்போம்: ரஷ்யா

    டொனியட்ஸ்க் மீதான யுக்ரேனிய ஏவுகணை தாக்குதலுக்குப் பதிலடியாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை நிறுவனங்களை இலக்கு வைப்போம் என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

    பிரிவினைவாத பிராந்தியமான டொனியட்ஸ்க் மீது யுக்ரேன் கடந்த திங்கட்கிழமை ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா கூறியுள்ளது.

    இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "டொனியட்ஸ்க் மீதான Tochka-U ரக ஏவுகணை தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, அந்த ஆயுதங்களை உற்பத்தி செய்யும் யுக்ரேனிய பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய நிறுவனங்களை ரஷ்ய பாதுகாப்புப் படைகள் இலக்கு வைக்கும்," என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும், "இந்த நிறுவனங்களில் பணிபுரியும் யுக்ரேனியர்கள் மற்றும் அருகில் வசிக்கும் மக்களை அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.

    முன்னதாக, டொனியட்ஸ்கில் யுக்ரேன் நடத்திய வான் தாக்குதலில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் அந்த தாக்குதல் தொடர்பான தகவலை யுக்ரேன் மறுத்துள்ளதுடன், இதற்கு ரஷ்ய ஏவுகணைகளே காரணம் என குற்றம்சாட்டியுள்ளது.

    யுக்ரேனில் உள்ள முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்யா எச்சரிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு இதேபோன்ற எச்சரிக்கை மார்ச் 1ஆம் தேதி விடுக்கப்பட்டது. அப்போது தலைநகர் கீயவ்வில் இருந்த தொலைக்காட்சி கோபுரம் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

  8. வணக்கம் நேயர்களே! பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்

    பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம் .

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள். நேற்றைய நேரலை பக்கத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்தின் சில முக்கிய செய்திகள்

    ·யுக்ரேன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான நெருக்கடியை தீர்க்கும் விதமாக, இரு நாட்டு பேச்சுவார்த்தை குழுவினர் நான்காம் சுற்று பேச்சுவார்த்தையை நேற்று நடத்தினர்.

    ·பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள யுக்ரேன் அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர், உடனடி போர் நிறுத்தத்தை யுக்ரேன் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

    ·ஆனால், யுக்ரேனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு வீச்சு தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. கீயவின் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.

    ·யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் சீனா உதவினால், கடுமையான "விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா கூறுகிறது, என்று அமெரிக்க ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், தங்களிடம் ரஷ்யா உதவி கோரியதாக கூறுவது தவறானது என சீனா தெரிவித்துள்ளது. தாங்கள் சீனாவிடம் உதவி கேட்கவில்லை என, ரஷ்யாவும் தெரிவித்துள்ளது.

    ·மேரியோபோல் மகப்பேறு மருத்துவமனையில் ரஷ்யா குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில், கர்ப்பிணி பெண்ணும் அவருடைய குழந்தையும் உயிரிழந்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    ·தங்கள் நாட்டு கச்சா எண்ணெய்யை குறைந்த விலையில் விற்பதாக, ரஷ்யா கூறியதை இந்தியா ஏற்றுக்கொள்வது குறித்து யோசித்து வருகிறது என இரு இந்திய அதிகாரிகளை மேற்கோளிட்டு ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    ·ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராக நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.