You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

யுக்ரேன் அதிபர் ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு சரணடையுமாறு அழைப்பு

"ரஷ்ய படைவீரர்கள் உயிர் வாழ விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். மேலும், சரணடைபவர்கள், கண்ணியமாக நடத்தப்படுவீர்கள்,” என்று கூறியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

க. சுபகுணம்

  1. யுக்ரேன்: அகதிகளுக்கு இடம் கொடுக்கும் போலந்து ஷாப்பிங் சென்டர்

    போலந்தின் கிராகோவ் புறநகரில் கைவிடப்பட்ட ஷாப்பிங் சென்டர் ஒன்று, அதிக அகதிகளுக்கு தற்காலிக நிவாரண மையாக மாற்றப்பட்டுள்ளது.

    ரஷ்யா-யுக்ரேன் மோதல் தொடங்கியதில் இருந்து 1.8 மில்லியனுக்கும் அதிகமான யுக்ரேனியர்கள் போலந்திற்குள் நுழைந்துள்ளனர். மேலும், அவ்வளவு அகதிகளை தங்கள் நாட்டிற்குள் வரவேற்பதன் அழுத்தத்தை அந்நாடு உணர்கிறது.

    ஆறு மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட இந்த ஷாப்பிங் சென்டர், ஆரம்பக்கட்டமாக சுமார் 400 பேர் தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் அதை இன்னும் விரிவுபடுத்த.திறனைக் கொண்டுள்ளனர் என்று அங்கிருக்கும் பிபிசியின் டான் ஜான்சன் கூறுகிறார்.

    நகரின் முனிசிபல் சமூகநல மையத்தைச் சேர்ந்த கரோல் பைட்லார்ஸ்கி கூறும்போது, “அகதிகள் மையத்தில் ஏற்கெனவே 100 பேர் உள்ளதாகவும் இன்று பிற்பகலில் நிரம்பிவிடும்” என்றார்.

    மேலும், “போரிலிருந்து தப்பி வரும் மக்களுக்குச் சிறந்த உதவியை வழங்குவதே எங்களின் முக்கிய நோக்கம். அவர்களை வீட்டில் இருப்பதைப் போல சிறிது சிறிதாக உணர வைக்க முயல்கிறோம். அவர்களுக்கு ஓய்வு கொடுக்கிறோம். அதனால், அவர்களால் இதைக் கடந்து வர முடியும். அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கவேண்டும்,” என்றார்.

  2. போலந்து, செக் குடியரசு, ஸ்லோவேனியா பிரதமர்கள் யுக்ரேன் வருகை

    போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் அனைவரும் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கியை சந்திப்பதற்காக கீயவுக்குச் செல்கிறார்கள்.

    யுக்ரேனின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு ஆதரவை உறுதிபடுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்று போலந்து அரசாங்கத்தால் இந்த விஜயம் உறுதி செய்யப்பட்டது.

    “இந்த விஜயத்தின் நோக்கம், யுக்ரேன் அரசு மற்றும் அதன் மக்களுக்கு பரந்த ஆதரவை வழங்குவதுதான்,” என்று போலந்து அரசு தெரிவித்தது.

    மேலும், சுதந்திரத்திற்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்ட அதிகாரப்பூர்வ ஐரோப்பிய கவுன்சிலின் விஜயம் என்று செக் பிரதமர் கூறினார்.

  3. எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை - இதுவரை நடந்தது என்ன?

    அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை - இதுவரை நடந்தது என்ன?

  4. யுக்ரேன்: குடியிருப்பு மீது நடந்த தாக்குதலில் இருவர் பலி

    யுக்ரேன் அரசின் அவசர சேவை நிறுவனத்தின்படி, கீயவில் குடியிருப்பு கட்டடம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். 35 பேர் அதிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

    யுக்ரேன் தலைநகரில் முந்தைய நாள் இரவில் ஷெல் குண்டு தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்களின் பட்டியலை கீயவ் நகர நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    அவற்றின் விவரம்:ஸிவ்யடோஷின்ஸ்கி மாவட்டத்தில் ஒன்பது மற்றும் 16 மாடிகளைக் கொண்ட இரண்டு குடியிருப்பு கட்டடங்கள்;

    போடில்ஸ்கி மாவட்டத்தில் ஒரு 10 மாடி குடியிருப்பு கட்டடம்;

    டார்னிட்ஸ்கி மாவட்டத்தின் தனியார் பகுதியிலிருந்த ஒரு வீடு;

    லுக்யானிவ்ஸ்கா மெட்ரோ நிலையத்தின் ஒரு பகுதி. அதன் சுரங்கப் பாதை இன்னும் செயல்படுகிறது.

  5. ஷெல் குண்டு தாக்குதலுக்கு உள்ளான 9 மாடி குடியிருப்பு

    தலைநகர் கீயவிலுள்ள ஸிவ்யடோஷின்ஸ்கி மாவட்டத்தில் ஒன்பது மாடி குடியிருப்பு கட்டடத்தின் நடந்த ஷெல் குண்டு தாக்குதலுக்குப் பிறகான படங்களை யுக்ரேன் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

    குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட நெருப்பு, அதிகாலை 5:36 மணியளவில் அணைக்கப்பட்டது.

    இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை.

  6. "கர்நாடக கல்வித் துறையின் ஹிஜாப் தடை செல்லும்" உயர்நீதிமன்றம் தீர்ப்பு

    பள்ளி, கல்லூரி வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய தடை விதித்துள்ள மாநில கல்வித்துறையின் அரசாணை செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

    இது தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரீத்து ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா எஸ். தீக்ஷித், ஜே.எம். காஸி அடங்கிய அமர்வு விசாரித்து வழங்கிய தீர்ப்பில், "நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், அரசு தரப்பு பதில்கள் போன்றவற்றின் அடிப்படையில் மூன்று கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. அதற்கான விடையை இந்த தீர்ப்பின் மூலம் வழங்குகிறோம்," என்று கூறினர்.

    இந்தத் தீர்ப்பின் போது, இஸ்லாத்தின்படி ஹிஜாப் அணிவது அவசியமான நடைமுறையா என்பது போன்ற சில கேள்விகள் கேட்கப்பட்டன.

  7. "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படத்திற்கு வரி விலக்கு

    "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படத்திற்கு வரிகளில் இருந்து வலிக்கு அளிப்பதாக உத்தரப் பிரதேச அரசாங்கம் அறிவித்துள்ளதாக பி.டி.ஐ செய்தி முகமை அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

  8. கால் போனாலும் நடனத்தைக் கைவிடாத கலைஞர்

    திரைப்பட பாடல்களுக்கு நேர்த்தியாக நடனமாடுகிறார் இந்த ரேகா மிஸ்ரா. 19 வயதான ரேகாவின் நடன வீடியோ சமூக ஊடகங்களில் அதிக வைரலாகி வருகின்றன.

    தற்சமயம் இவர் ‘ஒன் லெக் டான்ஸர்’ என்ற தனது சொந்த யூ ட்யூப் சேனலை தொடங்கியிருக்கிறார். ரேகா, 2014இல் ஒரு சாலை விபத்தில் தனது ஒரு காலை இவர் இழந்தார். ஆனாலும் மனம் தளராத ரேகா ஒரே காலுடன் நடனமாடுகிறார்.

  9. எஸ்.பி.வேலுமணி வீட்டில் தொண்டர்களுக்கு காலாவதியான குடிநீர்

    இன்று எஸ். எஸ் பி வேலுமணியின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகின்ற நிலையில் அதிமுக தொண்டர்கள் அவர் வீட்டின் முன் குவிந்துள்ளனர்.

    இன்று காலை சோதனை தொடங்கியதிலிருந்தே தொண்டர்கள் கூடியுள்ளதால் அவர்களுக்கான உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    காலையில், தேநீர், பொங்கல், கிச்சடி மற்றும் ரோஸ் மில்க் வழங்கப்பட்ட நிலையில் மதியம் சாம்பார் சாதம் வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்பட்ட பாட்டில் குடிநீர் காலாவதியாகி இருப்பதால் சில தொண்டர்கள் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.

  10. முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநரை நேரில் சந்தித்து நீட் தேர்வு விலக்கு கோரும் சட்ட வரைவு குறித்து வலியுறுத்தல்

    நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன் வரைவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு ஆளுநரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துள்ளார்.

    நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழ்நாடு இளங்கலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம், 2021, தமிழ்நாடு சட்டமன்றத்தில், கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதை, 142 நாட்களுக்குப் பிறகு, ஆளுநர் திருப்பி அனுப்பவே, பிறகு மீண்டும் அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.

    மேலும், 2022-23 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரு சட்டமுன் வரைவை ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவரிடம் அனுப்பிட வேண்டுமென தமிழக ஆளுநரை, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஆளுநர் எதிர்ப்புக்குரல்: "இங்கு நடப்பது காட்டாட்சியா? உடனே ஆளுநரை மாற்றுங்கள்" - மக்களவையில் டி.ஆர். பாலு

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஏழு மசோதாக்களை தன் வசம் வைத்துக் கொண்டு தாமதப்படுத்தும் மாநில ஆளுநரை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் அல்லது திரும்ப அழைக்க வேண்டும் என்று மக்களவையில் திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக மக்களவையில் டி.ஆர். பாலு பேச எழுந்தபோது, மாநில ஆளுநரை மாற்ற அவர் கோரிக்கை விடுத்தபோது, இது மாநில விவகாரம் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா கூறினார்.

    இருப்பினும், தொடர்ந்து இந்த விவகாரத்தை டி.ஆர். பாலு எழுப்பியபோது, மாநில ஆளுநர் பற்றி இந்த அவையில் பேச வேண்டுமானால், அதற்கு முறைப்படி விதிகளின்படி சபாநாயகரின் அனுமதியைப் பெற வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் தெரிவித்தார்.

    இருப்பினும் தொடர்ந்து பேசிய டி.ஆர். பாலு, "இங்கு என்ன காட்டாட்சியா நடக்கிறது? சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் விதிகளின்படியே அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். உடனடியாக ஆளுநரை மாற்றுங்கள் அல்லது திரும்பப் பெறுங்கள்," என்று பேசினார்.

    இதற்கிடையே, டி.ஆர். பாலு மக்களவையில் இந்த பிரச்னையை எழுப்பிய அதே சமயம், சென்னையில் மாநில ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்ற விவரம் வெளியே தெரிவிக்கப்படவில்லை.

  12. இலங்கையில் ஒரு முட்டையின் விலை 28 ரூபாய்

    இலங்கையில், பொருளாதார நெருக்கடி காரணமாக முட்டை விலை அதிர்ச்சியளிக்கும் விதமாக 28 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

  13. வடகிழக்கு சுமியில் மக்களை வெளியேற்றத் திட்டமிட்டிருக்கும் யுக்ரேன் அரசு

    வணக்கம் நேயர்களே. யுக்ரேனில் காலை 8:30 மணியைக் கடந்து விட்டது. இன்று ரஷ்ய படையெடுப்பின் 20-வது நாள்.இந்தப் படையெடுப்பின் சமீபத்திய தகவல்களின் சுருக்கத்தை இங்கு காணலாம்.

    • இன்றும் தலைநகரில் குண்டுவெடிப்பு சத்தம் தொடர்ந்து கேட்கிறது. இன்று காலையில், குண்டுவெடிப்பு காரணமாக, குடியிருப்பு கட்டடம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. தற்போது அந்த நெருப்பு அணைக்கப்பட்டுள்ளதாக யுக்ரேன் அரசாங்கத்தின் அவசர சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
    • வடகிழக்கு சுமி பிராந்தியத்தில் உள்ளூர் நேரப்படி, காலை 9:00 மணி முதல் இரவு 9 மணி வரை, மக்களை வெளியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தப் பிராந்தியத்திற்கான அரசு நிர்வாகம் கூறியுள்ளது.
    • ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்றும் தொடரும் என்று யுக்ரேன் அதிபர் தெரிவித்துள்ளார்.
    • யுக்ரேனில் ரஷ்ய படையினர் வசம் சென்றுள்ள செர்னோபில் அணு உலையில் தடைபட்டுப்போன மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.
    • யுக்ரேனிய அரசாங்க ஆலோசகர் ஒருவர் மே மாத தொடக்கத்தில் போர் முடிவடையும் என எதிர்பார்க்கப்பதாகக் கூறியுள்ளார்.
  14. கூடுதல் எஸ்பி, டிஎஸ்பி என காவல்துறை அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

    கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் கே.ஜெயராமன், வடவள்ளி சந்திரசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமலை சண்முகம், ராஜேந்திரன் ஆகியோரின் வீடு மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.

    அதுபோக அதிமுக ஆட்சியில் கோவை மாவட்ட ஏ.டி.எஸ்.பி.யாக இருந்த அனிதா, டி.எஸ். பி சண்முகம், ஆய்வாளர்கள் லோகநாதன் மற்றும் சந்திரகாந்தா ஆகியோரது வீட்டிலும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநகராட்சி டெண்டர்கள் வழங்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியிருந்தது.

    தற்போது வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

  15. குண்டுவெடிப்பில் சேதமடைந்த கீயவ் மெட்ரோ நிலையம்

    இன்று காலை நடந்த குண்டுவெடிப்புகளில் ஒன்று, லுக்யானிவ்ஸ்கா மெட்ரோ நிலையம் மற்றும் அதன் அலுவலகத்தின் முகப்பைச் சேதப்படுத்தியதாக கீயவ் மெட்ரோ நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

    லுக்யானிவ்ஸ்கா, கீயவின் மையப் பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. தற்போது சேதமடைந்த காரணத்தால் அந்த மெட்ரோ நிலையம் மூடப்பட்டுள்ளது.

  16. வணக்கம் நேயர்களே!

    நான் க.சுபகுணம். பிபிசி தமிழின் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை பரணி தரன் வழங்கிக் கொண்டிருந்த நேரலை செய்திகளை இனி நான் வழங்கவுள்ளேன்.

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்த செய்திகள், தமிழகம், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகள் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம்தகவல் அளியுங்கள்.

  17. பாகிஸ்தானில் விழுந்த இந்திய ஏவுகணை: இந்திய நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் விளக்கம்

    பாகிஸ்தானில் விழுந்த இந்திய ஏவுகணை விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

    இது தொடர்பாக மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல் செய்து பேசிய ராஜ்நாத் சிங், "மார்ச் 9ஆம் தேதி நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி இந்த அவையில் கூற விரும்புகிறேன். வழக்கமான பராமரிப்பு மற்றும் ஏவுகணை பிரிவின் ஆய்வின்போது, இரவு 7 மணியளவில், ஒரு ஏவுகணை தற்செயலாக இயங்கி விட்டது. இந்த சம்பவத்தை அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்பதை நான் அவைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இந்த விவகாரத்தில் கடைப்பிடிக்கப்பட்ட செயல்பாட்டு நெறிகளை மதிப்பீடு செய்து வருகிறோம்," என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    பாதுகாப்பு மற்றும் பாரமரிப்புக்கு அரசு முதன்மையான முன்னுரிமை அளிக்கிறது. மேலும் உயர்மட்ட நீதிமன்ற விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய ஏவுகணை அமைப்பு பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது. நாங்கள் சரியான வகையில் நடந்த நிகழ்வை மதிப்பாய்வு செய்து வருகிறோம். இந்திய ஆயுதப்படைகள் நன்கு பயிற்சி பெற்றவை, ஒழுக்கமானவை. அந்த வகையில் பாதுகாப்பு சாதனங்களைப் பராமரிப்பதில் தேர்ந்த அனுபவம் கொண்டுள்ளவை நமது பாதுகாப்புப்படைகள், ”என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

  18. குழந்தை தொழிலாளர்கள் பள்ளி செல்ல உதவும் திருவாரூர் மாணவி: குவியும் பாராட்டு, ஜோ மகேஸ்வரன்

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி பிரியதர்ஷினி.

    கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டாலும் பள்ளிக்கு வராமல் பல்வேறு பணிகளுக்கு சென்ற 20 பேரை பெற்றோர்கள், பணியமர்த்தியர்களிடம் பேசி, மீண்டும் பள்ளி செல்ல வழிகாட்டியுள்ளார்.

    மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதையும் கவனித்து வருவதாக கூறும் ப்ரியதர்ஷினியை பள்ளி ஆசிரியர்கள் தொடங்கி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை உயரதிகாரிகள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

    இது குறித்த விரிவான செய்திக்கு

  19. வந்துகொண்டிருக்கும் செய்தி, சுமி நகரில் இருந்து மக்கள் வெளியேற்ற நடவடிக்கைக்கு திட்டம்: யுக்ரேனிய அதிகாரிகள்

    ரஷ்யா எல்லையில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் யுக்ரேனிய நாட்டுக்கு உள்பட்ட சுமி நகரில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கை இன்று திட்டமிடப்பட்டுள்ளதாக யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    யுக்ரேனின் வடகிழக்கு பகுதியான சுமி பிராந்தியத்தில் உள்ள நான்கு நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற்றும் பாதைகள் திறக்கப்படவுள்ளன.

    அந்த பிராந்திய நிர்வாகத் தலைவர் டிமிட்ரோ ஜிவிட்ஸ்கியின் தனது டெலிகிராம் பக்க இடுகையில் சுமி, கொனோடோப், ட்ரோஸ்டியானெட்ஸ் மற்றும் லெபெடின் நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற்ற வழிகள் திறக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணிக்கு இடையே இந்த பாதைகள் திறக்கப்படவுள்ளது.

    ரஷ்யா படையெடுப்பின் கடும் தாக்குதலுக்கு உள்ளான இந்த நகரில் ஏற்கெனவே மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

  20. யுக்ரேன் செர்னோபில் அணுஉலையில் மின்சார இணைப்பு மீட்பு: சர்வதேச அணுசக்தி முகமை

    யுக்ரேனில் ரஷ்ய படையினர் வசம் சென்றுள்ள செர்னோபில் அணுஉலையில் தடைபட்டுப்போன மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது.

    அந்த ஆலையில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம் யுக்ரேனிய மின் பாதையுடன் இணைக்கப்பட்டதாக யுக்ரேன் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்த சில மணி நேரத்தில் விநியோக அமைப்பு, ஆக்கிரமிப்புப் படைகளால் மீண்டும் சேதமடைந்ததாக புகார் கூறப்பட்டது.

    இருப்பினும், உள்ளூர் நேரப்படி சுமார் 13:10 மணிக்கு (12:10 GMT) மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டதாக சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைமை இயக்குநர் ரஃபேல் க்ரோஸ்ஸி கூறியுள்ளார்.

    ஆலையில் உள்ள மின் சிக்கல்கள் ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையிலான அணுசக்தி தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒப்பந்தத்தின் "அவசரத்தை காட்டுவதாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

    ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையமான ஸாப்போரீஷியா ஆலையில் ரஷ்ய படைகள் "வெடிமருந்து நிரப்பி தாக்குதலை நடத்தியது" தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.