You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

யுக்ரேன் அதிபர் ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு சரணடையுமாறு அழைப்பு

"ரஷ்ய படைவீரர்கள் உயிர் வாழ விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். மேலும், சரணடைபவர்கள், கண்ணியமாக நடத்தப்படுவீர்கள்,” என்று கூறியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

க. சுபகுணம்

  1. நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்தில் இதுவரை இணைந்திருந்ததற்கு நன்றி.

    இத்துடன் இன்றைய நேரலைப் பக்கம் நிறைவடைகிறது. தமிழ்நாடு, இந்தியா, உலகம் முழுவதுமான செய்திகளுடன் நாளை காலை மீண்டும் நேரலைப் பக்கம் தொடங்கும்.

    இன்றைய நேரலைப் பக்கத்தின் முக்கியமான செய்திகளை கீழே காணலாம்.

    • யுக்ரேன் அதிபர் இரவு தொலைக்காட்சி உரையில் பேசியபோது, “ரஷ்யப் படைவீரர்கள் உயிர் வாழ விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். மேலும், சரணடைபவர்கள், கண்ணியமாக நடத்தப்படுவீர்கள்,” என்று கூறியுள்ளார்.
    • அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய சோதனையில் 11.153 கிலோ தங்கம், 118.506 கிலோ வெள்ளி, கணக்கில் வராத ரொக்கம் 84 லட்சம் மற்றும் 34 லட்சம் மதிப்பிலான கிரிப்டோகரன்சி முதலீடுகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று லஞ்ச ஒழிப்பத் துறை தெரிவித்துள்ளது.
    • ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் போருக்கு எதிர்ப்பு தெரிவித்த செய்தியாளருக்கு 30,000 ரூபிள் அபராதம் விதிக்கப்பட்டது.
    • ரஷ்யாவுக்குள் நுழைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டுமென சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
    • கிழக்கு யுக்ரேன் நகரமான டினிப்ரோவில் உள்ள விமான நிலையம், ரஷ்ய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • யுக்ரேன் தலைநகர் கீயவ் மீது நடந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் வியாழன் காலை 7 மணி வரை, ஊரடங்கு விதிக்கப்பட உள்ளது.
    • ரஷ்யாவின் மிக முக்கியமான தொலைக்காட்சி சேனல் ஒன்றின் செய்தி தொகுப்பாளர் ஒருவர் ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. யுக்ரேன் அதிபர் ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு சரணடையுமாறு அழைப்பு

    யுக்ரேன் அதிபர் இரவு தொலைக்காட்சி உரையில் பேசியபோது, ரஷ்யப் படைகள் செச்சினியா போரில் சந்தித்த இழப்புகளை விட யுக்ரேன் நாட்டின் மீதான தற்போதைய படையெடுப்பில் மிக அதிகமான இழப்புகளைச் சந்தித்ததாகவும் இந்தப் போரின் மூலம் ஒன்றையும் சாதிக்க முடியாது என்பதையும் ரஷ்ய படை உணரத் தொடங்கியுள்ளது என்றும் கூறினார்.

    "ரஷ்ய படைவீரர்கள் உயிர் வாழ விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். மேலும், சரணடைபவர்கள், கண்ணியமாக நடத்தப்படுவீர்கள்,” என்று கூறியுள்ளார்.

    ரஷ்ய அரசு தொலைக்காட்சியில், ஒளிபரப்பின்போது மெரினா ஓவ்சியனிகோவா என்ற பெண், போர் வேண்டாம் என்ற பதாகையை திரையில் காட்டியுள்ளார். அவருக்கு ஸெலென்ஸ்கி தனது மரியாதையை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மேலும், "உண்மையை வெளிப்படுத்தும் முயற்சியை எடுக்கும் ரஷ்யர்களுக்கு நன்றி மற்றும் தவறான தகவல்களை எதிர்த்து நீங்கள் போராடுகிறீர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  3. எஸ்.பி.வேலுமணி வீட்டில் நாள் முழுக்க காத்திருந்த தொண்டர்கள்: படங்கள்

    அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய சோதனையில் 11.153 கிலோ தங்கம், 118.506 கிலோ வெள்ளி, கணக்கில் வராத ரொக்கம் 84 லட்சம் மற்றும் 34 லட்சம் மதிப்பிலான கிரிப்டோகரன்சி முதலீடுகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று லஞ்ச ஒழிப்பத் துறை தெரிவித்துள்ளது.

    இந்தச் சோதனையின்போது, அதிமுக தொண்டர்கள் அவருடைய வீட்டின் முன் காத்திருந்தனர்.

  4. சந்திரயான் 3, ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்படும்- இஸ்ரோ துணை இயக்குநர்

    சந்திரயான் 3 ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய துணை இயக்குநர் வெங்கடராமன் தெரிவித்துள்ளார்.

    மதுரை குயின் மீரா சர்வதேச பள்ளியில் மாணவர்களுக்கான பிரத்தியேக கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் துணை இயக்குனர் மற்றும் குயின் மீரா சர்வதேச பள்ளியின் ஆலோசனைக் குழு உறுப்பினரான வெங்கட்ராமன் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாடினார்.

    இந்திய விண்வெளி மையத்தின் பாரம்பரியம் குறித்தும் அதன் பெருமைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார். அதைத் தொடர்ந்து இந்திய விண்வெளி மையத்தின் ஆராய்ச்சிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவாக விளக்கினார்.

    பின்னர் செய்தியாளர்களடம் பேசிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய துணை இயக்குனர் வெங்கடராமன், “ஆகஸ்ட் மாதத்தில் சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படும்,” எனத் தெரிவித்தார்.

  5. எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடந்த ரெய்டின் முழு விவரங்கள்

    35 லட்சம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த வேலுமணி. அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையில் ரெய்டில் நடந்தது என்ன?

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, போருக்கு எதிராகப் போராடிய செய்தியாளர் மீது மாஸ்கோ நீதிமன்றத்தில் விசாரணை

    சற்று நேரத்திற்கு முன்பு செய்தி நிகழ்ச்சியில் போருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த அரசு தொலைக்காட்சி ஊழியர் தற்போது, மாஸ்கோவின் ஓஸ்டான்கினோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

    மெரினா ஓவ்சியனிகோவா மீது “அங்கீகரிக்கப்படாத பொது நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக” குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது நிர்வாகக் குற்றமாகும். இதன் விளைவாக 30,000 ரூபிள், சமூக சேவை அல்லது 10 நாட்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

    ரஷ்யாவின் புதிய சட்டத்தின் கீழ் “ரஷ்யாவின் ஆயுதப் படைகள் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பியதற்காக” செய்தியாளர் மீது குற்றம் சாட்டவில்லை என்பதை இது அறிவுறுத்துகிறது.

    ஓவ்சியனிகோவாவின் வழக்கறிஞர்களால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால், சமூக ஊடகங்களில் பரவி வரும் ஓர் ஒளிப்படம் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞருடன் அவர் இருப்பதைக் காட்டுகிறது.

  7. மின்சார துண்டிப்பு: ஃப்ளாஷ் லைட் அடித்தபடி நின்ற அதிமுக தொண்டர்கள்

    அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்று காலையிலிருந்து சோதனை நடந்தது. அப்போது அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அதிமுக தொண்டர்கள் தங்களுடைய மொபைலில் ஃபிளாஷ் லைட் அடித்தபடி நின்றனர்.

  8. 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய சோனியா காந்தி உத்தரவு

    ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டுமென சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

    இந்தத் தகவலை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    “உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பதவி விலகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்,” என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

    காங்கிரஸ் காரிய கமிட்டியின் ஐந்து மணிநேர கூட்டம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, எஸ்.பி.வேலுமணி 34 லட்சம் ரூபாய்க்கு க்ரிப்டோகரசின் முதலீடு- லஞ்ச ஒழிப்புத் துறை

    அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் 11.153 கிலோ தங்கம், 118.506 கிலோ வெள்ளி, கணக்கில் வராத ரொக்கம் 84 லட்சம் மற்றும் 34 லட்சம் மதிப்பிலான கிரிப்டோகரன்சி முதலீடுகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று லஞ்ச ஒழிப்பத் துறை தெரிவித்துள்ளது.

  10. எஸ்.பி.வேலுமணி வீட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

    அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கோவை மாவட்டம் சுகுணாபுரத்தில் அமைந்துள்ள எஸ்.பி.வேலுமணியின் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சணமுகம், தங்கமணி, கே.சி.கருப்பண்ணன், செங்கோட்டையன் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

    இங்கு கூடியுள்ள அதிமுக தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனை தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  11. சூரியன் கருந்துளையாக மாறி பூமியை விழுங்கிவிடுமா?

    அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும், இடையிலான பனிப்போரின் போது, ரஷ்யாவின் அணுசக்தி திட்டங்களை கண்காணிக்க 'வேலா' (Vela) என்று அழைக்கப்படும் உளவு செயற்கைக்கோள்களை பூமியை சுற்றி ஏவியது அமெரிக்கா. ஒருவேளை, ரஷ்யா ரகசிய அணுசக்தி சோதனையில் ஈடுபட்டால், அதிலிருந்து வரும் காமா-கதிர்களை (Gama-Rays) இந்த செயற்கைக்கோள்கள் கண்டறியும். சந்தேகித்தவாறே காமா-கதிர்களை அமெரிக்கா கண்டுபிடித்தது.

    ஆனால், இந்த காமா-கதிர்கள் ரஷ்யாவில் இருந்து வந்தவை அல்ல. மாறாக, பூமியையும், சூரிய குடும்பத்தையும் தாண்டி, விண்வெளியில் இருந்து வந்த காமா-கதிர் வெடிப்புகள் (Gama-Ray Bursts) ஆகும். பல வருட ஆய்விற்கு பிறகு, காமா-கதிர் வெடிப்புகள் சூப்பர்நோவாக்கள் (Supernovae) மற்றும் கருந்துளைகள் (Black Holes) உருவாகும் போது வெளிவருகின்றன என்று கருத்தியல் கோட்பாடுகள் விளக்குகிறது.

  12. டினிப்ரோ விமான நிலையத்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்: தகர்க்கப்பட்ட விமான ஓடுபாதை

    கிழக்கு யுக்ரேன் நகரமான டினிப்ரோவில் உள்ள விமான நிலையம், ரஷ்ய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்திய அரசு நிர்வாகத்தின் தலைவரான வேலெண்டின் ரெஸ்னிசென்கோ, “பெரிய அழிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

    “இரவில் டினிப்ரோ விமான நிலையத்தை எதிரிகள் தாக்கினர். இரண்டு ஏவுகணை தாக்குதல்கள் நடந்தன. அதில் ஓடுபாதை அழிக்கப்பட்டது. முனையம் சேதமடைந்தது. பெரிய அழிவு ஏற்பட்டது” என்று அவர் டெலிகிராமில் பதிவிட்டுள்ளார்.

  13. ரஷ்யாவை விட்டு வெளியேறிய செய்தி தொகுப்பாளர்

    ரஷ்யாவின் மிக முக்கியமான தொலைக்காட்சி சேனல் ஒன்றின் செய்தி தொகுப்பாளர் ஒருவர் ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    “நான் முதலில் ரஷ்யாவை விட்டு வெளியேறினேன். ஏனெனில், அவர்கள் என்னை அப்படியே விடமாட்டார்கள் என்று நான் அஞ்சினேன். பின்னர் நான் என் ராஜினாமாவை சமர்ப்பித்தேன்,” என்று என் டிவியின் லிலியா கிலேயேவா, முதன்மை ப்ளாக்கர் இல்யா வர்லமோவிடம் கூறினார்.

    கில்டேயேவா செகோட்னியாவில் ஒரு தொகுப்பாளராக இருந்தார். இது ரஷ்யாவின் மூன்றாவது மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிலையமான என் டிவியின் முதன்மையான மாலை நேர செய்தி நிகழ்ச்சியாகும். இந்த சேனல், எரிவாயு நிறுவனமான காஸ்ப்ரோமுக்கு சொந்தமானது மற்றும் ரஷ்ய அதிபர் மாளிகைக்கு ஆதரவாக உள்ளது.

    2021-ஆம் ஆண்டில், “வெகுஜன ஊடகங்களை வளர்ப்பதில் நிகழ்த்திய சாதனைகளுக்கு” அதிபர் புதினின் நன்றியைப் பெற்ற அதிகாரபூர்வ பத்திரிகையாளர்கள் பட்டியலில் கில்டேயேவா சேர்க்கப்பட்டார். 2008-ஆம் ஆண்டில், “ரஷ்ய கூட்டமைப்பில் குடிமைச் சமூகத்தை வளர்ப்பதற்கான தகவல் வழங்கல் மற்றும் ஆக்கப்பூர்வமான சமூக செயல்பாடு” ஆகியவற்றுக்காக அவருக்கு புதினிடமிருந்து நன்றி தெரிவிக்கப்பட்டது.

    கில்டேயேவாவின் புறப்பாடு, நேற்றிரவு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சேனல் 1-ல் செய்தி ஆசிரியர் ஒருவரின் போர் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது.

  14. கர்நாடகா: ஹிஜாப் தடை குறித்த வழக்கின் முழு விவரம்

    பள்ளி, கல்லூரி வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய தடை விதித்துள்ள மாநில கல்வித்துறையின் அரசாணை செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. அதன் முழு விவரங்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்...

  15. 1500 மைல்களுக்கு அப்பால் இருந்து யுக்ரேன் மக்களுக்குக் கிடைக்கும் உதவி

    வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 1,500 மைல்கள் தொலைவில், வடக்கு ஐயர்லாந்தில் இருந்து வரும் உதவிகளுக்காகக் காத்திருக்கும் கணவன் மனைவி மற்றும் அவரது குழுவை பிபிசி வார்சாவில் சந்தித்தது.

    வழக்கமாக, காலின் மற்றும் ஜோன்னா டின்ஸ்லி, அவர்களுடைய ஹோப் ஃபார் யூத் மினிஸ்ட்ரீஸ் அமைப்பு மூலம் போலந்து குழந்தைகளுக்கான முகாம்களை நடத்துகிறார்கள்.

    இப்போது அவர்கள் யுக்ரேனிய அகதிகளுக்குத் தேவையான உணவு, உடைகள் மற்றும் மருத்துவ பொருட்கள் ஆகிய அத்தியாவசிய பொருட்களைக் கொண்ட 31 லாரிகளை ஏற்பாடு செய்கிறார்கள்.

  16. யுக்ரேன்: 35 மணிநேரத்திற்கு தலைநகர் கீயவ் முழுக்க ஊரடங்கு

    யுக்ரேன் தலைநகர் கீயவ் மீது நடந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் வியாழன் காலை 7 மணி வரை, ஊரடங்கு விதிக்கப்பட உள்ளது.

    “வெடிகுண்டுகளில் இருந்து தப்பிப்பதற்கான புகலிடங்களுக்குச் செல்வதைத் தவிர, சிறப்பு அனுமதியின்றி நகரத்தைச் சுற்றி வருவது தடை செய்யப்பட்டுள்ளது,” என்று தலைநகரத்தின் மேயர் விட்டலி கிளிச்கோவ் கூறினார்.

    “தலைநகரம் யுக்ரேனின் இதயம். அது பாதுகாக்கப்படும். தற்போது ஐரோப்பாவின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாகவும் முதனை இயக்கத் தளமாகவும் இருக்கும் கீயவ் நகரத்தைக் கைவிட மாட்டோம்,” என்று கூறியுள்ளார்.

  17. "தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை இழிவுபடுத்த சதி நடக்கிறது" - பிரதமர் நரேந்திர மோதி

    சமீபத்தில் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை இழிவுபடுத்துவதற்கான சதி நடப்பதாக பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.

    மார்ச் 11-ஆம் தேதியன்று வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து பிரதமர் நரேந்திர மோதி தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடந்து வரும் நிலையில், பாஜக அமைச்சர்கள் கூட்டத்தில் இன்று காலை பேசும்போது, “பேச்சு சுதந்திரத்திற்கான கொடியை ஏந்துபவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் கடந்த ஐந்து முதல் ஆறு நாட்களாகக் கடுமையான கோபத்தில் உள்ளனர்.

    உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைப் புகழ்வதற்குப் பதிலாக இழிவுபடுத்துகிறார்கள். படத்தை உருவாக்கியவர்கள் தாங்கள் கருதுவதை வெளியிடுகின்றனர். ஆனால், உண்மையைப் புரிந்துகொள்ள, ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

    இந்தத் திரைப்படத்தை இழிவுபடுத்தி பிரசாரம் மேற்கொள்ள சதித் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. பிரச்னை திரைப்படத்தில் இல்லை, தேச நலன்களுக்காக உண்மைகளை வெளியே கொண்டு வரவேண்டும்.

    வேண்டுமென்றே மறைக்கப்பட்ட உண்மை இப்போது வெளிவருவதால் சிலர் வருந்துகிறார்கள்,” எனக் கூறினார்.

  18. “குண்டுவெடிப்புகளுக்கு நடுவிலும் இந்தியர்களை மீட்டுள்ளோம்,” – வெளியுறவுத் துறை அமைச்சர்

    இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், யுக்ரேனில் இருந்து இருந்தியர்களை மீட்டு வந்தது குறித்து இன்று ராஜ்ய சபையில் பேசினார். அப்போது, “பிரதமர் நரேந்திர மோதியின் வழிகாட்டுதலின் மூலம் நாங்கள் ஆபரேஷன் கங்கா திட்டத்தைத் தொடங்கினோம். இதன்மூலம் தற்போது ரஷ்யா மற்றும்யுக்ரேன் இடையிலான மோதல் நடைப்பெற்று வரும் நிலையில், யூக்ரேனின் பல்வேறு பகுதிகளில் இருந்த மக்களை மீட்டு அழைத்து வருவது பெரும் சவாலான காரியமாக இருந்தது.

    இந்த மீட்பு நடவடிக்கையானது யுக்ரேனில் நடைபெற்ற குண்டுவெடிப்பு மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியிலேயே மேற்கொள்ளப்பட்டது. ஒரு பெரிய நாட்டின் மீதான தாக்குதல் என்பதால் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் நோக்கில் நாட்டின் எல்லை பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகள் கிட்டத்த 26 லட்சம் அகதிகளால் நிரம்பியிருந்தது. இது நிலைமையை மேலும் கடினமாக்கியது,” என்று குறிப்பிட்டார்.

    இந்திய அரசின் முழு ஈடுபாடும் இந்த மீட்பு நடவடிக்கையில் செலுத்தப்பட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோதி தானே தலைமை தாங்கி தினந்தோறும் இதுகுறித்த கூட்டங்களை நடத்தி மீட்பு நடவடிக்கைககள் சரியாக நடப்பதை உறுதி செய்ததாகவும் கூறியவர், இந்திய வெளியுறவுத்துறை 24 மணிநேரமும் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் சம்மபந்தப்பட்ட அமைச்சகங்களும் நிறுவனங்களும் இதற்கு உதவியாக இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

  19. ஹிஜாப் தீர்ப்பு: "தவறாக வழிநடத்தப்பட்ட இஸ்லாமிய மாணவிகளை கல்வியின் பக்கம் திருப்புவேன்" கர்நாடக அமைச்சர் பேச்சு

    ஹிஜாப் தடை தொடர்பான வழக்கின் தீர்ப்பு குறித்துப் பேசிய கர்நாடக அமைச்சர் பி.சி.நாகேஷ், "ஹிஜாப் அணிவதற்கு விதித்த தடைக்கு எதிராக இருக்கும், 'தவறாக' வழிநடத்தப்பட்ட இஸ்லாமிய மாணவிகளின் இதயங்களில் இடம் பிடித்து, அவர்களை, கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வைக்க முயல்வேன்," என்று கர்நாடக அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.

  20. அரசு தொலைக்காட்சியில், போருக்கு எதிராக ரஷ்ய ஊடகவியலாளரின் நூதனப் போராட்டம்

    ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் ஓர் ஊடகவியலாளர் உட்சபட்ச போராட்டத்தை அசாதாரண தைரியத்தோடு செய்துள்ளார். அது உண்மையில் மதிப்பிற்குரியது. தொலைக்காட்சி ஒளிபரப்பின்போது, போர் வேண்டாம் என்ற பதாகையை திரையில் காட்டியுள்ளார்.

    அவர் இதற்காக மிகவும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்.

    ரஷ்ய அதிபர் மாளிகை, அனுமதியற்ற போராட்டங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான தண்டனைகளை விதித்துள்ளது. உதாரணமாக எட்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறலாம்.

    ரஷ்ய ராணுவம் மற்றும் அதன் நடவடிக்கைகளைப் பற்றிய தவறான தகவல்கள் என்று அதிபர் மாளிகை கூறுவதை வெளியிடுபவர்கள், 15 ஆண்டுகள் வரை கடுமையான சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். இன்னும் வேறு பல சட்டங்களும் உள்ளன. அவற்றின் கீழ் இந்தப் பத்திரிகையாளர் மீது வழக்கு தொடரப்படலாம் என்று கருதுகிறோம். என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    இந்த படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் தொடர்கின்றன. கிட்டத்தட்ட 15,000 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    அவர் சந்தேகத்திற்கு இடமின்றி அந்த மக்களுக்கு ஓர் அடையாளமாக மாறுவார். பெரும்பாலும் அரசு தொலைக்காட்சியைப் பார்க்கும் ரஷ்ய அதிபர் மாளிகையின் கொள்கையை நம்பும் ரஷ்யர்களின் பார்வையை அவர் மாற்றுவாரா? அதற்கு பதில் சொல்வது கடினம்.