You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தொடரும் தாக்குதல்: மீண்டும் அடைக்கலம் தேடும் மக்கள் - போர் நிறுத்த ஒப்பந்தம் என்ன ஆனது?

போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், ஷெல் குண்டு தாக்குதல் சத்தம் தொடர்வதாக மேரியோபோலின் துணை மேயர் தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

க. சுபகுணம்

  1. வெளியுறவு துறை அமைச்சரை சந்தித்த தமிழ்நாடு தூதுக்குழு

    யுக்ரேனில் சிக்கிக்கொண்ட தமிழர்களை மீட்க தமிழ்நாடு முதல்வர் நியமித்த தூது குழுவினர், இன்று டெல்லியில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினர்.

    அப்போது தமிழ்நாடு மாநில அரசாங்கம் அமைத்த தூதுக்குழு தங்கள் பயணத்தை ஏற்பாடு செய்யுமாறு வெளியுறவு துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்தனர் அமைச்சரை சந்தித்து பேசியதற்கு பிறகு செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.

  2. "ரஷ்யாவின் தாக்குதல் இரக்கமற்ற செயல்"- மேரியோபோல் மேயர் வாடிம் போய்ச்சென்கோ

    ரஷ்ய படையின் தாக்குதலுக்கு மத்தியில் குடியிருப்போர் வெளியேற கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் யுக்ரேனின் மேரியோபோல் நகர மேயர் வாடிம் போய்ச்சென்கோ.

    ரஷ்ய படையினரால், தற்போது இந்தப் பகுதியில் யாரும் வெளியேற கூடாது என்ற தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இது "இரக்கமற்ற தாக்குதல்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேரியோபோல் துறைமுக நகரம், கடந்த வியாழன் முதல் ரஷ்ய படை வீரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது மற்றும் முன்னதாக மேரியோபோல் நகரின் மேயர் ஏற்கனவே அங்கு ஒரு மனித பேரழிவு ஏற்படக்கூடும் என குறிப்பிட்டிருந்தார். தற்போது மரியுபோல் நகரத்தில் சுமார் 4,50,000 மக்கள் வசிக்கின்றனர்.

    மேலும் கடுமையான பீரங்கி தாக்குதலுக்கு மத்தியில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் அந்தப் பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளது.

    யுக்ரேனின் மிகப்பெரிய துறைமுகங்களில், மேரியோபோல் துறைமுக நகரமும் ஒன்று. இந்த நகரத்தை ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் பட்சத்தில் இது கிரிமியாவையும், ரஷ்ய ஆதரவுடைய பகுதிகளான லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஆகியவற்றையும் இணைப்பதற்கான ஒரு முக்கிய பகுதியாக பார்க்கப்படும் என குறிப்பிடுகிறார்கள்.

  3. யுக்ரேனில் மருத்துவம் படிக்கும் உ.பி. ஊராட்சித் தலைவர்: யார் இந்த வைஷாலி யாதவ்? என்ன சர்ச்சை?

    25 வயதான வைஷாலி யுக்ரேனில் உள்ள இவானோ பிரான்கிவஸ்க் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். ஆனால் அவருக்கு ஒரு அரசியல் அடையாளமும் உண்டு.

    ஹர்தோய் மாவட்டத்தின் விகாஸ் தொகுதியின் சாண்டியில் உள்ள தேரா புர்சௌலி கிராம ஊராட்சித் தலைவராகவும் அவர் உள்ளார். அதாவது, இவர் யுக்ரேனில் எம்பிபிஎஸ் படிக்கும் ஒரு பெண் ஊராட்சித் தலைவர். யார் இந்த வைஷாலி? ஏன் இப்படி செய்கிறார்?

    ரஷ்யாவின் யுக்ரேன் மீதான தாக்குதலையடுத்து, அங்குள்ள நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்கள் உதவி கேட்டு தங்கள் குடும்பத்தினருக்கு வீடியோக்களை அனுப்பி வருகின்றனர். பிப்ரவரி 24 அன்று தனது விமானம் ரத்து செய்யப்பட்ட பிறகு வைஷாலியும் தனது தந்தைக்கு இதே போன்ற வீடியோவை அனுப்பினார்.

    இதில் அவர் கூறியதாவது: "நான் யுக்ரேனின் இவானோ பிரான்கிவஸ்க் தேசிய மருத்துவ பல்கலைக்கழக மாணவி. காலை முதலே இங்கு பீதியான சூழல் நிலவுகிறது. எல்லோரும் அவரவர் இல்லங்களில் அடைபட்டுக்கிடக்கிறோம். யாரும் வெளியே வரமுடியாத அளவுக்கு வெளியே குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் மிகவும் பீதியில் உள்ளனர். எங்கள் பல்கலைக்கழகத்தில் பல இந்திய மாணவர்கள் உள்ளனர்.

  4. ரஷ்ய அரசு ஊடகத்தை ஐரோப்பாவில் தடை செய்த டெலிகிராம் செயலி

    யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் இரு தரப்பு தகவல் மற்றும் தவறான தகவல்களை அனைவருக்கும் கொண்டு செல்வதில் முன்னணியாக டெலிகிராம் செயலி செயல்பட்டு வருகிறது. ரஷ்யாவின் அரசு ஊடகமான ஆர் டி (RT) தங்கள் சேவையை ஐரோப்பாவில் பயன்படுத்துவதை தடுப்பதாக தெரிவித்துள்ளது இந்த செயலி.

    இது சம்பந்தமாக டெலிகிராம் செயலி செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை கூறுகையில், அனைத்து RT சேனல்களும் தடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார். மேலும் ஸ்புட்னிக் போன்ற பிற ஊடகங்கள் பாதிக்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    ரஷ்ய அரசு சார்பு ஊடகங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை அடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், டிக்டாக் ஆகிய சமூக ஊடகங்கள் ஏற்கனவே ஆர்.டி ஊடகத்தை செய்துள்ளன. யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பிரசாரக் கருவியாக டெலிகிராம் செயலி பயன்படுகிறது என்று ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  5. ரஷ்யாவில் ஒளிபரப்பை நிறுத்தும் அமெரிக்க செய்தி நிறுவனங்கள்

    பிபிசியின் அமெரிக்க ஒளிபரப்பு பங்குதாரர் சிபிஎஸ் நியூஸ்(CBS News) மற்றும் ஏபிசி நியூஸ்(ABC) ஆகிய செய்தி நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டை இடை நிறுத்திக்கொண்டன.

    யுக்ரேன் படையெடுப்பு குறித்து "போலி செய்திகளை" பரப்புவோர் மீது 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக கூறும் புதிய சட்டத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.

    புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டம் சுதந்திரமாக செய்திகளை வெளியிடுவதை தடுக்கும்.

    "ரஷ்யாவில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் உருவாக்கியுள்ள சூழ்நிலை காரணமாக இனிமேல் சிபிஎஸ் செய்தி நிறுவனம் அங்கு ஒளிபரப்பு செய்யாது" என்று குறிப்பிட்டுள்ளார் சிபிஎஸ் செய்தித் தொடர்பாளர்.

    அதேபோல ஏபிசி செய்தி நிறுவனம் கூறுகையில், புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள சட்டம், செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்களின் பாதுகாப்பு கருதி தங்கள் சேவையை நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக சிஎன்என்(CNN) மற்றும் ப்ளூம்பெர்க்(Bloomberg) போலவே வெள்ளிக்கிழமை, பிபிசி தங்கள் சேவையை ரஷ்யாவில் நிறுத்தியதாக தெரிவித்தது.

    ரஷ்யாவின் ஊடக கண்காணிப்பு அமைப்பு, முகநூல், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சுயாதீனமாக செயல்படும் நிறுவனங்களை தடைசெய்துள்ளது.

  6. எல்லை தாண்டிய விருந்தோம்பல்: யுக்ரேனிய அகதிகளை வீட்டில் தங்கவைக்கும் போலந்து பெண்

  7. ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை; அது எங்கள் வேலையல்ல: அமெரிக்கா

    "ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை; அது எங்கள் வேலையல்ல," என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

    பிபிசி உலகச் செய்தியிடம் பேசிய அவர், இந்தப் போருக்கு ரஷ்ய மக்கள் தங்கள் தலைமையைப் பொறுப்பாக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

    ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை யாரோ ஒருவர் படுகொலை செய்யவேண்டும் என்று கூறும் விதமாக ட்விட்டரில் அமெரிக்க செனட் உறுப்பினர் லின்சே கிரஹாம் எழுதியது கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் பிளிங்கன்.

  8. புதின் படைகளை அரைத்து தள்ளுவோம், புதைப்போம்: யுக்ரேன்

    புதின் படைகளை அரைத்து நொறுக்குவோம், புதைப்போம் என்று ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார் யுக்ரேன் அதிபரின் ஆலோசகர் அலெக்ஸே அரஸ்டோவிச். ரஷ்ய ராணுவத்தை தாங்கள் வெற்றிகரமாகத் தடுப்பது ஒரு விபத்தோ, அதிருஷ்டமோ அல்ல.

    "நமது வெற்றி ஒரு முறையில் நிகழ்த்தப்படுகிறது. குறிப்பாக உருவாக்கப்பட்டு தெளிவாக செயல்படுத்தப்படும் காரண-விளைவு தொடர்பு அது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப்படைகளும், பொதுமக்களும் காட்டும் எதிர்ப்பு என்பது "ரஷ்யப் போர் இயந்திரத்தை அரைத்துத் தள்ளிவிடும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    "ரஷ்ய ராணுவம் வலிமையானதல்ல. அது பெரியது. அவ்வளவே," என்று அவர் தெரிவித்துள்ளார்.யுக்ரேன் ராணுவமும், தலைமையும் எப்படி இந்தப் போரைக் கையாள்கின்றன என்பதைப் பார்த்து வெளிநாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு பெரிய படையெடுப்பை எதிர்கொள்வதற்குத் திட்டமிட போதிய அவகாசம் இல்லாதபோதும் இத்தகைய வெற்றியை தாங்கள் பெறுவதாக அவர் கூறியுள்ளார்.

    "புதின் ராணுவத்தில் உள்ள 10-ல் 8 பேர் இங்கே இருக்கிறார்கள். இங்கேதான் அவர்கள் புதைக்கப்படுவார்கள்," என்று அவர் கூறினார்.

  9. ரஷ்ய விமானத் தாக்குதல்களுக்கு பச்சைக்கொடி காட்டுகிறதா நேட்டோ? யுக்ரேன் அதிபர் குற்றச்சாட்டு

    யுக்ரேன் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்க தொடர்ந்து மறுப்பதன் மூலம் ரஷ்ய விமானத் தாக்குதல்களுக்கு மேற்கு நாடுகள் பச்சைக்கொடி காட்டுகின்றன என்று யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.

    தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஸெலன்ஸ்கி, ரஷ்யப் படையெடுப்பின் தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மேற்கு நாடுகளின் தலைவர்கள் அறிவார்கள். இந்நிலையில், யுக்ரேன் மீது விமானங்கள் பறக்கத் தடைவிதிக்க மறுப்பதன் மூலம் நகரங்கள், மாநகரங்கள் மீது குண்டு வீச புதினுக்கு அவர்கள் உரிமம் வழங்குகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

    "மேலும் புதிய தாக்குதல்களும், இழப்புகளும் தவிர்க்கமுடியாதவை என்று தெரிந்தும், யுக்ரேன் வான்பரப்பை மூட நேட்டோ வேண்டுமென்றே மறுக்கிறது," என்று கீயவில் இருந்து ஆற்றிய தமது காணொளி உரையில் ஸெலன்ஸ்கி கூறினார்.

    மேற்கின் தயக்கம் ஏன்?

    முன்னதாக பிரசல்ஸ் நகரில் பேசிய நேட்டோ தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், யுக்ரேனில் நிலைமை கொடூரமாக இருப்பதாகவும், ஆனால், நேட்டோ படைகள் வான் வழியாகவோ, நிலம் வழியாகவோ யுக்ரேனுக்குள் நுழையாது என்றும் தெரிவித்தார்.

    யுக்ரேன் வான் பரப்பில் நோ-ஃப்ளை-சோன் (வான் பறப்பில் விமானம் பறக்கத் தடை) அறிவிப்பு வெளியிடப்பட்டால், அதை மீறிப் பறக்கும் ரஷ்யப் போர் விமானங்களை நேட்டோ ஜெட் விமானங்கள் சுட வேண்டி வரும். உடனடியாக மூன்றாம் உலகப் போர் மூளும் என்று மேற்கத்திய ஆட்சியாளர்கள் வாதிடுகிறார்கள்.

  10. நாங்கள் அ.தா.பாலசுப்ரமணியன் மற்றும் லட்சுமிகாந்த் பாரதி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் படையெடுப்பு குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள்டிவிட்டர் கணக்கின் மூலம்தகவல் அளியுங்கள்.நேற்றைய நேரலை பக்கத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்தின் சில முக்கியச் செய்திகள்:

    • யுக்ரேனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலையான ஸாப்போரீஷியா அணு உலை மீது ரஷ்யா ஷெல் குண்டு வீசித்தாக்கியது. அணு உலையில் உள்ள ஒரு கட்டடம் தீப்பற்றி அணைக்கப்பட்டது.
    • அணு உலை மீதான தாக்குதலில் சிலர் உயிரிழந்தனர். அணு உலையை ரஷ்யா கைப்பற்றிவிட்டதாக யுக்ரேன் அறிவித்தது.
    • ஸாப்போரீஷியா அணு உலை மீதான தாக்குதல் செர்னோபிள் அணு உலை விபத்தில் ஏற்பட்டதைப் போல 6 மடங்கு பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் என்று தெரிவித்தார் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி.
    • யுக்ரேனில் ரஷ்ய படையினர் நடத்தி வரும் தாக்குதலின்போது குறைந்தது மூன்று ரஷ்ய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.மோதல் களத்தில் இந்த தளபதிகள் முன்னணியில் படையை வழிநடத்தி வந்ததாக நம்பப்படுகிறது.
    • ரஷ்யாவில் பிபிசி நியூஸ் செயல்பாடுகளை கனத்த இதயத்துடன் நாங்கள் இடைநிறுத்துகிறோம் என்று பிபிசியின் இடைக்கால இயக்குநர் ஜோனாத்தன் மன்ரோ தெரிவித்துள்ளார்.
    • பிபிசி ரஷ்ய சேவை, ஜெர்மனியின், டி.டபிள்யூ டாய்சி வெலி உள்ளிட்ட ஊடகங்களின் சேவைகளுக்கு ரஷ்யாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
    • இந்திய குடிமக்களை மீட்பதற்கான ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ், 14 சிவிலியன் விமானங்கள் மற்றும் 3 C-17 IAF விமானங்கள் உட்பட யுக்ரேனின் அண்டை நாடுகளில் இருந்து 17 சிறப்பு விமானங்கள் இன்று நாடு திரும்பியுள்ளன.
    • ரஷ்ய ஆயுதப்படை குறித்து “போலி” செய்திகளை பரப்புவோரை 15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கும் வகையிலான சட்டம், ரஷ்ய நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.