You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ஸாப்போரீஷியா அணுமின் நிலைய தாக்குதலில் சிலர் உயிரிழப்பு; மேலும் சிலர் காயம்

யுக்ரேனின் ஸாப்போரீஷியா அணுமின் நிலையத்தில் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் யுக்ரேன் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. தொடரும் ஷெல் தாக்குதல்: நெருப்பை அணைக்க, நெருங்க முடியாமல் திணறும் தீயணைப்பு வீரர்கள்

    சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA) ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் ஷெல் தாக்குதல்கள் நடப்பது பற்றிய செய்திகள் தொடர்பாக யுக்ரேனிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டிருப்பதாகக் கூறியுள்ளது.

    அணுமின் நிலையத்தின் செய்தித் தொடர்பாளர், ரஷ்ய படைகள், “கடுமையான தாக்குதலை நிறுத்த வேண்டும்,” என்று சமூக ஊடகங்களில் கேட்டுக் கொண்டார்.

    “ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையத்தில், அணு ஆற்றல் அபாயத்தின் உண்மையான அச்சுறுத்தல் உள்ளது,” என்று ஆண்ட்ரி டூஸ் டெலிக்ராமில் ஒரு காணொளியில் கூறினார் என்கிறது அசோசியேட்டட் பிரஸ் செய்தி முகமை.

    அணுமின் நிலையம் ரஷ்ய படைகளின் நேரடி ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதால், பற்றி எரியும் நெருப்பை அணைக்கை தீயணைப்பு வீரர்களால் செல்ல முடியவில்லை என்றும் டூஸ் கூறினார்.

    மேலும், தீப் பிடித்து எரியும் அணு உலை தற்போது செயல்பாட்டில் இல்லை, அது புதுப்பிக்கப்படுகிறது இருப்பினும், அங்கு அணு உலைக்கான எரிபொருள் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    நாட்டின் மொத்த மின் தேவையில் 25 சதவீதத்தை ஸபோரிஷியா அணு மின் நிலையம் வழங்குவதாகக் கூறப்படுகிறது.

  2. அணு உலையை சுற்றி ராணுவ நடவடிக்கை: என்னென்ன ஆபத்து ஏற்படக்கூடும்?

    யுக்ரேனின் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையத்தின் மீது ரஷ்ய படைகள் “அனைத்து பக்கங்களில் இருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்துகின்றன” என்று கூறியுள்ளார்.

    “ரஷ்ய படைகள் உடனடியாக நெருப்பை அணைக்க வேண்டும். தீயணைப்பு வீரர்களை அனுமதிக்க வேண்டும், பாதுகாப்பு மண்டலத்தை நிறுவ வேண்டும்,” என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    ஓபன் நியூக்ளியர் நெட்வொர்க் என்ற லாப நோக்கமற்ற நிறுவனத்தின் இயக்குநர் லாரா ராக்வூட் பிபிசி ரேடியோ 4-க்குப் பேசியபோது, “அணுசக்தியை நம்பியிருக்கும் யுக்ரேனின் மின்சார கட்டமைப்பில் இந்தப் போர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்,” என்று கூறினார்.

    ஓர் அணு உலையைச் சுற்றி நடக்கும் ராணுவ நடவடிக்கை இரண்டு நேரடி அபாயங்களை ஏற்படுத்தலாம் என்று கூறும் அவர், ஆலையின் உள்கட்டமைப்பு சேதமடைதல், அதன் பணியாளர்களுக்குத் தீங்கு ஏற்படுதல் ஆகியவை முதல் அபாயம், ஆலையின் செயல்பாட்டுத் திறன் பாதிக்கப்பட்டு, அணு உலை உருகும் சாத்தியம் இரண்டாவது மிக மோசமான இரண்டாவது அபாயம் என்கிறார் அவர்.

  3. யுக்ரேன் – ரஷ்யா போர் எப்படி முடிவடையும்? – ஐந்து சாத்தியக்கூறுகள், ஜேம்ஸ் லேண்டேல், ராஜீய செய்தியாளர்

    போர் மேகங்களுக்கு நடுவே, முன்னோக்கிச் செல்வதற்கான வழியைப் பார்ப்பது கடினமாக இருக்கும். இந்தப் போரின் முடிவு எப்படியிருக்கும் என்பது குறித்த சில சாத்தியங்கள் இங்கே உள்ளன. அதில் பெரும்பாலான முடிவுகள் இருண்டவையாகவே உள்ளன.

    1. குறுகிய போர்

    அழிவுகரமான தாக்குதல்களுடன் ரஷ்யா தனது ராணுவத் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரலாம். கீயவ் வீழ்ந்து யுக்ரேனின் அதிபர் கொல்லப்படலாம் அல்லது தப்பி ஓடலாம். ரஷ்யா, அதன் சார்பிலான பொம்மை ஆட்சியை நிறுவக்கூடும். இது ஒரு நிலையற்ற விளைவு, கிளர்ச்சி மற்றும் எதிர்கால மோதல்களால் பாதிக்கப்படக் கூடியதாக இருக்கும்.

    2. நீண்ட போர்

    இதற்கான சாத்தியங்கள், ஒருவேளை அதிகமாக இருக்கலாம். மன உறுதி குறைவது மற்றும் மோசமான தளவாடங்களுடன் ரஷ்ய படைகள் சிக்கிக்கொள்ளலாம். கைப்பற்றப்பட்ட நகரங்களைக் கூட அவை கட்டுப்படுத்தப் போராடலாம். அதே நேரத்தில் மேற்கு நாடுகள் தொடர்ந்து ஆயுதங்களை வழங்கலாம். ஒருவேளை பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா இறுதியில் வெளியேறலாம்.

    3. ஐரோப்பிய போர்

    நேட்டோவின் உறுப்பினராக இல்லாத மால்டோவா மற்றும் ஜார்ஜியா போன்ற முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கு புதின் படைகளை அனுப்ப முடியும். தனது தலைமையைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி என்று புதின் கருதினால் இதைக் கையில் எடுக்கலாம். ஒருவேளை அவர் தோல்வியை எதிர்கொண்டால், அது அவரை மேலும் அதிகமாகச் செயலாற்றத் தூண்டலாம்.

    4. ராஜீயத் தீர்வு

    ஏற்கெனவே பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டதன் மூலம், அவர்கள் அதிக முன்னேற்றம் அடையவில்லை. இருப்பினும் புதின் குறைந்தபட்சம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியத்தை ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. போர் அவருடைய தரப்புக்கு மோசமாகச் சென்றால், அதைத் தொடர்ந்து கொண்டு செல்வது, அவரின் தலைமைக்குப் பெரிய அச்சுறுத்தல் என்று கருதி அதை முடிவுக்குக் கொண்டுவர நினைக்கலாம்.

    5. புதின் வெளியேற்றப்படலாம்

    இப்படியொரு முடிவு சிந்திக்க முடியாத ஒன்றாகத் தோன்றலாம். ஆனால், சமீப நாட்களில் உலகம் மாறிவிட்டது. போர் ரஷ்யாவிற்கு பேரழிவை ஏற்படுத்தினால், மக்கள் புரட்சி செய்யும் அச்சுறுத்தல் ஏற்படலாம். புதினிடம் இருந்து பயனடைந்தவர்கள், இனி அவரால் தங்கள் நலன்களைப் பாதுகாக்க முடியாது என்று கருதினால், அத்தகைய விளைவு நம்ப முடியாததாக இருக்காது.

  4. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ விபத்து

    ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரஷ்ய மற்றும் யுக்ரேனிய படைகளிடையே நடந்த சண்டை காரணமாக இது இருக்கலாம்.

    அருகிலுள்ள எனர்ஹோடர் நகரின் மேயர் டிமிட்ரோ ஓர்லோ “(அணு உலையின்) கட்டடங்கள் மற்றும் உலைகளின் மீது எதிரியின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களால்” இது ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

    தென்கிழக்கில் உள்ள தனது நகரத்தின் புறநகரில் யுக்ரேனிய மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையே கடுமையான சண்டை நடந்ததாக ஓர்லோவ் முன்பு தெரிவித்திருந்தார்.

    ரஷ்ய படையினர் நகருக்குள் டாங்கிகளில் நுழைந்து அணுமின் நிலையத்தைக் கைப்பற்ற முயன்றனர். ஆனால், மக்களும் தொழிலாளர்களும் புதன்கிழமை அணுமின் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் திரண்டிருப்பதைக் காண முடிந்தது.

    யுக்ரேனில் ஸபோரிஷியா உட்பட நான்கு அணு உலைகள் உள்ளன.

    இப்போது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள செர்னோபிள் போன்ற தளங்களில் உள்ள அணுக் கழிவுகளையும் இது கையாள்கிறது.

    “தற்போதைய கடினமான சூழ்நிலையில் அணுசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்கு முயல்வதால், நாட்டிற்கு அதிகபட்ச உதவிகளை வழங்கும் நோக்கில் யுக்ரேனுடனும் மற்ற நாடுகளுடனும் ஆலோசித்து வருவதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் முன்னதாகக் கூறியது.

  5. வணக்கம் நேயர்களே!

    நான் க.சுபகுணம். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் படையெடுப்பு குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள்டிவிட்டர் கணக்கின் மூலம்தகவல் அளியுங்கள்.நேற்றைய நேரலை பக்கத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்தின் சில முக்கியச் செய்திகள்:

    ·யுக்ரேனில் உள்ள செர்னிவ் நகரில் நடந்த வான் தாக்குதலில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ·ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என யுக்ரேன் பிரதிநிதி மிகெய்லோ போடோல்யாக் தெரிவித்துள்ளார்.

    ·யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் தங்களுக்கு போர் விமானங்களை அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

    ·படைவிலக்கல் மற்றும் நடுநிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் யுக்ரேனில் மேற்கொள்ளப்படும் ரஷ்ய ராணுவ நடவடிக்கையின் நோக்கங்கள் நிறைவேற்றப்படும் என்று பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கிடம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

    ·ரஷ்ய படைகள் யுக்ரேனின் கெர்சன் நகரில் உள்ள பிராந்திய நிர்வாக கட்டடத்தை முழுவதுமாக கைப்பற்றியுள்ளன. இதனை நிர்வாக தலைவர் ஹென்னடி லஹுடா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    ·படையெடுப்பு தொடங்கியதிலிருந்து சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் யுக்ரேனைவிட்டு வெளியேறிவுள்ளதாக ஐ.நா தெரிவித்திருந்தது.

    தங்களது குடிமக்களை ரஷ்யாவைவிட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது பிரான்ஸ்.

    தொடர்ந்து இணைந்திருங்கள்.