You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ஸாப்போரீஷியா அணுமின் நிலைய தாக்குதலில் சிலர் உயிரிழப்பு; மேலும் சிலர் காயம்

யுக்ரேனின் ஸாப்போரீஷியா அணுமின் நிலையத்தில் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் யுக்ரேன் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. யுக்ரேன் மோதல்: புதினுக்கு நிழலாக விளங்கும் உள் வட்டாரம் - அறியப்படாத தகவல்கள்

      • எழுதியவர், பால் கிர்பி
      • பதவி, பிபிசி செய்திகள்

    விளாதிமிர் புதின் இப்போது ஒரு தனி மனிதராக நின்று ரஷ்ய ராணுவத்தை மிக ஆபத்தான போர்ச் சூழலுக்கு இட்டுச் செல்கிறார், இது அவரது நாட்டின் பொருளாதாரத்தையே சீரழிக்கும் அச்சுறுத்தலாக முன் நிற்கிறது.

    அவர், அண்மையில் நடந்த இரண்டு ஆலோசனைக் கூட்டத்தில் தனக்கு மிகவும் நெருக்கமான ஆலோசகர்களிடமிருந்தும் இடைவெளி விட்டே அமரிந்திருந்த காட்சிகள் வெளியாயின.

  2. ரஷ்ய ராணுவம் குறித்து போலி செய்தி பரப்பினால் சிறை: மசோதா நிறைவேற்றிய ரஷ்யா

    ரஷ்ய ஆயுதப்படை குறித்து “போலி” செய்திகளை பரப்புவோரை சிறையில் அடைக்கும் வகையிலான சட்டம், ரஷ்ய நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இந்த சட்ட மசோதாவுக்கு 401 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர், யாரும் எதிராக வாக்களிக்கவில்லை என்றும், யாரும் வாக்களிக்காமல் விலகி இருக்கவில்லை என்றும் இன்டர்ஃபேக்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    இந்த மசோதாவுக்கு நாளை மேலவையில் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

    இதற்கு ஒப்புதல் பெறப்பட்டு சட்டம் நடைமுறைக்கு வந்தால், வேண்டுமென்றே ரஷ்யாவின் ஆயுதப்படைகள் குறித்து தீவிர விளைவுகளை உருவாக்கும் பொய்யான தகவல்களை பரப்புவோரிடம் அபராதம் வசூலிக்கவும் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறவும் முடியும் என மக்களவை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  3. ரஷ்யா கைப்பற்றிய முதல் நாளில் ஹெர்சான் நகரம் எப்படியிருக்கிறது?

    ரஷ்யா கைப்பற்றிய பிறகு, தன் நகரத்தை எச்சரிக்கை உணர்வுடன் தாராஸ் பார்த்தபோது, சாலையில் ராணுவ வாகனங்கள் இருந்ததையும், ஆனால், ரஷ்ய படையினர் அங்கு இல்லாததையும் அவர் கண்டார்.

    யுக்ரேனின் தெற்கில் அமைந்துள்ள துறைமுக நகரமான கேர்சன், ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கு தொடரும் தீவிர சண்டைக்குப் பிறகு ரஷ்யா கைப்பற்றிய முதல் பெரிய நகரமாகும்.

    ஆனால், தாராஸ் (உண்மையான பெயர் அல்ல) பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில் கூறுகையில், இன்று பல்பொருள் அங்காடிக்கு வெளியே வரிசையில் நின்றிருந்த சுமார் 200 பேரிடம் நம்பிக்கை நிலவியதாக தெரிவித்தார்.

    30-40 நிமிடங்களுக்குப் பின் தன்னால் இறைச்சியை வாங்க முடிந்ததாகவும், ஆனால், கடந்த சில தினங்களாக தன் நண்பர்கள் இரண்டு அல்லது மூன்று மணிநேரங்கள் காத்திருந்தார்கள் என்றும் தெரிவித்தார்.

    “அவர்களிடையே நம்பிக்கை மற்றும் ஆற்றல் இருந்ததை நான் கவனித்தேன். இன்னும் சில தினங்கள் அல்லது வாரங்களில் இது விரைவாக முடிவுக்கு வரும் என அவர்கள் நம்புகின்றனர்.

    “குறிப்பாக, பெண்கள், யுக்ரேன் ராணுவம் குறித்து பெருமையாக உணர்வதை பார்த்து நான் ஆச்சர்யப்படுகிறேன். யுக்ரேன் படையினர் இங்கு வருவார்கள், நாம் அவர்களை (ரஷ்ய படையினரை) கொல்வோம், பின்னர் பழைய நிலை திரும்பும் என அவர்கள் கூறுகின்றனர்” என்றார்.

    அவர்களின் நம்பிக்கை தாராஸிடமும் இருக்கிறதா என கேட்கும்போது, “நிச்சயமாக” என்றும், கேர்சன் குடிமக்கள் 95 சதவீதத்தினரிடம் நம்பிக்கை நிலவுவதாகவும் தெரிவித்தார்.

    “எங்கள் நகரத்தில் யுக்ரேன் தேசிய கொடிதான் இருக்கும் என எங்களின் மேயர் தெரிவித்துள்ளார். அதனால், தற்போது இந்த நகரத்திற்குள் இருக்கும் ரஷ்ய படையினருக்கு எவ்வித திட்டங்கள் இருப்பதாகவும், எதற்காகவோ அவர்கள் காத்திருப்பதாகவும் நான் நினைக்கவில்லை என்றார்.

    “குண்டு தாக்குதலால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, அடுத்த சில தினங்கள் நாங்கள் வாழ்வதற்கு முயற்சி செய்வோ” என்றார்.

  4. யுக்ரேன் Vs ரஷ்யா: வான் தாக்குதலால் செரினிஹீவில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

    யுக்ரேனின் செரினிஹீவில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதல்களில் 47 பேர் உயிரிழந்ததாக அப்பகுதி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று அதிகமான ஷெல் தாக்குதல்கள் காரணமாக, மீட்புப்பணிகள் நிறுத்தப்பட்டதாக உள்ளூர் அவசர சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

    ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து, அப்பகுதியில் இதுவரை 148 பேர் பலியானதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் குடிமக்கள் எனவும் உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    யுக்ரேனின் வடக்கு பகுதியில் உள்ள செரினிஹீவில் 3,00,000 பேர் உள்ளனர். இந்நகரம் ரஷ்யா மற்றும் பெலாரூஸ் எல்லைகளுக்கு அருகில் உள்ளது.

  5. யுக்ரேன்: ஏவுகணை தாக்குதல்களால் ஏற்பட்ட அழிவுகளை விளக்கும் புகைப்படங்கள்

    ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்கள், யுக்ரேன் முழுவதும் நகரங்கள், கிராமங்களை அழித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு முன்பும், தாக்குதலுக்குப் பின்பும் அந்த பகுதிகளின் புகைப்படங்கள் அங்கு ஏற்பட்டுள்ள சேதத்தை விளக்குவதாக அமைந்துள்ளது.

  6. “அணுமின் நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியது ஒட்டுமொத்த உலகுக்கும் கவலையான விஷயம்”

    ரஷ்ய படை கைப்பற்றிய அணு உலை இருக்கும் ஸிப்போரிஷியாவில் வாழ்ந்துவரும் நடன ஆசிரியர் ஒருவர் பிபிசியிடம் பேசினார்.

    பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஸிப்போரிஷியா அணுமின் நிலையத்தில் ரஷ்ய ராணுவம் இரவு முழுவதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதை தான் கண்டதாக தெரிவித்தார்.

    “அங்குள்ள கட்டடம் ஒன்றில் தீப்பிடித்தது எனக்குத் தெரியும். நல்லவேளையாக, அது அணுஉலை அல்ல. அங்குள்ள மக்கள் மீதான தாக்குதல் அது. அதுவும் கெட்ட செய்திதான், ஆனால், குறைந்தபட்சம் அணு உலைக்கு ஆபத்து இல்லை,” என்றார்.

    “எங்கள் பகுதிக்கு மட்டும் இது கவலையான விஷயம் அல்ல. எனக்குத் தெரிந்தவரையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலைகளுள் இதுவும் ஒன்று என்பதால், யுக்ரேனுக்கும் ஒட்டுமொத்த உலகத்திற்கும் இது கவலைக்குரிய விஷயம்.

    “இது பைத்தியக்காரத்தனமானது, பயங்கரவாதம். இதனை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இதுகுறித்து உலகம் ஏதாவது செய்ய வேண்டும்” என்றார்.

    தனக்கு ரஷ்யாவில் குடும்பமும் நண்பர்களும் உள்ளதாகவும், அங்குள்ளவர்கள் இரு குழுக்களாக பிரிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யுக்ரேனில் புதின் அமைதி காக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என மூளைச்சலவை செய்யப்பட்டவர்களும் மறுபுறம் “மிகவும் அச்சத்திலும் அவமானத்திலும் இருப்பவர்கள்” என்றார்.

  7. வேக்யூம் வெடிகுண்டை கையில் எடுத்ததா ரஷ்யா? தெர்மோபரிக் ஆயுதம் என்றால் என்ன?

    வேக்யூம் வெடிகுண்டை கையில் எடுத்ததா ரஷ்யா? தெர்மோபரிக் ஆயுதம் என்றால் என்ன? இந்த காணொலியை காணுங்கள்:

  8. யுக்ரேன் போர்: அணு ஆயுத அபாயம் எந்த அளவுக்கு இருக்கிறது?

      • எழுதியவர், கோர்டன் கொரேரா
      • பதவி, பாதுகாப்புத் துறை செய்தியாளர், பிபிசி நியூஸ்

    கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரஷ்ய அதிபர் புதின் ரஷ்யாவின் "அணு ஆயுத தடுப்புப் படைகளை" ஒரு "சிறப்பு போர்ச் சூழலுக்கு" நகர்த்துமாறு தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் அதன் பொருள் என்ன?

    இது தெளிவாக இல்லை என்று மேற்கத்திய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ரஷ்ய அணு ஆயுதங்களுக்கான தயார் நிலைகள் பற்றிய தங்களின் புரிதலுடன் புதின் பயன்படுத்திய மொழி சரியாகப் பொருந்தவில்லை என்று பிரிட்டன் அதிகாரிகள் கூறுகின்றனர்.

  9. விளாதிமிர் புதின்: யுக்ரேன் மீது படையெடுக்கும் இந்த ரஷ்ய அதிபர் யார்?

    ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். யுக்ரேன் மீதான படையெடுப்பால் பலரையும் இவர் திகைக்க வைத்திருக்கலாம். 2014 இல் கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைத்தற்குப்பிறகு இந்தப்பிராந்தியத்தில் அவர் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய நடவடிக்கையாகும் இது. ஆனால் ரஷ்ய செல்வாக்கை மீண்டும் ஏற்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் ஒருபோதும் ரகசியமாக வைத்திருக்கவில்லை.

  10. ஸ்டார் லிங்க் அதிவேக இணைய சேவை பாதிக்கப்பட வாய்ப்பு: ஈலோன் மஸ்க் எச்சரிக்கை

      • எழுதியவர், ஜேம்ஸ் கிளேடன்
      • பதவி, வட அமெரிக்க தொழில்நுட்ப செய்தியாளர்

    யுக்ரேனில் உள்ள தங்கள் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் அதிவேக இணைய சேவை இலக்கு வைக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக, ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    யுக்ரேனின் சில பகுதிகளில் அந்நிறுவனத்தின் இணைய வேகம் குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    “பயனர்கள் தேவைப்படும்போது மட்டுமே ஸ்டாலிங்க்கை இயக்க வேண்டும். மேலும், ஆண்டெனாவை தங்களிடமிருந்து எந்தளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு தொலைவில் வைக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

    செயற்கைக்கோள் சமிக்ஞைகளைப் பெறும் சாதனங்கள் ரஷ்ய வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காகக்கூடும் என்று இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் எச்சரித்த சில நாட்களுக்குப் பிறகு ஈலோன் மஸ்க் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

  11. ஸிப்போரிஷியா அணு மின் நிலையத்தை ரஷ்ய படை கைப்பற்றியது: யுக்ரேன்

    ஸிப்போரிஷியா அணு மின் நிலையத்தை ரஷ்ய படையினர் கைப்பற்றியதாக, யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    "அணு உலையை இயக்கும் பணியாளர்கள் மின் அலகுகளின் நிலையை கண்காணித்து வருகின்றனர்" என்று உள்ளூர் அதிகாரி ஒருவர், சமூக ஊடகங்களில் தெரிவித்ததாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை மேற்கோள் காட்டியுள்ளது.

    அணுமின் நிலைய பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், மின் அலகுகளின் நிலையை கண்காணித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரஷ்யாவின் ஷெல் தாக்குதலுக்குப் பிறகு, ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஸிப்போரிஷியா அணு மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

  12. யுக்ரேன் - ரஷ்யா படையெடுப்பின் 9-வது நாளில் இதுவரை நடந்தது என்ன?

    யுக்ரேன் நெருக்கடி தொடர்பான பிபிசி தமிழின் இன்றைய நேரலைப் பக்கத்துக்கு இப்போதுதான் வருகிறீர்களா? அப்படியானால், யுக்ரேனில் ரஷ்யா நடத்தி வரும் படையெடுப்பில் இன்று இதுவரை நடந்தது என்ன என்பதை சுருக்கமாகத் தொகுத்து அளிக்கிறோம்.

    • ரஷ்யாவின் ஷெல் குண்டு தாக்குதலில் ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஸிப்போரிஷியா அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. யுக்ரேன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
    • யாரும் தீ விபத்தில் பாதிக்கப்படவில்லை என்றும் இது அணு உலையை பாதிக்கவில்லை, ஆனால் அருகிலுள்ள ஐந்து மாடி பயிற்சி தளம் சேதமடைந்துவிட்டது என்றும் யுக்ரேனின் அவசர கால சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • அணு உலை மீதான ரஷ்யத் தாக்குதலை மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் உடனடியாக கண்டித்தனர். அவர்கள் அதை "பயங்கரமான" "பொறுப்பற்ற" செயல் என்று குறிப்பிட்டனர். இது ஐரோப்பா முழுவதற்குமான அச்சுறுத்தலாக இருந்தது.
    • யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி சில மணிநேரங்களுக்கு முன்பு புதினின் "அணுசக்தி பயங்கரவாதத்திற்கு" எதிராகக் கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
    • 1986 செர்னோபில் அணு உலை விபத்தைப் போன்ற உலகளாவிய பேரழிவு ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு தற்போது இருப்பதாகக் கூறிய ஸெலன்ஸ்கி, “விழித்துக் கொள்ளுமாறு” அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார், மேலும் அணுமின் நிலையத்தின் மீது குண்டுவீச முயன்ற முதல் நாடு ரஷ்யா என்றும் அவர் கூறினார்.
    • ஒரு மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் யுக்ரேனில் இருந்து இதுவரை வெளியேறியுள்ளனர். ரஷ்யாவும் யுக்ரேனும் குடிமக்களை வெளியேற்ற "மனிதாபிமான வளாகங்களை" நிறுவ ஒப்புக் கொண்டுள்ளன.
  13. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன்.இதுவரை க.சுபகுணம் வழங்கிக்கொண்டிருந்த நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் படையெடுப்பு குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

  14. யுக்ரேன் கடல் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் மூழ்கிய சரக்குக் கப்பல்

    யுக்ரேன் கடற்பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து எஸ்தோனிய சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியதாக, அந்தக் கப்பலின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    கப்பல் குழுவில் இருந்த இருவர், உயிர் காக்கும் படகில் தப்பித்துள்ளனர். நான்கு பேரைத் தொடக்கத்தில் காணவில்லை. பிறகு அவர்கள் ஆறு பேரும், உள்ளூர் யுக்ரேனிய மீட்புப் படையினரால் மீட்கப்பட்டார்கள்.

    பனாமா கொடி ஏந்திய அந்த சரக்குக் கப்பல், எஸ்தோனியாவைச் சேர்த விஸ்டா கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமானது. பால்டிக் நாடான எஸ்தோனியா நேட்டோவில் உறுப்பினராக உள்ளது. அதோடு ரஷ்ய எல்லையில் அமைந்துள்ளது.

    பல நாட்களுக்கு முன்பு ஒடெஸ்ஸாவுக்கு அருகிலுள்ள சோர்னோமோர்ஸ்க் என்ற தெற்கு துறைமுகத்தில் இருந்து கிளம்பிய பின்னர், கப்பல் யுக்ரேன் கடற்கரையில் நங்கூரமிடப்பட்டது. கப்பல் மூழ்குவதற்குக் காரணமாக இருந்த குண்டுவெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

    சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கும் ஒடெஸ்ஸா நகரத்தையும் அதன் துறைமுகத்தையும் கைப்பற்ற நீரிலும் நிலத்திலும் சண்டைக்கு ஆதரவாக இருக்க வல்ல, தரையிறங்கும் வசதிகளைத் தரக்கூடிய கப்பல்களை ரஷ்யா அனுப்புவதாகவும் தெற்கு யுக்ரேனில் ரஷ்ய படைகள் முன்னேறி வருவதாகவும் யுக்ரேனிய ராணுவம் தெரிவித்துள்ளது.

  15. அணுமின் நிலையத்தில் பற்றிய தீ: நடந்தது என்ன?

    ஸப்போரிஷியா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட நெருப்பை அணைத்துவிட்டதாக யுக்ரேன் அவசரகால சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அந்தப் பகுதியிலும் அதைத் தாண்டியும் வாழும் மக்களுக்குப் பெரிய ஆறுதலான தகவல் இது.

    இன்று அதிகாலையில், இந்த யுக்ரேன் அணுமின் நிலையத்தின் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதலால், அங்கிருந்த கட்டடங்களில் ஒன்றான ஐந்து மாடி பயிற்சி கட்டடம் தீப்பிடித்தது. அணு உலைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், நெருப்பை விரைவில் கட்டுப்படுத்தாவிட்டால் அணு உலைக்கு தீ பரவக்கூடும் என்று அச்சம் ஏற்பட்டது.

    யுக்ரேனிய அவசரகால சேவை அதிகாரிகள் தொடக்கத்தில், அணுமின் நிலையத்தை அணுக முடியாத வகையில் தடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். ஆனால், உள்ளூர் நேரப்படி, 5:20 மணிக்கு, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கத் தொடங்கி, சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்குப் பின்னர், தீ அணைக்கப்பட்டது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

  16. யுக்ரேன்: அணுமின் நிலைய தாக்குதலுக்குப் பிறகு ஆசிய பங்குகள் வீழ்ச்சி

    ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான, யுக்ரேனில் உள்ள ஸப்போரிஷியா அணுமின் நிலையத்தில், இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து ஆசியாவில் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்துள்ளன.

    டோக்கியோ மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தைகள் மிகுந்த வீழ்ச்சியை எதிர்கொண்டன. ஜப்பானின் முக்கியக் குறியீடான நிக்கேய் 2.5% குறைந்தது. ஹாங்காங்கில் ஹாங் செங் 2.6% குறைந்தது.

    காலை வணிகத்தின் போது, ஆசியாவில் எண்ணெய் விலை உயர்ந்தது. ப்ரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 112 டாலருக்கும் மேல் உயர்ந்துள்ளது.

    ரஷ்ய படைகள் அணுமின் நிலையத்தின் மீது ஷெல் குண்டு வீசியதைத் தொடர்ந்து இந்தத் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி, பிபிசி ரஷ்ய சேவைக்கு கட்டுப்பாடு விதித்த ரஷ்யா

    ரஷ்ய தகவல் தொடர்பு அதிகாரிகள், பிபிசி ரஷ்ய சேவையின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தியுள்ளனர் என்று அரசுக்குச் சொந்தமான ஆர்.ஐ.ஏ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    மேலும், மெடுசா, ரேடியோ லிபர்ட்டி ஆகிய இரண்டு செய்தி நிறுவனங்கள் சேவையைத் தொடர தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த முகமை கூறுகிறது.

  18. வந்துகொண்டிருக்கும் செய்தி, அணு உலை அருகே சண்டை நின்றது, தீ அணைக்கப்பட்டது

    யுக்ரேன் ஸப்போரிஷியா அணு மின் நிலையம் அருகே நடந்துகொண்டிருந்த சண்டை நிறுத்தப்பட்டுள்ளதாக எனர்கோடார் நகர மேயர் டிமிட்ரோ ஓர்லோவ் கூறியதாக பிபிசி யுக்ரேனியன் சேவை கூறுகிறது.

    ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையமான ஸப்போரிஷியா அணு மின் உலையில் ஆர்ட்டிலரி ஷெல் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டது. முதலில் தீயணைப்பு வீரர்கள் அணுக முடியாததாக அந்த இடம் இருந்தது. பிறகு தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்தை அணுக முடிந்தது.

    அணு உலை மீது பல மணி நேரம் நடந்த தொடர் குண்டு வீச்சுக்குப் பிறகு தற்போது அங்கே சண்டை நின்றுவிட்டதாக நகர மேயர் அறிவித்துள்ளார். அணு உலை வளாகத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் மூன்று, நான்கு, ஐந்தாவது தளங்களில் இந்த தாக்குதலால் தீப்பற்றி எரிந்ததாக யுக்ரேன் அவசரகால சேவை அதிகாரிகள் கூறினர்.

    ஆனால் அணு உலையில் ஏற்பட்ட தீயை அணைத்துவிட்டதாக யுக்ரேன் அவசரகால சேவை அதிகாரிகள் தற்போது தெரிவிக்கின்றனர்.

    "ஸப்போரிஷியா அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட தீயானது உள்ளூர் நேரப்படி 6.20 மணி அளவில் அணைக்கப்பட்டது. இதனால், யாரும் பாதிக்கப்படவில்லை," என யுக்ரேன் அரசு அவசரகால சேவை தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் கூறியுள்ளது.

  19. தயார் நிலையில் அமெரிக்காவின் அணுசக்தி சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றும் குழு

    ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து யுக்ரேனின் எரிசக்தி அமைச்சரிடம் பேசியதாகவும் அமெரிக்காவின் அணுசக்தி சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றும் குழுவை தயார் நிலையில் வைப்பதாகவும் அமெரிக்க எரிசக்தி செயலர் ஜெனிஃபர் கிரான்ஹோம் ட்வீட் செய்துள்ளார்.

    “அணுமின் நிலையத்திற்கு அருகில் ரஷ்யா ராணுவ தாக்குதல்களை நடத்துவது பொறுப்பற்ற செயல், அது நிறுத்தப்பட வேண்டும்,” என்று அமெரிக்க அணு ஆயுதக் கிடங்கை மேற்பார்வையிடும் கிரான்ஹோம் கூறியுள்ளார்.

    மேலும், “அணுமின் நிலையத்தின் உலைகள் வலுவான கட்டுப்பாட்டு கட்டமைப்புகளால் பாதுகாக்கப்படுகின்றன,” என்றும் அவர் கூறினார்.

  20. போர் பற்றி குழந்தைகளிடம் எப்படிப் பேசவேண்டும்?

    உங்கள் பிள்ளையின் வயதைப் பொருத்து, போர் பற்றி பேசுவது கடினமாகவோ அல்லது பொருத்தமற்றதாகவோ தோன்றலாம். ஆனால் இதை ஒட்டுமொத்தமாகத் தவிர்ப்பதால் குழந்தைகள் குழப்பமாகவும், தனிமையாகவும் உணரலாம், மேலும் பயத்திற்கும் இது வழிவகுக்கும். இது காலப்போக்கில் அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

    பள்ளியில் அவர்கள் படித்த, பார்த்த அல்லது கேட்டதை புரிந்துகொள்ள உதவ, குழந்தைகளுடன் வெளிப்படையான மற்றும் நேர்மையான உரையாடல்களை நடத்துவது முக்கியம்.

    தாங்கள் சொல்வதை மற்றவர்கள் செவிமடுக்க வேண்டும் என்று குழந்தைகள் விரும்புவார்கள். அவர்கள் உணர்வது சாதாரணமானதுதான் என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.இந்த செய்தியை முழுமையாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.