You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ரஷ்ய தாக்குதல்: அதிகரிக்கும் மனிதாபிமான நெருக்கடி - பேச்சுக்கு அழைக்கும் ஸெலென்ஸ்கி

படைவிலக்கல் மற்றும் நடுநிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் யுக்ரேனில் மேற்கொள்ளப்படும் ரஷ்ய ராணுவ நடவடிக்கையின் நோக்கங்கள் நிறைவேற்றப்படும் என்று பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கிடம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

விஷ்ணுப்ரியா ராஜசேகர்

  1. ஸ்வீடன் வான் பரப்பில் அத்துமீறிய 4 ரஷ்யப் போர் விமானங்கள்

    ஸ்வீடன் வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறி புதன்கிழமை 4 ரஷ்யப் போர் விமானங்கள் தங்கள் வான் பரப்பில் நுழைந்ததாக ஸ்வீடன் ஆயுதப் படைகள் தெரிவிக்கின்றன.

    நேட்டோ உறுப்பினர் அல்லாத இந்த ஸ்கான்டினேவியன் நாடு தங்கள் வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் நுழைய திங்கள்கிழமை தடை விதித்தது. ஐரோப்பிய நாடுகள் எடுத்த இதே போன்ற தடையைத் தொடர்ந்து ஸ்வீடனும் இத்தகைய தடையைப் பிறப்பித்தது.

    நடந்ததாக சொல்லப்படும் இந்த அத்துமீறலை கண்டித்து ஸ்வீடன் ராணுவம் அறிக்கை வெளியிட்டது.

    "இது தொழில்முறையற்ற வேலை, பொறுப்பற்ற செயல்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், பால்டிக் கடலில் நடந்ததாக சொல்லப்படும் இந்த அத்துமீறல் சிறுது நேரமே நீடித்ததாக அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

  2. ரஷ்யத் தாக்குதல்: இர்பின் நகரில் நாசமான குடியிருப்பு பகுதி

    கடந்த வாரம் யுக்ரேன் மீதான ரஷ்யத் தாக்குதல் தொடங்கியதில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் இர்பின் என்ற யுக்ரேனிய நகரம் நாசமானது என்கிறார்கள் யுக்ரேன் அதிகாரிகள்.

    தலைநகர் கீயவ் அருகே உள்ள இந்த நகரின் ஒரு குடியிருப்புப் பகுதி சமீபத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு முன்பும், தற்பொழுதும்.

  3. கீயவ் நகரில் 4 குண்டு வெடிப்புகள் - அதிர்ந்த நகரம்

    ரஷ்யப் படையெடுப்பின் உக்கிரத்தை சந்தித்து வருகிறது யுக்ரேன் தலைநகர் கீயவ். அந்நகரில் வியாழக்கிழமை அதிகாலை அடுத்தடுத்து நான்கு வெடிகுண்டுகள் வெடித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    இந்த குண்டு வெடிப்புகளால் நகரமே அதிர்ந்துள்ளது.

    மிகவும் சக்திவாய்ந்த இந்த வெடிகுண்டுகளில் ஒன்று சிட்டி சென்டரிலும் மேலும் இரண்டு ஒரு மெட்ரோ ரயில் நிலையம் அருகிலும் வெடித்துள்ளன. விமானத் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் சைரன்கள் அலறியபடியே இருந்தன.

    திறந்தநிலை உளவுத் தகவல்களை வழங்கும் OSINTtechnical என்ற டிவிட்டர் கணக்கு, ஒரு குண்டுவெடிப்பு தொடர்பான விடியோவை வெளியிட்டுள்ளது. இந்த விடியோவை பிபிசி சுயாதீனமாக சரிபார்க்கவில்லை. அந்த வீடியோவை இந்த ட்வீட்டில் காணலாம்:

  4. வணக்கம் நேயர்களே!

    நான் அ.தா.பாலசுப்ரமணியன். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் படையெடுப்பு குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள்டிவிட்டர் கணக்கின் மூலம்தகவல் அளியுங்கள்.நேற்றைய நேரலை பக்கத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்தின் சில முக்கியச் செய்திகள்:

    • யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை கைவிட்டு தமது படைகளை ரஷ்யா திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தும் ஐ.நா தீர்மானத்துக்கு மொத்தமுள்ள 193 நாடுகளில் 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. இந்தியா, சீனா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
    • மூன்றாம் உலக போர் அழிவுகரமான, அணு ஆயுத யுத்தமாக இருக்கும் என்று தெரிவித்தார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்
    • யுக்ரேனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசியில் பேசியதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
    • யுக்ரேனின் மரியூபோல் நகரில் ரஷ்யா நடத்திய இடைவிடாத தாக்குதல்களால் நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
    • அமெரிக்க வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் தடை செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி செய்தார்.
    • யுக்ரேன் தலைநகர் கீயவுக்கு மேற்கில் உள்ள ஜைட்டோமைர் நகரின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக யுக்ரேன் அரசு அவசரகால சேவை கூறியது.
    • யுக்ரேனின் கெர்சன் நகரில் சண்டை நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் அந்நகர மேயர். அந்நகரைப் பிடித்துவிட்டதாகப் பின்னர் அறிவித்தது ரஷ்யா.
    • ஐரோப்பிய விமான நிறுவனமான விஸ் ஏர் (Wizz Air), யுக்ரேனிய அகதிகளுக்கு, அவர்களின் குறுகிய தூர விமானங்களில் 1,00,000 பேருக்கு இலவச இருக்கைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
    • கார்கிவ் மற்றும் கிழக்கு யுக்ரேனின் பிற பகுதிகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் விஷயத்தில் நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.
    • ரஷ்யாவில் உள்ள ஆரம்பப் பள்ளிக் குழந்தைகள், யுக்ரேனிய தூதரகத்தில் பூக்களை வைத்ததற்காகவும், " போர் வேண்டாம்" என்று பதாகைகள் வைத்திருந்ததற்காகவும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக செய்திகள், புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.