யுக்ரேனில் ரஷ்ய படையெடுப்பால், அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை மீட்குமாறு இந்திய விமானப்படைக்கு பிரதமர் நரேந்திர மோதி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, யுக்ரேனில் உள்ள இந்தியர்களை மீட்டு வருவதற்கான ஆபரேஷன் கங்காவின் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படையின் C-17 குளோப்மாஸ்டர் விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
பிப்ரவரி 24ஆம் தேதி முதல் யுக்ரேனின் வான் பகுதி மூடப்பட்டதால், யுக்ரேனின் மேற்குப் பகுதி எல்லை நாடுகளான ருமேனியா மற்றும் ஹங்கேரி வழியே இந்தியர்கள் தனியார் போக்குவரத்து உதவியுடன் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
பிப்ரவரி 26ஆம் தேதி, யுக்ரேனில் சிக்கித் தவிக்கும் சுமார் 14,000 இந்திய குடிமக்களை வெளியேற்றும் முயற்சிகளை இந்தியா தொடங்கியது. ஆபரேஷன் கங்கா திட்டம் என்ற பெயரில் நடைபெறும் இந்தப் பணிக்காக ஏர் இந்தியா மற்றும் பிற தனியார் விமான நிறுவனங்கள் மீட்புச் சேவையை வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், இந்த பணியில் இந்திய விமானப்படையை பயன்படுத்துமாறு பிரதமர் மோதி உத்தரவிட்டுள்ளதாக அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய விமானப்படையின் C-17 குளோப்மாஸ்டர் என்ற போயிங் தயாரிப்பு போர் விமானங்கள், இந்த மீட்புப் பணிக்கு பயன்படுத்தப்படவுள்ளன.
கொரோனா காலத்திலும் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் தாக்குதல் நடத்திய காலத்திலும் இந்த ரக போர் விமானத்தையே மக்களின் மீட்புப் பணிக்காக பல்வேறு நாடுகள் பயன்படுத்தியுள்ளன.
இந்த ரக ராட்சத போர் விமானங்கள் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளன.
இதில் சராசரியாக 400 பேர் வரை இடைவெளியின்றி பயணம் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், ஆப்கன் மீட்பு நடவடிக்கையின்போது ஒரே நேரத்தில் சுமார் 800 வரை இந்த விமானத்தில் நெரிசலாக அமர்ந்து ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார்கள். அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரான நிலையில், இந்த ரக போர் விமானத்தின் தனித்துவமான சேவை உலக அளவில் கவனத்தைப் பெற்றது.