யுக்ரேனின் கார்கிவ், செரீனிஹிவ் பகுதிகளில் குண்டுமழை - கடும் சண்டை

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ஐந்தாம் நாள் தாக்குதலின்போது கார்கிவ், செரீனிஹிவ் ஆகிய பகுதிகளில் ரஷ்ய படையினர் குண்டு மழையை பொழிந்து வருகின்றனர். ரஷ்ய படையினருக்கு யுக்ரேனிய படையினரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. 19.6 மில்லியன் டாலர் ராணுவ உபகரணங்களை யுக்ரேனுக்கு அனுப்பும் கனடா

    யுக்ரேனுக்கு ஆதரவாக கனடாவில் திரண்ட மக்கள்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, யுக்ரேனுக்கு ஆதரவாக கனடாவில் திரண்ட மக்கள்

    கனடாஅரசாங்கம் யுக்ரேனுக்கு கூடுதலான 19.6 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவியைச் செய்வதாக அறிவித்துள்ளது. முதல் கட்டமாக கனடா 7 மில்லியன் கனடிய டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்கியது. அதைத் தொடர்ந்து கூடுதலாக இவை அனுப்பப்படும்.

    ஞாயிறு அன்று இந்த வாக்குறுதியை அறிவித்த கனடா பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த், யுக்ரேனுக்காக கனடிய படைகளை அனுப்புவதாக கனடா அல்லது நேட்டோ நட்பு நாடுகள் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.

    உலகின் பல பகுதிகளைப் போலவே, யுக்ரேனுக்கு ஆதரவாக கனடா முழுவதும் ஞாயிற்றுக் கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

    சுமார் 1.3 மில்லியன் யுக்ரேனிய-கனடியர்களைக் கொண்ட கனடா, யுக்ரேன் மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக, அதிக யுக்ரேனிய மக்கள் தொகையைக் கொண்ட உலகின் மூன்றாவதாக நாடாக உள்ளது.

  2. “அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியமானது” – யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி

    ஸெலன்ஸ்கி

    பட மூலாதாரம், Getty Images

    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் தொலைபேசியில் பேசிய யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி, நாடு முழுவதும் சண்டை நடந்து வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரம் யுக்ரேனுக்கு மிக முக்கியமான காலகட்டமாக இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.

    தொலைபேசி அழைப்பின் போது, பிரதமர் ஜான்சன் ரஷ்யாவின் படையெடுப்பில் இருந்து யுக்ரேனைப் பாதுகாப்பதில் ஸெலென்ஸ்கியின் தலைமையைப் பாராட்டினார் என்று பிரிட்டன் அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் தற்காப்பு உதவி யுக்ரேனை சென்றடைவதை உறுதி செய்ய பிரிட்டன் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று ஜான்சன் கூறினார்.

    இரு தலைவர்களும் நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.

  3. “ரஷ்யாவை பயமுறுத்த முயலாதீர்கள்” – அணு ஆயுதத்தைக் குறிப்பிட்டு எச்சரித்த தொகுப்பாளர்

    2016-ஆம் ஆண்டு புதினுடன் திமித்ரி கிஸல்யோவ்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, 2016-ஆம் ஆண்டு புதினுடன் திமித்ரி கிஸல்யோவ்

    ரஷ்ய அரசு தொலைக்காட்சியின் தொகுப்பாளர் திமித்ரி கிஸல்யோவ், நேற்றிரவு அவருடைய மாலை நிகழ்ச்சியின் போது, ஒரு நீண்ட உரையை வழங்கினார், அதில் அவர், "ரஷ்யா அதில் இல்லையெனில், அந்த உலகம் நமக்கு எதற்கு?" என்று கேள்வியை எழுப்பினார்.

    ரஷ்யாவின் அணுசக்திப் படைகளை தயார் நிலையில் வைப்பதாக அதிபர் புதின் நேற்று அறிவித்ததை அவர் பரிசீலித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது, "மொத்தத்தில் எங்கள் நீர்மூழ்கிக் கப்பல்கள் 500-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை ஏவக்கூடிய திறன் கொண்டவை. இது அமெரிக்கா மற்றும் அனைத்து நேட்டோ நாடுகளின் அழிவுக்கு உத்தரவாதம் அளிக்கிறது," என்று அவர் தனது வெஸ்டு நெதேலி (Vesti Nedeli) நிகழ்ச்சியில் கூறினார்.

    மேலும், "கொள்கையின்படி 'ரஷ்யா உலகில் இல்லையென்றால், அந்த உலகம் நமக்கு ஏன் தேவை?” என்று கேள்வி எழுப்பியவர், "ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் உலகின் அதிவேக மூலோபாய குண்டுவீச்சுகளால் வழங்கப்படுகின்றன. எங்கள் மூலோபாய ராக்கெட் படைகளைப் பற்றி நாங்கள் சொல்லத் தேவையில்லை" என்று கூறினார்.

    "மொத்தத்தில், ரஷ்யாவின் அணு ஆயுத திறன் உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது. இப்போது ரஷ்யாவின் அணுசக்தி முப்படைகளும் சிறப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. புதின் அவர்களை எச்சரித்துள்ளார். ரஷ்யாவை பயமுறுத்த முயலாதீர்கள்," என்று அவர் கூறினார்.

  4. வணக்கம் நேயர்களே!

    நான் க.சுபகுணம். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் படையெடுப்பு குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள்டிவிட்டர் கணக்கின் மூலம்தகவல் அளியுங்கள். நேற்றைய நேரலை பக்கத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்தின் சில முக்கியச் செய்திகள்:

    • யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பணியை தொடங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக இம்மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
    • யுக்ரேனுக்கு 1,000 பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் 500 ஸ்டிங்கர் ரக ஏவுகணைகளை அனுப்ப உள்ளதாக, ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஷோட்ஸ் தெரிவித்துள்ளார்.
    • ரஷ்ய ராணுவத்தின் “அணுஆயுதப் படை பிரிவை” தயார் நிலையில் இருக்குமாறு விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
    • சர்வதேச ஜூடோ கூட்டமைப்பு, அதிபர் விளாடிமிர் புதினை கௌரவத் தலைவர் மற்றும் தூதர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.
    • ரஷ்ய ஏவுகணைகள், யுக்ரேன் தலைநகர் கீயவ் அருகிலுள்ள வாசில்கிவில் உள்ள எண்ணெய் கிடங்கைத் தாக்கியதாக அந்த பகுதி மேயர் கூறியுள்ளார். இதனால் நச்சுப் புகை வெளியேறும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
    • ரஷ்ய வங்கிகள் சிலவற்றை நிதி தகவல் சேவை அமைப்பான ஸ்விஃப்ட் (SWFIT Global Financial Messaging System) வலைப்பின்னலில் இருந்து நீக்கிய மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு யுக்ரேன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் நன்றி தெரிவித்துள்ளார்.
    • அனானிமஸ் (Anonymous) என்ற ஹேக்கர்கள் குழு, ரஷ்ய கூட்டணி நாடான செச்சினியாவின் அரசாங்க இணையதளத்தை முடக்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை, யுக்ரைனுக்குள் ரஷ்யாவுடன் இணைந்து தங்கள் படை வீரர்களை செச்சினியா நாடு அனுப்ப உள்ளதாக அறிவித்த 12 மணி நேரத்திற்கு பிறகு நடந்துள்ளது.
    • மேற்கு கீயவில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் 6 வயது சிறுவன் கொல்லப்பட்டதாக சிஎன்என் ஊடகம் தெரிவித்துள்ளது. இதுவரை இந்த போரில் உயிரிழந்தவர்களில் இச்சிறுவன் தான் வயதில் குறைந்த நபர்.