ஸ்விஃப்ட் (SWIFT) என்றால் என்ன?
ரஷ்யாவை ஸ்விஃப்டில் இருந்து தடை செய்வது ஏன் மிகவும் முக்கியமானது? இது சம்பந்தமான முழுமையான தகவலை இந்த காணொளியில் பார்ப்போம்
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ஐந்தாம் நாள் தாக்குதலின்போது கார்கிவ், செரீனிஹிவ் ஆகிய பகுதிகளில் ரஷ்ய படையினர் குண்டு மழையை பொழிந்து வருகின்றனர். ரஷ்ய படையினருக்கு யுக்ரேனிய படையினரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
ஆ. லட்சுமி காந்த் பாரதி
ரஷ்யாவை ஸ்விஃப்டில் இருந்து தடை செய்வது ஏன் மிகவும் முக்கியமானது? இது சம்பந்தமான முழுமையான தகவலை இந்த காணொளியில் பார்ப்போம்
யுக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கையால் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் பேசி வருகின்றனர்.
`கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி என்பது 30 சதவீதமாக உள்ளது. இதனால், வரும் நாள்களில் இதில் கணிசமான பாதிப்பு ஏற்படலாம்' என்கின்றனர் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள்.
ரஷ்யாவின் படைகள், யுக்ரேன் மீது ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல் காரணமாக ரஷ்ய நாட்டின் பங்கு சந்தைகள் 50 சதவீதம் என்ற அளவுக்கு சரிவை சந்தித்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இதன் தொடர்ச்சியாக, பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்துள்ளன. ரஷ்யா-யுக்ரேன் யுத்தம் காரணமாக தங்கத்தின் விலையும் கச்சா எண்ணெயின் விலையும் உயரத் தொடங்கியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரஷ்யா -யுக்ரேனிய படையெடுப்பால் திருப்பூருக்கு எந்த வகையில் பாதிப்பு? - பின்னலாடை உற்பத்தியாளர்கள் சொல்வது என்ன என்பதை பிபிசி தமிழ் கட்டுரையாக வெளியிட்டுள்ளது. அதை படிக்க இங்கே சொடுக்கவும்
ரஷ்யாவின் மத்திய வங்கி, வட்டி விகிதத்தை 9.5% யிலிருந்து 20% ஆக உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் வரவிருக்கும் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த, ரஷ்யாவின் பணமான ரூபிள் மதிப்பு குறைப்பு மற்றும் அதிக பணவீக்கத்தின் அபாயங்களை எதிர்கொள்வதற்காக, இந்த நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாக எடுத்துள்ளனர்.
மேலும் ரஷ்ய நிறுவனங்களுக்கு, தங்கள் வெளிநாட்டு நாணய வருவாயில் 80% விற்க உத்தரவிட்டுள்ளதாக, மத்திய வங்கி மற்றும் ரஷ்ய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. "ரஷ்ய பொருளாதாரத்திற்கான வெளிப்புற நிலைமைகள் கடுமையாக மாறிவிட்டன" என்று மத்திய வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5-வது நாளாக தொடரும் ரஷ்யாவின் யுக்ரேனிய படையெடுப்பு. இது சம்பந்தமாக பிபிசி தமிழ் சிறப்பு நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் ஐந்தாவது நாள் படையெடுப்பில் கடந்த ஒரு மணி நேரத்தில், யுக்ரேனிய நாட்டின் பல நகரங்களில் வான்வழித் தாக்குதலுக்கான அவசரகால சைரன்கள் ஒலித்தன
கீயவில் உள்ள பிபிசி செய்தியாளர் ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ் இந்த தாக்குதல் சம்பந்தமான தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ரஷ்ய படையை எதிர்க்க யுக்ரேன் பெண்கள் பாட்டில் குண்டுகள் தயாரிக்கின்றனர். ஒன்றும் செய்யாமல் வீட்டிலேயே இருப்பது, அதைவிட அச்சமூட்டுவதாக உள்ளதென்று இந்தப் பெண்கள் கூறுகின்றனர்.
மெடா நிறுவனம், யுக்ரேனில் ரஷ்யாவின் தொடர்ச்சியான படையெடுப்பிற்கு நடுவே, முக்கிய ராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளரின் ஃபேஸ்புக் கணக்குகள் ஒரு ஹேக்கிங் குழுவால் குறி வைக்கப்படுவதாகக் கூறியுள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில் ரஷ்யா மற்றும் யுக்ரேனில் இருந்து, யுக்ரேனில் உள்ள மக்களைக் குறி வைத்து செயல்பட்டு வந்த, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாக்ராமில் இருந்த குழுக்கள் மற்றும் தனிநபர்கள் என சுமார் 40 போலி கணக்குகளை நீக்கியுள்ளதாக மெடா தெரிவித்துள்ளது.
ட்விட்டரின் செய்தித் தொடர்பாளர், அதேபோல் 20-க்கும் மேற்பட்ட கணக்குகளை தற்காலிகமாக முடக்கியுள்ளதாகவும், பகிரப்பட்ட பல இணைப்புகள், அதன் இணையதள விதிகளுக்குப் புறம்பாக, தவறான தகவல்களோடு பரவியதால் தடுக்கப்பட்டதாகவும் கூறினார். அதன் தற்போதைய விசாரணையில் இந்தக் கணக்குகள் ரஷ்யாவில் தோன்றியதாகவும் யுக்ரேனில் ரஷ்ய மோதலைச் சுற்றியிருக்கும் பொது உரையாடலை அவை சீர்குலைக்கு முயல்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
நான் ஆ.லட்சுமி காந்த் பாரதி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை க. சுபகுணம் வழங்கிக்கொண்டிருந்த நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.'
ரஷ்ய படையெடுப்பிற்கு நடுவே சிக்கித் தவிக்கும் மாணவர்களையும் பிற இந்தியர்களையும் யுக்ரேனில் இருந்து மீட்டு வருவதற்காக, இந்திய அரசு நான்கு அமைச்சர்களை அனுப்புவதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யுக்ரேனின் அண்டை நாடுகளுக்கு சிறப்புத் தூதுவராக மூத்த அமைச்சர்களை அனுப்பி, இந்தியர்களை வெளியேற்றும் செயல்முறையை ஒருங்கிணைக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும் தெரியவந்திருக்கிறது.
மத்திய அமைச்சர்கள், ஜோதிராதித்ய சிந்தியா, ஹர்தீப் சிங் பூரி, கிரண் ரிஜிஜு மற்றும் ஜெனரல் விகே சிங் ஆகியோர் யுக்ரேனின் அண்டை நாடுகளுக்கு சிறப்பு தூதுவர்களாகச் சென்று, இந்தியர்களை யுக்ரேனில் இருந்து வெளியேற்றும் பணியை ஒருங்கிணைப்பார்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
யுக்ரேனிய வான்வெளி மூடப்பட்டுள்ளதால், இந்திய மாணவர்களை கீயவில் இருந்து வெளியேற்ற யுக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா மற்றும் ஹங்கேரியை இந்தியா பயன்படுத்துகிறது.
இந்தியர்களை வெளியேற்றும் திட்டம் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோதி திங்கள் கிழமை காலை அவசரக் கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் இந்த நாடுகள் வழியாக இந்தியர்களை அழைத்து வருவதற்கான தூதரக தடைகளைச் சமாளிக்க, அமைச்சர்கள் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்குப் பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
யுக்ரேன் மீதான ரஷ்யாவுப் படையெடுப்பிற்காக மேற்கத்திய நாடுகள், ஸ்விஃப்ட் உலகளாவிய கட்டண முறையிலிருந்து ரஷ்ய வங்கிகளைத் தடை செய்வது உட்பட, கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்ததைத் தொடர்ந்து திங்கள் கிழமை காலையில், ரஷ்ய ரூபிளின் மதிப்பு சுமார் 30% சரிந்தது. அப்போது, கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு ஐரோப்பிய அரசின் மீதான மிகப்பெரிய தாக்குதலின் நான்காவது நாளான, ஞாயிறு அன்று, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அணு ஆயுதப் படைகளை தயார் நிலையில் வைத்ததை அடுத்து, யூரோவின் மதிப்பும் குறையவே, டாலர் மற்றும் யென் பாதுகாப்பானவையாக உள்ளன.
எண்ணெய் சராசரியாக 4 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து தற்போது, ஒரு பீப்பாய்க்கு 102.14 டாலர்களாக உள்ளது.
யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியின் கதையை முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்.
ஞாயிற்றுக் கிழமை நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், பிரேசில் தீவிர வலதுசாரி அதிபரான சயீர் பொல்சனாரூ, யுக்ரேனிய அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸிகியை, “அவருடைய மக்கள் ஒரு நகைச்சுவை நடிகரின் மீது தங்கள் நம்பிக்கையை வைத்துள்ளனர்,” என்று கூறினார்.
பொல்சனாரூ, ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்க மறுத்துவிட்டார். மேலும் ஞாயிறு அன்று பிரேசில் இந்த விவகாரத்தில் பிரேசில் “நடுநிலை” வகிக்கும் என்று கூறியவர், நடைமுறையில் பிரேசிலும் ரஷ்யாவும் “சகோதர நாடுகள்” என்றார்.
அதோடு, “நாங்கள் எந்தப் பக்கச் சார்பையும் எடுக்க மாட்டோம். நாங்கள் தொடர்ந்து நடுநிலையாக இருப்போம். மேலும் முடிந்தவரை உதவி செய்வோம்,” என்று கூறினார்.
ஞாயிறு அன்று புதினுடன் இரண்டு மணி நேரம் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார். ஆனால், நாட்டின் வெளியுறவு அமைச்சகம் பின்னர், பொல்சனாரூ இந்த மாதத் தொடக்கத்தில் மாஸ்கோவிற்கு விஜயம் செய்ததைக் குறிப்பிடுவதாக தெளிவுபடுத்தியது.
ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் அமைந்துள்ள முன்னாள் சோவியத் குடியரசின் அங்கமாக இருந்ததுதான் யுக்ரேன்.
அந்த நாடு இதுவரை நேட்டோவில் உறுப்பினர் ஆகவில்லை. ஆனாலும், அது நேட்டோ நேச நாடாக விளங்கி வருகிறது. அப்படியென்றால், எதிர்காலத்தில் எப்போதாவது ஒரு கட்டத்தில் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர யுக்ரேன் அனுமதிக்கப்படலாம் என கருதலாம்.
ஆனால், அப்படியொன்று நடக்கவே கூடாது என்ற உத்தரவாதத்தை மேற்கு நாடுகள் தர வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது.
யுக்ரேனில் ரஷ்யப் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்திருக்கும் கார்கிவ் நகரில் தமிழ்நாட்டின் திருச்சி, தென்காசி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தவித்து வருகின்றனர். இவர்கள் கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர்.
இதுகுறித்து கார்கிவ் பகுதியில் உள்ள மாணவர் கிஷோர் கூறுகையில், "தற்சமயம் யுக்ரேன் நாட்டின் கார்கிவ் பகுதியில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளோம். நான்கு நாட்கள் போர் நடைபெற்ற கொண்டிருப்பதால், எங்களால் எங்கேயும் நகர முடியாமல் தற்போது எங்கள் குடியிருப்பு பகுதிக்கு கிழே உள்ள பதுங்கு குழியில் தான் தங்கியுள்ளோம். எங்களிடம் இருந்த உணவும் காலியாகி விட்டதால் தற்போது உண்ண உணவுமில்லை. வெளிய கடுமையான பாதுகாப்பு வளையம் ஏற்பாடு செய்துள்ளதால் ராணுவத்தினர் எங்களை வெளியே வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. “ என்றார்.
“இந்திய அரசு சார்பில் எந்த உதவியும் இதுவரை செய்யவில்லை. இதுவரை இந்திய அரசால் விமானங்கள் மூலம் அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள் மேற்கு பகுதியை சேர்ந்தவர்கள். ஆனால் அப்பகுதியில் எந்த பிரச்சனையும் நிலவவில்லை. தலைநகரம் கியவ் மற்றும் நாங்கள் இருக்கும் பகுதியான கார்கிவ்வில் தான் தற்போது அதிக அளவில் பாதிப்புகள் நிலவுகிறது.” என்று அவர் மேலும் கூறினார்.
“இப்பகுதியில் தீவிரமாக போர் நடைபெறுவதால் சாப்பாட்டிற்கும் வழியில்லாமல், கழிப்பறை செல்லவும் போதிய வசதியில்லாமல் தவிக்கிறோம். இந்திய அரசு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை.
கார்கிவில் போர் நடைபெறுவதால் தற்போது எதுவும் செய்ய முடியாது. ரயில், பேருந்து போன்ற போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு பகுதியில் இருக்கும் நாங்கள் விமானத்திற்கு மேற்கு பகுதியை நோக்கி சுமார் 1000கிமீ தொலைவில் உள்ள இடத்திற்கு பயணம் மேற்கொள்ள இயலாத நிலையில் இருக்கிறோம். இதனை கருத்தில் கொண்டு இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கார்கிவ் பகுதியில் உள்ள மாணவர்கள் பிபிசி தமிழ் மூலமாக வேண்டுகோள் வைக்கிறனர்.
யுக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க வேண்டும். அந்த நாடு சரியான நேரத்தில் இணைய வேண்டுமென்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விரும்புவதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் டேர் லேயன் ஞாயிற்றுக் கிழமை யூரோ செய்திகளிடம் தெரிவித்தார்.
அவர், “உண்மையில், அவர்கள் எங்களிடம் இருக்க வேண்டும். அவர்கள் எங்களில் ஒருவர், அவர்கள் இணைவதை நாங்கள் விரும்புகிறோம்,” என்று கூறினார்.
யுக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான, 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்று வாக்கெடுப்பைத் தொடர்ந்து இந்தக் கருத்துகள் வந்துள்ளன.
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான வாக்கெடுப்பு - 27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்று வாக்கெடுப்பைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
ரஷ்யாவுக்கு ஆதரவாக யுக்ரேனுக்குள் படைகளை அனுப்ப அண்டை நாடான பெலாரூஸ் தயாராகி வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்றைக்குள் படைகளை அனுப்புவதற்கு பெலாரூஸ் திட்டமிட்டிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட்டின் செய்தி குறிப்பிடுகிறது. இதை உறுதி செய்வதற்காக அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கும் பென்டகனுக்கும் பிபிசி மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறது.
யுக்ரேனின் வடக்கு எல்லையில் இருக்கும் பெலாரூஸ் ரஷ்யாவின் நீண்ட கால நட்பு நாடு.
ஆயினும், யுக்ரேனுக்குள் படைகளை அனுப்ப மாட்டோம் என பெலாரூஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுகஷென்கோ உறுதியளித்ததாக யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஸெலன்ஸ்கி நேற்று கூறியிருந்தார்.
யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பணியைத் தொடங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
வரலாற்றில் முதன்முறையாக இந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நேற்று மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டேர் லேயன், ரஷ்யா மற்றும் பெலாரஸின் மீதான புதிய குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதோடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் வான் பரப்பைப் பயன்படுத்த ரஷ்யாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு அவையில் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை மீண்டும் ஒருமுறை இந்தியா புறக்கணித்தது.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக பொதுச் சபையில் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. ரஷ்யா எதிர்த்து வாக்களித்தது. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
எனினும் இந்தத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளின்படி வீட்டோ செய்ய முடியாது என்பதால், 11 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று இரவு ஐநா பொதுச் சபைக் கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் 193 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.
யுக்ரேன் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பெர்டியானஸ்க் என்ற நகரத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றிவிட்டதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு நகரத்துக்குள் வந்ததாக மேயர் அலெக்ஸாண்டர் விட்லோ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
கருங்கடலை ஒட்டியிருக்கும் இந்த நகரம் ஒரு சிறிய கடற்படைத் தளத்தையும் கொண்டிருக்கிறது. சுமார் ஒரு லட்சம் பேர் இங்கு வசிக்கின்றனர்.
ஓர் அரிய நடவடிக்கையாக, யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்து விவாதிக்க ஐ.நா பொதுச் சபை அவசரக்கால சிறப்பு பொதுக் கூட்டத்தை நடத்த பாதுகாப்பு அவை வாக்களித்துள்ளது.
இன்று (திங்கட்கிழமை) நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தக் கூட்டத்தில், 193 உறுப்பினர்களும் யுக்ரேன் மீதான தாக்குதல் குறித்து தங்கள் கருத்துகளை வழங்குவதற்க்கு அனுமதி வழங்கப்படும்.
இந்த கூட்டத்திற்கு எதிராக ரஷ்யா வாக்களித்தது. ஆனால், குறிப்பிட்ட ஐ.நா தீர்மானத்தின் கீழ் அந்த நடவடிக்கையை வீட்டோ செய்ய முடியவில்லை.
“அமைதிக்கான ஐக்கியம்” என்று அழைக்கப்படும் இந்தத் தீர்மானம் ஐந்து நிரந்தர உறுப்பினர்களான ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாவிட்டால், பொதுச் சபையின் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்த வழிவகை செய்கிறது.