You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ரஷ்ய படைக்குவிப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகப்பெரியது: அமெரிக்கா

யுக்ரேன் எல்லையில் ரஷ்ய படைக் குவிப்பு “இரண்டாம் உலக போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நிகழ்ந்த மிகப்பெரிய ராணுவ அணி திரட்டல்” என அமெரிக்கா கூறியுள்ளது

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. விலங்கு: நடிகர் விமலின் வெப் சீரிஸ் எப்படி இருக்கிறது?

    திருச்சி மாவட்டத்திலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் காவல் நிலையத்தை மையமாக வைத்து நடக்கிறது கதை. அந்த காவல் நிலைய எல்லைக்குள் ஒரு அடையாளம் தெரியாத சடலம் கிடைக்கிறது. அதைப் பற்றி காவல்துறை விசாரித்துக்கொண்டிருக்கும்போதே, அதன் தலை காணாமல் போகிறது.

    அதிர்ந்துபோகும் காவல்துறையினர் தலையைத் தேடிக்கொண்டிருக்கும்போது, அந்தப் பகுதி எம்எல்ஏவின் காணாமல் போன மைத்துனரின் சடலம் கிடைக்கிறது. எம்எல்ஏவின் மைத்துனரின் கொலையில் சம்பந்தப்பட்டவரை ஒரு கட்டத்தில் காவல்துறை கைதுசெய்கிறது. ஆனால், அதற்குப் பிறகுதான் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது.

    நடிகர் விமலின் 'விலங்கு' வெப் சீரிஸ் எப்படி இருக்கிறது என்பது குறித்து, இந்த விமர்சன கட்டுரையில் படியுங்கள்:

  2. ரஷ்யா: புதின் மேற்பார்வையில் நாளை ஏவுகணை சோதனை உள்ளிட்ட ராணுவ பயிற்சிகள்

    நாளைய தினம் (பிப். 19), ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் க்ரூஸ் (Cruise)ஏவுகணை எனப்படும் சீர்வேக ஏவுகணையை ஏவுதல் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது என, உள்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

    முப்பரிமாண அணுசக்தி சோதனையும் இதில் அடங்கும் என, ரியா நொவாஸ்டி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், இந்நடவடிக்கைகள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மேற்பார்வையில் நடைபெறும் எனவும், இவை “முன்னதாகவே திட்டமிடப்பட்டவை” எனவும் தெரிவித்தார்.

    பெலாரஸுடனான ரஷ்யாவின் கூட்டுப் பயிற்சி பிப்ரவரி 20 அன்று நிறைவடைய உள்ள நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக கருங்கடலில் துப்பாக்கி சுடும் பயிற்சி நிறைவடையும்.

  3. ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை நிறைவு

      • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
      • பதவி, பிபிசி தமிழ்

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு நபர் ஆணையத்தின் சாட்சிகள் விசாரணை இன்று நிறைவடைந்தது. இன்னும் மூன்று மாத காலத்துக்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என, ஒரு நபர் ஆணைய வழக்குரைஞர் அருள் வடிவேல் சேகர் தெரிவித்தார்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, கடந்த 2018 மே 22ம் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி சம்பவங்களில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணையை கடந்த 09:08:2018 அன்று முதல் விசாரணையை தொடங்கியது.

    இவ்விசாரணையானது இன்றுடன் (பிப். 18) நிறைவடைந்தது. இன்னும் மூன்று மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஒரு நபர் ஆணைய வழக்குரைஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இது தொடர்பாக, அவர் கூறுகையில், “தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சாட்சியங்கள் விசாரணை இன்றுடன் நிறைவடைந்தது.

    கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய விசாரணை 36கட்டமாக நடைபெற்றது. இந்த 36கட்ட விசாரணையில், மொத்தம் 1,426 பேருக்கு சம்மன் அனுப்பிய நிலையில்,1,048 பேரிடம் விசாரணை செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து 1,544 குறியீடுகள் பெறப்பட்டுள்ளது. விசாரணை செய்த அனைத்து ஆவணங்களையும் மூன்று மாதங்களில் தயார் செய்து அரசிடம் ஒப்படைக்கப்படும்” என தெரிவித்தார்.

  4. ராயல் என்ஃபீல்டு புல்லட்: கர்நாடகாவில் காணாமல் போன தந்தையின் வண்டியை 15 ஆண்டுகள் தேடி கண்டுபிடித்த மகன்

      • எழுதியவர், இம்ரான் குரேஷி
      • பதவி, பிபிசி இந்தி

    1995ஆம் ஆண்டு, சீனிவாசனின் வங்கி அவரை கர்நாடகாவின் மணிபால் நகரத்திலிருந்து வட மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவிற்கு மாற்றியது.

    இதனால், ராயல் என்ஃபீல்டை தன்னுடன் கொண்டு செல்ல சீனிவாசனால் முடியவில்லை. அவர் அதை ஒரு நண்பருக்கு விற்றார். அந்த நண்பருக்கு தேவைப்படாதபோது அதை மீண்டும் வாங்கி கொள்ளலாம் என்ற ஒரு நிபந்தனையுடன் அவர் அதனை அவருக்கு விற்றார்.

    ஆனால், அதற்கு அடுத்த ஆண்டு, அவரது நண்பரின் வீட்டில் அந்த பைக் திருடப்பட்டது.

    கர்நாடகாவில் காணாமல் போன தந்தையின் வண்டியை 15 ஆண்டுகள் தேடி மகன் கண்டுபிடித்த நெகிழ்ச்சியான சம்பவத்தை இங்கே படியுங்கள்:

  5. பிகாரில் மெட்ரிகுலேஷன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: கணித வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரணை

      • எழுதியவர், நீரஜ் சஹாய்
      • பதவி, பாட்னாவிலிருந்து பிபிசி இந்திக்காக

    பிகார் மாநிலத்தில் மெட்ரிகுலேஷன் பாடத்திட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று (பிப். 17) தொடங்கியது. இந்நிலையில், தேர்வின் முதல் நாளில் கணித தேர்வு நடைபெற்றது. ஆனால், தேர்வு தொடங்குவதற்கு முன்னதாகவே, அத்தேர்வின் வினாத்தாள் கசிந்தது.

    கணித தேர்வின் போது வழங்கப்பட்ட வினாத்தாளும், முன்னதாக வெளியில் கசிந்த வினாத்தாலும் அச்சுஅசலாக ஒரே மாதிரியாக இருந்தது.

    கணித தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கிய நிலையில், வினாத்தாள் காலை 8:53 முதலே வைரலாகியது.

    வெளியில் கசிந்த வினாத்தாளை நபர் ஒருவர் சமூக வலைதளத்திலும் பகிர்ந்தார்.

    பிகார் பள்ளி தேர்வாணையம் இதுகுறித்த தகவலை சமூக வலைதளம் வாயிலாகவே பெற்றது. இதையடுத்து, அந்த ஆணையத்தின் தலைவர் ஆனந்த் கிஷோர், இதுகுறித்து விசாரிக்க மோட்டிஹரி மாவட்ட மாஜிஸ்திரேட் கபில் அஷோக்கை உத்தரவிட்டார்.

    இது தொடர்பாக, கபில் அஷோக் கூறுகையில், “இதுதொடர்பாக விசாரிக்க மூன்று பேர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எங்கிருந்து வினாத்தாள் கசிந்தது, யாரெல்லாம் இதில் தொடர்புடையவர்கள் என்பது குறித்து இக்குழு விசாரிக்கும்” என தெரிவித்தார்.

    இது தொடர்பாக காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவும் விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    இதனிடையே கணிதத் தேர்வில் அடுத்தவரை பார்த்து எழுதியதாக மாநிலம் முழுவதும் 100 பேர் தேர்வெழுதுவதிலிருந்து நீக்கப்பட்டனர்.

  6. புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 23ஆம் தேதி கூடுகிறது

    புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 23ஆம் தேதி காலை 09.30 மணிக்கு தொடங்கும் என, சட்டப்பேரவை சபாநாயகர் ஆர்.செல்வம் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்தாண்டு புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலம் நடைபெற்றது.

    இதனையடுத்து, இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி, வரும்பிப்ரவரி 23ஆம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என சட்டப்பேரவை சபாநாயகர் ஆர்.செல்வம் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து அவர் கூறும்போது, "யூனியன் பிரதேச சட்டப்படி 6 மாதத்திற்கு ஒரு முறை சட்டப்பேரவை கூட்டப்படும். எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் கூட்டத்திற்குப் பிறகு தெரிவிக்கப்படும்," என்று தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தொடர் புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவையின் 2வது கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

  7. அறிவியல் அதிசயம்: மனிதன் மரணத்தை வெல்வது சாத்தியமா? நீடித்த இளமையை நோக்கி முன்னேறும் மருத்துவம்

      • எழுதியவர், நமசிவாயம் கணேஷ் பாண்டியன்
      • பதவி, துல்லிய மருத்துவ முறை ஆராய்ச்சியாளர், ஜப்பான்

    வயது வித்தியாசம் பார்க்காமல், அனைவருக்கும் மரணபயம் காட்டி விட்ட இந்த கொரோனா காலத்தில், இத்தலைப்பு உங்களுக்கு நகைப்பை ஏற்படுத்தலாம். `உலக போர்க்காலத்தில் அதிமுக்கிய கண்டுபிடிப்புகள் நிகழும்`, எனும் வரலாற்று கூற்றுக்கு ஏற்ப, கிருமிகளுக்கு எதிரான இப்போரில், மனித வரலாற்றையே புரட்டிப் போடும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்று, `நீடித்த இளமை சாத்தியம்` என்பதற்கான அறிவியல் சான்றுகள்.

  8. பஞ்சாப் தேர்தல்: மீண்டும் தக்க வைக்குமா காங்கிரஸ்? பாஜகவின் வாய்ப்புகள் என்ன?

    பஞ்சாப் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங்கின் விலகல் காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா அல்லது அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருமா? சமீபத்தில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை உருவாக்கிய அவர், பா.ஜ.க.வுடன் கூட்டணியை அமைத்துள்ளார். சிரோமணி அகாலி தளம் இந்த முறை தான் இழந்த அரசியல் தளத்தை மீண்டும் கைப்பற்றமுடியுமா?

    பஞ்சாப்பை மீண்டும் தக்கவைக்குமா காங்கிரஸ்? பாஜகவின் வாய்ப்புகள் என்ன? என்பது இக்கட்டுரையில் அலசப்பட்டுள்ளது. முழு கட்டுரையை இங்கே வாசியுங்கள்:

  9. எச்.ஐ.வி தொற்றில் இருந்து குணமடைந்ததாக கருதப்படும் உலகின் முதல் பெண்

    அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், உலகிலேயே எச்.ஐ.வி தொற்று நோயிலிருந்து குணமடைந்த முதல் பெண்ணாக கருதப்படுகிறார். மேலும், இந்த தொற்றில் இருந்து குணமடைந்த மூன்றாவது நபராகவும் அவர் நம்பப்படுகிறார். இதுகுறித்து விளக்கும் இந்த காணொலியை காணுங்கள்:

  10. மு.க.ஸ்டாலின் சுயசரிதை 'உங்களில் ஒருவன்': சென்னையில் ராகுல் வெளியிடுகிறார்

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வரும் பிப்ரவரி 28ஆம் தேதி, 'உங்களின் ஒருவன்' என்ற தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்த சுயசரிதை நூலின் முதல் பாகத்தை சென்னையில் வெளியிடவுள்ளதாக 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

    மேலும், இந்த வெளியீட்டு விழாவில், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, பீகார் மாநிலத்தின் எதிர்கட்சி தலைவரான தேஜஸ்வி பிரசாத் யாதவ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

  11. கோவையில் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டும்: மக்கள் நீதி மய்யம்

    கோவையில் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.

    கோவை மாவட்டத்தில் தேர்தல் விதிகள் மீறப்பட்டதாக மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் தங்கவேல், “கோவையில் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சியினரும் வாக்குக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுக்கின்றனர். இதுதொடர்பாக புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.

    தேர்தல் பரப்புரை முடிந்தபிறகு கருத்துக் கணிப்புகள் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஆனால், அதையும் மீறி ‘தமிழ் நியூஸ்’ என்கிற பத்திரிகை முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தைப் போட்டு கோவை மாவட்டம் முழுவதும் 'திமுக வசமாகும் கோவை' என போஸ்டர் ஒட்டியுள்ளது. இது வெளிப்படையான விதிமீறல். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவையில் நியாயமாக தேர்தல் நடைபெறவில்லை. இதனால், கோவையில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றார்.

  12. இந்தியாவில் புதிதாக 25,920 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 25,920 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 492 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 66,254 பேர் குணமடைந்துள்ளனர்.

    தற்போது சிகிச்சை பெறுபவர்கள்: 2,92,092

    தினசரி தொற்று பாதிப்பு விகிதம்: 2.07%

    மொத்தமாக இதுவரை குணமடைந்தோர்: 4,19,77,238

    இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்: 1,74,64,99,461

    அதேபோன்று, தமிழ்நாட்டில் நேற்று (பிப். 17) புதிதாக 1,252 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,41,783ஆக உயர்ந்துள்ளது.

    தற்போதுவரை தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 23,772 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேற்று பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை: 83,861

    நேற்று பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை: 82,272

    நேற்று கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,768

    குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை: 33,80,049

    நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை: 6

    உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை: 37,962

  13. 38 பேருக்கு தூக்குத் தண்டனை: அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு

    2008ம் ஆண்டின் அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட 49 பேரில் 38 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம்.

    இதனை சிறப்பு அரசு வழக்குரைஞர் அமித் படேல் ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

    2008 ஜூலை 26 அன்று, குஜராத்தின் முக்கிய நகரமான அகமதாபாத்தில் சுமார் 70 நிமிட இடைவெளியில் 21 குண்டுகள் வெடித்தன.

    இந்த குண்டுவெடிப்புகள் குஜராத் மாநிலத்தையே கலங்க வைத்தன. இந்திய முஜாஹிதீன் மற்றும் தீவிரவாத குழுவான ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி ஆகிய இரு தீவிரவாத அமைப்புகளும் இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றன. இந்த குண்டுவெடிப்பு நடந்த உடனேயே குஜராத்தின் சுரேந்திர நகர் மாவட்டத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஹூசைன் இப்ராஹிம், ஹசில் முகமது, அப்துல் காதிர் ஆவர். மேலும், குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படை இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட முப்தி அபு பஷீர் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தது. மேலும், இதில் குற்றம் சாட்டப்பட்ட நசீர் ரங்ரேஸ் என்பவரும், எட்டு ஆண்டுகள் கழித்து 2016-ல் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில், சிமி அமைப்பின் சப்தார் மன்சூரி மற்றும் சப்தார் நகோரி உள்ளிட்ட 50 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    குஜராத் காவல் துறையின் சிறப்புப் படை, இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 70 பேரை கைது செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 49 பேரை குற்றவாளிகள் என பிப்ரவரி 8ம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 28 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  14. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கோவையில் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நடத்த வேண்டும் - எஸ்.பி.வேலுமணி

    கோவையில் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என, எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

    கோவை அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, கோவை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் ஆளும் கட்சியினருக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, "கோவை மற்றும் திருப்பூரில் அதிமுக அமோகமாக வெற்றி பெறப் போகிறது என்பதை உணர்ந்த ஆளும்கட்சி பணத்தை கொடுத்தும் மிரட்டியும் வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கின்றது. அதற்கு காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் உறுதுணையாக இருக்கிறது. இங்கு தேர்தல் நியாயமாக நடக்கும் என நம்பிக்கை இல்லை. எனவே, துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகளை நீக்கி புதிய அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவைநடத்த வேண்டும். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட கூடாது.

    கோவை மாவட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்த எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. இதற்காக தான் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தேர்தலை நடத்த வேண்டும் என்கிறோம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் என அனைவரிடமும் புகார் அளித்துள்ளோம். மத்திய உள்துறை அமைச்சருக்கும் உள்துறை செயலாளருக்கும் டெல்லியில் புகார் அளித்துள்ளோம்” என்றார்.

  15. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை அ.தா.பாலசுப்ரமணியன் வழங்கிக்கொண்டிருந்த நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

  16. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்த பில்கேட்ஸ்

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸை சந்தித்த புகைப்படத்தை, தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்த சந்திப்பு குறித்து அவர், “என்னுடைய அழைப்பின் பேரில் பாகிஸ்தானுக்கு வருகை தந்திருக்கும் பில்கேட்ஸை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது பல சாதனைகளுக்கு மட்டுமின்றி, அவரது தொண்டுக்காகவும் உலகம் முழுவதும் அறியப்படுகிறார்.போலியோவை ஒழிப்பதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் அவர் ஆற்றிய பங்களிப்புக்கு, எனது நாட்டின் சார்பாக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்", என்று தெரிவித்துள்ளார்.

  17. அழைப்பின்றி பிரியாணி சாப்பிடுவதால் அயல்நாட்டு உறவு மேம்படாது: மன்மோகன் தாக்குதல்

    வழக்கத்துக்கு மாறான காட்டத்துடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை கண்டித்துப் பேசியுள்ளார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

    சீனா நம் எல்லையில் உட்கார்ந்திருக்கிறது. ஆனால், மத்திய அரசு சீன ஆக்கிரமிப்பு குறித்த உண்மையை மறைக்க முயல்கிறது என்று பேசிய அவர்,

    “பிரதமர் பதவி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என கருதுகிறேன். தோல்விகளில் இருந்து தப்பிக்க, வரலாற்றைக் குறை கூறுவதை விட்டு, பிரதமர் (மோதி) கண்ணியம் காக்க வேண்டும். அரசியல்வாதிகளை கட்டிப்பிடிப்பதாலோ, அழைப்பின்றி போய் பிரியாணி சாப்பிடுவதாலோ அயல்நாடுகளுடனான உறவுகள் மேம்படுவதில்லை,” என்றும் கூறியுள்ளார் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை. கடந்த ஏழரை ஆண்டுகளாக இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் பாஜக தனது தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் முதல் பிரதமர் நேருவை குறை சொல்லிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் போலி தேசியவாதம், வெற்றுவாதம் மட்டுமல்ல ஆபத்தானதும்கூட என்று கூறிய அவர், "நான் பலவீனமானவன், பேசாதவன், ஊழல்வாதி என்றெல்லாம் நான் பிரதமராக இருக்கும்போது பேசினார்கள்," என்று கூறிய மன்மோகன் சிங் தாம் தனது செயல்கள் மூலமாகப் பேசியதாகவும் கூறியுள்ளார்.

  18. நியூட்ரினோ திட்டத்தால் தேனி அருகே என்ன பாதிப்பு வரும்?, க.சுபகுணம் - பிபிசி தமிழ்

    தேனி மாவட்டத்தில் மலையைக் குடைந்து அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ ஆராய்ச்சித் திட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும் என்றும், புலிகள் நடமாட்டத்துக்கு குந்தகம் விளைவிக்கும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய அரசு சார்பாகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில் மனுவில், நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த தேசிய புலிகள் ஆணையம் ஆட்சேபனை இல்லையென்று தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  19. நேருவை பாராட்டிய சிங்கப்பூர் பிரதமர்: விளக்கம் கேட்ட இந்தியா

    சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டுப் பிரதமர் லீ செய்ன் லூங், "ஊடகச் செய்திகளின்படி, நேருவின் இந்தியாவில், மக்களவையில் கிட்டத்தட்ட பாதி எம்.பி.க்கள் மீது பாலியல் வன்முறை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் உட்பட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன", என்று கூறினார்.

  20. சிதம்பரம் நடராஜர் கோயில்: பெண் பக்தரை சாதியை சொல்லி திட்டியதாக 20 தீட்சிதர்கள் மீது வழக்கு, நடராஜன் சுந்தர் - பிபிசி தமிழுக்காக

    சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சார்பில் பிபிசியிடம் பேசிய ஐயப்ப தீட்சிதர், "சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிற்றம்பல மேடையில் அனைவரையும் அனுமதிப்பதில்லை. தரிசனத்திற்கு கீழே நிற்கும் பக்தர்களுக்கு சிற்றம்பல மேடை மீது நிற்கும் பக்தர்களால் இடையூறு ஏற்படுவதால், அடிக்கடி பிரச்சனை வந்து கொண்டிருந்தது. மேலும் சிற்றம்பல மேடை மீது பணம் வாங்கிக் கொண்டு சிலரை மட்டும் அனுமதிப்பதாகவும், முக்கிய நபர்களை அனுமதிப்பதாகவும் தவறான சர்ச்சை எழுந்தது.", என்று தெரிவித்தார்.