தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்
எப்போதும் நியாயமான முறையில் நடந்ததில்லை என, நாம் தமிழர் கட்சியின்
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித்
தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலிலும் தனித்து
போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை
ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப். 10) கோவையில் பிரச்சாரம் செய்தார்.
கோவை குனியாமுத்தூரில் நடைபெற்ற
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கோவை, நீலகிரி மாவட்ட வேட்பாளர்களை ஆதிரித்து
பேசிய சீமான், “தமிழகத்தில்
உள்ளாட்சி தேர்தல் எப்போதும் நியாயமான முறையில் நடந்ததில்லை. கேரளாவில் ஓட்டுக்குப்
பணம் கொடுக்காமல் முறையாக தேர்தல் நடத்தப்படுகிறது.
தற்போது நடைபெறும் நகர்ப்புற
உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு அதிகமான வரவேற்பு உள்ளது. அதனால்
தான் நாம் தமிழர் வேட்பாளர்களை மிரட்டுவது, கடத்துவது போன்ற சம்பவங்களில்
ஆளும்கட்சியும், எதிர்கட்சியும்
ஈடுபடுகிறது.
அரசியல் கட்சிகள் வீடு வீடாக ஓட்டுக்குப்
பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. ஆனால், வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு செல்லும் பணத்தை
பறிமுதல் செய்து கணக்கு காட்டுகின்றனர்.
இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது
அவர்களது உரிமை. பூணூலை கழட்டிவிட்டு பள்ளிக்கு வருவார்களா, சீக்கியர்கள் டர்பனை கழற்றிவிட்டு
ராணுவத்தில் சேருவார்களா?
திராவிட கட்சிகள், ஒன்றிய கட்சிகள் கூட்டத்திற்கு ஆட்களை
அழைத்து வருவது போல் கர்நாடகாவில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்திற்கு
வெளியிலிருந்து ஆட்களை அழைத்து வந்துள்ளனர்.
தமிழகத்தில் எந்த இடத்தில் இயற்கை
வளங்கள் சுரண்டப்படவில்லை? மேற்கு தொடர்ச்சி மலையை உடைத்து, அதானி துறைமுகத்திற்கு கற்கள் எடுத்துச்
செல்கின்றனர்” என்றார்.