கொரோனா நோய் தொற்றின்போதும் விவசாயிகளை கடந்த ஓராண்டு காலம் தெருக்களில் இருக்க, பிரதமர் நரேந்திர மோதி அரசு நிர்பந்தித்ததாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது சம்பந்தமாக பிடிஜ செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், "காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், இது போன்ற சூழ்நிலை ஒருபோதும் நடந்திருக்காது" என்று, உத்தரகாண்ட் மாநிலம் கிச்சா விதான் சபாவில் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட மெய்நிகர் பேரணியில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி இவ்வாறு கூறி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் கூறுகையில், மோதி நாட்டை ஆள்கின்ற ஒரு மன்னரே தவிர பிரதமர் இல்லை என்றும் பொதுமக்கள் தங்களின் கருத்துகளை பற்றி பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்றும் தெரிவித்தார்.
விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் அல்லது ஏழைகளுக்கு கோரிக்கைக்கான கதவுகள் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் மூடப்படாது என்றும், அவர்களுடன் இணைந்து ஆட்சியை நடத்தும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி, உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்றும் வாக்குப்பதிவின் முடிவு மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.