வந்துகொண்டிருக்கும் செய்தி, நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு: நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் வெளி நடப்பு

பட மூலாதாரம், ANI
தமிழ்நாட்டின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு இந்திய நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் வெளி நடப்பு செய்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இது குறித்து இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இது குறித்து விவாதிக்க முடியாது என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு மறுத்து விட்டார்.
இதையடுத்து திமுக எம்.பிக்கள் தொடர் முழக்கமிட்ட்டு, அமளியில் ஈடுபட்டனர். ஆனாலும் விவாதத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து முழக்கமிட்டபடி,திமுக எம்.பிக்கள் வெளி நடப்பு செய்தனர். தமிழ்நாடு எம்.பிக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களும் வெளி நடப்பு செய்தனர்.
வெளி நடப்பு செய்த பின்னர் திமுக எம்.பி திருச்சி சிவா செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது, மாநில உரிமைகளுக்கு எதிரானது. கூட்டாட்சிக்கு எதிரானது. ஆகையால் ஆளுநரை எதிர்த்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவாதிக்க மாநிலங்களவையில் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சி எம்.பிக்கள் வெளி நடப்பு செய்துள்ளோம்.' என்றார்.
மேலும், ''ஆளுநர் என்பவர் குடியரசு தலைவரின் பிரதிநிதி. ஆனால், மத்திய அரசின் பிரதிநிதி போல் செயல்படுகிறார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஆளுநர்கள் இப்படித்தான் செயல்படுகிறார்கள்.'' என்றும் குற்றம்சாட்டினார்.


