நீட்: தமிழ்நாட்டில் 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் - ஸ்டாலின்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சபாநாயகருக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார் மாநில ஆளுநர் ஆர்.என். ரவி. இது குறித்து விவாதிக்க பிப்ரவரி 5ஆம் தேதி சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
இன்றைய நேரலை நிறைவடைகிறது
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,
இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.
நீட் விலக்கு மசோதா: பிப்ரவரி 5இல் முதல்வர் அழைத்துள்ள கூட்டத்தில் பாஜக பங்கேற்காது - நயினார் நாகேந்திரன்
நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டது குறித்து விவாதிக்க தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி கலந்து கொள்ளாது என்று அதன் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நீட் விலக்கு மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்கக் கோரி ஒத்திவைப்பு நோட்டீஸை திமுக அளித்திருக்கிறது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் ஏழு ராணுவ வீரர்கள், 15 ஆயுததாரிகள் பலி
பட மூலாதாரம், ㅤ
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் இரண்டு வெவ்வேறு பகுதிகளான நோஷ்கி மற்றும் பஞ்கூரில் உள்ள FC (Frontier Corps) தலைமையகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு அதிகாரி உட்பட ஏழு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித் உறுதி செய்துள்ளார்.
பஞ்கூரில் இன்னும் தேடுதல் நடவடிக்கை நடந்து வருவதாகவும், தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோஷ்கி மற்றும் பஞ்ச்கூரில் ஆயுததாரிகள் சிலர் கடந்த புதன்கிழமை பெரிய தாக்குதலை நடத்த முற்பட்டபோது அது பாதுகாப்புப் படையினரால் முறியடிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் காணொளியொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
"சமீபத்திய தாக்குதலில் நோஷ்கியில் ஒன்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் நான்கு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர் . பஞ்ச்கூரில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்" என்று அவர் அந்த காணொளியில் கூறியுள்ளார்.
ஷேக் ரஷீத்தின் கூற்றுப்படி, தீவிரவாதிகள் பஞ்கூர், நோஷ்கி ஆகிய இரு இடங்களிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டதாகவும் ராணுவம் மரபின்படி அவர்களின் சடலங்களை கையாண்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
எங்கிருக்கிறது பலூசிஸ்தான்?
பலூசிஸ்தான் பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் ஒன்று. நிலப்பரப்பின் அடிப்படையில் இது மிகப்பெரிய மாகாணமாகும். நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள இந்த மாகாணம் குறைந்த மக்கள்தொகையைக் கொண்டது. இதன் தலைநகரம் க்வெட்டா ஆகும்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 11,993 ஆக பதிவு
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 993 ஆக பதிவாகியிருக்கிறது என்று மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று மட்டும் அந்த வைரஸ் பாதிப்பால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 18 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 12 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டிருந்தவர்கள்.
இத்துடன் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,87,322 ஆக உள்ளது.
இன்றைய நிலவரப்படி மாநிலத்தில் கொரோனா ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 1,66,878 ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, சிரியாவில் ஐ.எஸ் குழு தலைவரை கொன்ற அமெரிக்க ராணுவம் - ஜோ பைடன் அறிவிப்பு
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, அட்மேயின் புறநகரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் அங்கமான இந்த பகுதியில், இரண்டு மாடி குடியிருப்பு இருந்திருக்கும் என தோன்றுகிறது.
இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்து வந்த (ஐ.எஸ்) குழுவின் மூத்த தலைவர் அபு இப்ராஹி (அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரேஷி) சிரியாவில் அமெரிக்க படைகளால் அழிக்கப்பட்டார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பைடன், "இந்த நடவடிக்கையில் பங்கேற்ற அமெரிக்க துருப்புக்கள் பத்திரமாக திரும்பியுள்ளனர்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று இரவு எனது வழிகாட்டுதலின் பேரில், வடமேற்கு சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ படைகள் அமெரிக்க மக்களையும் நமது நட்பு நாடுகளை பாதுகாக்கவும், உலகை பாதுகாப்பான இடமாக மாற்றவும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டன. எங்களின் ஆயுதப் படைகளின் திறமை மற்றும் துணிச்சலுக்கு நன்றி. அபு இப்ராஹிம் அல்-ஹஷிமி அல் குரேஷி என்ற ஐஎஸ்ஐஎஸ் தலைவரை வீழ்த்தி விட்டு அனைத்து அமெரிக்கர்களும் நடவடிக்கையில் இருந்து பத்திரமாக திரும்பியுள்ளனர். இன்று காலை அமெரிக்க மக்களிடம் விரிவாக நான் பேசுகிறேன். கடவுள் நமது படைகளை பாதுகாக்கட்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, நீட் விலக்கு மசோதா விவகாரம்: பிப்ரவரி 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பிய விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பிப்ரவரி 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கூட்டம் பிப்ரவரி 5ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னையில் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, நீட்: மக்களவையில் இருந்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்களவையில் இருந்து இன்று இரவு திமுக, காங்கிரஸ், தமிழகத்தைச் சேர்ந்த இடதுசாரி கட்சிகளின் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, நீட்: தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோரி மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் முழக்கம்
பட மூலாதாரம், SANSAD TV
படக்குறிப்பு, டி.ஆர். பாலு
நீட் விலக்கு மசோதாவை மாநில ஆளுநர் ஆர்.என். ரவி, சபாநாயகருக்கே திருப்பி அனுப்பிய விவகாரத்தில் அவரை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி மக்களவையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டனர்.
இது தொடர்பாக பின்னர் அவையில் பேசிய திமுக குழு தலைவர் தலைவர் டி.ஆர். பாலு, நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாக ஒரு நாளைக்கு முன்புதான் அவையில் பதிவு செய்தேன். கடந்த ஐந்து மாதங்களாக அந்த மசோதா மீது முடிவெடுக்காமல் இருந்த ஆளுநர் இப்போது அதை மாநில சபாநாயகருக்கே திருப்பி அனுப்பியிருப்பதை ஏற்க முடியாது என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை ஆளுநர் பறிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கை மீனவர்களுக்குள் கருத்துவேறுபாடு - தமிழக மீனவர் அமைப்பு நிர்வாகி குமரவேலு
படக்குறிப்பு, குமரவேலு
இந்திய மீனவர்களின் விசைப் படகு மோதியதில் இலங்கை மீனவர்கள் சென்ற படகு நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல். இலங்கை மீனவர்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த சம்பவம் நடந்து இருக்க வேண்டும் என்று தேசிய மீனவர் பேரவைத் துணைத் தலைவர் குமரவேலு தெரிவித்துள்ளார்,
இந்திய மீனவர்களை கண்டித்து இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் போராட்டம் குறித்து ராமேஸ்வரத்தில் உள்ள தேசிய மீனவர் பேரவை துணைத் தலைவர் குமரவேலு பிபிசி தமிழிடம் கூறுகையில், "கடலில் இலங்கை மீனவர்களை இந்திய மீனவர்கள் கொலை செய்ய வேண்டும் என்றோ இந்திய மீனவர்களை இலங்கை மீனவர்கள் கொலை செய்ய வேண்டும் என்றோ யாருக்கும் நோக்கம் இருந்ததில்லை," என்று கூறினார்.
மேலும், ''இந்திய மீனவர்களின் விசைப் படகு மோதியதில் இலங்கை மீனவர்கள் சென்ற படகு நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல்.
இலங்கை மீனவ சங்க தலைவர்களை தமிழக மீனவ சங்க தலைவர்கள் தொடர்பு கொண்டு கேட்கும் போது, இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் கொல்லப்பட்டதாக இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர்," என்று குமரவேலு கூறினார்.
''தமிழக மீனவர்கள் விசைப்படகு மோதியதில் இலங்கை மீனவர்கள் கொல்லப்பட்டு இருந்தால் நிச்சயம் அவர்களுடைய ஃபைபர் படகு கரை ஒதுங்கி இருக்க வேண்டும். அதேபோல் படலில் மூழ்கிய மீனவர்கள் உயிருடன் கரை திரும்பி இருக்க அதிக வாய்ப்பு இருந்திருக்கும்," என்று அவர் தெரிவித்தார். "இலங்கை மீனவர்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த சம்பவம் நடந்து இருக்க வேண்டும். இந்திய மீனவர்களால் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை," என்கிறார் குமரவேலு.
படக்குறிப்பு, கோகிலா
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களில் ஒருவரான செல்வத்தின் மனைவி கோகிலா பிபிசி தமிழிடம் கூறுகையில், ''தனது கணவரையும், உடன் சென்ற மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார். இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தங்களுக்கு சொந்தமான படகை விடுவிக்க உதவிடுமாறு தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். ''அந்த படகைச் சார்ந்து 10 குடும்பங்களைச் சேர்ந்த 400 பேர் உள்ளனர். ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான அந்த படகுதான் தங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது'' என்றும் கோகிலா தெரிவித்தார்.
பெகாசஸ் விவகாரம்: எந்த தகவலும் இல்லை - வெளியுறவுத்துறை விளக்கம்
பெகாசஸ் விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் எந்த தகவலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெகாசஸ் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் விசாரணையில் உள்ளது.
இந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறையில் தகவலும் இல்லை. கடந்த 2017ம் ஆண்டு இந்திய பிரதமரின் இஸ்ரேல் பயணத்தில், 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதன் விவரங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பொதுவெளியில் உள்ளன என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக நீயூயார்க் டைம்ஸ் செய்தியை மேற்கோள்காட்டி இடுகையை பதிவிட்டிருக்கிறது ஏஎன்ஐ செய்தி முகமை.
மேலும், மக்களவையில் நேற்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் ‘பாகிஸ்தான்-சீனா’ கருத்துக்கு பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சரின் ட்வீட்கள் உரிய விளக்கம் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
வந்துகொண்டிருக்கும் செய்தி, நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி
பட மூலாதாரம், ㅤ
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார் மாநில ஆளுநர் ஆர்.என். ரவி.
தமிழக அரசின் மசோதா உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக இருப்பதாகவும் இது தொடர்பான விளக்கத்தை தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியே ஆளுநர் தெரிவித்து விட்டதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்: எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேர கட்டாயமாக்கப்பட்ட நீட் தேர்வு முறையில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் 2021ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மசோதா எண் 43 மற்றும் இணைக்கப்பட்டிருந்த மாநில அரசால் நியமிக்கப்பட்டிருந்த உயர்நிலைக்குழு அறிக்கையையும் மாநில ஆளுநர் விரிவாக ஆய்வு செய்தார்.
நீட் விலக்கு மசோதாவுக்கான அடிப்படையான அந்த உயர்நிலைக்குழு அறிக்கை மற்றும் நீட் தேர்வுக்கு முந்தைய நிலையில் இருந்த மாணவர்களுக்கான சமூக நீதியின்படி மருத்துவ படிப்பில் மாணவர்களின் சமூக, பொருளாதார பின்னணியை ஆராய்ந்த உயர்நிலைக்குழு அறிக்கையை ஆய்வு செய்ததில், இந்த மசோதா, குறிப்பாக கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு எதிரானது என்ற கருத்தை ஆளுநர் கொண்டிருக்கிறார்.
அந்த மசோதாவை தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகருக்கு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியே திருப்பி அனுப்பிய ஆளுநர், பேரவையின் மறுபரிசீலனைக்கு ஏதுவாக அதற்கான காரணங்களையும் விளக்கியிருக்கிறார்.
இந்திய உச்ச நீதிமன்றம், வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான வழக்கில் மிகவும் விரிவாக விசாரித்து சமூக நீதி நோக்கத்தில் நீட் தேர்வு அவசியத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது. சமூக நீதி என்ற பெயரில் வறியநிலை மாணவர்களின் பொருளாதார நிலையை சுரண்டும் வகையில் முந்தைய சேர்க்கை முறை இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதாக ஆளுநர் கருதுகிறார் என்று அவரது மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், RAJ BHAVAN, TAMIL NADU
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப கோரி தமிழ்நாடு அரசு மற்றும் அனைத்துக் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
நாடாளுமன்றத்திலும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேற்று இது குறித்து பேசியிருந்தனர். இந்த நிலையில் ஆளுநரின் நிலைப்பாடு தொடர்பான அறிவிப்பு இன்று வெளிவந்திருக்கிறது.
இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்த ஆந்திரா மாணவர்
பட மூலாதாரம், CMOTamilNadu
இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் செல்லும் வழியில் டி.டி.கே சாலையில், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் என்.சதிஷ், “CM SIR HELP ME” என்ற பதாகையுடன் நின்றிருந்தார். இதைப் பார்த்து முதலமைச்சர் காரை, நிறுத்தி அவரை சந்தித்துப் பேசினார்.
அப்போது அந்த மாணவர், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். இதற்கு தனது ஆதரவையும் தெரிவித்தார். இந்தியா முழுவதும் நீட் தேர்வு விலக்கு கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், தான் ''ஆந்திரா மாநிலத்தில்12ம் வகுப்புப் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தேன். ஆனால், நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போய்விட்டது. ஆகையால் உங்கள் ஆதரவு ஆந்திரா மாநில மாணவர்களுக்கும் வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து, நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அகில இந்திய அளவிலும் குரல் கொடுத்து வருவதாகவும் நம்பிக்கையோடு ஊருக்கு செல்லுமாறும் அந்த மாணவனிடம் முதலமைச்சர் தெரிவித்தார். இந்த தகவலைப் புகைப்படத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழர்களை நீங்கள் ஒருபோதும் ஆளமுடியாது- நாடாளுமன்றத்தில் ராகுல் ஆவேச பேச்சு
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசினார். தனது பேச்சில், கூட்டாட்சியை மதிக்காமல் மன்னர் ஆட்சி போல நரேந்திர மோதி அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
இது குறித்த விரிவான காணொளி இது.
திருச்சி என்.ஐ.டி இயக்குநராக ஜி.அகிலா பொறுப்பேற்றுக் கொண்டார் - இரண்டாவது பெண் இயக்குநர்
பட மூலாதாரம், NIT - Trichy
திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழக (என்.ஐ.டி) புதிய இயக்குநராக ஜி.அகிலா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருச்சி என்.ஐ.டி இயக்குநராக இருந்த மினி ஷாஜி தாமஸ் கடந்த நவம்பர் மாதம் பணி நிறைவு பெற்றார். இதையடுத்து பேராசிரியர் ஜி. கண்ணபிரான் இயக்குநர் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், புதுச்சேரி என்.ஐ.டி பதிவாளார் (பொ), கணினி அறிவியல் துறைப் பேராசிரியர் ஜி.அகிலா திருச்சி என்.ஐ.டி இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பேராசிரியர் கண்ணபிராசன் பொறுப்பை ஒப்படைத்தார்.
திருச்சி என்.ஐ.டி இயக்குநர் அகிலா, அண்ணா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பிளாக்செயின் தொழில்நுட்பம், பெருந்தரவு பகுப்பாய்வியல், ஆன்டாலஜி பொறியியல், வேதித் தகவலியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளை அளித்துள்ளார். கல்வித்துறையில் 32 ஆண்டு கால அனுபவம் உள்ளவர்.
இயக்குநராக பொறுப்பேற்றுள்ள அகிலா, "திருச்சி என்.ஐ.டி தேசிய மற்றும் சர்வதேச அளவில் அதிக சிறப்பிடம் பெறும் வகையில் முன்னுரிமை அளிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார். இந்திய அளவில் சிறப்பிடம் பெற்ற, 57 ஆண்டு பழமையான திருச்ச்க என்.ஐ.டியில், மினி ஷாஜி தாமஸைத் தொடர்ந்து அகிலாஇரண்டாவது பெண் இயக்குநராகியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திருச்சியில் 9 மாவட்ட எஸ்.பிக்களுடன் ஏடிஜிபி ஆலோசனை
பட மூலாதாரம், TN Police
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து 9 மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி மண்டலத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பதற்றமான வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை ஏடிஜிபி (சட்டம் - ஒழுங்கு) தாமரைக்கண்ணன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், ஏடிஜிபி (சட்டம் & ஒழுங்கு) தாமரைக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன், திருச்சி மாநகர ஆணையர் கார்த்திகேயன், திருச்சி, தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜிக்கள், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.
கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளிப்போன படங்கள், அடுத்தடுத்து ரிலீஸ்
காணொளிக் குறிப்பு, கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளிப்போன படங்கள், இனி அடுத்தடுத்து ரிலீஸ்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊடரங்கு, ஞாயிறு முழு நாள் ஊரடங்கு, திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி போன்ற காரணங்களால் புத்தாண்டு, பொங்கல் விடுமுறை தினங்களை ஒட்டி வெளியாக திட்டமிட்டிருந்த பெரிய படங்களின் வெளியீடு, தேதி குறிப்பிடப்படமால் ஒத்திவைக்கப்பட்டன.
ஆனால், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி என்ற போதிலும் வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட, ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் முன்னணி கதாநாயகர்களது படங்களின் வெளியீடு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
என்னென்ன படங்கள், எப்போது வெளியீடு என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.
காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னை: கர்நாடக, கேரள காங்கிரசாருக்கு ராகுல் அறிவுரை வழங்க வேண்டும் -பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
பட மூலாதாரம், ㅤ
படக்குறிப்பு, கோப்புப்படம்
காவிரி , முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் சட்டப்படி நடந்து கொள்ள கர்நாடகா மற்றும் கேரளா மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி ஆலோசனை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பிஆர் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,''காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு கர்நாடகம், தமிழகத்தில் காவிரி குறித்த அனைத்து அணைகளின் நீர் நிர்வாக அதிகாரங்கள் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டி தமிழகத்திற்கு வரக்கூடிய உபரி நீரையும் தடுத்துநிறுத்த, சட்டவிரோத நடவடிக்கைகளில் கர்நாடகா ஈடுபட்டு வருகிறது. இதற்கு அம்மாநில காங்கிரஸ் கட்சி பேரணி நடத்துகிறது," என்று கூறினார்.
"கேரளாவில் காங்கிரஸ் கட்சி அணையை உடைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் கொடுத்த தீர்மானத்தை அம்மாநில முதலமைச்சர் பிணராய் விஜயன் நிராகரித்துள்ளார். மத்திய நீர்வள ஆணையம் முல்லைப்பெரியாறு அணையை மறு முழு மறுஆய்வு நடத்த வேண்டுமென மனு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது."
"இந்நிலையில், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நீட் தேர்வை ரத்து செய்ய தமிழகத்தில் கோரிக்கையை ஏற்க வேண்டுமென்று ஆதரவு தெரிவித்து பேசியதோடு, நான் தமிழன் என்று பேசியிருப்பதை வரவேற்கிறோம்."
"அதேநேரத்தில் கர்நாடக கேரள மாநில காங்கிரஸ் கட்சிக்கு காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சட்டப்படி நடந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். பாராளுமன்றத்தில் மத்திய அரசின் தமிழகத்திற்கு எதிரான சதித் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்," என்றார் பி.ஆர். பாண்டியன்.
பாஜகவினரை கவர ராகுல் காந்தி முயற்சிக்கிறார் - பாஜக எம்.பி கமலேஷ் பாஸ்வான்
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பாஜகவினரை கவர முயற்சிக்க வேண்டாம் என்று பாஜக எம்.பி கமலேஷ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான உரையின்போது, ''தனது பேச்சு நன்றாக இருந்ததாக ராகுல் காந்தி கூறினார். அபோது ராகுல், ''உங்கள் பேச்சு சரி. ஆனால், நீங்கள் தவறான கட்சியில் இருக்கிறீர்கள்'' என்று கூறியதாக பாஜக எம்.பி கமலேஷ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு கமலேஷ் பாஸ்வான் அளித்துள்ள பேட்டியில்,''ராகுல் காந்தி என்னை கவர முயற்சிக்கிறார். அவர் முதலில் தன் மீதும் தனது கட்சி மீதும் கவனம் செலுத்தட்டும். நாங்கள் 24 காரட் பாஜகவினர். இது போன்ற முயற்சி எங்களை பாதிக்காது. சமூக வளர்ச்சிக்காக பா.ஜ.க பாடுபடும். இதுபோல் யாரையும் இழுக்க முயற்சிக்க வேண்டாம் என்று ராகுல் காந்தியை வலியுறுத்துகிறேன்.'' என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதலமைச்சர் அழுத்தம் கொடுக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
பட மூலாதாரம், O Panneerselvam
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, தேவையான அழுத்தம் கொடுத்து இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அறுபதிற்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்டு, விடுவிக்கப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்கள் மேலும் 21 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. இலங்கை கடற்படையின் இந்த செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, தேவையான அழுத்தம் கொடுத்து இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, அரியலூர் மாணவி தற்கொலை: தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு
பட மூலாதாரம், Getty Images
தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து, தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த அரியலூரைச் சேர்ந்த மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதன்படி, ''தனது மகளின் தற்கொலை விவகாரத்தில் மனு ஏதும் விசாரிக்கப்பட்டால், தனது தரப்பு பதிலைக் கேட்காமல், எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது'' என்று மாணவியின் தந்தை கூறியுள்ளார்.