நீட்: தமிழ்நாட்டில் 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் - ஸ்டாலின்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சபாநாயகருக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார் மாநில ஆளுநர் ஆர்.என். ரவி. இது குறித்து விவாதிக்க பிப்ரவரி 5ஆம் தேதி சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. சி.என்.அண்ணாதுரை நினைவு நாள்: இந்திய நாடாளுமன்றத்தில் திராவிட நாடு குறித்து முழங்கியவர்

    சி.என்.அண்ணாதுரை

    பட மூலாதாரம், ARUN SUBASUNDARAM

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுகவை உருவாக்கிய தலைவருமான சி.என். அண்ணாதுரை, மாநிலங்களவையில் 1962-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி தமது முதலாவது உரையை ஆற்றினார். அப்போது நடந்த குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது அண்ணாதுரை பேசிய உரையை, அவரது நினைவு தினமான இன்று தொகுத்து வழங்குகிறோம்.

    ''நீங்கள் ஹிந்தியை கற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் இங்கு பேசாமல் இருங்கள் என்பதுதானே? இதுதான் தேசிய ஒருமைப்பாட்டுக்கான வழியா?''

    ''இப்போது இந்தியாவின் ஒருபகுதியாக ஆகியுள்ள, ஒரு நாட்டில் இருந்து நான் வந்திருக்கிறேன் என கோருகிறேன். அதில் வேறுபட்ட இன மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு எதிரிகள் அல்ல.''

    ''உங்களோடு ஒரே நாடாக இருக்கவும் எனக்கு விருப்பம்தான். ஆனால் ஆசை வேறு, யதார்த்தம் வேறு.'' - சி.என்.அண்ணாதுரை

    அவர் பேசிய கருத்துக்களை விரிவாக அறிய

  2. நாடாளுமன்ற பேச்சு: ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்

    ராகுலுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

    பட மூலாதாரம், DMK

    இந்திய நாடாளுமன்ற மக்களவையில் நேற்று, தமிழ்நாட்டின் நீட் விலக்கிற்கு ஆதரவு உள்ளிட்டவை குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், ''சுயமரியாதை, தனித்துவமான கலாசாரம் மற்றும் அரசியல் வேர்களைக் கொண்ட தமிழர்களின் நீண்ட கால வாதங்களுக்கு பாராளுமன்றத்தில் நீங்கள் குரல் கொடுத்துள்ளீர்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமாக எடுத்துரைத்த, உங்களின் எழுச்சியூட்டும் உரைக்கு, அனைத்துத் தமிழர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்று தெரிவித்துள்ளார்.

    இந்திய நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி, டி.ஆர். பாலு ஆகியோர் நேற்று பேசினர். அப்போது, ''தமிழ்நாட்டில் கூட்டாட்சியை மதிக்காமல் மன்னராட்சி போல் மோதி அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் நீட் விவகாரம் குறித்தும் தமிழர்களின் வரலாறு குறித்தும் அறியாமல் மத்திய அரசு நடந்து கொள்கிறது.'' என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    நீட் விவகாரத்தில் திரும்பத்திரும்ப வந்தும் தமிழ்நாட்டின் குரலை கேட்காமல் மத்திய அரசு அவமதிப்பதாக நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

  3. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை 1.72 லட்சமாக பதிவு

    கொரோனா அப்டேட்

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,72,433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்த 2,59,107 பேர் குணமடைந்துள்ளர்.

    இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றுக்கு மொத்தம் 15, 33, 921 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி தொற்று விகிதம், 10.99 சதவீதமாக உள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் ஆயிரத்து 8 பேர் உட்பட இதுவரை மொத்தம் 4, 98, 983 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 167.87 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு:

    தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு14 ஆயிரத்து 013 ஆக உள்ளது. நேற்று மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 2,054 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. பத்து பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாள் மட்டும் 24, 576 பேர் சிகிச்சை முடிந்து நலம் பெற்றுள்ளனர். தற்போது 1, 77, 99 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  4. ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது

    U 19 World cup

    பட மூலாதாரம், BCCI

    ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    மேற்கு இந்திய தீவுகளில் 14வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பத்தொன்பது வயதிற்கு உட்பட்டோருக்கான இந்த போட்டியில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆப்கனிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் உள்ளிட்ட 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. இப்போட்டியின். அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கனிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

    இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து, 290 ரன் எடுத்தது. இந்திய அணியின் கேப்டன் யாஷ்துல் 110, ஷேக் ரசீத் 94 ரன்கள் எடுத்தனர்.

    அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 41.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது. இப்போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

  5. யுக்ரேன் பதற்றம்: ஐரோப்பாவில் அமெரிக்கா படைகளை அதிகரிக்கிறது

    யுக்ரேன் போர் பதற்றம்

    பட மூலாதாரம், EPA

    யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்த வாரம் கூடுதல் படைகளை ஐரோப்பாவிற்கு அனுப்ப உள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

    வட கரோலினாவில் உள்ள ஃபோர்ட் பிராக்கில் இருந்து போலந்து மற்றும் ஜெர்மனிக்கு சுமார் 2,000 துருப்புக்கள் அனுப்பப்படும், மேலும் ஜெர்மனியில் ஏற்கனவே உள்ள 1,000 பேர் ருமேனியாவுக்குச் செல்வார்கள். அமெரிக்க ராணுவம் யுக்ரேனில் போரிடாது. ஆனால் அமெரிக்க நட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

    கடந்த மாதம் பென்டகன் எச்சரிக்கை விடுத்த 8,500 வீரர்களுக்கு மேல் அங்கு நிறுத்தம் தேவைப்படின் ஐரோப்பாவிற்கு அனுப்ப தயாராக இருக்கும் என்றும் பென்டகன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    ரஷ்யா படையெடுப்பதற்கான திட்டத்தை மறுக்கிறது, ஆனால், யுக்ரேனில் எல்லைகளுக்கு அருகில் 100,000 ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது. யுக்ரேனின் தெற்கு கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா இணைத்து, கிழக்கு டான்பாஸ் பகுதியில் கிளர்ச்சிக்கு ஆதரவளித்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.

  6. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!

    பிபிசி தமிழ் நேரலைக்கு வரவேற்கிறோம்

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன்.

    தொடர்ந்து இணைந்திருங்கள்