பிரெண்டன் டெய்லருக்கு மூன்றரை ஆண்டுகள் தடை விதித்தது ஐசிசி

மேட்ச்பிக்சிங், ஊக்க மருந்து குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பிரெண்டன் டெய்லருக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு எந்த வித கிரிக்கெட்டிலும் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

விக்னேஷ். அ

  1. தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை

    கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி மாதிரிப் படம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி மாதிரிப் படம்

    தமிழ்நாட்டில் நேற்று (ஜனவரி 27ஆம் தேதி) ஒரே நாளில் 28,515 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 53 பேர் உயிரிழந்துள்ளனர். 27ஆம் தேதி நிலவரப்படி, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 2,13,534 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வழக்கம் போல சென்னை (5591), செங்கல்பட்டு (1696), கோயம்புத்தூர் (3629) ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஈரோடு (1314), சேலம் (1431) , திருப்பூர் (1877) என கொங்கு மண்டலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    பெரம்பலூர் (63), சிவகங்கை (128), வேலூர் (153) போன்ற மாவட்டங்களில் தினசரி கொரோனா தொற்று குறைவாகவே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  2. மீண்டும் வேகமெடுக்கும் அமெரிக்க பொருளாதாரம்

    அமெரிக்கா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, அமெரிக்கா

    அமெரிக்க பொருளாதாரம் 2021ஆம் ஆண்டில் 5.7% வளர்ச்சியடைந்ததாக அமெரிக்க வர்த்தகத் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. 1984ஆம் ஆண்டுக்கு பின் இதுவே அதிகபட்ச பொருளாதார வளர்ச்சியாகும்.

    கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக 2020இல் அமெரிக்க பொருளாதாரம் 3.4% சுருங்கியது. அப்போது 94 லட்சம் பேர் வேலை இழந்தனர்.

    2021இல் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியதால் புதிதாக 64 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. 2022இல் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  3. ஆப்ரிக்க நாடுகளை தாக்கிய அனா புயல் - 70க்கும் மேற்பட்டோர் பலி

    மடகாஸ்கர் வெள்ளம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, மடகாஸ்கர் வெள்ளம்

    தெற்கு ஆப்ரிக்க நாடுகளை அனா எனும் வெப்ப மண்டலப் புயல் தாக்கியதால் உண்டான மழை வெள்ளத்தால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    தீவு நாடான மடகாஸ்கரில் குறைந்தது 48 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1,30,000 பேர் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறி தற்காலிக இருப்பிடங்களில் வசித்து வருகின்றனர்.

    மலாவி நாட்டில் 11 பேர் இறந்துள்ளனர். இங்கு பல இடங்கள் பேரழிவு நிகழ்ந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மலாவியில் நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

    மொசாம்பிக்கில் 18 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 20,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இங்கு அனா புயலால் 10,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.

  4. பிபிசி தமிழ் நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் விக்னேஷ்.அ மற்றும் கௌதமன் முராரி. தொடர்ந்து இணைந்திருங்கள்.