பிப்ரவரி 1 முதல் ஒன்று முதல் பிளஸ்டூ வரை நேரடி வகுப்புகள் - தமிழக அரசு

தமிழ்நாட்டில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகளை இன்று வெளியிட்டுள்ள தமிழக அரசு சில முக்கிய முடிவுகளை அறிவித்திருக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

கௌதமன் முராரி

  1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார் நிலையில் பறக்கும் படைகள் - மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன்

    பாஸ்கரன்
    படக்குறிப்பு, பாஸ்கரன், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றைக் கண்காணிக்க பறக்கும் படைகள் உருவாக்கப்பட்டு அவற்றின் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

    மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கரன், மதுரையில் திருடு போன 600 செல்பேசிகள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

    அதுமட்டுமன்றி இணைய வழியில் பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை இழந்த நபர்களுக்குரிய ரூ.25 லட்சம் மீட்கப்பட்டு அவரவர் வங்கிக் கணக்குகளில் திரும்பச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    இணைய வழி மோசடிகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் 155260 என்ற எண்ணில் புகார் அளித்தால் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று அவர் அறிவுறுத்தினார்.

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை மேலூர் வெள்ளாளபட்டி, திருமங்கலம், பேரையூர், தே.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, எழுமலை, அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, பரவை, சோழவந்தான் ஆகியவற்றில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுபோன்ற பதற்றமான வாக்குச்சாவடிகள் அளவில் 100 ஆக உள்ளன. அவற்குத் தேவையான பறக்கும்படைகள் உருவாக்கப்பட்டு அதுகுறித்த பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளோம். அவ்வப்போது மாவட்ட தேர்தல் அலுவலர் பிறப்பிக்கும் உத்தரவுகளையும் மாவட்ட காவல்துறை கடைப்பிடிக்கும் என்று கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.

  3. இலங்கை: பயங்கரவாதத் தடை சட்டத்தின் வர்த்தமானி ஒன்றுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

    இலங்கையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றுக்கு, அந்நாட்டு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பயங்கரவாதம் மற்றும் மத கருத்தியலை ஒழிப்பதற்கான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்படுவதை தவிர்க்கும் வகையிலேயே இந்த இடைகால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மாற்று கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்ட மூன்று பேர் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

    பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புதிய விதிமுறைகளுக்கு அவர்கள் மனுவில் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த மனுவை விசாரணைக்கு உயர்நீதிமன்றம் எடுத்துக்கொண்டது.

    முர்த்து பெர்ணான்டோ, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது பயங்கரவாதம் மற்றும் மதக் கருத்தியலை ஒழிப்பதற்கான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் இடைகால தடை உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம், இந்த மனு மீதான அடுத்த விசாரணையை மார்ச் மாதம் 21ம் தேதி வரை ஒத்திவைத்தது.வன்முறைகள், இனவாத, மதவாத செயற்பாடுகளை தவிர்க்கும் வகையில், ஜனாதிபதியினால் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதி, 2021 முதலாம் இலக்கத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.எனினும், எந்தவொரு நபரையும் நீதிமன்ற நடவடிக்கை இன்றி, கைது செய்து, அவர்களை புனர்வாழ்வுக்கு ஈடுபடுத்த இந்த வர்த்தமானியின் ஊடாக சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மனுத்தாரர்கள் கூறியுள்ளனர்;.இவ்வாறான விடயங்களை கருத்திற் கொண்ட நீதிமன்றம், மனுவை விசாரிக்க தீர்மானித்து, வர்த்தமானியை நடைமுறைப்படுத்த இடைகால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,515 ஆக பதிவு

    தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்து 515 ஆக பதிவாகியுள்ளதாக மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

    இன்று மட்டும் கொரோனாவால் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இயக்குநரகத்தின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் ஆக்டிவ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி இரண்டு லட்சத்து 13 ஆயிரத்து 534 ஆக உள்ளது.

    அதிகபட்சமாக சென்னையில் 5,591 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தலைநகரில் மட்டும் 13 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாட்டில் பிப்ரவரி 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை நேரடி வகுப்புகள் - தமிழக அரசு

    இந்தியா தமிழ்நாடு

    பட மூலாதாரம்,

    தமிழ்நாட்டில் பிப்ரவரி 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வகுப்புவரை நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை வார இறுதியில் தொடர்ந்து அமல்படுத்துவது குறித்தும் வைரஸ் தடுப்பு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு வழங்குவது குறித்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இனி இரவு நேர ஊரடங்கும் வார இறுதியில் முழு முடக்கமும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அரசு, தனியார் நடத்தும் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. உணவு விடுதிகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிட அனுமதி, உள் விளையாட்டு அரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி போன்ற தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதே சமயம், உள் அரங்குகளில் நடத்தப்படும் இசை , நாடகம் போன்ற நிகழ்ச்சிகளில் 50 சதவீத பார்வையாளர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதிக்கப்படும். அதே சமயம், மழலையர் பள்ளி, நர்சரி பள்ளிகளை திறக்க அனுமதி கிடையாது.

    திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே பங்கேற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இறப்பு நிகழ்வுகளுக்கு அதிகபட்சமாக 50 பேர் மட்டும் பங்கேற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    கேளிக்கை பூங்காக்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

    துணி, நகை கடைகளில் 50 சதவீதம் பேருக்கு மட்டும் அனுமதி மற்றும் சமுதாய, அரசியல், கலாசார கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, கொரோனா கட்டுப்பாடுகள் பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு

    இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகள் வரும் பிப்ரவரி 28ஆம் தேதிவரை நீட்டிக்க ப்பட்டுள்ளது என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இந்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா இன்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை மற்றும் உத்தரவில், நாடு முழுவதும் கொரோனா, ஒமிக்ரான் பரவல் கட்டுக்குள் வந்தாலும், 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 407 மாவட்டங்களில் அது கவலை தரக்கூடிய வகையிலேயே உள்ளது. அங்கெல்லாம் கொரோனா பாசிட்டிவ் அளவு 10 சதவீதத்துக்கும் அதிகமாகவே உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    உள்துறை கொரோனா

    பட மூலாதாரம், MHA

  7. சென்னை ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரைக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு

    இந்தியா

    பட மூலாதாரம்,

    சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை, குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர் தனது ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு வை-பை இன்டர்நெட் வசதி, செய்திதாள்கள், வார இதழ்கள், டேப்லட், சிறிய குளிர்சாதனப்பெட்டி, சாக்லேட், ஸ்நாக்ஸ் என பல வசதிகளை இலவசமாக வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார். மேலும் வாடிக்கையாளர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பெறுவதாக கூறப்படுகிறது. இதை அறிந்து அவரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தமது அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.

  8. டாடா நிறுவனத்திடம் ஏர் இந்தியா ஒப்படைப்பு - பங்குகள் பரிமாற்றம் நிறைவு

    ஏர் இந்தியா

    பட மூலாதாரம், Getty Images

    69 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் தேசியமயமாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம், அதன் ஆரம்பகால நிறுவனமான டாடா குழுமத்தின் கைக்கே மீண்டும் திரும்பியிருக்கிறது.

    அந்த நிறுவனத்தின் முழு பொறுப்பும் வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் பங்குகள் பரிமாற்ற நடைமுறை முழுமையாக முடிந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது அவர், "இந்த பரிவர்த்தனை முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஏர் இந்தியா மீண்டும் டாடா குழுமத்துடன் இணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகத் தரம் வாய்ந்த விமான சேவையை உருவாக்குவதில் அனைவருடனும் இணைந்து பணியாற்றும் எதிர்பார்ப்புடன் நாங்கள் உள்ளோம்,” என்று கூறினார்.

    இந்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் முதலீடுகள் மற்றும் பொது சொத்துகள் மேலாண்மைத்துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டே செய்தியாளர்களிடம் பேசுகையில், “சம்பிரதாயங்கள் முடிந்துவிட்டன. பங்குகள் மாற்றப்பட்டு விட்டன. பணம் அரசின் கைக்கு வந்து விட்டது. இனி அவர்களே ஏர் இந்தியாவின் புதிய உரிமையாளர்கள்,” என்று தெரிவித்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    டாடா நிறுவனம், ஏலத்தில் ஒப்புக்கொண்டபடி 2.4 பில்லியன் டாலர்களை வழங்கிய பிறகு ஏர் இந்தியாவை வாங்கியிருக்கிறது.

    அதே சமயம், 2007ஆம் ஆண்டு உள்நாட்டு விமான சேவை வழங்கி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட இருந்து அந்த நிறுவனம் பெரிதாக லாபம் பார்க்கவில்லை. இத்தகைய சூழலில் இந்த நிறுவனத்தை கட்டியெழுப்புவது ஏர் இந்தியாவுக்கு மிகப்பெரிய பணியாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    ஏற்கெனவே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் ஏசியா குழுமம் ஆகியவற்றுடன் லாபமற்ற கூட்டு தொழிலில் டாடா குழுமம் ஈடுபட்டு வருகிறது. அந்த நிறுவனங்களின் மொத்த வருவாயில் ஒரு சிறிய பங்களிப்பை டாடா குழுமம் வழங்கி வந்தாலும், அவற்றை திறம்பட நடத்தவில்லை என்ற விமர்சனத்தையும் டாடா குழுமம் எதிர்கொண்டுள்ளது.

  9. பாலிஷ் செய்வதாக கூறி பாம்பனில் தங்க நகை திருட்டில் ஈடுபட்ட வட மாநில குழு கைது

    தமிழ்நாடு

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, நகை திருட்டில் ஈடுபட்ட நபர்கள், அவர்கள் பயன்படுத்தி ரசாயன பொருட்களுடன் காவல்துறையினர்

    பாம்பனில் நகை பாலிஷ் செய்வதாக கூறி ரசாயன தண்ணீரை பயன்படுத்தி நகையை திருடி தப்ப முயன்ற வட மாநில இளைஞர்களில் ஒருவரை நேற்று அப்பகுதி பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் தப்பியோடிய மற்றொருவர் அவரது கூட்டாளியுடன் புதுக்கோட்டையில் பதுங்கி இருந்த போது ராமேஸ்வரம் தனிப்பிரிவு காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

    இருவரையும் விசாரனைக்காக தனிப்பிரிவு போலீசார் பாம்பன் காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் பாரதியார் நகர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சங்கரி என்ற பெண்ணிடம் நேற்று மாலை வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நகை பாலிஷ் செய்வதாக கூறியுள்ளனர்.

    இதையடுத்து சங்கரி தான் அணிந்திருந்த 4 பவுன் தங்க தாலிச் சங்கிலியை பாலீஷ் போட கொடுத்துள்ளார். தாலி சங்கிலியை வாங்கிய வடமாநில இளைஞர்கள் ரசாயன தண்ணீரில் பாலீஷ் செய்த போது, செயின் பல துண்டுகளாக உடைந்திருந்தது. எடையின் அளவு பாதியாக குறைந்து 13 கிராம் மட்டுமே இருந்துள்ளது.

    இதனால் சந்தேகம் அடைந்த சங்கரி கூச்சலிட்டுள்ளார். அப்போது ரசாயனத்தை பயன்படுத்தி நகையின் ஒரு பகுதியை திருடி தப்ப முயன்று வட மாநில இளைஞர்களில் ஒருவர் அப்பகுதி பொது மக்களிடம் மாட்டிகொண்டார்.

    மற்றொரு நபர் தப்பி விட்டார். இதற்கிடையே, பிடிபட்ட நபரை பாம்பன் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் இருவரும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் குமார், குண்டன் குமார் ராம் என்பது தெரிய வந்ததது.

    இருவரும் பிகார் மாநிலாத்தில் இருந்து கடந்த வாரம் ராமேஸ்வரம் வந்ததும் தெரிய வந்தது. இவர்கள் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதியில் போர்வை வியாபாரம் செய்ய வந்திருப்பதாக கூறி தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

    ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், தனுஸ்கோடி உள்ளிட்ட மீனவ கிராம பகுதிகளுக்கு வீட்டில் தனியாக உள்ள பெண்களை நோட்டமிட்டு வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை பாம்பன் பாரதியார் நகரில் வீட்டில் தனியாக இருந்த சங்கரி என்ற பெண்ணிடம் நகையை பாலீஷ் செய்வதாக கூறி ரசாயன தண்ணீரை பயன்படுத்தி நகையின் ஒரு பகுதியை திருடி தப்பி செல்ல முயன்ற போது குண்டன் குமார் ராம் பிடிப்பட்டதும், பிபின் குமார் தப்பி ஓடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து பிபின் குமார் செல்போன் சிக்னல் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருப்பது தெரிய வந்ததால் அவரை தனிப்பிரிவு காவல்துறையினர் அங்கு சென்று பிடித்தனர். அப்போது தனது மற்றொரு கூட்டாளி பப்பு குமாருடன் இருந்த குண்டன் ராம் குமாரை அதிகாரிகள் கைது செய்து இன்று ராமேஸ்வரம் அழைத்து வந்துள்ளனர்.

    கடந்த ஓராண்டுக்கு முன்பு திருச்சியில் தனியாக வீட்டில் இருந்த பெண்ணிடம் தங்க நகையை பாலீஷ் போடுவதாக கூறி நகை திருட்டில் பிபின் குமார் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்ததுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    இந்த கும்பலுடன் தொடர்புடைய மற்ற நபர்கள் யாரேனும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கி உள்ளனரா என்பது குறித்தும் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

  10. தூத்துக்குடி துப்பாக்கி சூடு: எஸ்பி மகேந்திரன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, விசாரணை ஆணையத்தில் ஆஜராவதற்காக வந்த காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன்.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையத்தில் சம்பவ நாளில் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றிய அதிகாரியான மகேந்திரன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

    தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர்.

    இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம், மாதந்தோறும் விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த ஆணையம் ஏற்கெனவே 34 கட்ட விசாரணை யை முடித்துள்ளது. இதுவரை 1,037 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். 1,483 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

    இந்த ஆணையத்தின் 35ஆம் கட்ட விசாரணை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

    இதையொட்டி துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகள் 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்போதைய நெல்லை சரக டிஐஜியும், தற்போதைய சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையருமான கபில்குமார் சரத்கர், தென் மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    இவர்களின் வரிசையில் இன்று தூத்துக்குடி முன்னாள் எஸ்பி ஆன மகேந்திரன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

  11. நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஒன்றிய அரசுக்கு ஆளுநர் அனுப்பக் கோரும் தங்கம் தென்னரசு

    தேர்வெழுதச் செல்லும் பெண் - மாதிரிப் படம்

    பட மூலாதாரம், HINDUSTAN TIMES/ GETTY

    படக்குறிப்பு, தேர்வெழுதச் செல்லும் பெண் - மாதிரிப் படம்

    தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பது போல, நேற்று நடந்த குடியரசு தின கொண்டாட்டத்தில், தமிழ்நாட்டின் ஆளுநர் பேசியது சர்ச்சையானது.

    தமிழ்நாட்டில் இருமொழிக் கொளை பின்பற்றப்படுவதால் எந்த சிக்கலும் எழவில்லை என்று பதிலளித்துள்ளார் திமுகவின் தொழிற்துறை அமைச்சர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தங்கம் தென்னரசு.

    மேலும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் ஒப்புதலுக்கு இருப்பதாகவும், அதற்கு ஆளுநர் தன் இசைவைக் கொடுத்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார் தங்கம் தென்னரசு.

  12. அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் மேலும் ஒரு காணொளி

    தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளியில் ஒரு கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் படித்துவந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அந்த மாணவி பேசிய மேலும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

    அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவிஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். அந்த பள்ளிக்கூடத்தின் அருகிலேயே உள்ள விடுதியில் அவர் தங்கியிருந்தார். கடந்த ஜனவரி 9ஆம் தேதி அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், 19ஆம் தேதி உயிரிழந்தார்.

    இந்த நிலையில், சம்பந்தப்பட்ட மாணவியின் வீடியோ ஒன்றை இந்து அமைப்பினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இரண்டு வருடங்களுக்கு முன்பாக மதமாறும்படி தன் பெற்றோரிடம் கூறியதாகவும் தன்னைத் திட்டியும் அதிக வேலை வாங்கியும் கொடுமைப்படுத்தியதாகவும்அந்த மாணவி பேசுவது போன்ற காட்சிகள்அந்த காணொளியில் இடம்பெற்றிருந்தன.

  13. கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?

    கொரோனா வைரஸ்

    பட மூலாதாரம், bbc

    இந்தியாவில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.

    இப்போது நாடு முழுவதும் 22,02,472 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    உங்களை கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என விளக்குகிறது பிபிசி தமிழின் இந்த சிறப்புக் கட்டுரை.

  14. ஏர் இந்தியா அதிகாரபூர்வமாக இன்று டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது

    ஏர் இந்தியா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ஏர் இந்தியா

    69 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் அதிகாரபூர்வமாக டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படவிருப்பதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

    இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு தொடர்பாக, டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், டெல்லியில் இருப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஏர் இந்தியா 101 நகரங்களுக்கு விமான சேவை வழங்குகிறது, அதில் 57 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை, 4 கண்டங்களில் 33 நாடுகளைச் சேர்ந்த மற்ற நகரங்களுக்கும் சேவை வழங்குவதாக கடந்த 2020 நிலவரப்படியான தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  15. கோலி டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகியது அவர் சொந்த முடிவு - பிரெட் லீ

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகியது விராட் கோலியின் தனிப்பட்ட முடிவு. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை வழிநடத்த 4 - 5 பேர் இந்திய அணியில் இருக்கிறார்கள் என மஸ்கட் நகரத்தில் இருந்து முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறியதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் தென்னாப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடரில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து விராட் கோலி தன் இந்திய டெஸ்ட் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகினார் என்பது நினைவுகூரத்தக்கது.

  16. தமிழ்தாய் வாழ்த்துக்கு ஆர்பிஐ அதிகாரிகள் எழுந்து நிற்காததை எதிர்த்து புகார்

    புகார் நிலை

    பட மூலாதாரம், Tamil Nadu Police

    படக்குறிப்பு, புகார் நிலை

    கடந்த 2021 டிசம்பரில், தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாடு மாநிலத்தின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்தில், குடியரசு தின விழாவில், தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது, அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்க மறுத்ததை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ஜி ராஜேஷ் என்பவர், இன்று (ஜனவரி 27) முறையாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

    அப்புகாரில், அந்த அதிகாரிகள் தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்ததன் மூலம், தமிழ்நாடு மாநில அரசின் அரசாணையை மீறிவிட்டதாக குறிப்பிட்டு, தக்க முறையில் விசாரணை நடத்தி, தவறு செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அப்புகார் மனு நிலுவையில் இருப்பதாக, தமிழ்நாடு காவல்துறை இணைய தளத்தில் தெரிய வருகிறது.

  17. அவிநாசியில் சிறுத்தையைத் தேடும் பணி 4ஆவது நாளாக தொடர்கிறது

    சிறுத்தையால் தாக்கப்பட்டவர்

    பட மூலாதாரம், Tiruppur forest department

    படக்குறிப்பு, சிறுத்தையால் தாக்கப்பட்டவர்

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கடந்த ஜனவரி 24-ம் தேதி அன்று தென்பட்ட சிறுத்தையை தேடும் பணி நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அவிநாசி அருகே இரண்டு பொதுமக்களையும் ஒரு வனத்துறை அதிகாரியையும் தாக்கிய சிறுத்தை கடந்த சில நாட்களாக வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வந்தது. இன்று காலை திருப்பூர் அம்மாபாளையத்தில் மேலும் ஒருவரை சிறுத்தை தாக்கியுள்ளது.

    சிறுத்தை தற்போது வரை நான்கு பேரை தாக்கியுள்ளது. சிறுத்தை நகர் பகுதிக்குள் வந்துள்ளதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அம்மாபாளையத்திற்கு வனத்துறையினரும் காவல்துறையினரும் விரைந்துள்ளனர்.

  18. இந்தியாவில் கொரோனா: கடந்த 24 மணிநேர நிலவரம்

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,86,384 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது என்றும் 573 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

    கோவிட்-19 தொற்றியிருந்த 3,06,357 பேர் நலம் பெற்றுள்ளனர்.

    இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,03,71,500 ஆகவும், இறந்தவர்கள் எண்ணிக்கை 4,91,700 ஆகவும் உயர்ந்துள்ளது என்று இந்திய அரசு தெரிவிக்கிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, புதிதாக 1,41,762 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 17,147 ஆண்கள், 12,829 பெண்கள் என மொத்தம் 29,976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று நேற்று மாலை தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

    கொரோனாவால் கூடுதலாக 47 பேர் இறந்துள்ளனர் என்றும் நேற்று மாலை தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

    தமிழ்நாட்டில் நேற்று 27,507 பேர் சிகிச்சை முடிந்து நலம் பெற்றனர்.

  19. 1,100 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் குறியீடு

    பங்குச் சந்தை

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, பங்குச் சந்தை

    இந்தியாவின் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், இன்று காலை 1,100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 56,751 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

    தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிடி50, சுமார் 325 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 16,951 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

  20. நிலவில் மோதி வெடிக்க உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

    ஃபால்கன் 9 ராக்கெட்

    பட மூலாதாரம், REUTERS

    படக்குறிப்பு, ஃபால்கன் 9 ராக்கெட்

    சில ஆண்டுகளுக்கு முன், ஈலோன் மஸ்கின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் ஏவப்பட்ட ராக்கெட் ஒன்று நிலவில் மோதி வெடிக்க உள்ளது.

    கடந்த 2015ஆம் ஆண்டு 'தி ஃபால்கன் 9 பூஸ்டர்' ராக்கெட் ஏவப்பட்டது. அந்த ராக்கெட் தன் பணியை நிறைவு செய்துவிட்டு பூமிக்குத் திரும்ப போதுமான எரிபொருள் இல்லாத காரணத்தால் புவிக்குத் திரும்பவில்லை. அப்படியே விண்வெளியில் கைவிடப்பட்டது.

    ஒரு ராக்கெட் கட்டுப்பாடின்றி நிலவில் மோத உள்ளது இதுவே முதல் முறை என விண்வெளி ஆய்வாளரான ஜோனதன் மெக்டோவல் பிபிசி நியூஸிடம் கூறினார்.நிலவில் ராக்கெட் மோதுவதால் ஏற்படும் தாக்கம் சிறிதாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.