தமிழ்நாடு காவல்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் பெண் அதிகாரிக்கு அவர் முன்பு பணியாற்றி வந்த லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜி ஆக இருந்த உயரதிகாரி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளித்த புகார் தொடர்பான மனு மீதான விசாரணையை மேலும் இரு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறையில் இணை இயக்குநராக பணியாற்றிய ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரி மீது அதே துறையில் பணியாற்றிய பெண் எஸ்பி பாலியல் சீண்டல் புகார் கொடுத்திருந்தார். அந்த வழக்கில் ஆளும் கட்சிக்கு நெருக்கமாக ஐஜி இருந்ததால் தனக்கு நியாயம் கிடைக்காது என்று பெண் எஸ்பி முறையிட்டதை ஏற்று அந்த வழக்கை தெலங்கானா மாநிலத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட ஐஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததையடுத்து அந்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், தமது புகாரை தமிழக சிபிசிஐடியே விசாரிக்க தாம் உடன்படுவதாக பெண் எஸ்பி கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, ஐஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம், தனது உத்தரவில், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உரிய விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சில மாதங்களான போதும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு காரணங்களால் இந்த விவகாரம் விசாரிக்கப்படாமல் தள்ளிப்போனது.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஜெ. சத்திய நாராயணபிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம்சாட்டப்பட்ட ஐஜி தரப்பில் வாதங்களை முன்வைக்க நான்கு வார கால அவகாசம் கேட்கப்பட்டது.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், இந்த வழக்கு ஏற்கெனவே மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. மேலும், மேலும் ஐஜி தரப்பு அவகாசம் கோரக்கூடாது என்று கூறினார்.
சிபிசிஐடி சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, விசாகா கமிட்டி விதிகளின்படி துறை ரீதியான பாலியல் புகார்களை 90 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால், மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கு தொடக்க நிலையிலேயே உள்ளது என்று குறிப்பிட்டார்.
குறைந்தபட்சம் சிபிசிஐடி வழக்கை விசாரிக்கவாவது அனுமதி தர வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். இருந்தபோதும், ஐஜி தரப்பு இனியும் அவகாசம் கேட்கக் கூடாது என்று தெரிவித்து இந்த வழக்கை மேலும் இரு வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.