தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவதாக அறிவிப்பு - பரஸ்பரம் பிரிவதாக அறிக்கை

18 வருடங்களாக நட்பாக, ஜோடியாக இருந்து பெற்றோராக இருந்தோம். இப்போது பிரிகிறோம் என்று தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் தனித்தனியாக அவரவர் சமூக ஊடக பக்கங்களில் அறிக்கையை வெளியிட்டு பிரிந்து வாழும் முடிவை வெளியிட்டுள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம். மணிகண்டன் and ஜோ மகேஸ்வரன்

  1. தொடர்ந்து இணைந்திருங்கள் - நேரலையைத் தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன்

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோன்.

    செய்திகளைத் தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன்.

  2. எம்.ஜி.ஆர் பிறந்த நாள் – பிரதமர் மோதி புகழாரம்

    எம்.ஜி.ஆர் பிறந்த நாள்

    பட மூலாதாரம், Narendra Modi

    படக்குறிப்பு, எம்,ஜி.ஆரின் திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது - மோதி

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவனமான எம்,ஜி.ராமச்சந்திரன் பிறந்த நாளான இன்று, இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கத்தில், ''பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது!'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  3. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று 2.58 லட்சம்

    இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று 2, 58, 089 ஆக பதிவாகியுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் மொத்தம் 385 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 1,51, 740 பேர் சிகிச்சை முடிந்து நலம் பெற்றுள்ளனர்.

    நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் தொற்று எண்ணிக்கை நேற்றைய தினம் 13, 113 குறைந்ததுள்ளது. தினசரி தொற்று 119.65 விழுக்காடாக உள்ளது. தற்போது மொத்தம் 16, 56,341 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    நாடு முழுவதும் மொத்தம் 8, 209 பேர் ஒமிக்ரான் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப் பாயும் காளைகள், நடராஜன் சுந்தர், பிபிசி தமிழுக்காக

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
    படக்குறிப்பு, அனைத்து காளைகளுக்கும் தங்கக்காசு பரிசாக வழங்கப்படுகிறது.

    மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. தமிழ்நாடு அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஒவ்வொரு சுற்றுக்கும் 50 பேர் என மொத்தம் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 700 காளைகள்பங்கேற்கின்றன.

    கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவங்கி நடைபெற்ற வருகிறது.

    கடந்த ஜனவரி 14-ஆம் நாள் அவனியாபுரத்திலும், 15-ஆம் நாள் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தொடர்ந்து ஜனவரி 16-ஆம் நாள் நடைபெற வேண்டிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, முழு ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, இன்று நடைபெறுகிறது.

    ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கு முன்பாக காளைகளுக்கும் வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதில் தேர்வாகும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவர்.

    மேலும் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்படும் அனைத்து காளைகளுக்கும் தங்கக்காசு பரிசாக வழங்கப்படவுள்ளது. சிறந்த மாடு பிடி வீரருக்கும், சிறந்த காளை உரிமையாளருக்கும் கார் வழங்கப்படவுள்ளது.

    இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அலங்காநல்லூர்
    படக்குறிப்பு, மொத்தம் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  5. கதக் கலைஞர் பிர்ஜு மகராஜ் காலமானார்

    கதக்

    பட மூலாதாரம், ANI

    புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 83. பத்ம விபூஷன் விருது பெற்ற பிர்ஜு மகராஜ் மரணம் குறித்த தகவலை அவரது பேரன் ஸ்வரன்ஷ் மிஸ்ரா ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

    "இன்று எங்கள் குடும்பத்தின் அன்பான உறுப்பினரான பண்டிட் பிர்ஜு ஜி மகராஜை இழந்துவிட்டோம் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பிர்ஜு மகராஜ் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். "சிறந்த கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் ஜியின் மறைவு பற்றி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். கலைத் துறையில் ஒரு தனித்துவமான கலைஞரை இழந்துவிட்டோம். அவர் தனது திறமையால் பல தலைமுறைகளுக்கு செல்வாக்கு செலுத்தியுள்ளார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்." என்று பாடகர் அட்னான் சாமி ட்வீட் செய்துள்ளார்.

    லக்னோவின் கதக் குடும்பத்தில் பிறந்த பிர்ஜு மகராஜின் தந்தை அச்சன் மகராஜ் மற்றும் மாமா ஷம்பு மகராஜ் ஆகியோர் புகழ் பெற்றவர்கள்.

    அவரது இயற்பெயர் பிரிஜ்மோகன் மிஸ்ரா. ஒன்பதாவது வயதில் தந்தை இறந்த பிறகு, குடும்பப் பொறுப்பு அவரது தோள்களில் விழுந்தது. பிறகு மாமாவிடம் கதக் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். பின்னர் டெல்லி வந்த அவர் கதக்கில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். திரைப்படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

  6. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் எம். மணிகண்டன், ஜோ. மகேஸ்வரன்