ஆவினில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடி செய்த
வழக்கில் முதல் நபராகக் குற்றம் சுமத்தப்பட்ட விஜய நல்லதம்பியை தனிப்படை காவல்துறையினர்
கைது செய்துள்ளனர்.
அ.தி.மு.கவின் 2016-21 ஆட்சிக்காலத்தில்
பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆவினில் வேலை வாங்கித்
தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர்
காவல்துறையில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
இந்தப் புகாரின்பேரில் ராஜேந்திர
பாலாஜி, விஜய நல்லதம்பி உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேநேரம், ஆவினில் வேலை வாங்கித்
தருவதாக 3 கோடி ரூபாய் வரையில் ராஜேந்திர பாலாஜி மோசடி செய்ததாக விஜய நல்லதம்பியும்
புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் பிணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில்
ராஜேந்திர பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில்
அவருக்குப் பிணை மறுக்கப்படவே, தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, எட்டு தனிப்படைகளை
அமைத்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடிவந்தனர். தொடர்ந்து
உச்ச நீதிமன்றத்திலும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதியன்று
கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் தனிப்படை போலீஸாரால் ராஜேந்திர பாலாஜி கைது
செய்யப்பட்டார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க வழக்கறிஞர் அணி
நிர்வாகிகள், ` உள்நோக்கத்தில் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி செய்யப்பட்டார். பண மோசடி
வழக்கில் ஏ2 ஆக ராஜேந்திர பாலாஜி சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் ஏ1 ஆக குற்றம்
சுமத்தப்பட்டுள்ள நல்லதம்பியை போலீஸார் இதுவரையில் கைது செய்யவில்லை' எனப் பேட்டியளித்தனர்.
மேலும், உச்ச நீதிமன்றத்தில்
கடந்த 12 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நான்கு வாரகால
இடைக்கால ஜாமீன், ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜி மீது
மோசடிப் புகார் அளித்த விஜய நல்லதம்பியை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவரிடம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல்
வெளியாகியுள்ளது.