You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

15 - 18 வயது சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி: ஐந்து நாட்களில் 2 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது – மத்திய அரசு

15 - 18 வயது சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி: ஐந்து நாட்களில் 2 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது – மத்திய அரசு

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு நன்றி!

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. இலங்கை வந்தார் சீன வெளிவிவகார அமைச்சர்

    இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இலங்கை வந்தடைந்தார்.

    இலங்கை மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவு தொடங்கி 65 ஆண்டுகள் நிறைவு அடைவதை முன்னிட்டு சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    சீன வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழு நாட்டில் தங்கிருக்கும் காலப் பகுதியில், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

    சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட உரம் தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளதாக கூறி அதனை இலங்கை நிராகரித்தமையின் ஊடாக எழுந்த சர்ச்சை மற்றும் வடக்கிலுள்ள மூன்று தீவுகளில் ஆரம்பிக்க உத்தேசித்திருந்த மின்சக்தி திட்டத்தை சீனா கைவிட நேர்ந்தமையின் ஊடாக எழுந்த சர்ச்சை உள்ளிட்ட சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே, சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.

  3. "15 - 18 வயதுக்குட்பட்டவர்கள் 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது"

    இந்தியாவில் இதுவரை 15 முதல் 18 வயதுக்குட்பட்ட இரண்டு கோடி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை அன்று தெரிவித்தார்.

    இதுகுறித்து பாராட்டிய மாண்டவியா, “15 – 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கிய ஒரு வாரத்திற்குள் 2 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது” தெரிவித்தார்.

    இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது என்றும் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

  4. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்

    ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறுகிறது. ஏழாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு மார்ச் 7ஆம் தேதி நடைபெறும். மார்ச் 10ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

  5. கொரோனா வைரஸ்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய பாதுகாப்பு வழிமுறைகள்

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நலன் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை கடந்த ஜனவரி 5ஆம் தேதி வெளியிட்டுள்ளது.

    ஒமிக்ரான் திரிபின் பரவல் வேகமெடுத்துள்ளதால் இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில்,கோவிட் அறிகுறிகள்தென்படாதவர்கள் ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவிட் அறிகுறிகள் உள்ளவர்கள் தொற்று உறுதியாகி ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்வதுடன், அதன் பின்பு தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சல் இல்லை என்று உறுதியாகும்வரை தனிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கூறியுள்ளது.

  6. ஐந்து மாநில தேர்தல் அறிவிப்பு

    உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இந்த வருடம் நடைபெறவுள்ளது.

    இதற்கான அறிவிப்பை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா வெளியிட்டு வருகிறார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

    கொரோனா சமயத்தில் தேர்தலை நடத்துவது சவலான ஒன்று என்றும் பாதுகாப்பான தேர்தலை நடத்துவதே முன்னுரிமை என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

    உத்தரபிரதேசம்:

    உத்தரபிரதேச மாநிலத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.

    முதல்கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 10

    இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 14

    மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 20

    நான்காம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 23

    ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 27

    ஆறாம் கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 3

    7-ம் கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 7

    மணிப்பூர்:

    மணிப்பூர் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

    முதல்கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 27

    இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 3

    பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா ஆகிய 3 மாநிலங்களுக்கு பிப்ரவரி 14 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

    அனைத்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்: மார்ச் 10

  7. பாகிஸ்தான்: கடும் பனிப்பொழிவில் சிக்கி 21 பேர் வரை உயிரிழப்பு

    பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் முர்ரி மற்றும் அதற்கு அருகாமை பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக, வாகனங்களில் சிக்கி, குறைந்தது 21 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என, மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    `மலைகளின் இளவரசி` என அழைக்கப்படும் முர்ரி மலைப்பிரதேசம், குளிர்காலங்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

    இந்நிலையில், பஞ்சாப்பின் முர்ரி மற்றும் அதற்கு அருகாமை பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக, குறைந்தது 21 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என, மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடும் பனிப் பொழிவு காரணமாக, தங்கள் கார்களுக்குள் பயணிகள் இருந்த நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டதே இவர்களின் இறப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

    போக்குவரத்துத் தடையால் அப்பகுதிக்கு செல்லும் வழியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத் - முர்ரி நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. முர்ரி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் ஈடுபட்டுள்ளன.

  8. நீட் தேர்வினால் சமூகநீதிக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை: வானதி சீனிவாசன்

    நீட் தேர்வினால் சமூக நீதிக்கு எள் முனையளவு கூட எந்த பிரச்சினையும் இல்லை என, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

    நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறும் சட்ட முன்வடிவை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத நிலையில், இன்று சனிக்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றள்ளனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதனிடையே, அனைத்துக் கட்சிக் கூட்டத்திலிருந்து பாஜக வெளி நடப்பு செய்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என அக்கட்சி சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தார்.

    செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "பாஜகவின் செயல்திட்டத்திலிருந்து அவர்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பின்பாக, நீட் தேர்வு புதிதாக உருவாக்கப்படவில்லை. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில், 2013-லிருந்தே இதற்கான முன்முயற்சிகள் தொடங்கப்பட்டன. காங்கிரஸ்-திமுக அரசாங்கத்தினால் தான் இது செய்யப்பட்டது.

    உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வினால் இட ஒதுக்கீடு எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. நீட் தேர்வினால் சமூக நீதிக்கு எள் முனையளவு கூட எந்த பிரச்சினையும் இல்லை" என தெரிவித்தார்.

  9. நீடித்த நிலையான பருத்தி இயக்கம்: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    ரூ.11 கோடி மதிப்பீட்டில் `நீடித்த நிலையான பருத்தி இயக்கம்` என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

    இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "உயர்தர பருத்தி உற்பத்தி திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கவும், பருத்தி நூற்பாலைகளின் பெருகிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    அவற்றில் மேலும் ஒரு சிறப்பம்சமாக, பருத்தி விவசாயிகளின் நலன் கருதி, ரூ.11 கோடி மதிப்பில் நீண்ட இழை பருத்தி சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த உத்திகளை 25,000 ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்திட நீடித்த நிலையான பருத்தி இயக்கம் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஐந்து விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்".

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  10. இந்தியாவில் 24 மணிநேரத்தில் சுமார் 1.42 லட்சம் பேருக்கு கொரோனா

    இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துவருகிறது.

    இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,41,986 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 40,895 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

    24 மணிநேரத்தில் 285 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,83,463 ஆக அதிகரித்துள்ளது. தற்போதுவரை, 4,72,169 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுவரை 27 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 3,071 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா திரிபு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில், 1,203 பேர் குணமடைந்துள்ளனர்.

  11. ஹேக் செய்யப்பட்ட பிரபல தமிழ் யூடியூப் சேனல்கள் - பாதுகாப்பாக இருப்பது எப்படி?

    தமிழகத்தில் 15-க்கும் மேற்பட்ட பிரபலமான யூடியூப் சேனல்கள் சமீபத்தில் முடக்கப்பட்டன. இதற்கு என்ன காரணம்? பாதுகாப்பாக இருப்பது எப்படி?

    நம்முடைய சமூக வலைதள கணக்குகள் மற்றும் வங்கிக் கணக்குகளை எப்படிப் பாதுகாப்பாக கையாள்வது என்று விளக்குகிறார் சைபர் தொழில்நுட்ப வல்லுநர் வினோத் ஆறுமுகம்.

    தமிழகத்தில் பிரபலமாக இருக்கக்கூடிய சேனல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதற்கு என்ன காரணம்?

    பிரபலமான சேனல்களை ஹேக் செய்வது ஒரு புறம் இருக்க, அதை வைத்து ஹேக்கர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்பது மிகவும் முக்கியம். ஹேக் செய்யப்பட்ட சேனல்களில் கிரிப்டோ பற்றி நேரலை வீடியோவை ஒளிபரப்பி இருக்கிறார்கள். குறிப்பிட்ட கிரிப்டோ ப்ராண்டை விளம்பரம் செய்ய இந்த சேனல்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

  12. ஜெய் பீம், வலிமை: தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றும் ஓடிடி தளங்கள் - யாருக்கு லாபம்?

    அதிகமாகக்கூட இல்லை. மூன்று வருடங்களுக்கு முன் புதுப்படங்களை ஓடிடியில் ரீலிஸ் செய்வது என்பது தமிழ் சினிமாவுக்கு பழக்கப்படாத ஒன்று.

    ஆனால் இப்போது ஓடிடியில் படம் பார்ப்பவர்கள் மட்டுமல்ல தங்கள் படம் வெளிவர வேண்டும் என நினைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    சுருக்கமாகச் சொல்லப்போனாலும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா வர்த்தகத்தையே மாற்றியமைத்துள்ளது இந்த 'ஓவர் த டாப்' (over the top) என்று சொல்லக்கூடிய ஓடிடி தளங்கள்.

    கொரோனா பெருந்தொற்றால் உலகில் மாறிப்போன பல விஷயங்களில் சினிமா வர்த்தகம் குறிப்பாக தமிழ் சினிமா வர்த்தகமும் ஒன்று.

  13. 5 மாநில தேர்தல் தேதி: இன்று பிற்பகல் அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

    உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அறிவிக்க உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தராகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    இதனிடையே, இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துவது குறித்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள், மத்திய சுகாதாரத்துறை, உள்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை வல்லுநர்களுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர்.

    கோவிட் பரவலைக் கருத்தில் கொண்டு, தேர்தல் நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் பிறப்பிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

  14. அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது: நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்து என்ன?

    நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் இலக்கு என, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறும் சட்ட முன்வடிவை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத நிலையில், இன்று சனிக்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில், மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    "நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என நான் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இதனை வலியுறுத்தியுள்ளனர். 13.09.2021 அன்று நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றினோம். அதனை ஆளுநருக்கு அனுப்பினோம்.

    ஆனால், அந்த சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் வைத்திருக்கிறார் ஆளுநர். ஒரு சட்டப்பேரவை தனக்கு இருக்கும் சட்டம் இயற்றும் அதிகாரத்தின் கீழ் ஒரு சட்டத்தை நிறைவேற்றும்போது அதனை ஆளுநர் மதித்து ஒப்புதல் அளிப்பதுதான் மக்களாட்சியின் தத்துவம். நேரில் சென்று வலியுறுத்தியும் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை.

    மாநில சட்டப்பேரவையின் அதிகாரம், கேள்விக்குள்ளானதால்தான் அவசரத்துடன், அவசியமாக இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறோம்.

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இக்கூட்டத்தில் ஓர் வரைவு தீர்மானத்தை எடுத்துரைப்பார். நம் அனைவரின் இலக்கும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான். தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை காப்பாற்றிட வேண்டும் என்பதுதான். இந்த வரைவு தீர்மானத்தின் மீது அனைவரும் ஆலோசனைகளை வழங்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்"

    இவ்வாறு அவர் பேசினார்.

  15. 'தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி' வெளிநாட்டு நன்கொடை பெற மீண்டும் அனுமதி

    அன்னை தெரசா தொடங்கிய 'தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி' சேவை அமைப்புக்கு, வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கான உரிமத்தை இந்திய அரசு மீண்டும் புதுப்பித்துள்ளது. இத்தகவலை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    இந்தியாவில் செயல்படும் அமைப்புகளும், அரசு சாரா நிறுவனங்களும் வெளிநாட்டிலிருந்து நன்கொடைகள் பெறுவதற்கு வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டத்தின்படி உரிமம் பெறுவது கட்டாயமாகும்.

    இந்நிலையில், சுமார் 6,000 நிறுவனங்கள் அந்த உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கவில்லை அல்லது மத்திய உள்துறை அமைச்சகம் அவற்றின் விண்ணப்பங்களை நிராகரித்திருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    ஏற்கனேவே 6,587 அரசு சாரா நிறுவனங்களின் உரிமம் நிறுத்தப்பட்டது. எனவே, சுமார் 12,000-க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளின் உரிமம் சென்று ஆண்டு இறுதியில் காலாவதியாகின. அவற்றில் 'தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி' அமைப்பும் அடக்கம்.

  16. தொடர்ந்து இணைந்திருங்கள்

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுளை இன்றைய நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    தொகுத்து வழங்குவது நந்தினி வெள்ளைச்சாமி.

  17. ஜனவரி 12ஆம் தேதி இந்தியா சீனாவுக்கு இடையில் 14ஆவது சுற்று பேச்சு வார்த்தை

    இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் நிலவும் மெய்யான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control - LAC) தொடர்பாகத் நிலவி வரும் பிரச்னை குறித்து, கமாண்டர்கள் மட்டத்திலானலான 14ஆவது சுற்று பேச்சு வார்த்தை ஜனவரி 12ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஏ.என்.ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

  18. "பஞ்சாப் அரசைக் கலைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளேன்" - ஹரியானா முதல்வர்

    "நாம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம். பஞ்சாப் மாநிலத்தில் பிரதமரின் நிகழ்ச்சியில் ஏற்படுத்தப்பட்ட தடைகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதது. பஞ்சாப் மாநில அரசைக் கலைக்கவும், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும், குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்" என ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

  19. கஜகஸ்தானில் ரஷ்ய துருப்புகள் ஏன்? ஆண்டனி பிளிங்கன் கேள்வி

    கஜகஸ்தானில் எரிபொருள் விலை ஏற்றத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் டஜன் கணக்கிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    அரசுக்கு எதிரான போராட்டத்தைக் கட்டுப்படுத்த, சில தினங்களுக்கு முன் அந்நாட்டு அதிபர் ரஷ்யாவின் உதவியை நாடினார்.

    ரஷ்ய துருப்புகளும் கஜகஸ்தானில் களமிறக்கப்பட்டன. ரஷ்ய துருப்புகள் ஏன் கஜகஸ்தானில் களமிறக்கப்பட்டதென தெரியவில்லை என்று அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

    மேலும் தங்கள் நாட்டுக்குள் நிலவும் அமைதியின்மையைத் தீர்க்க கஜகஸ்தான் ஏன் ரஷ்ய ராணுவத்தின் உதவியை நாட வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ரஷ்ய தரப்போ, 'கலெக்டிவ் செக்யூரிட்டி டிரீட்டி ஆர்கனைசேஷன்' என்கிற ராணுவ ஒப்பந்தத்தின்படி கஜகஸ்தானுக்கு உதவுவதாக பதிலளித்துள்ளது.

  20. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    தமிழகம், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    செய்தியை தொகுத்து வழங்குவது நந்தினி வெள்ளைச்சாமி.