You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடு குளறுபடி: சர்ச்சையில் பஞ்சாப் முதல்வர்

பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடு விஷயத்தில் எது தவறாக நடந்திருந்தாலும் அது ஏற்பதற்கில்லை என்று கூறியிருக்கிறார் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர். இந்த விவகாரத்தில் மாநில அரசு சரியாக செயல்படவில்லை எனற சர்ச்சை தீவிரமாகி வருகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது

    தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. முதல் முறையாக, இசைத் தட்டுக்கு பதிலாக, இசைக்கல்லூரி மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.

    இதைத் தொடர்ந்து, தமிழில் வணக்கம் கூறி, புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றத் தொடங்கினார்.

    ஆளுநர் உரையின் போது, அதிமுக, விசிக கட்சி உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர். நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து விசிக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தனர்.

    தொடர்ந்து, ஆளுநர் தனது உரையில், ''கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு இநதியாவிற்கே முன்மாதிரியாக உள்ளது. ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒமிக்ரான் ஆய்வகம் தமிழ்நாட்டில்தான் முதலில் அமைக்கட்டது. மருத்துவ காப்பீட்டுக்கான வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 12ம் தேதி அயலகத் தமிழர் நாளாக கொண்டாடப்படும்'' என்றார்.

  2. தொடர்ந்து இணைந்திருங்கள்

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை இனி தொகுத்து வழங்குவது ஜோ. மகேஸ்வரன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

  3. புல்வாமா துப்பாக்கிச் சூடு: மூன்று பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு

    புல்வாமா மாவட்டத்தில் உள்ள சந்த்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது என காஷ்மீர் மண்டல காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்றும், அவர்களில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

    மேலும், இது தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று காஷ்மீர் காவல்துறை கூறியுள்ளது.

  4. விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் மூவர் உயிரிழப்பு, பிரபுராவ் ஆனந்தன்

    விருதுநகர் மாவட்டத்தில் இன்று நடந்த பட்டாசு விபத்தில் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் விஜயகுலத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை ஒன்று சாத்தூர் அடுத்த மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில் இயங்கி வருகிறது.

    இங்கு சுமார் 50க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் கருப்பசாமி மற்றும் அவரது உறவினர் செந்தில்குமார் ஆகியோர் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது திடீரென ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த அறை இடிந்து தரைமட்டமானது. அப்போது பணியில் இருந்த 7 பேர் காயம் அடைந்தனர்.

    கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் மற்றும் காசி ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பட்டாசு ஆலை உரிமையாளர் கருப்பசாமி என்பவரும் உயிரிழந்தார்.

    படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட எஞ்சிய நால்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  5. அடையாளம் தெரியாத ஏவுகணையை கடலில் செலுத்திய வடகொரியா

    அடையாளம் தெரியாத ஏவுகணை என விவரிக்கப்படும் ஒன்றை வடகொரியா கடலுக்குள் செலுத்தியதாக தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த ஏவல் நிகழ்ந்ததாக ஜப்பான் கடலோர பாதுகாப்பு படை முதலில் தகவல் வெளியிட்டது.

    இது பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என்று ஜப்பானால் தெரிவிக்கப்பட்டாலும், இதுவரை ஏவுகணை பற்றிய உறுதிசெய்யப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

    அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுடைய ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்ய ஐ.நா தடை விதித்துள்ளது.

    2022இல் இது வடகொரியாவுக்கு முதல் ஏவுகணை சோதனையாகும்.

    பொருளாதாரத்தை சீரமைப்பதற்கே இந்தாண்டில் தேசியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என வட கொரியா அதிபர் கிம் ஜோங்-உன் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில் இந்த ஏவுகணை சோதனை நிகழ்ந்துள்ளது.

  6. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    செய்தியை தொகுத்து வழங்குபவர் ஜோ மகேஸ்வரன்