ஜார்கண்ட் மாநிலம் சிம்தேகா மாவட்டத்தில், கிராம மக்கள் ஒரு இளைஞரை தாக்கி உயிருடன் எரித்தனர்.
இது ஒரு கும்பல் கொலை போன்ற சம்பவம் என்று காவல்துறை கூறுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளதுடன், சிலரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
நேரில் கண்ட சாட்சிகளின்படி, சம்பவத்தின் போது கொல்லப்பட்ட இளைஞரின் மனைவி அவரது உயிரைக் காப்பாற்றுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்தார், ஆனால் கிராம மக்கள் அவரது வேண்டுகோளை புறக்கணித்தனர்.
இச்சம்பவம் கொலேபிரா காவல் நிலையத்திற்குட்பட்ட பெசராஜரா கிராமத்தில் நடந்துள்ளது.
கொல்லப்பட்டவரின் பெயர் சஞ்சு பிரதான்.
ஜார்கண்ட் காவல்துறை அதிகாரி டேவிட் ஏ டோட்ராய் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், "இந்த சம்பவம் கும்பல் கொலை போன்றது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இளைஞரை கொன்றவர்கள் வேறு கிராமத்தில் இருந்து வந்தவர்கள்" என்றார்.
சஞ்சு பிரதான் கிராமத்தில் மரங்களை வெட்டி ரகசியமாக விற்பதாக உள்ளூர்வாசிகள் கூறினர். இவை அனைத்தும் பழங்குடியினரின் குந்தக்தி அமைப்பின் கீழ் வரும் மரங்கள்.
நேரில் கண்ட சாட்சி வெளியிட்ட தகவல்
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், "பக்கத்து பம்பால்கேரா கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200 கிராம மக்கள் கொண்ட கும்பல் பெசராஜரா கிராமத்தை அடைந்தது. முதலில் சஞ்சு பிரதானை அவரது வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் அவரை அடிக்கத் தொடங்கினர். அந்த நேரத்தில் பிரதானின் மனைவி சப்னா தேவியும் அங்கு இருந்தார், கணவரை விட்டுவிடுமாறு கெஞ்சினார், ஆனால் யாரும் அவரது பேச்சைக் கேட்கவில்லை," என்று கூறினார்.
அடிப்பதற்கு முன், அங்கு பஞ்சாயத்தும் நடந்ததாகவும், அதில் சஞ்சு மரத்தை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த விறகுக்கு தீ வைத்த கும்பல் சஞ்சுவை அதில் தள்ளியதில் அவர் உயிருடன் கருகி உயிரிழந்தார்.
இதற்கிடையில், இதுபற்றி ஒருவர் கொலேபிரா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ஆனால் போலீசார் வருவதற்குள் சஞ்சு இறந்துவிட்டார்.
தீயணைப்பு படையினர் உதவியுடன் தீயை அணைத்த போலீசார், சடலத்தை கைப்பற்றினர்.
இந்த சம்பவத்தையடுத்து கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குந்தக்தி அமைப்பு என்றால் என்ன?பழங்குடியினரின் பாரம்பரிய குந்தக்தி அமைப்பின் கீழ், கிராமத் தலைவரின் அனுமதியின்றி கிராமத்தில் மரங்களை வெட்ட தடை உள்ளது.
மரங்களை வெட்டும் இளைஞர்கள் பற்றி வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். ஆனால், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்களே அங்கு வந்தனர்.
இந்நிலையில், இளைஞர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.