You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

முஸ்லிம் சிறுமிகளை ஏலத்தில் விடும் சர்ச்சை செயலி: சந்தேக நபருக்கு போலீஸ் காவல்

அதிகரித்துவரும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு வரும் வார இறுதியில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. அரசாங்கத்தை விமர்சித்த, ராஜாங்க அமைச்சர் பதவி நீக்கம், ரஞ்சன் அருண் பிரசாத்

    இலங்கையின் கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பதவி நீக்கப்பட்டுள்ளார்.

    உடன் அமுலுக்கு வரும் வகையில், அவர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

    ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.

    அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சுசில் பிரேமஜயந்த, அண்மை காலத்தில் விமர்சித்திருந்தார்.

    செய்ய முடியாததை செய்ய முயற்சித்தமையினாலேயே, முழு நாடும் கஷ்டத்தில் உள்ளதாக அவர் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

    உரம் இல்லாமல், விவசாயிகள் எவ்வாறு விளைச்சலை பெற்றுக்கொள்வார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

    மரக்கறி உள்ளிட்ட பொருட்களின் விலைகளை முன்னதாகவே திட்டமிட்டு கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் எனவும், பொருட்களின் விலையேற்றத்திற்கான பொறுப்பை, தீர்மானம் மேற்கொண்டவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.

    அத்துடன், விவசாய அமைச்சர் தனது பொறுப்பில் தோல்வி கண்டுள்ளதாகவும் அவர் விமர்சனம் முன்வைத்திருந்தார்.

    தற்போது ஆட்சியிலுள்ளது தமது அரசாங்கம் என்ற போதிலும், தன்னை தீர்மானம் எடுக்கும் இடத்தில் வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

    சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டிய காலம் இருந்தாக கூறிய அவர், தற்போது அந்த காலம் கடந்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் வகையில், சுசில் பிரேமஜயந்த கருத்து வெளியிட்டு, ஓரிரு தினங்களில் ஜனாதிபதியினால் அவர் பதவி விலக்கப்பட்டுள்ளார்.

  2. அம்மா கிளினிக்குகள் மூடப்பட்டதற்கு அதிமுக எதிர்ப்பு

    தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை தெரிவித்தார்.

    இதற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது, "ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், மூடப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது." என்று தெரிவித்துள்ளார்.

  3. 'அம்மா மினி கிளினிக்குகள் மூடல்' - அமைச்சர் மா சுப்பிரமணியன்

    சென்னை வேப்பேரி பெரியார் திடலில் கொரோனா சித்த மருத்துவ மையத்தை தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கொரோனா லேசான அறிகுறிகளுடன் இருந்தால் வீட்டிலேயே சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டில் இருப்பவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்க மண்டலவாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.கொரோனா சித்த மருத்துவ மையங்கள் 100 தொடங்கப்படும்," என்றார். மேலும், "கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளில் செவிலியர்கள் நியமிக்கப்படவில்லை. செயல்படாமல் இருந்த அம்மா கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டன. இவற்றில் நியமிக்கப்பட்ட 1820 தற்காலிக மருத்துவர்களும் மார்ச் வரை பணியில் இருப்பார்கள்", என்றார்.

  4. இந்தியாவில் புதிதாக 37 ஆயிரத்து 379 பேருக்கு கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 37 ஆயிரத்து 379 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி முகமையின் ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 11 ஆயிரத்து 7 பேர் நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாகவும், 124 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் தினசரி 3.24% பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுக்கின்றனர் என்று ஏ.என்.ஐ குறிப்பிட்டுள்ளது.

  5. அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கொரோனா

    டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தமக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    மிதமான அறிகுறிகளுடன் தாம் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

  6. கொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பிய ஹைட்டி பிரதமர்

    ஹைட்டி நாட்டில் சுதந்திர தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில், அந்நாட்டு பிரதமர் ஏரியல் ஹென்றியைக் கொல்ல முயற்சி நடந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முயற்சியில் இருந்து, அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளார்.

    கோனாவ்ஸ் (Gonaïves) நகரத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ஹென்றி பங்கேற்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இணையத்தில் வெளியான வீடியோவில், அந்நாட்டு பிரதமரும் அவரது காவலர்களும் கடும் துப்பாக்கிச் சூடுக்கு இடையே தங்களின் வாகனத்தை நோக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

    இந்த கொலை முயற்சிக்கு பின், "கொள்ளைக்காரர்களும் தீவிரவாதிகளும்" இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    சமீப ஆண்டுகளில் நடந்த இயற்கை பேரழிவுகள், அந்நாட்டில் உள்ள மோசமான பொருளாதார நிலையையும், வன்முறையையும் மேலும் அதிகரித்துள்ளன. இதனால், வாய்ப்புகள் தேடி மற்ற நாடுகளுக்கு செல்லும் ஹைட்டி மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

  7. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    செய்தியை தொகுத்து வழங்குபவர் எம்.ஆர். ஷோபனா.