You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நீட் முதுநிலை கவுன்சிலிங்: டெல்லியில் போராட்டத்தை விலக்கிக் கொண்ட மாணவர்கள்

இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், சேர்க்கை கலந்தாய்வை நடத்த முடியவில்லை. ஜனவரி 6ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. விரைவில் கலந்தாய்வு தொடங்கும் என்கிற நம்பிக்கை உள்ளது." என்று சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. டிசம்பர் 28ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா தொற்று

    சீனாவில் கடந்த திங்கட்கிழமை புதிதாக 200 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 162 பேருக்கு உள்நாட்டிலேயே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    கடந்த 20 மாதங்களில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச வைரஸ் பாதிப்பு இதுவாகும் என சீன பத்திரிகையான குளோபல் டைம்ஸை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

    பெய்ஜிங்கில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக, சீனாவில் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கவலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்வுக்கு முன்னதாக சீனாவால் நிலைமையை கட்டுப்படுத்த முடியுமா என்பது கேள்விக்குரியதாக உள்ளது.

    குறிப்பாக ஒமிக்ரான் திரிபு பாதிப்பு உலக அளவில் பரவி வரும் வேளையில் சீனாவில் தற்போதைய பாதிப்பு அளவு அந்நாட்டின் சுகாதாரத்துறையினருக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

    அங்கு பதிவான சமீபத்திய 162 உள்நாட்டு பாதிப்புகளில் 150 பாதிப்புகள் வடமேற்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தின் தலைநகரான சியானில் பதிவாகியுள்ளன.

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, நீட் கவுன்சிலிங்: டெல்லியில் மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்

    நீட் கவுன்சிலிங்கை தாமதமின்றி நடத்துமாறு மாணவர்கள் மற்றும் உறைவிட மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் அரசு தரப்பு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை முதல் நோயாளிகளுக்கு வழங்கி வரும் சேவையை நிறுத்துவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் எச்சரித்திருந்தனர்.

    இந்த நிலையில், மாணவர்களின் போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்ததாக இன்று சர்ச்சை எழுந்தது. அந்த மாணவர்களில் சிலர் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து தங்களுடைய போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக மருத்துவர்களும் மாணவர்களும் தெரிவித்தனர். காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதி அவரது தலையீட்டைக் கோரினார்.

    இதையடுத்து இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு காண முயற்சி நடப்பதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

    இந்தப் பின்னணியில் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி முதுநிலை மாணவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

  4. திண்டுக்கல் அருகே துக்க நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட 40க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம், மணிவண்ணன், திருச்சி

    திண்டுக்கல் அருகே துக்க நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட 40க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வட்டப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களுக்கு அங்கு போதிய இட வசதியும் மருத்துவ உபகரணங்களும் இல்லாததால் வெட்டவெளியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டம் குட்டத்து ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செபஸ்தியார். இவர் கடந்த 25ஆம் தேதி உயிரிழந்தார். அவரது இறப்பின் மூன்றாம் நாள் துக்க நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் சாப்பிடுவதற்காக பித்தளை பட்டியில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து உணவு சமைத்து வாங்கிக் கொண்டு வந்து உணவு பரிமாறப்பட்டுள்ளது. அதை சாப்பிட்ட சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள வட்டப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தற்போது வரை குட்டத்து ஆவாரம்பட்டியை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அங்கு போதிய படுக்கை வசதி இல்லாததால் வெட்டவெளியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கருதப்படுவதால் வட்டப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த பாதிக்கப்பட்டவர்களை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது குறித்து திண்டுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  5. மருத்துவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் எதிர்ப்பு, மோதிக்கு கடிதம்

    டெல்லியில் போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அது குறித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை தாமதமின்றி நடத்தக்கோரி, டெல்லியில் இருக்கை மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களை கலைக்க காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமர் மோதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், முதுநிலை மருத்துவ கலந்தாய்வு கோரி போராட்டம் நடத்தி வரும் மருத்துவ மாணவர்கள் மீதான காவல் துறையின் ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முதுநிலை மருத்துவ கலந்தாய்வு குறித்து விரைவில் மத்திய தீர்வு காண வேண்டும் என்று கடிதத்தில் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

  6. முதுநிலை மருத்துவ கலந்தாய்வு எப்போது? இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி

    முதுநிலை மருத்துவ நீட் கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

    முதுநிலை நீட் கலந்தாய்வை தொடங்க வலியுறுத்தி டெல்லியில் இருக்கை மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இருக்கை மருத்துவர்களை தான் சந்தித்து பேசியுள்ளதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், "இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், சேர்க்கை கலந்தாய்வை நடத்த முடியவில்லை. ஜனவரி 6ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. விரைவில் கலந்தாய்வு தொடங்கும் என்கிற நம்பிக்கை உள்ளது." என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், "பொது மக்கள் நலன் கருதி, மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட வேண்டும்." என்றும் வலியுறுத்தியுள்ளார்.

  7. பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள்: தீவிரமாகும் விவாதங்கள், மோகன், கோயம்புத்தூர்

    தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகளில் பாலியல் புகார்கள் எழுந்துள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் பள்ளிகளில் நிகழக்கூடிய குற்றங்களை கையாளுவது குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.

    மாநில குற்ற ஆவண காப்பக தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பதிவாகும் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "குழந்தைகள் தங்களுடைய பெற்றோரிடம் எதையும் சொல்வார்கள். எனவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் பாலியல் குற்றங்கள் தொடர்பாக பக்குவத்துடன் பேசி, புரிதலை உருவாக்க வேண்டும்" என்கிறார்கள்.

    குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்த விரிவான பிபிசி தமிழ் செய்தியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

  8. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா, ஜி.மணிவண்ணன், திருச்சி

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் உதவியாளர்கள் இருவர், கணினி உதவியாளர், ஓட்டுநர், தூய்மைக் காவலர் உள்ளிட்ட 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அனைவரும் தனியார் மருத்துவமனை, அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தினமும் பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அலுவலர்களும் மாவட்ட ஆட்சியரின் உதவியாளர்களை சந்தித்து வருவதால், அண்மையில் இவர்களைச் சந்தித்த அனைவருக்கும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  9. புதுச்சேரியில் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு, நட்ராஜன் சுந்தர்

    புதுச்சேரியில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த 80 வயது முதியவர், 20 வயது இளம்பெண் ஒருவருக்கும் ஒமிக்ரான் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவர்களின் ரத்த மாதிரிகள் ஹைதராபாதில் உள்ள பரிசோதனை மையத்திறகு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவில், இருவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது என்று புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது 119 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,29,434 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,27,435 நபர்கள் குணமடைந்துள்ளனர்.

  10. தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 31 சதவீதமாக உயர்வு

    தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படியும் பொங்கல் பரிசுக்கும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழ்நாடு அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி தகுதியுள்ள பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 14 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதையடுத்து 17 சதவீதமாக உள்ள அகவிலைப்படி வரும் ஜனவரி 1ம் தேதி முதல் 31 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டிற்கு சுமார் ரூ. 8,724 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

    மேலும், பொங்கல் பரிசாக சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு ரூ. 3 ஆயிரம், ஓய்வூதியர்களுக்கு ரூ. 500 , சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ. 1000, சிறப்பு ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ. 500 வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை உள்ள நிலையில், அகவிலைப் படி உயர்வு மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட உத்தரவிட்டுள்ளது.

  11. கொரோனா பரவலைத் தடுக்க டெல்லியில் கட்டுப்பாடுகள்: முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்

    கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் டெல்லியில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறும்போது, "டெல்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது. மெட்ரோ, உணவகங்கள், மதுபான கூடங்களில் 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்க வேண்டும். திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், ஸ்பா, விளையாட்டரங்குகள் உள்ளிட்டவை உடனடியாக மூடப்படுகின்றன," என்று தெரிவித்துள்ளார்.

  12. தமிழ்த் திரைப்படங்களை வெளியிட முன்னுரிமை - இயக்குநர் சீனு ராமசாமி கோரிக்கை

    தமிழ்நாட்டில் தமிழ்ப் படங்களை திரையிட முன்னுரிமை தர வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.

    திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "கேரளா, கர்நாடகா மாநிலத்தில் அவர்கள் படங்கள் வெளியாகும்போது, முன்னுரிமை தருவது போல தமிழ்நாட்டு படங்கள் வெளியாகும்போது, தமிழ் படங்களுக்கு முதல் முக்கியத்துவம் தரவேண்டும். மாற்றுமொழி, டப்பிங் & ஆங்கிலப்படங்கள் தனியாக திரையிட கால அட்டவணையை தயாரிப்பாளர் சங்கம் உருவாக்க வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், "ஒரே நேரத்துல மூனு டப்பிங் மற்றும் ஆங்கில படங்கள் அதிக விளம்பரத்தோட வந்தா இங்க இருக்கிற 'ரைட்டர்' எப்படி தன்னோட வீட்ல ஆனந்தமா விளையாட முடியும்? சிலந்தி கூடு கட்டிராதா? எல்லாத்தையும் ஒரே நேரத்துல விடாம ஒவ்வொன்னா கூட விடுங்க இது பத்தி யோசிக்கலமா? அவ்வளவுதான் ஏ கேள்வி..!!." என்றும் சூசமாக பதிவிட்டுள்ளார்.

    இதற்கு இயக்குநரும் நடிகருமான சேரன் ஆதரவான கருத்தை பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "அதற்கு தமிழர்கள் முன்னுரிமை பேசப்பட வேண்டும்.. அதை நம் அரசாங்கம் முன்னின்று செயல்பாட்டை உறுதிப்படுத்த வலியுறுத்த வேண்டும்.. தமிழ்ப்படங்களுக்கு சிறு முதலீட்டு படங்களுக்கு காட்சிகள் பாகுபாடு முறைப்படுத்த முன்வர வேண்டும்," என்று சேரன் கூறியுள்ளார்.

  13. டெல்லியில் தீவிரமாகும் மருத்துவர்கள் போராட்டம்

    முதுநிலை மருத்துவ நீட் கவுன்சிலிங் தாமதமாவதைக் கண்டித்து டெல்லியில் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    முதுநிலை மருத்துவப் பட்ட படிப்பிற்கான நீட் கவுன்சிலிங் தாமத்தைக் கண்டித்து, போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களை காவல்துறையினர் நேற்று தாக்கியதாக போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

    இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து உச்ச நீதிமன்றன்றம் வரை இன்று பேரணியாக செல்ல முயன்ற மருத்துவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் கூறுகையில், "இன்றும் நாங்கள் பேரணியாக செல்ல முயன்றோம். காவல்துறையினர் தடுக்கின்றனர். நேற்று போராட்டம் நடத்திய இருக்கை மருத்துவர்களை காவல் துறையினர் தாக்கினர்," என்று குற்றம்சாட்டினர்.

    மருத்துவர்களின் போராட்டத்திற்கு டெல்லி எய்ம்ஸ் மற்றும் ராஜஸ்தான் மாநில மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருக்கை மருத்துவர்களின் போராட்டத்தினால், டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளது.

  14. தமிழ்நாட்டில் 5 பேர் மட்டுமே ஒமிக்ரான் தொற்றுடன் சிகிச்சை - மருத்துவத்துறை அமைச்சர்

    தமிழ்நாட்டில் தற்போது 5 பேர் மட்டுமே ஒமிக்ரான் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று ஏற்பட்ட 34 பேரில் 5 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து, நலமுடன் உள்ளனர்."

    "தமிழ்நாட்டில் மொத்தம் 118 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அனைவரின் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன."

    "கொரொனா பரவலைத் தடுக்க வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி, புத்தாண்டு கொண்டாட்டம் உள்ளிட்டவற்றைத் பொது இடங்களில் தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் மக்கள் செல்வது வருத்தமளிக்கிறது," என்றும்அவர் தெரிவித்தார்.

  15. மாணவனுடன் விஷம் குடித்த ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது

    பள்ளி மாணவனுடன் விஷம் குடித்து, தற்கொலைக்கு முயன்ற ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அரியலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் 12ம் வகுப்பு மாணவரும் பயிற்சி ஆசிரியை ராசாத்தி (24) என்பவரும் கடந்த அக்டோபர் மாதம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இருவரும் உறவினர்களால், மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த ஆசிரியை ராசாத்தி, நலம் பெற்று சொந்த ஊருக்கு சென்றார்.

    மாணவனின் தந்தை கடந்த அக்டோபர் 24ம் தேதி குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், ஆள் கடத்தல், போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஆசிரியை ராசாத்தியை குன்னம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியை தற்போது திருச்சி மகளிர் சிறையில் உள்ளார்.

  16. முதல்கட்டமாக 1, 600 பள்ளிக் கட்டடங்கள் இடிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

    தமிழ்நாடு முழுவதும் பழுதாக உள்ள 1, 600 பள்ளிக் கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

    பள்ளிக் கல்வி்த்துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    "பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மை, பாலியல் புகார்கள் குறித்த நடவடிக்கைகள் இன்று முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.

    பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்து செய்யப்பட்ட ஆய்வில், முதல் கட்டமாக 1, 600 கட்டடங்கள் பழுதடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதேபோல், பள்ளிகளில் பாலியல் புகார்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக பள்ளிகளில் தனியாக புகார் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்றார்.

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியாவில் மேலும் புதிதாக இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி

    இந்தியாவில் மேலும் புதிதாக இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பயாலஜிக்கல் -இ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் கோவோவேக்ஸ் ஆகிய மருந்துகளுக்கு இன்று இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இத்தோடு கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக பயன்படுத்தக்கூடிய ஆன்டி-வைரல் மருந்தான மோல்னுபிரவிர் ( Molnupiravir) எனும் மருந்துக்கும் அவசரகால பயன்பாடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  18. சோனியா காந்தி ஏற்றும் போது அறுந்து விழுந்த காங்கிரஸ் கொடி

    காங்கிரஸ் கட்சி 137வது நிறுவன தினத்தையொட்டி, அக்கட்சியின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தபடுகின்றன.

    முன்னதாக டெல்லியில் உள்ள அலுவலகத்தில் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கொடியை ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

    கொடிக் கம்பத்தில் சோனியா காந்தி, கொடியை ஏற்றிய போது, பாதியில் அறுந்து, அவரது கையிலேயே கொடி விழுந்தது.

  19. மகாராஷ்டிரா பள்ளிக் கல்வி அமைச்சருக்கு கொரோனா

    மகாராஷ்டிரா மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா ஏக்நாத் கெய்க்வாட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில், "லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. என்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளேன். நான் நலமாக உள்ளேன். கடந்த சில நாட்களாக என்னைச் சந்தித்தவர்கள் பரிசோதனை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்." என்று தெரிவித்துள்ளார்.

  20. உசிலம்பட்டியில் பெண் சிசுக் கொலை என சந்தேகம் - தலைமறைவான பெற்றோரைத் தேடி வரும் போலீஸ், பிரபுராவ் ஆனந்தன்

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிறந்த ஒரு வாரத்தில் பெண்சிசு உயிரிழந்தது. பெற்றோர் தலைமறைவானதால், பெண் சிசு கொலையா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உசிலம்பட்டி அருகே பெரிய கட்டளை கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி- கௌசல்யா தம்பதி. இவர்களுக்கு, 4 மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 21ஆம் தேதி சேடபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

    இந்த பெண் குழந்தை கடந்த 26ஆம் தேதி உயிரிழந்தது. யாருக்கும் தெரியப்படுத்தாமல், வீட்டின் அருகிலேயே சடலத்தை புதைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

    குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த சென்ற செவிலியரிடம் முன்னுக்கு பின் முரணான பதில்களை பெற்றோர் தெரிவிக்கவே, சந்தேகமடைந்த கிராம செவிலியர், இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் அளித்துள்ளார்.

    கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் அடிப்படையில் சேடப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    முத்துப்பாண்டி, கௌசல்யாவிடம் விசாரணை நடத்த சென்ற போது இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இது குறித்து காவல் நிலைய ஆய்வாளரிடம் கேட்ட போது, "விசாரணை நடைபெற்று வருகிறது," என்றார்.